Headlines News :
முகப்பு » , , , , » கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வரலாறு (கொழும்பின் கதை - 12) - என்.சரவணன்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வரலாறு (கொழும்பின் கதை - 12) - என்.சரவணன்

16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆட்சி செய்த போதே அந்தோனியார் வழிபாடும், அந்தோனியார் ஆலயங்களும் இலங்கையில் தோன்றிவிட்டன. 1597இல் கோட்டை இராச்சியத்தையும்,  1618இல் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றிய பின்னர் இந்தப் பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக அந்தோனியார் தேவாலயங்கள். புனித அந்தோனியார் பாதுவாவில் தனது இறுதிக் காலத்தைக் கழித்திருந்தாலும் அவர் போர்த்துக்கலின் லிஸ்பன் நகரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். எனவே போர்த்துகேயர் கைப்பற்றிய நாடுகளில் புனித அந்தோனியார் வழிபாடு பிரசித்தம் பெற்றிருந்தது. கொழும்பு கோட்டைக்குள் இருந்த அந்தோனியார் தேவாலயமானது; அந்தோனியார் வழிபாட்டை இலங்கை முழுவதும் பரப்பி வந்த பிரான்சிஸ்கன் சபை மிஷனரிகளின் தலைமையகமாக இருந்தது.

1597 இல் கோட்டை அரசன் தொன் ஜூவான் தர்மபால இறந்தபோது அவரின் உடலையும் இந்த தேவாலயத்தில் தான் அடக்கம் செய்தார்கள். 1580 ஓகஸ்ட் 12 அன்று மன்னர் தொன் ஜூவான் தர்மபால போர்த்துக்கேயரின் நிர்பந்தத்தின் விளைவாக கோட்டை ராஜ்ஜியத்தை போர்த்துக்கேயருக்கு பரிசாக அளிப்பதாக உயில் (மரண சாசனம்) எழுதி கொடுத்த கதையை அறிவீர்கள். கத்தோலிக்க மதத்துக்கு மாறி கத்தோலிக்கப் பெயரை சூட்டிக்கொண்ட முதல் இலங்கை மன்னர் அவர். அது போல மன்னர் பரராஜசேகரனின் மனையையும், அவரின் மகன், இரு மகள்மாரையும், மன்னர் குடும்பத்தினர் பலரும் இந்த தேவாலயத்தில் தான் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள்.

கொழும்பு கோட்டைக்குள் இருந்த போர்த்துகேய அந்தோனியார் கோவில் தலைமையகம். 1656 ஆண்டு வரைபடம். (Changing Face of Colombo – R.L.Brohier)

ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க மதத்தவர்களைக் கொன்றார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய கத்தோலிக்கர்கள் இரண்டாம் இராஜசிங்கன் (1635 - 1687)ஆட்சி செய்த கண்டி இராச்சியத்தில் தஞ்சம் புகுந்தார்கள். வஹாகோட்டே என்கிற இடத்தில் புனித அந்தோனியாருக்கு ஒரு சிறிய சிலையை வைத்து வணங்கினார்கள். இன்றும் வஹாகொட்டேயில் அந்த அந்தோனியார் தேவாலயம் இருக்கிறது. அதன் பின்னர் கண்டி மன்னன் இரண்டாம் விமலதர்மசூரியன்; பாதிரியார் ஜோசப் வாஸ்ஸுக்கு (Joseph Vaz) அந்தோனியார் வழிபாட்டுக்கு பூரண சுதந்திரம் வழங்கினார். கண்டியில் அந்தோனியாருக்காக பாதிரியார் ஜோசப் வாஸ் எந்த கெடுபிடியுமின்றி திருவிழா நடத்தினார். அதன் பின்னர் திறைசேரியில் களவு போயிருந்தவேளை மன்னர் ஸ்ரீ வீர நரேந்திர சிங்கனும் புனித அந்தோனியாரை வழிபட்டார் என பதிவுகள் உண்டு. 

இலங்கையில் உள்ள புனிதர்களின் ஆலயங்களிலேயே அந்தோனியார் வழிபாடு தான் மிகப் புகழ்பெற்ற வழிபாடாக வளர்ந்திருக்கிறது என்கிறார்; இலங்கையில் அந்தோனியார் வழிபாடு குறித்து ஆராய்ந்த சாகர ஜயசிங்க. 

இவாறு போர்த்துகேயரிடம் இருந்து இலங்கையை ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் போர்த்துக்கேயரின் காலத்தில் கத்தோலிக்க மதத்தையும் கத்தோலிக்கப் பாதிரிமார்களையும் தடை செய்திருந்தார்கள். அவர்களின் பிரதான வழிபாடான அந்தோனியார் தேவாலயங்களையும் கூடவே தடை செய்திருந்தார்கள். ஒல்லாந்தர்கள் (டச்சு) புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். டச்சு ஆட்சி 1796 இல் முடிவு பெற்ற போதும் ஆங்கிலேயர்கள் 1806 ஆம் ஆண்டு தான் “கத்தோலிக்கத் தடை” யை நீக்கினார்கள். ஆளுநர் தோமஸ் மெயிற்லான்ட் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

டச்சு ஆக்கிரமிப்பின் நிறைவுக் காலத்தில்,  கொழும்பில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், இலங்கை ஒராடோரியர்களின் தலைமைப்பதவியில் இருந்த ஜாகோம் கோன்சால்வேஸ், அங்கு நிரந்தரமாக வசிக்கும் ஒரு பாதிரியாரின் தேவையை உணர்ந்தார்.

கொச்சினியிலிருந்து அந்தோணி (Friar Antonio) என்ற கத்தோலிக்க ஒராடோரியன் முன்வந்து கொழும்பை வந்தடைந்தார். ஆனால் துன்புறுத்தல் காரணமாக அவரால் பாதிரியாராக செயல்பட முடியவில்லை. அதனால், வியாபாரி போல் மாறுவேடமிட்டு, பகலில் (இன்றைய மாலிபன் தெருவில் உள்ள) கடையில் மீன் விற்றார். இரவில் அவர் கத்தோலிக்கர்களை அடையாளம் கண்டு பூசைகளை செய்தார். ஒரு வருடம் கழிந்தது. இரகசிய கத்தோலிக்க பூசை நிகழ்வதை அறிந்த டச்சுக்காரர்கள் அந்தோணியைத தேடினர். மீனவ சமூகத்தினர் அதிகமாக வாழ்ந்த முஹுதுபொடவத்தை என்ற பகுதியை அவர் கடந்து சென்று கொண்டிருந்தார்.  இந்த நேரத்தில், கடல் அரிப்பு கடற்கரையை தாக்கி மீனவர்களின் இருப்பிடங்களை சுருக்கியது. வள்ளங்கள் அலையில் அடித்துச் சென்றன.

அந்தோணி பாதிரியார் அதிசயம் நிகழ்த்திய நிகழ்வு

அந்தோணியை வழியில் சந்தித்த மீனவர்கள் தமக்கு தீர்வு தேடி அந்தோணியை அணுகினார்கள். கடல் அரிப்பைத் தடுக்க பிரார்த்தனைகளை வழங்குமாறு அவர்கள் அவரிடம் கோரினார்கள்.  அந்தோணி அதை செய்துவிட்டால் டச்சு வீரர்களிடமிருந்து அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். பின்னர் அந்தோணி  மணலில் ஒரு சிலுவையை நட்டு, மண்டியிட்டு மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, கடல் பின்வாங்கத் தொடங்கி, அரிப்பைத் தடுக்கும் மணல் அணையை உருவாக்கியது. டச்சு வீரர்களும் இதைக் கண்டு பின்வாங்க வேண்டியிருந்தது. அதைக்கண்டு வியப்படைந்த மீனவர்கள் அந்தோனியைச் சுற்றித் திரண்டனர். அவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். அந்த இடம் தான் இன்றைய கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் அமைந்திருக்கும் இடம்.

"அந்தோனியின் அதிசயம்" பலராலும் அப்போது பேசப்பட்டது. டச்சு ஆளுநர் வில்லெம் மௌரிட்ஸ் ப்ரூய்னின்க் (Willem Maurits Bruyninck - 1739-1742) அந்தோணியின் பிரார்த்தனையின் சக்தியை அறிந்தார். கத்தோலிக்கர்கள் மீதும் அவர் தாராளவாத அணுகுமுறையைக் கொண்டிருந்தார். அந்த அதிசயம் நிகழ்ந்த நிலத்தை அந்தோணிக்கு வழங்கினார் அங்கே அவர் சிறு தொழிலையும் தெய்வீகப் பணியையும் மேற்கொள்வதற்கு ஆளுனரால் அனுமதி வழங்கப்பட்டது.

1656ஆம் ஆண்டிற்குப் பின்னர் கத்தோலிக்கர்கள் கொழும்பு நகரத்திற்குள் மத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  சுதந்திரம் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது நன்றியை வெளிக்காட்டுமுகமாகவும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கும் முகமாகவும் சிலுவையை நாட்டிய இடத்தில் சிறிய தேவாலயத்தை அமைத்தார் அந்தோணி. அந்த சிலுவை நட்டிய இடத்தில் தான் இன்றும் பலர் வரிசையாக சென்று வழிபடும் அந்தோனியாரின் நாவின் பகுதி வைக்கப்பட்டிருக்கிற “புதுமைச் சுருவம்” இருக்கிறது.

அந்தோணி முதலில் அந்த நிலத்தில் ஒரு சிறு கடையை ஆரம்பித்தார். அது கடை “கடே” என்றே அழைக்கப்பட்டது. கொச்சினில் இருந்து வந்தவரின் கடை என்பதால் “கொச்சியாகே கடே” காலப்போக்கில் “கொச்சிக்கடை” என்று நிலை பெற்றது.

டச்சு கிழக்கிந்திய கம்பனியால் அந்தோனியார் தேவாலயம் இருந்த நிலம் எழுதிக்கொடுக்கப்பட்ட ஆவணம்

இந்த நிலமனை அதிகாரப்பூர்வமாக டச்சு கிழக்கிந்திய கம்பனியால் ஜனவரி  20, 1790 அன்று, பத்திரம் இல 31  இன் மூலம் தேவாலயத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. இதில் கிழக்கிந்திய கம்பனியின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறித்திருப்பதைக் காண்பீர்கள். பின்னர் அந்தோணி இறந்தபோது அவரின் உடலும் இந்த ஆலயத்தினுள் தான் அடக்கம் செய்யப்பட்டது.

தற்போது தேவாலயத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள புனித அந்தோனியின் புனிதச் சிலை 1822  ஆம் ஆண்டு கோவாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். 1806 ஆம் ஆண்டு அடித்தளம் இடப்பட்டு 1834ஆம் ஆண்டு புதிய தேவாலயம் கட்டும் பணி  தொடங்கப்பட்டது. அந்த ஆண்டைத்தான் ஆலயத்தின் தொடக்க நாளாக இன்றுவரை கணிக்கப்பட்டுவருகிறது. 1934இல் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.   1938 ஆம் ஆண்டு பெரிய ஆலயமாக பெருப்பிக்கப்பட்டது. இன்று இலங்கையில் புனித அந்தோணியார் ஆலயம் மிகப்பெரிய புனித தேவாலயமாக மாறியுள்ளது. 

பாதுவா நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித அந்தோனியாரின் நாக்கின் ஒரு சிறிய பகுதி இங்கே விசேடமாக வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் அதனை வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

1912 ஆம் ஆண்டு கவர்னர் சேர் ஹென்றி மெக்கலம் கொழும்பு துறைமுகத்திற்காக இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சித்தபோது ரோமன் கத்தோலிக்க மக்களின் தெய்வீக வழிபாட்டுத் தளமெனக் கூறி அவரின் ஆலோசகர்கள் பலர் அதனை எதிர்த்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

லலித் அத்துலத் முதலி துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான துறைமுகக் காணியின் ஒரு பகுதியை அந்தோனியார் தேவாலய விஸ்தரிப்புக்கு வழங்கினார். அந்தோனியார் ஆலயம் துறைமுகத்தின் எல்லையோர காப்பரண் போலவே நிலைத்து நிற்பதை நீங்கள் அறிவீர்கள்.

90 ஆம் ஆண்டு பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் அந்தோனியார் ஆலயத்தை கொழும்பு உயர் மறை மாவட்டப் பங்காக ஆக்கும்படி விடுத்த கோரிக்கை; ஆயரால் எற்றுகொள்ளப்படாத நிலையில் ஆலய நிர்வாகம் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியது. முதற் தடவையாக மூன்று மாதங்கள் ஆலயம் மூடிவைத்த கதை நாட்டின் முக்கிய பேசுபொருளாக அப்போது இருந்தது. இறுதியில் 15.08.1990 அன்றிலிருந்து சுதந்திர ஆலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவரை கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலய நிர்வாகத்தின் கீழ் தான் இது இயங்கிவந்தது.

கொழும்பில் அதிகளவிலானோர் கலந்து கொள்ளும் கிறிஸ்தவ திருவிழா “அந்தோனியார் திருவிழா தான். பல தடவைகள் சன நெருக்கடியால் விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. அந்தளவுக்கு கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி, விவேகானந்தா மேடு, செட்டியார் தெரு, என தேவாலயத்தின் சுற்றுவட்டாரப் பகுதியெங்கும் திருவிழாக்கோலம் பூண்டு, எங்கெங்கும் விளக்கொளியில் கொண்டாட்டமாகக் காட்சித் தரும். இந்து, பௌத்த, முஸ்லிம் மக்களும் கூட ஒன்றாக கூடிக் கொண்டாடும் நிகழ்வு அது. வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில்  பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் இந்து பக்தர்கள் பலர் கூட அங்கே சென்றுவிட்டு அப்படியே அந்தோனியார் கோவில் தமிழ்ப் பூசையில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அது மட்டுமன்றி இந்தப் பகுதியில் உள்ள புனித வியாகுல மாதா, புனித வேலாங்கன்னி, புனித அந்தோனியார், புனித லூசியாஸ் ஆகிய ஆலயங்கள் 1996 இலிருந்து ஒன்றாக இணைந்து விபூதிப் புதன் நாளில் “கொழும்பு பெரிய சிலுவைப் பாதை” என்கிற ஊர்வலத்தை செய்து வருகின்றனர். இதுவும் கொழும்பில் மிகப் பெரிய அளவினர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஆகியிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி மோசமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலுக்கு அந்தோனியார் ஆலயமும் இலக்கானது. 93 பேர் இங்கே கொல்லப்பட்டார்கள். பல நூற்றுகணக்கானோர் படுகாயமுற்றார்கள். பலத்த சேதத்துக்கு உள்ளான தேவாலயம் யூன் 12 ஆம் திகதி தான் மீண்டும் திறக்கப்பட்டது.

அந்தோனியார் தேவாலயத்தின் வளவில் மிஷனரிமார்களால் கொச்சிக்கடை புனித அந்தோனியார் பாடசாலை (இப்போது கல்லூரி) 1945 இல் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1958 இல் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு இன்று ஆயிரம் மாணவர்களுக்கும் மேல் கற்கும் கல்லூரியாக இயங்கி வருகிறது.

அந்தோனியார் தேவாலயத்தின் வரலாற்றைக் கூறும் சிறு நூதனசாலையொன்று 2013 ஜனவரி 13 அன்றிலிருந்து இயங்கி வருகிறது. அங்கே இந்த வரலாற்று விபரங்களை மேலும் அறியலாம்.

இந்த கட்டுரைக்காக எனக்கு உதவிய வண. அன்புராசா அடிகள், வண ஆனந்த அடிகள் உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் அந்தோனியார் தேவாலயத்தோடு 48 வருடங்கள் கடமையாற்றி, தமிழ் வழிபாட்டுப் பொறுப்பாளராக இருந்து  இன்று பிரான்சில் வசிக்கும் அம்புரோஸ் பீட்டர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நன்றி - தினகரன் - 23.01.2022
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates