Headlines News :
முகப்பு » » மாற்றமடைந்துவரும் மலையக தமிழ் மக்களுக்கு புதிய உத்வேகம் அவசியம் - பி.பி.தேவராஜ்

மாற்றமடைந்துவரும் மலையக தமிழ் மக்களுக்கு புதிய உத்வேகம் அவசியம் - பி.பி.தேவராஜ்

பி.பி.தேவராஜ்

ஹெராக்லிட்டஸ் (Heraclitus) என்ற கிரேக்க தத்துவ ஞானி மாற்றங்கள் பற்றி சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். “ஒரு மனிதன் ஒரே ஆற்றில் இரண்டு தடவை இறங்குவதில்லை. ஆறும் மாறிவிடுகிறது. மனிதனும் மாறி விடுகிறான்”

எது சாஸ்வதமாக இருக்கின்றதோ இல்லையோ மாற்றங்கள் மாத்திரம்தான் சாஸ்வதம் உடையதாய் உள்ளன. இதைத்தான் கார்ல் மார்க்ஸ் கூட கூறியிருக்கின்றார். சில சமயங்களில் மாற்றங்கள் துரிதமாக நடைபெறலாம். சில சமயங்களில் அது ஆமை வேகத்தில் இடம்பெறலாம். எப்படி இருந்தாலும் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெருந்தோட்ட மக்கள் வாழ்விலே பெரும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இன்றும் அன்றுபோல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஆதங்கம் உண்டு. பெருந்தோட்டங்கள் (Plantation system) என்பன பொருளாதார அமைப்பிலும் அங்கே வாழ்கின்ற மக்களின் தன்மையிலும் சில தனித்துவங்கள் உடையதாய் உள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் பெருந்தோட்டங்கள் அமைப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் சில இடங்களிலும் கரீபியன் தீவுகளிலும்தான் இது முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பெருந்தோட்டங்கள் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை கைப்பற்றி கப்பல் மூலமாக இந்த நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டு பெருந்தோட்டங்களிலே தொழில் செய்து அங்கேயே வாழ்ந்து வந்தார்கள். இவ்வாறு கட்டுண்டு வாழ்ந்த அடிமை தொழிலாளர்களைப் பற்றி விடாப்பிடியான /மீள முடியாத ஏழ்மையில் சிக்குண்டவர்கள் என்று சிந்தனையாளர்கள், அறிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

அடிமை வர்த்தகத்துக்கு எதிராக சட் டங்கள் இயற்றப்பட்டு அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் பெருந்தோட்டங்களை ஆரம்பிப்பதற்கு இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் திரட்டப்பட்டனர். இலங்கை போன்ற நாடுகளிலே பெருந்தோட்டங் கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த தோட்டங்கள் அடிமை தொழிலாளர்களை நம்பி இருக்கவில்லை. ஒப்பந்தம் மூலமாக (ஐந்து ஆண்டுகள்) அல்லது கங்காணி முறையில் இவர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய சென்றார்கள். அதாவது அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் தாங்கள் தாய்நாடு திரும்பலாம் என்ற அடிப்படையில் தான் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இப்படி அமர்த்தப்பட்டவர் கள் புதிய நாடுகளில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டனர்.

ஆனாலும் ஆரம்ப காலத்தில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தோட்டங்களில் இருந்து மாறி வேறு தோட்டங்களுக்கோ, வேறு இடங்களுக்கோ சென்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மீண்டும் அவர்களை அதே தோட்டத்திற்கு கொண்டுவரலாம் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை. மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது தோட்டங்களில் இருந்து வெளியே சென்று வேலை செய்யலாம் என்ற நிலைமை உண்டு.

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டு இருந்தாலும் இப்பொழுது மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தோட்டத் தொழிலை மாத்திரம் நம்பி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இப்பொழுது மாறி வருகின்றது. குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து எந்நேரமும் ஏழ்மையிலே சிறைபட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சிந்தனை எழுந்துள்ளது. ஒரு காலத்தில் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், படித்தவர்கள் போன்ற தொகையினரை விரல் விட்டு எண்ணிவிட முடிந்தது. இன்று அன்றைய நிலையோடு ஒப்பிடும் பொழுது முன்னேற்றங்கள் ஏட்பட்டுள்ளன. ஒரு தோட்டத்திலே வாழ்ந்து கொண்டு வெளியே சென்று வேலை செய்வது இப்பொழுது அதிகரித்துள்ளது. நகர் புறம் நோக்கிய நகர்வு துரிதமடைந்துள்ளது. தோட்டங்களில் உள்ள தங்கள் தொடர்புகளை அடியோடு விட்டுவிடாமல் நகர்ப்புறத்தில் பல இளைஞர்கள், யுவதிகள் தொழில் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் தேர்ச்சியற்ற தொழிலாளர்களாக மட்டுமல்லாது திறமைவாய்ந்த, பயிற்சிபெற்ற உழைப்பாளிகளாகவும் உள்ளனர். பலர் தொழில்சார் நிறுவனங்களில் உயர் உத்தியோகஸ்தர்களாகவும் கடமை புரிகின்றனர்.

பாடசாலைகள், ஆசிரியர்கள் அதிகரிப்பினால் மாணவர் தொகையும் கூடியுள்ளது. தோட்டப் பகுதி பாடசாலைகள் வளர்ந்து வருகின்றன. தோட்டப் பகுதி மாணவர்களுக்காக ஆசிரிய பயிற்சி கலாசாலை கொட்டகலையிலே உள்ளது. ஒரு உத்தேச கணக்கீட்டின் படி ஏறத்தாழ 4,000 பட்டதாரி ஆசிரியர்கள் மலையக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தோன்றியிருக்கிறார்கள். இப்பொழுது உயர் கல்வி பெற்றவர்கள் வைத்திய கலாநிதிகள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், கணக்கியலாளர்கள் என்பவர்கள் பலர் தோட்ட தொழிலாளர் மத்தியிலும் தோன்றி பல இடங்களிலே வேலை செய்து வருகிறார்கள்.

ஒரு காலத்தில் வர்த்தகர்களாக இலங்கைக்கு வந்தவர்கள் குறிப்பிட்ட சில சமூகங்களை சார்ந்தவர்களாகவே இருந்தனர். ஆனால், இப்பொழுது தோட்ட தொழி லாளர் மத்தியில் இருந்து ஒரு வர்த்தக சமூகம் உருவாகியுள்ளது. கொழும்பு வந்த சில இளைஞர்கள், இன்று வர்த்தக பிரமுகர்களாகி கோடீஸ்வரர்களாகக் கூட உள்ளனர். மத்திய அல்லது உயர்தர வர்க்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும் மலையக தமிழ் சமுதாயத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது மலையக தமிழ் மக்களை தொழிலாளர்களாக மாத்திரம் கொண்ட சமூகமாக கருத முடியாது. இதர சமூகங்களைப் போலவே மலையக தமிழ் மக்கள் மத்தியிலே பல பிரிவுகள் உள்ளன. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே சிறிய அளவில் என்றாலும் பல மலையக தமிழர்கள் திறமைசாலிகளாக உயர்தொழில் புரிந்து வருகின்றனர். இந்த போக்கு மென்மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் எத்தனையோ சோதனைகளுக்காளாகி எண்ணற்ற இன்னல்களை சந்தித்திருந்த போதிலும் இவற்றை தாண்டி வந்துள்ளார்கள். கிரேக்க ஞானி ஹெராக்கிலிடஸ் (Heraclitus) கூறியுள்ளதை போல மாற்றங்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

மாற்றங்கள் இன்று ஆமை வேகத் தில் நடைபெறுகின்றன என்றாலும் ஒரு கற்றறிந்தோர் சமுதாய சிந்தனைகளு க்கு வழியமைக்க வேண்டிய காலகட் டத்தில் நாம், இப்போது கால் எடுத்து வைக்கிறோம். மலையக தமிழ் மக்க ளின் பின்னடைவு ஒரு தொடர்கதையா கவே உள்ளது என்ற சிந்தனையை மாற்றி இதுவரையும் ஏற்பட்டுள்ள மாற்ற ங்களில் நம்பிக்கை கொண்டு புதிய உத் வேகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய கட்டத்தில் இன்று மலையக தமிழர் சமூகம் உள்ளது.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates