Headlines News :
முகப்பு » » தனித்தனி வீடுகள் அமைத்து கொடுப்பதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக அமையும் - ம.ம.மு செயலாளர் லோறன்ஸ்

தனித்தனி வீடுகள் அமைத்து கொடுப்பதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக அமையும் - ம.ம.மு செயலாளர் லோறன்ஸ்


பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த பகுதியில் மீரியாபெத்த தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட, தோட்டத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளமை மிகவும் மனதை உருக்கின்ற சோகமான நிகழ்வு என மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தனது அறிக்கையில், இந்த மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தோட்ட தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி சார்பாக தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, அரசாங்கமும், சம்பந்தப்பட்ட தோட்ட நிருவாகமும் பாதிக்கப்பட்ட, குடும்பங்களுக்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாது விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியான லயன் அறைகளில் குடியிருப்பதால், இவ்விதமான வெள்ளம், மண்சரிவு, இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்படும் போது, பொதுவாக ஏற்படும் பாதிப்புக்களை விட பன்மடங்கு அதிகமாகும். தனித்தனி வீடுகளில் வாழும் போது அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், பாதிப்புக்கள் மிகக் குறைவாகவே இருக்கும். இவ்விதமான லயன் அறைகளில் 20, 30 குடும்பங்கள் வாழும் போது, அருகருகே லயன்கள் காணப்படும் போது, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பாராதுாரமானதாகும்.

கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தை பொறுத்தவரையில், ஒரு மலைப்பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், ஒரே நாளில் ஒரே நேரத்தில், இந்த நாட்டுக்கு உழைத்த பல நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களை பரிகொடுக்க வேண்டிய மிக பரிதாபகரமான நிலைமையை அந்த தோட்டத்தில், பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ம.ம.மு செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இவ்விதம் அபாயகரமான மலைப்பகுதிகளில் அதுவும் மண்சரிவு அபாயமுள்ள மலைச்சரிவுகளில் காணப்படும், லயன்களை மாற்றி அவர்களுக்கு வாழ்வதற்கு பொறுத்தமான இடங்களில், லயன் முறைக்கு பதிலாக தனித்தனி வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விதம் செய்தாலும் கூட, மாண்டவர்கள் மீளப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்திலாவது இவ்விதமான மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ள, லயன்களை மாற்றி பொறுத்தமான இடத்தில், தனித்தனி வீடுகள் அமைத்து கொடுப்பதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக அமையுமென அவர் மேலும் மீரியாபெத்த மண்சரி அனர்த்தம் பற்றி கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates