Headlines News :
முகப்பு » » ஸி. வி.யின் இலக்கிய நோக்கும் பணியும் லெனின் மதிவானம்

ஸி. வி.யின் இலக்கிய நோக்கும் பணியும் லெனின் மதிவானம்


கடந்த செப்டம்பர் பதினான்காம் திகதி ஸி. வி என அறியப்பட்ட கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ளையின் (14-09-1914 - 19-11-1984) நூற்றாண்டாகும். இலங்கையின் மலையகத்தைப் பிறப்பிடப்பிடமாகப் கொண்ட அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக மாத்திரமன்றி, தொழிற்சங்க இயக்கத்திற்கு வித்திட்ட விடிவெள்ளிகளில் ஒருவராகவும் மலையக மக்களால் மதிக்கப்படுகின்றவர்.   அவரது நூற்றாண்டையொட்டி பின்னோக்கி பார்க்கும் பொழுது, முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது ஸி. வி ஆய்வுக்கும் மதிப்பீட்டிற்கும் தேடலுக்குமான மிகவும் வாய்ப்பான ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது. இதற்குக் காரணங்கள் பல:  மலையக தேசியத்தையொட்டிய இயக்க வளர்ச்சியின் காரணமாகவும் பொதுவான கலாசார எழுச்சியின் பெறுபேறாகவும் இத்தகைய ஆய்வுத் தேவையொன்று தோன்றியிருக்கின்றது.   இருப்பினும் ஸி.வி  குறித்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். சாரல் நாடனின் 'சி.வி. சில சிந்தனைகள';;; என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது எனலாம். இவ்வெழுத்தாளர்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் பன்முகப்பாட்டை வௌ;வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன. 

ஸி.வி.யின் சமூக முக்கியத்துவத்தையும் மலையக இலக்கிய கதியில் அவரது ஆக்கங்கள் செலுத்தும் பாதிப்பினையும் நோக்குகின்ற போது ஸி.வி. பற்றிய தேடல் வளர் நிலையிலேயே உள்ளதாக தோன்றுகின்றது. ஸி.வி தாம் எழுதிய அனைத்து நூல்களிலும் எழுத்துக்களிலும் தமது பெயரை ஸி.வி வேலுப்பிள்ளை என்றே உபயோகித்துள்ளார். ஆனால் இதுரையிலாக அவர் பற்றி வெளிவந்த எழுத்துக்களில் சி.வி.வேலுப்பிள்ளை (ஸி என்ற எழுத்துக்கு பதிலாக சி என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது) என்றே உபயோகிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்த வில்லையாயினும் அத்தவறு தொடர்வது ஆய்வு நாகரிகத்திற்குரியதல்ல.   ஸி.வி. ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, இலக்கியகர்த்தா எனப் பல்துறைசார்ந்த ஆளுமைகளைக் கொண்டவர். அவரது நூற்றாண்டு நிகழ்வை ஒழுங்கமைப்பதற்காக ஹட்டனிலே திரு மு. நேசமணி தலைமையில் ஸி.வி. நூற்றாண்டு நினைவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டு சில முன்னோடி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் பண்பாட்டுகழகம், மலையக கலை இலக்கிய பேரவையினர் அமைத்துள்ள ஸி. வி நூற்றாண்டு நிவைவுக் குழு இன்னும் இது போன்ற அமைப்புகள் பல கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு நடத்தியுள்ளர்.  அவ்வாறே கடந்த வாரம் ஸி.வி. நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தினர் சிறப்பானதொரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நுற்றாண்டையொட்டி மாவலி  சிறப்பிதழையும் முத்திரையும் வெளியிட்டிருந்தனர் என்பது பாராட்டுதலுக்குரியதாகும்.  அவ்வாறே அவரது நூற்றாண்டை முன்னிட்டு சில சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இதனை மனங்கொண்டு  ஸி. வி. பற்றி மேலும் நுனிந்து நோக்க வேண்டியுள்ளது. 

ஸி.வி. யின் எழுத்துக்கள்

ஸி.வி.யை நாம் புரிந்து கொள்வதற்கும் ஆராய்ச்சிக்குட்படுத்தவும் எம் முன்னுள்ளவை அவரது எழுத்துக்கள் தான். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், குறிப்புக்கள்;, நூல்வடிவம் பெறாத கட்டுரைகள், ஆக்கப் படைப்புக்கள், பத்திரிகைகளுக்கு வரைந்த கேலிச் சித்திரங்கள் இதுவரை முறையாகக் கிடைக்கவில்லை. சில ஆவணங்கள் மல்லியப்பு சந்தி திலகரிடமும் சுப்பையா இராஜசேகரிடமும் இருப்பதை பார்வையிடக் கூடியதாக இருந்ததில் மகிழ்ச்சி. அவர் 'சாக்குக்காரன்' என்ற சிறுகதையை எழுதியிருப்பதாக 'தாக்கம்' இதழில் ஸி.எஸ்.காந்தி குறிப்பிட்டிருக்கின்றார். வீரகேசரியில் வெளிவந்த அக்கதையை திரு.அந்தனி ஜீவா சேகரித்து வைத்திருப்பதாக என்னிடம் கூறியிருக்கின்றார். இலங்கையில் பாடசாலை கலைத்திட்டங்களிலும் பாடநூல்களிலும்  ஸி.வி.யின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸி.வி.யின் சில நூல்கள் அச்சுறுப்பெற்றுள்ளன. இவ்வாறு வெளிவந்த நூல்களையும் இப்போது பெற முடியாதுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல் தெரிந்தவர்களைத் தேடியறிவதும் சிரமமாக உள்ளது. அவர்களில் சிலர் இன்று மறைந்து விட்டமை இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும்.  இவ்வேளையில் அவரது அனைத்து படைப்புகளையும் தொகுத்த அடக்கத் தொகுப்பொன்று வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும். 


அறிமுக வசதிக்காக அவரது எழுத்துக்களைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்வது வசதியாக அமையும்.

1. நாட்டார் பாடல்கள் சேகரிப்பு
2. கவிதை
3. நாவல்
4. பிற முயற்சிகள்

நாட்டார் பாடல்கள் சேகரிப்பு
ஸி.வி. பெரியாங்கங்காணியான தனது தாத்தாவின் வீட்டில் வசித்ததனால் நாட்டார் பாடல்களை இரசிக்கவும், அவற்றினைச் சேகரிப்பதற்குமான சூழ்நிலை கிடைத்தது என அவரே பல சந்தர்ப்பங்களில் பதிவு செய்திருக்கின்றார். ஒரு காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தமது விசேட தினங்களில் பெரிய கங்காணியின் வீட்டிற்குச் சென்று, நாட்டார் பாடல்களைப் பாடிப் பரிசு பெறும் வழக்கம் மலையகத்தில் காணப்பட்டது. மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு, ஆய்வு என்பன ஆங்காங்கே திட்டுக்களாகவும், தீவுகளாகவும் இடம்பெற்ற போதிலும் அவை முழுமை அடையாத நிலையே காணப்பட்டது. ஸி.வி அவர்கள் மலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றைச் சேகரித்து ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள’; என்ற தலைப்பில் வெளியிட்டமை இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்து காணப்படுகிறது.  

 உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இம் மக்களின் நம்பிக்கைகள், விருப்பு-வெறுப்புக்கள், மகிழ்ச்சி, துன்பம், அவர்தம் உறுதிப்பாடு என்பவற்றைப் பிரதிபலிக்கும் நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு, ஆய்வு என்பன முக்கியத்துவமுடையவையாகின்றன. அத்துடன் இன்றைய மக்கள் இலக்கியம் யாவும் மக்களிடம் காணப்படும் நாட்டார் வழக்காறுகளும், உரையாடல்களும் வளமிக்க மொழியில் பட்டை தீட்டப்பட்டே உருவாக்கமடைகின்றன. இத்தகைய பின்னணியில் தான் பாரதியின்-கார்க்கியின் படைப்புக்கள் உருவாக்கமடைந்தன.  சமூகவுணர்வுடனும் நாட்டார் பாடல்கள் குறித்த சரியான பார்வையுடனும் ஸி.வி. இம்முயற்சியினை மேற்கொண்டுள்ளார். இவருக்குப் பின்னர் மலையக நாட்டார் பாடல்கள் சேகரிப்பில் ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகின்றமை கவனிப்புக்குரியது. அண்மையில் மு.சிவலிங்கம் சி;.வி. யின் தொகுப்பில் அடங்காத சில மலையக நாட்டார் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார். இந்நூல் மலையக நாட்டார் இலக்கியத்திற்கான புது வரவாகக் காணப்பட்ட போதிலும், அவற்றில் சில விரசம் மிக்க பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களெல்லாம் ஸி.வி.க்கு தெரியாது என்பதல்ல ஸி.வி. மிக நிதானத்துடனும் சமுதாயப் பார்வையுடனும் தொகுத்தமையினாலேயே அவற்றைத் தமது தொகுப்பில் தவிர்த்திருக்கின்றார் எனக் கருத இடமுண்டு.  

கவிதை

கவிஞரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கு அவரது கவிதைப் படைப்புக்கள் மிக முக்கியமானவையாகும். கவிதைத்துறைதான் அவரை இலக்கிய உலகில் கணிப்புக்குரியவராக்கியது. இவரது கவித்துவ ஆளுமையை  விஸ்மாஜினி (Vismajini) என்ற கவிதை நாடகம் மூலமும் வேஃவேயர் (Wayfarer) என்ற வசன கவிதைத் தொகுப்பு மூலமாகவும் அறியலாம். “‘விஸ்மாஜினி’, ‘வேஃவெயர்’ என்ற இரண்டு நூல்களிலும் ஸி.வி.யின் சொல்லாட்சிகளைக் காணலாம்” என்பார் சாரல் நாடன்.  எனினும் அவரது கவித்துவ ஆளுமையின் உன்னத அறுவடையாக அமைந்தது In Ceylon Tea Garden என்ற தொகுப்பாகும். ஏனைய கவிப்படைப்புக்கள் யாவும் இத்தொகுப்பை எழுதுவதற்கான படிக்கற்கள் எனக் கூறின் அது மிகையாகாது. இத்தொகுப்பு முதலில் இரசிய மொழியிலும், பின்னர் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கது. அதாவது ஸி.வி. ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது ஏற்பட்ட இடர்பாடுகள் - மயக்கங்கள் முக்கியமாவையாகும். உதாரணமாக 'In Ceylon Tea Garden' என்ற கவிதைத் தொகுப்பை சக்தி பால ஐயா இலங்கைத் 'தேயிலைத் தோட்டத்திலே' என மொழிபெயர்ப்பு செய்ததாகக் கூறப்படுகின்றது. சக்தி பால ஐயாவின் நூலில் ஸி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண்வாசனைப் பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் உள்ளடக்கப்படவில்லை. சக்தி பால ஐயாவின் கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்ப்;பு என்று கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும் (இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தபோது, ஸி.வி.யின் படைப்பின் தாக்கத்தினால் தனது ஆக்கம் வெளிப்பட்டதேயன்றி மொழிபெயர்ப்பென தாம் குறிப்பிடப்படவில்லை என்று சக்தி பால ஐயா தனிப்பட்டவகையிலும் சில கூட்டங்களிலும் கூறியதைக் கேட்டிருக்கின்றேன்). ஸி.வி. அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக இயங்கியவர்;. இலக்கியத் தளத்தில் மட்டுமே இயங்கியவரான சக்தி பால ஐயா இத்தகைய உணர்வுகளை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதும் சுவாரசியமானதொரு வினாதான்; (லெனின் மதிவானம் - 2010). மிக அண்மையில் ஸி. வி. நூற்றாண்டை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தினரால் வெளியிடப்பட்ட  ஸி.வி. நூற்றாண்டு சிறப்பு மலரில் திரு. பி. பி. தேவராஜ் ஸி.வி.யின் சில கவிதைகளை மொழிப்பபெயர்த்துள்ளால். இம்மொழிப்பெயர்ப்பு ஸி.வி. யின் ஆங்கில கவிதைகளுடன் பெரிதும் ஒத்துப் போகின்றது என்றே கூற வேண்டும். அவரது முழுக் கவிதைத் தொகுப்பும் இத்தகைய பின்னணியில் மொழிப்பெயர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.  ''In Ceylon Tea Garden' தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது மலையக கலாசாரத் தளத்தையும் மக்களின் உணர்வுகளையும் ஒன்றாக இணைத்துக் காதலிக்கின்ற பண்பினை; காணலாம்.

நாவல்

ஸி.வி. யில் எழுதிய நாவல்களில் ‘எல்லைப்புறம்’, ‘பார்வதி’, ‘வாழ்வற்ற வாழ்வு’, ‘காதல் சித்திரம்’, ‘வீடற்றவன்’, ‘இனிப்படமாட்டேன்’ ஆகிய நாவல்கள் நேரடியாக தமிழில் எழுதப்பட்டவை. ஏனையவை யாவும் பொன். கிருஷ்ணன் சுவாமியால் தமிழில் மொழி பெயர்ப்;புச் செய்யப்பட்டவை. இவற்றில் ‘காதல் சித்திரம்’, ‘வீடற்றவன்;, ‘இனிப்படமாட்டேன்;, ‘வாழ்வற்ற வாழ்வு’ ஆகிய நாவல்கள் நூலுருப் பெற்று விட்டன. ஏனையவை யாவும் நூலுருப் பெறவில்லை. இவரது நாவல்களில் ‘வீடற்றவன்’, ‘இனிப்படமாட்டேன்;’, ‘வாழ்வற்ற வாழ்வு’  ஆகிய நாவல்களே எனது பார்வைக்குக் கிட்டியதால் இந்நாவல்களை அடிப்படையாகக் கொண்டே ஸி. வி.யின் இலக்கிய ஆளுமையை மதிப்பீடு செய்ய முனைகின்றேன். 

 ‘வீடற்றவன்’ இவரது மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகும். மலையக மக்களிடையே தொழிற்சங்க அமைப்பை தோற்றுவித்து அதனை ஸ்தான மயப்படுத்துகின்ற போது  ஏற்படுகின்ற இடர்ப்பாடுகளைச் சித்திரிக்க முனைவதாக இந்நாவல் அமைந்து காணப்படுகின்றது. வாழ்வற்ற வாழ்வு என்ற நாவலும் தொழிற்சங்க இயக்க செயற்பாடுகளில் ஈடுப்படுகின்ற ஒருவரின் வாழ்வை இயல்பாக சித்திரிப்பதாக அமைந்துள்ளது.

 ‘இனிப்படமாட்டேன்’ இவரது இறுதி நாவலாகும்; 1984இல் வெளிவந்தது. இந்நாவலையும் ஸி.வி.யின் வாழ்க்கையையும் உற்று நோக்குகின்றபோது இது ஒரு சுயசரிதையாக அமைந்த நாவலே என்ற உணர்வு வாசகனில் ஏற்படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். இந்நாட்டில் தமிழர் ஒருவர் சிங்களப் பெண்ணை மணம் முடித்து வாழுகின்ற போது ஏற்படுகின்ற முரணையும் அவ்விருவருக்கும் பிறக்கும் மகனுக்கு சமூகத்தில் ஏற்படுகின்ற முரணையும் சித்திரிப்பதாக இந்நாவல் அமைகின்றது. குறிப்பாக 80களில் தோற்றம் பெற்ற இந்த நாவல் இக்காலகட்டத்தில் மலையகத்தில் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகளைச் சிறப்பாகச் சித்திரிக்கின்றது என்ற போதினும் அதன் மறுபுறமாக மலையக சமூக இருப்புக்கான உணர்வு எவ்வாறு நிலை கொள்ளப்படுகின்றது என்பதை வெளிக் கொணரத் தவறிவிடுகின்றது.  இதனை இக்காலகட்டத்தில் வெளிவந்த ஆனந்த ராகவனின் “நண்பனே என்றும் உன்; நினைவாக” என்ற சிறுகதை மிக நேர்த்தியுடன் சித்திரிக்கின்றது எனலாம்.

 ஸி.வி.யின் பிற முயற்சிகள்

 ஸி.வி. யின் இலக்கிய நோக்கினை மதிப்பிடுவதற்கு ‘முதற்படி’ (கட்டுரைத் தொகுப்பு) Born to Labour (உழைக்கப் பிறந்தவர்கள்-விவரணத் தொகுப்பு) ஆகிய நூல்களும், அவ்வப்போது பத்திரிகைகளில் வரைந்து வெளியிட்ட கேலிச் சித்திரங்களும் முக்கியமானவைகளாகும்.  முதற்படி என்ற நூல் மலையகத் தமிழர் பற்றிக் கூறுகின்ற சிறிய கட்டுரைத் தொகுதியாகும். மலையகத் தமிழர்களிடையே இலங்கை - இந்திய காங்கிரஸ் உருவாகியது பற்றியும், அது இம்மக்கள் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. இந்நூலில் பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை:

 “ஆரிய திராவிடர்களாகிய நாம் சிங்கள சகோதரர்களுக்கு ஆங்கில மோகம் தணியலாயிற்று அறிவு புலர்ந்தது”  

 “நாமிருக்கும் நாடு நமதென்ப
தறிந்தோம் - இது
நமக்கே யுரிமையா மென்ப
தறிந்தோம்”

என்ற நாதத்தின் எதிரொலி இங்கு பிறந்தது. என்றாலும் ஆங்கில மோகம் நம் சுய அறிவைக் கொலை செய்வது வழக்கம். இதிலிருந்து சுகமடைவது சற்றுக் கஷ்டமாவதால் சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டத்தில் அயர்வும், ஏமாற்றமும் ஏற்பட்டது. இது மட்டுமா? மூலதனமும் வியாபாரமும் இந்திய வர்த்தகர்களிடம் பொன் விளையும் இறப்பர் - தேயிலை தோட்டங்களின் வெள்ளையர் கையில் அந்நியர் இலங்கையில் நடத்திவரும் சுரண்டல் கைங்கரியத்திற்கு ஆயுதமாக இருப்பவர்கள் இந்திய தொழிலாளர்கள் என்பது தான் இவரின் அபிப்பிராயம். மற்றொரு புறத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் அயர்வு தெரியாத் திறமையால் கோட்டை பிடிப்பது போல எல்லா உத்தியோகங்களையும் கவர்ந்து வந்ததிலிருந்து சிங்களவர்கள் மனம் வெதும்பி இருக்க வேண்டும். இந்நிலையில் நாமிருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்போம் என்பதற்குச் சிங்களவர்கள் இந்தியராக இருந்தால் உடன் பதில் சொல்வார்கள் (முதற்படி பக் 10).

பேரிவாதத்தையும் காலணித்துவத்தையும் விமர்சத்திற்குள்ளாக்குகின்ற அதே சமயம், இனக் குரோதமின்றிச் சிங்கள மக்களுடன் ஐக்கியப்பட வேண்டும் என்ற உணர்வையும் தருகின்றது இந்நூல். மலையக மக்களின் நிலைமைகளை சிங்கள மக்களுக்கு தெளிவுப்படுத்துவதுடன், பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஸி.வி. தெளிவுற அறிந்திருந்தார் என்றே கூற வேண்டும். அவ்வாறே அவரது Birth of Ceylon Indian Congress என்ற கட்டுரை இலங்கை - இந்திய காங்கிரஸின் தோற்றம், உழைக்கும் மக்கள் தொடர்பில் அவ்வமைப்பு மேற் கொண்ட போராட்டங்கள் பற்றி விபரிக்கின்றது. மேலும் அவரது The C.I.C Union becomes the C.W.C என்ற கட்டுரை  இலங்கை - இந்திய காங்கிரஸ் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்றவகையில் எவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக மாறியது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. 

 ஸி.வி வழிப்போக்கன் என்ற புனைபெயரில் எழுதிய தேயிலைத் தோட்டத்திலே என்ற தொடர் சித்திரத்தில்தான் மலைநாடு என்ற சொல் முதன் முதலாக பயன்படுத்தப்படுகின்றது எனச் சிலர் கூறுகின்றனர். இக் கூற்றில் பல வாதப்பிரதிவாதங்கள் காணப்பட்ட போதும் அவர் மலையகம் என்ற சொல்லை வெறும் புவியியல் அர்த்தத்தில் மாத்திரத்திரமன்றி அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் உணர்ந்தே பயன்படுத்தியுள்ளார என்பதை அறிய முடிகின்றது. இம்மக்களின் தேசிய உணர்வை - இருப்பை கவனத்திலெடுத்தே அத்தகைய சொல்லை உபயோகித்திருப்பதாவே படுகின்றது இந்த உணர்வை அவரது படைப்புகளிலும்; காண முடிகின்றது.

 ஸி.வி.யின் முக்கியமான பிறிதொரு நூல் Born to Labour என்ற விவரணத் தொகுப்பாகும். இதனை மாவலி பத்திரிகையில் திரு.பி.ஏ. செபஸ்டின் தமிழில் மொழிபெயர்த்து தொடராக வெளியிட்டுள்ளார். குழந்தை பிறப்பு முதல் இம்மக்களின் வாழ்க்கை, மக்களிடையே  காணப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகள், அவர்களுடன் உறவு கொண்ட மனிதர்கள், உறவுத்தன்மை என்பன சிறப்பாகச் சித்திரிக்கப்படுகின்றன. ஆங்கிலத்திலும், மலையக மண்வாசனை மிக்க நடையை ஸி.வி. கையாண்டுள்ளார். அந்த வகையில் ‘In Ceylons Tea Garden’ என்ற கவிதைத் தொகுப்பினைப் போல இந்நூலும் முக்கியத்துவமும் சிறப்பும் உடையதாகும். மலையக மக்களின் துன்பம் தோய்ந்த வரலாற்றினை எடுத்துக் கூறும் இவரின் பிறிதொரு நூல் “நாடற்றவர் கதை” ஆகும்.

ஸி.வி. யின் இலக்கிய நோக்கு  

ஸி.வி. யின் படைப்புக்கள் அனைத்திலும் சிலாகித்துப் பேசப்படுகின்றதொரு விடயம் மலையக மண்ணின் மனம் கமழும் பேச்சு வழக்கு முறையைத் தனது படைப்புக்களில் சிறப்பாக கையாண்டுள்ளமையாகும். இவர் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தேசிய இலக்கியக் கோட்பாடு, இலங்கைத் தேசிய இயக்கம் என்பன தத்துவார்த்தப் போராட்டங்களாக முன்னெடுக்கப்;பட்டுள்ளன. முன்னதாக கோ.நடேசய்யரால் இலங்கைத் தேசியத்தின் தனித்துவமிக்க கூறாக மலையக மக்கள் உணர்வு கொள்ள வழிப்படுத்தியமை, வேறொரு கருத்தியல் தளத்தில் இளஞ்செழியனால் தொடரப்பட்டிருந்தது. மார்க்சியர்கள் இதனை புதிய பரிமாணத்தில் விருத்தி செய்திருந்தனர்.  இச்சந்தர்ப்பத்தில் மொழித் தூய்மை வாதத்திற்கு எதிராகப் பேச்சு மொழி இலக்கியத்தில் கையாளப்பட்டது. இத்தகைய காலப் பின்புலத்தில் ஸி.வி. யின் படைப்புக்களும் இத்தகைய மக்கள் சார்பு பண்பினை ஆதரித்தமை அவரது எழுத்துருக்களின் தனிச் சிறப்பாகும். இத்தகைய பேச்சு மொழியினைக் கையாண்டமை அவரது படைப்புக்களை அழகுபடுத்தியது எனலாம்.

ஸி.வி அரசியல் பண்பாட்டுத்துறையில் இயங்க தொடங்கிய காலத்தில் மலையகத்தில் மக்கள் இயக்கம் புதிய பரிணாமத்தை எட்டியதுடன் அது அம்மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடத் தூண்டியது. அதன் முதல் வெளிப்பாடாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக மற்றும் தொழிலாள பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கணக்குப்பிள்ளைமார்கள், கங்காணிகள், கண்டக்கையாக்கள் ஆகியோரின் கொடுமைகளை எதிர்த்துப் போராடினர். தொழிலாளர்களுக்கு எதிராக நின்ற தோட்ட உத்தியோகத்தர்கள் (குறிப்பாக கணக்குப்பிள்ளைமார்கள்) பலரின் கைகள் வெட்டப்பட்டன. பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இது அக்காலகட்டத்தில் ஏற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்பையும் எழுச்சியையும் காட்டுகின்றது.

இவ்விடத்தில் முக்கியமானதோர் ஒப்புவமை வசதிக் கருதி ஸி.வி.யின் கவிதைகளை மீனாட்சியம்மாள் நடேசய்யரின் கவிதைகளுடன் ஒப்பு நோக்குவது பொருத்தமானதாக அமையும். ஸி.வி. யின் முக்கிய படைப்பு “In Ceylon Tea Garden”என்ற கவிதைத் தொகுப்பாகும். 1948களில் மலையக மக்களின் வாக்குரிமைப் பறிக்கப்பட்ட போது அத்தகைய ஜீவகாருணியமற்ற செயலுக்கெதிராக இலங்கை - இந்திய காங்கிரஸ் சத்தியாக்கிர போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்தது. அச்சத்தியாக்கிரக போராட்டத்தில் ஸி.வி. யும் கலந்துகொண்டார். அப்போராட்டம் ஏற்படுத்திய உந்துதலினால் பிரவாகம் கொண்டதே மேற்குறித்த கவிதைத் தொகுப்பாகும்.  மலையக மக்களின் வாழ்வு, இருப்பு என்பன குறித்து அக் கவிதைத் தொகுப்பு அழகுற வெளிக் கொணர்கின்றது. அதேசமயம், மலையக மக்களின் வாக்குரிமைப் பறிப்பு தொடர்பாகவோ அல்லது சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பாகவோ எந்த பதிவும் அக்கவிதைத் தொகுப்பில் அடங்கியிருக்காதது துரதிர்ஸ்டவசமானதொன்றாகும்.  மீனாட்சியம்மாளை பொறுத்த மட்டில் மலையக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் சட்டங்களையும் தமது கவி வரிகள் கொண்டு நேரடியாகச் சாடுகின்றார். தமது பாடல் தொகுப்பின் முன்னுரையில் அவரது பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது: “இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கைவாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீரமுடன் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்திய தோட்டத் தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுக்கள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையை பாட்டுக்களின் மூலம் எடுத்துக் கூற முன் வந்துள்ளேன்.  இந்தியர்களைத் தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்குத் தீவிரமாகப் போராடும் அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்பும் என்பதே என் அவா.”

அம்மையாரின் பாடல்கள் தொழிலாளர்களை சார்ந்ததாகவும் அவர்களை விடுதலை உணர்வுக் கொள்ள வைப்பதாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் ஸி.விக்கு வந்தமையாத ஆற்றல் மீனாட்சியம்மாளுக்கு வாய்க்கப் பெற்றுள்ளமை திடுக்கிட வைக்கும் அளவுக்கு அவரது அரசியல் தொழிற்சங்க இலக்கிய செயற்பாடுகளுக்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

அவ்வாறே ‘வீடற்றவன்’ என்ற நாவல் தோற்றம் பெற்ற காலச்சூழலில்  (1960களில்) மலையக மக்களிடையே வீறு கொண்டெழுந்த எழுச்சிகள், போராட்டங்கள் போன்றவற்றை இந்நாவல் உள்வாங்கத் தவறி விடுகின்றது. மலையக வரலாற்றில் மறக்க முடியாத போராட்டங்களான மடக்கும்பர, மேல்பீல்ட், பதுளை கீனாகலை முதலிய தோட்டங்களில் இடம் பெற்ற போராட்டங்களைக் குறிப்பிடலாம். ஸி.வி. பிறந்து வளர்ந்த மடக்கும்பர தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தைக் கூட அவரது படைப்பில் வெளிக் கொணர முடியாது போனமை துரதிர்ஸ்டவசமான நிகழ்வாகும். இதற்கு மாறாக கோர்ட், வழக்கு முதலியவற்றின் மூலமாக இம்மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம் என்ற பார்வையை அவரது படைப்பு  முன்வைக்கின்றது. இப்போக்கு அக்காலத்தில் பாரம்பரியமான தொழிற்சங்க இயக்கங்களின் நடவடிக்கைகளாகக் காணப்பட்டன. அந்தவகையில் ஒரு போக்கினைச் சுட்டிக் காட்டுகின்ற நாவலாசிரியர் அதன் மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டத் தவறி விடுகின்றார். நாவலின் கதாநாயகன் இராமலிங்கம் இறுதியில் பலாங்கொடை காட்டில் “கடவுளே எனக்கு போகும் வழி தெரியவில்லையே” எனப் புலம்புவது இந்நாவலின் சோர்வு வாதத்திற்குத் தக்க எடுத்துக்காட்டாகும். ‘வீடற்றவன்’ மட்டுமன்றி, அவரது ஏனைய படைப்புகளும் தோட்டத் தொழிலாளர்களின் போர்க்குணத்தைக் காட்டத்தவறுகின்றன என்பதே விமர்சனத்திற்குரியது. தொழிற்சங்கப் போராட்டம் குறித்த படைப்புகளை வெளிக் கொணரத் தவறிய அவரது அரசியல் செயற்பாட்டில் அத்தகைய போராட்டங்களையும் கலக உணர்வுகளையும் வரவேற்பவராக இருந்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது. 1956 ஆம் ஆண்டு மாற்று தொழிற்சங்கத்திற்கான உரிமை கோரிய போராட்டம் டயகம தோட்டத்தில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஏப்ரகாம் சிங்கோ என்ற தொழிலாளியொருவர் உயிர் நீத்தார். இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஸி.வி. என்பதை பல பதிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஒருவகையில் ஸி.வி. யின் அரசியல் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்கின்ற போது அவரது எழுத்துக்களில் இடம்பெறாத இன்னொரு ஆளுமையை தரிசிக்கக் கூடியதாக இருக்கும்.

 மலையக இலக்கியத்தில் பொதுவாகவே காணப்படுகின்ற குறைபாடொன்றினை சுட்டிக் காட்டுவது அவசியமானதாகும். அவ்விலக்கியத் தொகுதி மலையக மக்களுடைய வாழ்வை வெளிக்கொணர்ந்த அளவு அவர்கள் செய்த கலகங்களையும் போராட்டங்களையும் வெளிக்கொணரத் தவறியிருக்கின்றது. ஓர் ஒப்புவமை வசதி கருதி வடபுலத்து படைப்புகளோடு ஒப்புநோக்குவோம். வடக்கில் எழுந்த தொழிற்சங்க போராட்டங்களை நீர்வை பொன்னையனுடைய படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.   அவ்வாறே அங்கு எழுந்த சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை கே. டானியலின் எழுத்துக்கள் பிரதிபலித்து நிற்கின்றன. இவ்வகையில் மலையகத்தை நோக்குகின்றபோது மலையகப் படைப்பாளிகளின் படைப்புகளில் சமூக இயக்கங்களும், போராட்டங்களும் படைப்பாக்காத நிலை காணப்படுகின்றது. எனினும் முச்சந்திப் பாடல்கள் என (பெ. முத்துலிங்கத்தின் தொகுப்பு அவதானத்துக்குரியது) மலையக மக்கள் சார்ந்த இயக்கங்களையும் போராட்டங்களையும் ஓரளவு பதிவாக்க முனைந்திருப்பதாகவே தோன்றுகின்றது.

முடிவுரை
 சுமார் ஐம்பது ஆண்டு காலமாக எழுத்துலகில் தம்மை இணைத்துக் கொண்ட ஸி.வி. மலையக மக்களின் வாழ்வியலைப் படைப்பாக்கித் தந்ததில் மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். இதன் காரணமாகவே அவர் மலையக இலக்கியத்தின் முன்னோடியாகவும் வழிக்காட்டியாகவும் திகழ்கின்றார்.  எனினும் அவரது காலத்தில் நிகழ்ந்த முனைப்புற்ற போராட்டங்களையும் எழுச்சிகளையும் அவரது படைப்புகளில் காணமுடியாதுள்ளது தரதிஸ்டவசமானதொன்றாகும். இந்த பின்னணியில் ஸி.வி. யின் எழுத்துக்களை நோக்குகின்ற போது கொடுமைகளைக் கண்டு குமுறுகின்ற ஒரு மனிதாபிமானியின் நெஞ்சம் தெரிகின்றது. ஆனால் இம்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்கும் தத்துவார்த்த பார்வை இல்லை என்பதும் தெரிகின்றது. முடிவாக ஸி.வி. பற்றிய ஆய்வுகளை சமூகவியல் பார்வைக்கு உட்படுத்துகின்ற போது அவரது வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் அடுத்த தலைமுறையினருக்கு ஆதர்சனமாக அமையும். இதுவே ஸி. வி.  என்ற மாமனிதனுக்காக நாம் செய்யும் நன்றிக்கடனாகும். 

நன்றி- ஸி.வி. நூற்றாண்டு மலர், 
ஸி.வி. நூற்றாண்டு குழு, 
ஹட்டன்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates