Headlines News :
முகப்பு » , , , » என்.சரவணனின் "பண்டாரநாயக்க கொலை" நூல்: ஒரு அரிய பணி (அணிந்துரை) - ந.சுசீந்திரன்

என்.சரவணனின் "பண்டாரநாயக்க கொலை" நூல்: ஒரு அரிய பணி (அணிந்துரை) - ந.சுசீந்திரன்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மிக உற்சாகமான இளைஞனாக, தேடித்தேடிப் புதிய தகவல்கள் பெற ஓடி உழைக்கும் ஊடகவியலாளனாக, இலங்கையில் தென்னிலங்கை அரசியல், இலக்கியச்  செயற்பாட்டாளர்களைத் தமிழ் பேசும் இனத்தவர்களுடன் இணைக்கும் பாலமாக, எழுத்தாளனாக, சஞ்சிகை ஆசிரியனாக, சிங்கள-தமிழ்  மொழிபெயர்ப்பாளனாகத்  சந்தித்த போதில்  தோழர் சரவணன் அவர்களிடம் காணப்பட்ட அதே ஆய்வுநோக்கும், ஆழநோக்கும் குன்றிவிடாது ஆர்முடுகலாகவே சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு அவரது அண்மைக்கால நூல்கள் சாட்சியங்களாகப் பரிமளிக்கின்றன. 

தலித்தியம்  இலக்கியத்திலும் அரசியல்  கலாசாரத் தளங்களிலும் தமிழுக்கு அறிமுகமான எண்பதுகளில் அதனை  இலங்கையிலும் தொடர் பேசுபொருளாக்கியவர்  சரவணன் அவர்கள்.  ’இலங்கை அரசியலில் பெண்கள்’ என்ற சுமார் இருபது வருடங்களுக்கு முன் வெளியாகிய அவரது  நூல் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழில் வெளியாகிய குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண்களின் அரசியல் வரலாற்றைப்பேசுகின்ற முன்னோடி நூல் எனவும் குறிப்பிடலாம். 

பிரபலங்களும் அரசியற் பிரமுகர்களும் அகாலமாகக் கொல்லப்படும்போது, அக் கொலை யாரால்? ஏன்? என்று உரிமைகோரப்படாதவிடத்து அக் கொலைபற்றிய வதந்திகளும், சாத்தியமான  மற்றும் சாத்தியமே இல்லாத ஊகங்களும்   தற்செயலாகவும், பலவேளைகளில்  பின் விளைவுகளை பற்றிய எண்ணமில்லாமால், பொறுப்பற்று, வெறும் பரபரப்புக்காக  எழுந்தமானமாகவும்   சிலவேளைகளில்  குறித்த விளைவுகள் ஏற்படவேண்டும் என்ற எதிர்பார்பில்  திட்டமிட்டும் பரப்பப்படுகின்றன. வரலாற்றின் நீண்ட பாதையில்  இவை குவிந்து கிடக்கின்றன. 

ஓலோவ் பால்மே என்பவர் , தனக்கு மெய்ப்பாதுகாப்பாளர்கள் வைத்துக்கொள்ளாத சுவீடன் நாட்டின் பிரதமாரக இருந்தவர். ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு மனைவியுடன் கால்நடையாக வீடுதிரும்பும் வேளை 1986 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். கண்கண்ட சாட்சியாக ஒரே ஒருவர் இருந்தார். அவரும் இறந்துவிட விசாரணைகள் கைவிடப்பட்டன. அன்று தென்னாபிரிக்க அப்பாதைட் நிறவெறி ஆதரவாளன் ஒருவன், யூக்கோஸ்லாவிய உளவுத்துறை, சுவீடனின் வலது தீவிரவாதி, அன்றைய சிலி நாட்டு பாசிசம், கூர்டிஸ்தான் விடுதலை அமைப்பு, அல்லது  தன்னிச்சையான தனித்த ஒரு பயங்கரவாதி போன்றோர் இக் கொலையின் பின்னணியில் இருந்திருகின்றார்கள் என்ற ஊகச் செய்திகளும் எடுகோள்களும் இன்னமும் தொடரத்தான் செய்கின்றன.

அவுஸ்திரேலியப் பிரதமராயிருந்த ஹோல்ட்  என்பவர், கடலில் சுழியோடுவதில் வல்லுனர். அவ்வாறு அவர் ஒருமுறை கடலில் சுழியோடியபோது காணமற் போய்விட்டார். அவரைச்  சீன நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று கடத்திச் சென்றிருக்கின்றது என்றும் மக்கள் நம்புகின்ரனர்.   

உண்மையில் இருந்து ஊகத்தினையும், சாத்தியங்களில் இருந்து சந்தேகங்களையும், முழுமையற்ற முடிவுகளில் இருந்து புனைவுகளையும் பிரிக்கமுடியாதபடியும் ஊடகப் புதின்ங்களில் இருந்து உண்மை உலகினைக்  கண்டறிய முடியாதபடியும்  சிக்கல் நிறைந்தவையாய் இருக்கின்றன மனித வாழ்வும், வாழ்வின் தூரநோக்கும்!

உலக கறுப்பின மக்களின்  ஆதர்ஷமாய் விளங்கியவர் மல்கம் எக்ஸ். 1965 இல் அவர் கொல்லப்பட்டபோது, மூன்று நபர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டும், ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று தீர்க்கப்பட்டது. யார், ஏன்  கொன்றிருக்கலாம் என்று பேச இன்றும் அக்கொலைபற்றிய ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன. 

ஐக்கிய அமெரிக்காவின் தலைவராக இருந்த  ஜான் எவ். கெனடியின் கொலை 1963 இல் இருந்து உலகில் அதிகம் பேசப்பட்ட கொலையெனக் கொள்ளலாம். இக் கொலையினை காஸ்றோ விற்கு எதிரான தீவிர வலதுசாரி ஒருவன் செய்தான் என்றும், அன்றைய உப-தலைவர் ஜாண்சனே இதனைச் செய்வித்தார் என்றும், இக் கொலையின் சூத்திரதாரி சி.ஐ.ஏ என்ற அமெரிக்க உளவு நிறுவனம் என்றும், சோவியத் உளவு நிறுவனம் என்றும் நிரூபணத்தின் எல்லைவரை வந்துவிடுவதாகப் பாசாங்கு காட்டும் ஆய்வுகளும் ஆவணகளும்  மேலும் மேலும்  உலக சனங்களுக்குக்  கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. நாம் அறிய,  பங்களாதேஸ்  சிற்பி முஜிபுர் ரஃமான், அன்றைய பாகிஸ்தான்  இராணுவ ஆட்சித் தலைவர்  ஸியாவுல் ஹக், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி போன்றவர்களின் கொலைகள் மீது கூட ஊகங்கள் காலத்துக்குக் காலம் முன்வைக்கப்படுகின்றன.

ஜெர்மனியின் பாராளுமன்ற அங்கத்தவர் யூர்கன் மொல்லமான் என்பவர், அமைச்சராகவும்  இருந்தவர். வானவெளியில் இருந்து பரசூட்டில் குதிக்கும் இராணுவ விளையாட்டில் அனுபவம் மிக்கவர்.  பாராளுமன்றத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் பேசியவர். 2003இல் பரசூட் காற்றில் விரிந்தபின்னர் அதன் கொடியை வெட்டி நிலத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படினும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் தொடருகின்றன.

இரண்டாவது உலகப்போரின்போது பிரித்தானிய இராணுவத்தில்  நிறைய வேலை வாய்ப்புக்களை பெற்றிருந்த இலங்கையின் தென்பகுதியில்  போருக்குப் பின்னர் வேலையின்மை ஓர் பிரச்சினையாக உருவெடுத்தது. இதன்போது சில இந்திய எதிர்ப்பு இனவாதிகள், மலையக மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தினை மூர்க்கமாக மேற்கொண்டனர்.  இன்னொருபக்கத்தில்,  இடதுசாரிக் கட்சிகளின் உருவாக்கமும் மக்களின் தொழிற்சங்க ஆதரவும்  அதிகரித்தன. இந்தியாவில் காலனித்துவ எதிர்ப்பும், காந்தியின் அஹிம்சைப் போராட்டமும் சூடிபிடித்திருந்த வேளை, இலங்கையில் காலனித்துவ எதிர்ப்பும் சுதந்திரப் போராட்ட ஆதரவும் இடதுசாரிகளிலேயே  அதிகம் காணப்பட்டது. ஆனாலும் அன்று அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் காலனித்துவ நேச சக்தியாகவே காணப்பட்டனர். சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவது என்பது காலனித்துவ எதிர்ப்புக் கருவியாக இல்லாமல், அதிகாரத்தினைக் கைப்பற்றும் குறுக்குவழியாகவே இருந்திருக்கின்றது.

இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றினைத் தீர்மானிக்கும் சக்தியாக ‘மஹாவம்ச மனோநிலை’ (பேராசிரியர் க.சிவத்தம்பி) எவ்வாறு செயற்பட்டது என்பதனை  புரிந்துகொள்ளவும், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், ஏன் சிறுபான்மை இனமொன்றின் பயத்துடன், இனத்தையும் மொழியையும் , மதத்தையும் பாதுகாப்போம் என்ற முன்னெடுப்பில் பல்லின, பல்கலாசார, பன்மொழிச் , பல சமய இணக்கச் சூழலை அழித்து சகலவகைச் சிறுபான்மைகளையும் அச்சுறுதிக் கொண்டிருப்பதற்கான அடித்தளங்கள் எப்போது எங்கே போடப்பட்டவை போன்றவற்றைப் புரிந்துகொள்ளவது ஆய்வுப்பரப்பில் இன்றும் முக்கியம்பெறுகின்றது. 

1955 இல்  பிரதமர் ஜான் கொத்தலாவல அவர்களுக்கு நெடுந்தீவில்  கோலாகலமான வரவேற்பும் குறியீட்டு முடிசூட்டுவிழாவும் அவரது ஆத்ம நண்பன் ஊர்காவற்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அல்பிறட் எல். தம்பியையா அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டது. அதில் மிக்க மகிழ்ச்சியடைந்த  ஜான் கொத்தலாவல,  இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக, வேண்டுமானால் சட்ட உருவாக்கத்தின் மூலம் உறுதிசெய்யப்படும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்  தெரிவித்தார். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி (இதன்  வாசிப்பு  தமிழும்  அல்ல என்பதுதான்) என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ’சாணக்கிய’ வாசகத்தை இது தென்பகுதியில் கேள்விக்குள்ளாக்கியதுடன் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கு இன்னும் ஒருபடி மேலே சென்று "24 மணிநேரத்தில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி" என்ற கோசத்தினை எழுப்ப ஒரு அரிய சந்தர்ப்பமாக உருவாகியது. 

பண்டாரநாயக்காவின் கொலையினை  ’பண்டா- செல்வா’ ஒப்பந்தத்துடன்  தொடர்பு படுத்தி அன்று வெளிவந்த ஊகங்கள் போலவே இன்றும்  ஊகங்கள் உருவாக்கப் படுகின்றன.  இப்படி ஒரு புனைவினை உண்மைபோலக் காட்டுவதில் சிங்கள, பௌத்த இனவெறிப் பேரினவாத சக்திகள் தமது  கொலைக் கறைகளை அழித்துவிடப் பார்க்கின்றனர். பாதை யாத்திரை, பலத்த எதிப்பு,  ஊர்வலம் ,S.W.R.D. பண்டாரநாயக்காவின் இருப்பிடத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் போன்றவற்றால், நாட்டின் பிரதமரே ஒருதலைப் பட்சமாக அதைக் கிழித்துப் போட்டபின்னர் இன்னும் என்ன வேண்டியிருக்கின்றது. 

"பண்டா-செல்வா" ஒப்பந்தம்  புத்த பிக்குகள், கடும்போக்காளர்களின் வற்புறுத்தலினால்  ஒருதலைப் பட்சமாக் கிழித்தெறியப்பட்டாலும், அதன் அம்சங்களே  பின்வந்த காலங்களில், ஆட்சிமொழி, கருமமொழி, பிரதேசப் பயன்பாட்டு மொழி போன்ற விடங்களுக்குக் அடிப்படையாக அமைந்து என்பர் அரசியல் ஆய்வாளர்கள். ஆனாலும் உடனடித் தீர்வெடுக்க முடியாத பயந்தாங்கொள்ளியாகத்தான் அல்லது ஒரு அதிகார வேட்கையின் கைதியாகத்தான் எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா இருந்தார் என்பதற்கு பல உதாரணங்கள் இந் நூலில் சொல்லப்படுகின்றன. அதேவேளை சிறுபான்மை இனங்களின் அடையாளம் என்பது பற்றிய மலினமான புரிதலும் விரைவாக் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றித் தன்னை அரசியல் அதிகாரத்தில்  நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பதும் அவர் போட்ட தப்புக் கணக்குகள் என்பதுவும், சிறுபானமை இனங்களை  ஏமாற்றுவதுபோல, மூர்க்கமான பேரினவாத சக்திகளையும் கையாளாலாம் என்ற ஒரு எண்ணம் அவருக்கு இருந்திருப்பின் அதுவும்  அவரது உயிருக்கே ஆபத்தாக அமைந்தது மட்டுமல்லாமல், அழகிய அந்த நாட்டில் நாளை வரை  தொடரப்போகும் அமைதியற்ற வாழ்வைத் தொலைத்த நிலைக்கும் பலதரப்புக் காரணிகளாய்  இருப்பதை நாம் உணர்ந்துகொண்டிருக்கின்றோம். 

பிரதேசங்களின் தன்னாட்சியை, பிரதேசங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை தன் அரசியல் பிரவேசத்தின் ஆரம்ப காலங்களில்  தன் அரசியற் தூரநோக்காக முன்மொழிந்து, முற்போக்குத் தேசியக் கட்சி ஒன்றை ஆரம்பித்தவர்   எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள். டொனமூர்  யாப்புச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குமுகமாக, அக்காலத்தில் அதிகாரத்தில் இருந்த டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் கூட்டிய   தனிச் சிங்களவர்களை மட்டுமே கொண்ட மந்திரிசபைக் கூட்டத்தில்  இருந்து  சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அங்கத்தவர்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி வெளிநடப்புச் செய்தார்.  சுதந்திர இலங்கையின் நான்காவது பிரதமராக பதவியேற்ற பின்னர், இடதுசாரிகளின் துணையுடன்,  நன்செய்நிலங்கள் சீர்த்திருத்தச் சட்டம், மற்றும் போக்குவரத்துத் துறையினை அரசுடமையாக்கியது போன்றவை அவரது துணிவினைப் பாராட்டக்கூடியவை தான்.

இத் திட்டமிட்ட கொலை,   புத்தரக்கித என்ற தனி  ஒரு மனிதனின்,  பிடிவாதமான  வியாபாரியின்,  நஸ்டமடைந்த வியாபாரத் தரகனின் கடுங் கோபத்தில் புத்தி மறந்த நிலையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு  என்று கொள்வதில் பலரும் உடன்படுகின்றனர். ஆனாலும் நிலவுகின்ற அனைத்துச் சந்தேகங்களையும் அவற்றிற்கான கிடைக்கப்பெறும் காரணங்களையும்  இந் நூலில் அலசி ஆராய்கின்றார்  தோழர் சரவணன் அவர்கள்.  எமது வரலாற்றின்  அழிந்து படும் பக்கங்களைக் காப்பாற்றி, அவற்றைத் தமிழில்  தருகின்ற அரிய பணியினை மேற்கொண்டிருக்கும் சரவணன் அவர்களுக்கு நன்றியும் எனது வாழ்த்துக்களும்.   

நடராஜா சுசீந்திரன்

பேர்லின் - ஜேர்மனி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates