Headlines News :
முகப்பு » , » நரியூரிலிருந்து புலியூருக்கு... ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு - ஆதவன் தீட்சண்யா

நரியூரிலிருந்து புலியூருக்கு... ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு - ஆதவன் தீட்சண்யா


‘எவரொருவரது குடியுரிமையினையும் தன்னிச்சையாக மாற்றிவிடவோ மறுத்து விடவோ கூடாது’ என்கிறது உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம். ஆனால், இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை அவர்களது கருத்தறியாமலே தீர்மானிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு இதே அக்டோபர் 30ஆம் நாளில்தான் அந்த அநீதி ‘ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம்’ என்னும் பெயரால் இழைக்கப்பட்டது. பிரிட்டனும் பிரான்சும் இந்தியாவை ஆண்ட காலத்தில் தமது காலனி நாடுகளுக்கு இந்தியர்களை ஒப்பந்தக்கூலிகளாக வாரிச்சென்றன. சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட அடிமை வணிகத்திற்கு மாற்றாக ஐரோப்பிய முதலாளிகள் உருவாக்கிய இந்த ஒப்பந்தக்கூலி முறைக்கு பெரிதும் பலியானவர்கள் தமிழர்கள்.

1796- 1815க்குள்ளாக முழு இலங்கையையும் பிரிட்டன் கைப்பற்றியது. அதன் முதல் கவர்னரான பிரடெரிக் நார்த் (1798), ஓர் அரசாங்கத்தை நிறுவிடும் தொடக்கநிலைப் பணிகளுக்காக தமிழர்களை அங்கு அழைத்துப் போனார். 1821ல் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போன பயோனியர் ஃபோர்ஸ் படையின் அநேகரும் தமிழர்கள். அங்கு மலைகளைச் சரித்தும் காடுகளை அழித்தும் தார்ச்சாலைகள் மற்றும் ரயில்பாதைகளை அமைத்ததும் பாலங்கள், பாசனத்திட்டங்களை உருவாக்கியதும் இவர்கள்தான். 1824ல் அங்கு பிரிட்டிஷார் காபித்தோட்டங் களை அமைத்தனர். அது தொடர்பான வேலைகளுக்காக அந்தந்த பருவத்தில் தமிழகத் தொழிலாளர்களை அழைத்துப்போய் திருப்பியனுப் பினர். ஒருவகையான பெருங்கொள்ளை நோயினால் அங்கு காபி அழிந்ததும் பிரிட்டிஷார் தேயிலை, சின்கோனா, ரப்பர், தென்னை விளைவிப்புக்கு மாறினர்.

இவை தொடர் பராமரிப்பை கோருவதால் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்து உழைக்கும் விதமாக தொழிலாளர்கள் குடும்பங்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள்தான் இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்கள். இவர்களில் சிறுபகுதியினர் ஊரில் வாழும் சாதியரில் அடிநிலையினர், பெருவீதமானோர் ஊரிலிருந்து ஒதுங்கி வாழும் சேரியர். தமிழ்ச்சமூகம் இவர்களுக்கு வழங்கியிருந்த இந்த இடம்தான் இவர்களை புலம்பெயர்த்திக் கொண்டு போவதற்கு ஏதுவாய் அமைந்தது. துண்டுச்சீட்டு மற்றும் கங்காணி முறையில் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் தனுஷ்கோடியிலிருந்து மன்னாருக்கும், தூத்துக்குடி யிலிருந்து கொழும்புக்கும் கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து அவர்கள் அதுகாறும் மனிதக்காலடியே பட்டிராத மலைக்காடுகளுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தனர். புறப்பட்டவர்களில் பாதிப்பேராவது கடலிலும் காட்டிலும் நோயிலும் செத்தழிந்தார்கள். லயன்வீடு எனப்படும் சிறுகொட்டிலே வசிப்பிடம். சூரியன் உதிப்பதிலி ருந்து அஸ்தமிக்கும் வரை வேலைநேரம். அவர்களது உற்பத்தியின் அளவைக் குறைத்தும் வாங்கும் தொகையைக் கூட்டியும் கள்ளக்கணக்கு எழுதப்பட்டதால் தீராது வளர்ந்தன கடனும்வட்டியும். முதலாளிகளுக்கும் கங்காணிகளுக்கும் சற்றும் குறையாமல் அட்டைகள் அவர்களது ரத்தம் குடித்தன. தப்பிப்போக முடியாதபடி முள்வேலி. தப்பியோடி சிக்கிக்கொண்டாலோ கொடிய தண்டனைகள்.

மனிதவுரிமை காக்கவே பிறப்பெடுத்தாற்போன்று பீற்றிக்கொள்கிற பிரிட்டிஷார் தொழிலாளர்களது மனவுறுதியைக் குலைப்பதற்காக நடத்திய சித்ரவதைகள் மனித மாண்புகளுக்குப் புறம் பானவை. இந்தக் கொடுமைகளுக்கு தாக்குப்பிடிக்கும் போராட்டத்திலேயே நூறாண்டுகளாக மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியத் தமிழர்களில் இந்தியாவின் திசையைக்கூட அறிந்திராதபுதிய தலைமுறையினர் உருவாகிவிட்டிருந் தனர். ஆனாலும் அவர்களை இலங்கைச் சமூகம் வெளியேதான் நிறுத்திவைத்திருந்தது. இலங்கையின் அரசுப் பணிகளில் ஓரளவு இந்தியர் வசமிருந்தது. இலங்கைச்சந்தையும் இந்திய வர்த்தகர்களின் ஆக்கிரமிப்பிலிருந்தது. தமிழகத்தின் வட்டிக்கடைக்காரர்களோ அதீதமான வட்டிக்கு கடன் கொடுத்து அதற்கீடாக சிங்களவர்களின் வருமானத்தையும் சொத்துக்களையும் அபகரித்துவந்தனர்.

சிங்களவர்களி டையே இந்திய எதிர்ப்பு மனோபாவம் உருத்திரள்வதற்கான காரணங்கள் இவையென்றா லும் அதற்கு வடிகாலாகச் சிக்கியவர்கள் அதிகாரமற்ற தோட்டத் தொழிலாளர்கள். முதலாம் உலகப்போருக்குப் பிந்தைய பொருளாதாரப் பெருமந்தத்தால் அங்கு ஏற்பட்டநெருக்கடிகளுக்கு இந்தியத் தொழிலாளர்க ளின் பெருக்கமே காரணம் என்கிற திசை திருப்பலும் இதற்கு உதவியது.கல்வி, சொத்து அடிப்படையிலிருந்த வாக்குரிமையை, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அங்குவசிக்கும் வயதுவந்தோர் அனைவருக்குமான தாக டொனமூர் கமிஷன் பரிந்துரைத்தது. தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு வழிவகுத்தது என்கிற வகையில் இப்பரிந்துரை முன்பிருந்ததைவிட ஜனநாயகத்தன்மை கொண்டது.

ஆனால் ‘தோட்டக்காட் டான்களிடம் இலங்கையை சிக்கவைக்கும் இந்தப் பரிந்துரையை’ இலங்கை மேட்டுக் குடியினர் ஏற்காததால் தகுதிபெற்ற மூன்றுலட் சம் இந்தியத் தொழிலாளர்களில் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். 1931 பொதுத்தேர்தலிலிருந்து பங்கெடுத்த இவர்களிடையே இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்தவும், பிரதிநிதி களைக் குறைக்கவும் இவர்களது வாக்குரி மையை பறிக்கும் முயற்சி முனைப்படைந்தது. 4.2.1948 அன்று சுதந்திரமடைந்த இலங்கையில் எதிரும்புதிருமாக எண்ணற்றகட்சிகள் இருந்தாலும் தோட்டத்தொழிலாளர் களை வெளியேற்றும் விசயத்தில் அவை ஒரே கட்சிதான்.

அங்கு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், இந்திய, பாகிஸ்தானிய வசிப்போர் (குடியுரிமை) சட்டம், பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றோராகவும் சட்டவிரோதக் குடியேறிகளாகவும் மாற்றிவிட்டன. இதன் தொடர்ச்சியில் உருவான நேரு - கொத்லாவல ஒப்பந்தப்படி (1954) குடியுரிமை கோரிய விண்ணப்பங்களோ சாரமற்றக் காரணங்களின் பேரில் இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்டன. இவர்களனைவரையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடும் கெடுநோக்கத்தை சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து செய்துவந்த நச்சரிப்பில் ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் உருவானது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பியனுப்பக்கூடாது என்கிற நிலைப்பாடு கொண்டிருந்த நேரு 1964ல் காலமானதையடுத்து இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றார்.

சீனாவுடனான எல்லைப்போருக்குப் பிறகு, அண்டை நாடுகளை தனக்குச் சாதகமாக திரட்டிக் கொள்ளும் தேவையும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்த காலமது. எனவே வம்சாவளித்தமிழர்களின் குடியுரிமை மீது ஓர் இறுதி முடிவுக்கு இந்தியாவை நெட்டித்தள்ள உகந்த தருணம் எனக் கணித்து அக்டோபர் 22 அன்று தில்லி வந்திறங்கினார் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ. இலங்கைத்தரப்பு உண்மையில் சிங்களத்தரப்பே. ஆனால் சாஸ்திரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங்கும்சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளர் களையோ தமிழ்நாட்டின் தலைவர்களை யோ கூட்டிப்போகவில்லை, கலந்தாலோ சிக்கவுமில்லை. இந்தியக் குழுவில் சென்னையிலிருந்து முதல்வரது பிரதிநிதியாக பங்கெடுத்த ஒரே தமிழரான வி.ராமையா வாய் திறக்கவேயில்லை.

இலங்கையில் நாடற்றவர்களான 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், மூன்று லட்சம் பேருக்கு இலங்கையும் குடி யுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. உயிரும் உணர்வும்மிக்க மனிதர்கள் வெறும் எண்களாக பங்கிடப்பட்டனர். (இந்த 1.5 லட்சம் பேரை இருநாடுகளும் சமமாக பங்கிட்டுக் கொள்ளும் ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தம் 1974ல் கையெழுத்தாகியது). 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அவர்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூக்கூறாகபிரித்து வீசியது.

அவர்கள் இலங்கையில் உழைத்து ஈட்டியவற்றை இழந்துவரச் செய்தது. 150 ஆண்டுகளாக தொடர்பற்றுப் போன தாயகத்திற்குத் திரும்பி அநாதைகளாக தவிக்கச் செய்தது. புதிய சூழலுக்குள் பொருந்தவியலாத உளவியல் சிக்கலுக்கும் ஆட்படுத்தியது. மறுவாழ்வுக்கான உதவித்தொகையையும் சுயதொழிலுக்கான கடனையும் பெறுவதற்கு மல்லுக்கட்டி மனவுறுதி குலைந்த அவர்களை மீண்டும் தோட்டத்தொழில் தேடி நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை, கர்நாடகா, கேரளா என்று அலைய வைத்தது. இலங்கையில் தமிழர்கள் என்கிற பாகுபாட்டுக்கு ஆளானவர்களை இங்கு சிலோன்காரர்கள் என்கிற பாகுபாட்டுக்கு ஆளாக்கியது.

ஒப்பந்தப்படியும், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டும் தாயகம் திரும்பிய அந்த தமிழர்களின் வாழ்க்கை அப்படியொன்றும் மெச்சத்தக்கதாக இல்லை. நரியூரிலிருந்து புலியூருக்கு வந்து சிக்கிக்கொண்டதாக அவர்கள் மருகிக்கிடக்கிறார்கள். நாடற்றோர் என்னும் அவலம் தீர்க்கப்பட்டிருந்தாலும் இருநாடுகளிலும் அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவது தொடர்கிறது. டாலரோ பவுண்ட்ஸோ இல்லாத- லேபர் டஸ்ட் என்கிற மட்டரகமான தூளில் தயாரித்த தேநீரை தருவதற்கு மட்டுமே சாத்தியப்பட்ட - பெரும்பாலும் தலித்துகளாகிய அந்தத் தமிழர்களுக்காக இங்கு குரலெழும்பாமல் இருப்பதில் அதிசயமென்ன?

நன்றி - தீக்கதிர்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates