Headlines News :
முகப்பு » , , , , » பேட்டை – புறக்கோட்டையான கதை (கொழும்பின் கதை - 9) - என்.சரவணன்

பேட்டை – புறக்கோட்டையான கதை (கொழும்பின் கதை - 9) - என்.சரவணன்

இலங்கையின் இதயம் கொழும்பு என்போம். கொழும்பின் இதயமாகத் திகழ்வது கோட்டையும், புறக்கோட்டையும் தான். ஆட்சித் தலைமையக மையமாகவும், இலங்கையின் பொருளாதார மையமாகவும்  நிமிர்ந்து நிற்கும் இடங்கள் இவை.

டச்சு காலத்தில் அவர்களின் மொழியில் புறக்கோட்டையை “oude stadt” என்றார்கள். ஆங்கில அர்த்தத்தில் “outside the fort” எனலாம். ஆங்கிலேயர்கள் அதன் பின்னர் “பெட்டா” (Pettah) என்று அழைத்தார்கள்.

பேட்டை என்று தமிழ் பேச்சு வழக்கு சொல்லில் இருந்து தான் ஆங்கில “பெட்டா” வந்தது. பேட்டை” என்பது “ஆங்கிலோ இந்திய” தமிழில் இருந்து மருவிய சொல்லாகும். ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்து பெண்களை மணமுடித்து உருவான கலப்பின மக்களின் வழிவந்தவர்களையே ஆங்கிலோ இந்தியர்கள் என்று நாம் அழைப்போம். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் “ஜான் விஜய்” ஆங்கிலமும் அல்லாத தமிழும் அல்லாத ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவார் அல்லவா அது தான். ஆங்கிலேயர்கள் “பேட்” என்பார்கள் அதுவே காலபோக்கில் பேட்டை என்று ஆனது. இலங்கையில் பேட்டை என்பது பெட்டா என்று ஆனது.

பேட்டை என்பது தொழில் மற்றும் தொழிற்சந்தைகள் நிறைந்திருந்த இடங்களைக் குறிப்பதாகும். சிறுவணிகர்களும், அதிகளவு நுகர்வோரும் ஒன்றுகூடித் தொழில் செய்யும் இடமென்றும் கூறலாம்.

அதே வேளை பெட்டா என்று டச்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் அழைத்த அந்த இடத்தை சிங்களத்தில் “பிட்டகொட்டுவ” (கோட்டைக்கு வெளியில்) என்றும் தமிழில் “புறக்கோட்டை” என்றும் அழைத்தார்கள். அதற்கான காரணம் அன்று கொழும்பு கோட்டை இருந்த மதிலுக்கு வெளியில் இருந்த பிரதேசம் இது. எனவே கோட்டைக்கு புறமாக (வெளியில்) இருந்ததால் அதை புறக்கோட்டை என்றே அழைத்ததில் அர்த்தம் இருக்கவே செய்கிறது.

பால்தேயுஸ் (Philippus Baldaeus) 1600 களின் நடுப்பகுதியில் அவரின் நூலில் வெளியிட்டிருந்த ஓவியம் இது. இதில் வலது புறத்தில் கொழும்பு கோட்டைப் பகுதியையும் புறக்கோட்டயையும் பிரிக்கும் ஆறும், புறக்கோட்டையின் ஒரு பகுதி மரங்கள் செறிந்த இடமாக இருப்பதையும், புதிய குடியிருப்புத் தொகுதியையும் பார்க்கலாம். (மேலதிக விபரத்துக்கு பிற்குரிப்பைப் பார்க்கவும்)

ஒல்லாந்தர்கள் உலகில் பல நாடுகளைக் கைப்பற்றி கிழக்கிந்தியக் கம்பனி Dutch East Indian Company (VOC)  மேற்கிந்தியக் கம்பனி Dutch West Indian Company (WIC) என்று நிர்வகித்து காலனித்துவ ஏகபோகத்தில் கோலோச்சிய காலத்தில் அவர்கள் நகரங்களையும், அங்கே குடியிருப்புகளையும் அழகுற வடிவமைத்தார்கள். அவர்கள் அந்த நாடுகளை விட்டுவிட்டுப் போவதற்காக அதனை செய்யவில்லை. மாறாக அவர்களின் நாடுகளாக ஆகிவிட்டதாக எண்ணி நிரந்தர டச்சு காலனித்துவ நாடுகளாகத் தான் பலப்படுத்தினார்கள்.

கொழும்பை ஒரு நகரமாக உருவாக்கிய டச்சுக்காரர்கள் (Dutch East India Company VOC) ஒரு காலத்தில் தென்னாசியாவின் தலைமையகமாக கொழும்பைப் பயன்படுத்தி வந்தார்கள். அன்றிலிருந்தே புறக்கோட்டையை ஒரு நகர மையமாக இயங்கத் தொடங்கிவிட்டது.

போர்த்துக்கேயர்கள் 1518 இல் முதன் முதலாக கொழும்பில் முக்கோண வடிவத்தில் கோட்டையை வடிவமைத்த போது அதற்கு Senhora das Vutudes என்று பெயரிட்டார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கோட்டைப் பகுதியை காலப்போக்கில் அபிவிருத்தி செய்தபோது நடுவில் செல்லும் ஆறு பிரிக்கக் கூடிய வகையில் கோட்டையையும், புறக்கோட்டையையும் வடிவமைத்தார்கள். இன்றைய சுங்கத் திணைக்கள தலைமையகத்தோடு ஓட்டிச் சென்று துறைமுகத்தில் விழும் ஆறு தான் அது.  குறிப்பாக அவர்களுக்கான குடியிருப்புகள் உள்ள வீதிக் கட்டமைப்பை கோட்டைக்கு வெளியில் அமைத்தார்கள்.

1600 களில் கொழும்பு - புறக்கோட்டையும், கோட்டையும்

1600 களில் கொழும்பு - புறக்கோட்டையும், கோட்டையும்

Baldaeus,-Philippus (பால்தேயுஸ் - 1632-1672.) எழுதிய Naauwkeurige-beschryvinge-van-Malabar-en-Choromandel நூலில் இருந்து...

1659 இல் கோட்டை அப்போதைய டச்சு ஆளுநர் ரிக்கோப் வான் கொயன்ஸ் (Ryckloff van Goens) வழிகாட்டலில் மறுகட்டுமானத்துக்கு உள்ளான போது டச்சு கிழக்கிந்திய கம்பனியினரின் குடியிருப்புகள் கோட்டைக்கு உள்ளேயும், ஏனைய ஐரோப்பியர்கள் மற்றும் வர்த்தகர் – வியாபாரிகளுக்கான குடியிருப்புகளை கோட்டைக்கு வெளியில் புறக்கோட்டையிலும் அமைத்தனர்.

புறக்கோட்டை குடியிருப்பு பகுதி 1658-1796 காலப்பகுதியில் டச்சு கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. போர்த்துகேய – ஒல்லாந்தர்களின் சந்ததியினர் அங்கே அங்கிலேயர் காலத்திலும் வாழ்ந்தார்கள். பல அழகான வீடுகள், அழகான தோட்டங்கள், நிழலான நடைபாதைகள் பல அங்கிருந்தன. ஒரே மாதிரியான பிரகாசமான மஞ்சள், சிவப்பு, ஒரஞ்சு நிற கோடுகள் உள்ள கதவுகளையும்ம் ஜன்னல்களையும் கொண்ட வீடமைப்பைக் கொண்டிருந்தன, பாதைகள் நேராகவும், கிடையாகவும், இருந்த அந்த வீதிகள் தான் இன்று முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் குறுக்குத் தெருக்களாகவும், அவை ஒல்கொட் மாவத்தையில் சேருவதாகவும் இருக்கிறது. கிடையில் மெயின் வீதி, கெய்சர் வீதி (டச்சு ஆளுநர் Kaiser என்பவரின் பெயர்), பிரின்ஸ் வீதி, மெலிபன் வீதி என இருக்கும் அமைப்பைக் கற்பனை செய்து பாருங்கள். இது தான் படிப்படியாக வியாபார, வர்த்தக, விற்பனை கடைகளாக அப்படியே பரிமாற்றமடைந்தது. இன்றும் பழைய கட்டிடங்களின் எச்சங்களை சில இடங்களில் காணலாம்.

இன்றைய கெய்சர் வீதியிலுள்ள புறக்கோட்டை பொலிஸ் இருந்த பகுதி இந்தக் குடியிருப்பில் இருந்தவர்களுக்கான மயானமாக இருந்தது. Pettah Cemetery என்றும், Pettah Burial Ground என்றும் அது அழைக்கப்பட்டது. அங்கே புதைக்கப்பட்ட டச்சு அதிகாரிகளின் விபரங்களை tombstones and monuments in Ceylon என்கிற நூலில் பென்ரி லூயிஸ் (J. Penry Lewis) விபரித்திருக்கிறார். 

அன்று இருந்த கொழும்பு கோட்டையை இணைக்கும் பாதையாக விளங்கிய இன்றைய மெயின் வீதி டச்சு காலத்தில் “King’s Street” (அரச வீதி) என்று அழைத்தார்கள்.


முதலில் இருப்பது கொழும்பு மையத்தின் புதிய தோற்றம். கீழே இருப்பது 1756 இன் தோற்றம். மேற்படி இரண்டு வரைபடங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மொத்தத்தில் இது சுதேசிகளின் குடியிருப்புகளாக இருக்கவில்லை. வுல்பெண்டல் பகுதி வரை புறக்கோட்டையை அபிவிருத்தி செய்திருந்தார்கள். 1796 இல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின்னர் தான் இது ஐரோப்பியர் அல்லாதவர்களும் வாழும் பகுதியாக ஆனது. கோட்டையும், புறக்கோட்டையும் (Fort, Pettah) இப்படித்தான் பின்னர் பெயரிடப்பட்டன.  ஆங்கிலேயர்கள் தான் புறக்கோட்டையை ஒரு வர்த்தக – வியாபாரத் தளமாக மாற்றியெடுத்தார்கள்.

1885 அளவில் கொழும்புத் துறைமுகச் சுற்றாடல் பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சியின் காரணமாக சந்தைக்கான இடமாகவும், ஏற்றுமதித் தளமாகவும் வளர்ச்சியுற்றது. 1900 களின் ஆரம்பத்தில் சிறு வணிகர்கள், சில்லறைக் கடைகள் இல்லாமல் போய் மொத்த விற்பனை வணிகஸ்தளமாக அது மாற்றம் கண்டது.  

டச்சுக் காலத்திலேயே தமிழ், முஸ்லிம்கள் இந்தப் பகுதியில் வியாபாரத்தில் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். 

ஆங்கிலேயர் காலத்தில் இங்கே உள்ள சில வீதிகளின் பெயர்கள் அங்கே வாழ்ந்த சில சமூகக் குழுவினரின் பெயர்கள் சூட்டப்பட்டன. பார்பர் தெரு, செட்டியார் தெரு, சோனகர் தெரு, மலே வீதி, சைனா வீதி, போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். மெசேஞ்சர் வீதி என்பது அன்று தகவல்களை கொண்டு சென்று சேர்க்கும் பணி நிகழ்ந்த இடம். டச்சுக்காரர்கள் அவ்வீதியை “Rue de massang” என்று அழைத்தார்கள். அப்பணியில் ஈடுபட்ட  இளைஞர்கள் வாழ்ந்த பகுதி அது. இன்னும் சொல்லபோனால் அவர்கள் அன்றைய தபால்கார்கள்.

புறக்கோட்டை

கொழும்பின் வடகிழக்குப் பகுதியில் களனி நதி வந்து விழும் பகுதி தான் ஒரு வர்த்தக துறைமுகமாக பதினோராம் நூற்றாண்டில் தொற்றம்பெறத் தொடங்கியது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவே அந்த பகுதி தெரிவானது. அங்கே இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் குடியிருப்புகள் அப்போது அமைந்தன. இலங்கையில் ஐரோப்பிய காலனித்துவம் காலூன்றுவதற்கு முன்னரே வெளிநாட்டு முஸ்லிம் வர்த்தகர்கள் கொழும்புக்கு பரீட்சயப்பட்டுவிட்டார்கள்.

1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் புறக்கோட்டையின் தோற்றம் பெரும் மாற்றம் கண்டது எனலாம்.

கொழும்பின் நகராக்க வளர்ச்சி, வர்த்தக – வியாபார வியாபகத்தின் காரணமாக நகரத்தில் தொழிலாளர்கள்  குடியேற்றப்பட்டார்கள். நகரத்தை நோக்கி குடிபெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.  பல்லின, பன்மொழி, பன்மதங்களைச் சேர்ந்த சகல வர்க்கத்தினரும் புழங்கி வாழும் பகுதியாக இப்பகுதி மாற்றம் பெற்றதுடன் காலப்புக்கில்  சனப்பெருக்கத்தோடு, சன நெரிசல்மிக்க பகுதியாக வளர்ச்சி கண்டது. அதனால் ஆங்கிலேயர் காலத்திலேயே இப்பகுதியில் சன நெரிசல் உள்ள குடியிருப்புகள், தோட்டங்கள் (வத்த), என்றும், முடுக்கு என்றும் அழைக்கப்படத் தொடங்கின. புறக்கோட்டையில் உள்ள காப்பிரி முடுக்கு (Kafari Muduku) 18 ஆம் ஆண்டிலிருந்தே அழைக்கப்படத் தொடங்கிவிட்டதாக பேராசிரியர் ஷுஜி பூனோ (Shuji FUNO) கூறுகிறார்.

டச்சு கால கட்டிடத்துக்கு சாட்சி கூறும் முழு உருவமாக “புறக்கோட்டை”யில் எஞ்சியிருக்கும் இரு கட்டிடங்களைக் கூறலாம். ஒன்று; 1600களில் கட்டப்பட்ட டச்சு கவர்னராக இருந்த தோமஸ் வான் ரீ(Thomas van Rhee 1692-1697) என்பவரின் வாசஸ்தலம். அது இன்று பிரின்ஸ் வீதியில் உள்ள டச்சு மியூசியமாக திகழ்கிறது. இரண்டாவது 1757 இல் கட்டப்பட்ட வுல்பெண்டால் சேர்ச் என்று அழைக்கப்படும் டச்சு சீர்திருத்த தேவாலயம்.

கொழும்புக்கு செல்பவர்களும், கொழும்பில் இருப்பவர்களும் பிரின்ஸ் வீதியில் உள்ள டச்சு மியூசியத்தை ஒரு தடவையாவது சென்று பாருங்கள். அது உருவான கதையை தனியாக எழுதுகிறேன்.

கொழும்பு கோட்டைக்கு என்ன ஆனதென பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அடிக்குறிப்புகள்

  1. Brohier, RI., Changing Face of Colombo,(Covering the portuguese, Dutch and British Period) A Visidunu Publication, 2007
  2. Kyouta YAMADA, Masahiro MAEDA, Shuji FUNO, "Considerations on Spatial Formation and Transformation in Pettah (Colombo, Sri Lanka)" Journal of Architecture and Planning (Transactions of AIJ) April 2007

தினகரன் - 26.12.2021

பிற்குறிப்பு
சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்ட கொழும்பின் பல அரிய வரைபடங்களில் முக்கியமானது பால்தேயுஸ் 1672 இல் பல ஓவியங்களுடனும், வரைபடங்களுடனும் வெளியிட்ட  Naauwkeurige beschryvinge van Malabar en Choromandel என்கிற டச்சு மொழி நூலில் வெளியிடப்பட்டிருந்த வரைபடம். அந்த நூல் நாற்பது ஆண்டுகளின் பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு A true and exact description of the most celebrated East-India coasts of Malabar and Coromandel; as also of the isle of Ceylon என வெளிவந்தது. அன்றைய கோட்டையையும், அதற்கு வெளியில் உள்ள புறக்கோட்டையையும் பிரிக்கப்பட்டிருப்பதை தெளிவாக விளக்கும் வரைபடங்களில் அது முக்கியமானது.
ஆரம்பத்தில் மட்டுக்குளிக்கு அப்பால் களனி கங்கை கடலில் வந்து விழும் இடம் வரை கோட்டை மதில்கள் கட்டப்பட்டிருந்தன. அதை இந்த வரைபடத்தில் காணலாம்.
டச்சு, ஆங்கில நூல்களில் வெளியான அந்த வரைபடத்தை பிற்காலத்தில் ப்ரோஹியர் (R.L.Brohier) வெளியிட்ட Changing Face of  Colombo என்கிற நூலின் அட்டைப் படத்துக்கு உள் அட்டையில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவ்வரைப்படத்தில் பால்தேயுஸ் குறிப்பிட்ட இடங்கள் பற்றிய அதி முக்கிய விபரங்களின் பட்டியலை ப்ரோஹியர் வெளியிடாதது ஏன் எனத் தெரியவில்லை.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates