Headlines News :
முகப்பு » » மலையக மக்கள் தமக்கான உரிமைகளை அடைந்துகொள்ள வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் - பா.யூட்

மலையக மக்கள் தமக்கான உரிமைகளை அடைந்துகொள்ள வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும் - பா.யூட்


கடந்த வாரம் மலையக மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியையும்,தீராத துயரத்தையும் தந்திருந்தது. கடந்த மாதம் 29 ஆம் திகதி காலை 7 மணியளவில் பதுளை மாவட்டம் கொஸ்லந்த,மீறியபெத்த பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் மீது பாரிய மண்சரிவு ஏற்பட்டிருந்தது.

மலையகத்தில் தொடர்ச்சியாக் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலை நிலவியதனால் இந்த பாரிய மனித அனர்த்தம் ஏற்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பாதிப்படைந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்த சொத்துக்களின் விபரங்களை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் மனித உயிரிழப்பு 45இற்கு அதிகமாக உயராது எனவும், ஏனைய மக்களை அரசாங்கம் பாதுகாத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் குறித்த லயன் குடியிருப்புப் பகுதியில் கிட்டதட்ட 300இற்கும் அதிகமானவர்கள் வசித்துள்ளனர். அவற்றில் பாடசாலை மாணவர்கள்,சிறுவர்கள்,கைக்குழந்தைகள்,வயோதிபர்கள்,பெண்கள்,குடும்பத் தலைவர்கள் என வசித்துள்ளனர். இவர்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்குச் சென்றவர்கள் தவிர ஏனையவர்கள் இறந்திருக்கக் கூடும் என்ற ஊகம் பரவலாக காணப்படும் நிலையில் இறப்பு எண்ணிக்கையை சரியான முறையில் வெளியிடுவதில் சிக்கல் நிலையுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கான காலவகாசம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் மலையக மக்கள் தமது உறவுகளை இழந்து சோகத்தில் தவித்து வரும் நிலையில் சில அரசியல்வாதிகளும்,சில சுயநலவாதிகளும் பாதிப்படைந்த மக்களை வைத்து அரசியல் இலாபம் தேடி வருகின்றனர். இது வெளியுலகத்திற்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் அவர்கள் வெட்கம் கெட்டவர்கள் போல பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்வதாக நாடகமாடி ஊடகங்களுக்கு காட்சியளிக்கின்றனர்.இவர்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

மண்சரிவும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பும் ஏன் ஏற்பட்டது என்று கதைப்பதற்கு ஆட்கள் இருந்தாலும் அதனை எதிர்காலத்தில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு யாரும் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விடயம். மண்சரிவினையடுத்து மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகள் பக்கம் பக்கமாக அறிக்கைகளையும், ஊடகங்களுக்குச் செய்திகளையும் வழங்குகின்றனர். கேட்டால் மலையகத்தின் மீட்பர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். மலையகத்தை மீட்பதற்கு மலையக அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் இன்று மண்ணில் மாண்டவர்களை மீட்பதற்கு வழியின்றி இருக்கின்றனர். மண்சரிவு வரும் அதில் எமது அரசியலைச் செய்யலாம் என்று இருந்தவர்களுக்கு எல்லாம் இது நல்ல சந்தர்ப்பம்.

பாவம் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்குத் தான் தொடர்ந்து துன்பம். மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, குளவித் தாக்குதல், பனிமூட்டம் என இயற்கை ஒருபுறம் இவர்களை வாட்ட இன்னொரு புறம் தோட்ட கம்பனிகளின் கூலிச் சுரண்டல், பாலியல் சுரண்டல்கள், மது பான கடைகளின் அதிகரிப்பால் குடும்ப வறுமை, சீரான பாதை இன்மை, போக்குவரத்து இடர்பாடுகள், பிள்ளைகளின் கல்வி வீழ்ச்சி,மந்தபோசனம்,தாய் சேய் மரணம், வீடு இல்லாதக் கொடுமை என பல்வேறு துன்பங்களை கடந்த 200 வருடங்களாக இந்த மக்கள் அனுபவித்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் மக்களின் வீடுகளுக்கு வாக்குப் பிச்சை எடுக்க செல்லும் அரசியல்வாதிகள் அம்மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருவதாகவும் பிள்ளைகளுக்குச் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்துவதாகவும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி தமது வாக்கு வேட்டையை மேற்கொள்ளுவார்கள். மக்களும் அதனை நம்பி வாக்களிப்பார்கள் ஈற்றில் வாக்களித்த மலையக மக்களுக்கு மண்சரிவு வாக்குப் பெற்றவர்களின் குடும்பங்களுக்குப் பொன் செறிவு.

இது தான் மலையக அரசியலில் உண்மை நிலவரங்கள். தோட்டத் தொழிலாளர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தேயிலை, இறப்பர் தொழிற்சாலைகளை நடத்திவரும் தோட்டக் கம்பனிகள் தோட்ட மக்களைத் தொடர்ந்தும் கொத்தடிமைகளாக வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். காரணம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனியான காணி, வீடு கிடைத்துவிட்டால் அவர்கள் தோட்டங்களுக்கு வேலைக்கு வரமாட்டார்கள். இதனால் தமது இலாபம் கெட்டுவிடும் என்று நம்புகின்றார்கள். இதனால் தான் அவர்களின் அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்கத் தயங்குகின்றனர். இது மலையக அரசியல்வாதிகளுக்கு கிடைத்திருக்கும் போனஸ். அவர்கள் இதனை வைத்துத் தான் தமது அரசியலை நாசுக்காக செய்து வருகின்றனர். அரசியல் மூலம் தமது குடும்ப செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் மலையக அரசியல்வாதிகள் மலையகத்தில் ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஆவணம் செய்துகொடுக்கத் தயங்குகின்றனர்.

தேர்தல் காலங்களில் பணத்தைக் கொட்டி பதாதைகள், சுவரோட்டிகள், தொலைகட்சி, வானொலிகளில் விளம்பரங்களை மேற்கொள்வார்கள். இதில் வீர வசனங்களையும், மலையகத் தமிழர்களை மயக்கும் விடயங்களையும் பேசி தமது அரசியலைச் செய்வார்கள். தோட்ட தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று குழந்தைகளைத் தூக்கி விளையாடியும், குடும்பத்துடன் இணைந்து உணவு அருந்தி தம்மை மக்களின் உறவுக்காரன் போன்று காட்டிக் கொள்ளும் இந்த அரசியல்வாhதிகள், மக்கள் தமக்கு ஒரு பிரச்சனை என்று தேடி வந்தால் நாட்கணக்கில் காக்கவைத்து சந்திக்காமலே அனுப்பி வைப்பார்கள் கேட்டால் நேரமில்லை என்று பதில் அளிப்பார்கள். உண்மையில் அவர்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கும், சிறுவர் பூங்காவிற்கும் சென்று இருப்பார்கள் இது தான் யதார்த்தம். ஆகவே வெறுமனே போலியான வாக்குறுதிகளையும், வெளிப்படையான பேச்சையும் தோற்றத்தையும் மலையக மக்கள் நம்பக்கூடாது.

மலையக மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு தேவை. இதனை கல்வி கற்று உயர்ந்த இடங்களில் பணியாற்றும் மலையக இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் என பலரும் முன்னெடுக்க வேண்டும். யார் மலையகத்தின் உண்மையான மீட்பன் என்பது தொடரில் நம்பிக்கையானவர்கள் எடுத்துக் கூறவேண்டும். அதற்கு என ஒரு குழுவாக மலையக இளைஞர்கள் செயற்பட வேண்டும். அத்துடன் மலையக மக்கள் தமக்கான நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்து தேர்தல்களில் வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும். தேர்தலில் மலையக மக்கள் வாக்களிப்பதை தவிர்க்கும் போது மலையகத்தில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் அச்சப்படுவார்கள். அவன் செய்யவில்லை ஆகவே இவனுக்கு வாக்களித்தோம். ஆனால் இவனும் எம்மை ஏமாற்றிவிட்டான் என்று தேர்தல் முடிந்த பின்னர் புலம்புவதைவிடுத்து தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டாலே போதும் மலையக மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசியல்வாதிகளும் அரசாங்கமும் முன்வந்து செய்து கொடுப்பார்கள்.

வாக்குரிமையும், தேர்தலும் மக்களின் ஜனநாயக உரிமை. ஆனாலும் மக்கள் இருப்பு அடிப்படையான மனித உரிமை. ஆகவே மனித உரிமையை அடைந்து கொள்ள ஜனநாயக உரிமையை வைத்து போராடுவதில் தப்பில்லை. மனிதனின் இருப்பு நிலைத்தால் தான் ஆட்சியும், அதிகாரமும், ஜனநாயகமும் மண்ணில் ஏற்படும் ஆகவே மலையக மக்கள் தமக்கு இன்று ஏற்பட்டுள்ள இழப்புக்காக அழுவதுமட்டுல்ல இனியும் இப்படியான ஒரு இழப்பும் அழிவும் மலையகத்தில் ஏற்படாத வண்ணம் இருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது தான் உலக வாழ் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates