கம்போடிய மகாவம்சம் என்கிற ஒன்று உண்டு. ஆனால் அது கம்போடிய வரலாற்று காவியமல்ல. இலங்கையின் மகாவம்சமே தான். கம்போடியாவில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் அனைத்தும் கம்போடிய மொழியில் (Khmer) கிடைத்திருப்பதால் அதனை “கம்போடிய மகாவம்சம்” என்று அழைப்பர். ஆனால் மகாவம்சத்தில் உள்ள செய்யுள்களை (காத்தா) விட இரண்டு மடங்கு பெரிய அளவிலானது இந்த கம்போடிய மகாவம்சம். மகாநாம தேரரின் மகாவம்சத்தில் காணப்படுகிற 37 அத்தியாயங்களில் 2886 செய்யுள்களை காண முடியும் ஆனால் கம்போடிய மகாவம்சத்தில் 5772 செய்யுள்கள் காணப்படுகின்றன.(1) கி.மு. 483 லிருந்து கி.பி. 362 ஆம் ஆண்டு வரை அமைந்த வரலாற்றுச் செய்திகளை விவரிப்பதாக இந்த 37 அத்தியாயங்கள் அமைந்துள்ளன. மகாநாம தேரரின் மகாவம்சத்தில் உள்ள அதே அத்தியாயத் தலைப்புகளையும் அதே உள்ளடக்கங்களையும் கொண்டிருந்தாலும் மூல நூலில் காணப்படாத பல விபரங்கள் விரிவாக காணப்படுகிறது.
இதை எழுதியவர் மொக்கலான என்கிற ஒரு பிக்கு. அவர் பற்றிய துல்லியமான அதிகமானத் தகவல்களை இன்னமும் யாராலும் கூறமுடியவில்லை. ஆனால் அவர் பர்மா அல்லது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.(2) மொக்கலான வாழ்ந்த காலம் 9 அல்லது 10ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கணிக்கப்படுவதால். கம்போடிய மகாவம்சம் இதே காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்கலாம். எழுதபட்டிருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. தாய்லாந்தின் மத்திய பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பேங்கொக்கின் முதலாவது அரசாட்சி காலமாக கொள்ளப்படும் 1782-1809 காலப்பகுதியில் இது தாய்லாந்து மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. (3)
கம்போடிய மகாவம்சத்தை இப்படியும் அழைப்பார்கள்.
• கம்போடிய மகாவம்சம் (Cambodian Mahavamsa)
• மொக்கலான மகாவம்சம் (Moggallana Mahavamsa)
• விரிவாக்கப்பட்ட மகாவம்சம் (Extended Mahavamsa)
• கிமர் மகாவம்சம் (Khmer Mahavamsa)
இப்படி ஒரு மகாவம்சம் இருப்பதை பேராசிரியர் எட்மன்ட் ஹார்டி (Proffessor Edmond Hardy) தான் முதலில் அச் செய்தியை வெளித்தெரிய வைத்தார். இந்த மூல ஓலைச்சுவடிகள் கம்போடியாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு “கம்போடிய மகாவம்சம்” அல்லது “விரிவாக்கப்பட்ட மகாவம்சம்” என்று (Extended Cambodian Mahavamsa) பேராசிரியர்.பீ.பீ.மலலசேகர இதற்கு பெயர் சூட்டினார். ஆனால் அது எந்தவிதத்திலும் கம்போடியாவின் வரலாற்றை உள்ளடக்கிய மகாவம்சம் அல்ல. அது இலங்கையின் சிங்கள பௌத்த அரசியல் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் தான்.
மகாநாம தேரரின் மகாவம்சத்தில் 28-32வரையான 5 அத்தியாயங்களில் 422 செய்யுள்களில் துட்டகைமுனுவால் ருவண்வெளி சேய தூபியைக் கட்டியது தொடர்பாகவே இருக்கிறது. மகாவம்சத்தில் துட்டகைமுனுவுக்கு கொடுக்கப்பட்ட இடம் வேறெந்த அரசனும் பெற்றதில்லை. அதேவேளை துட்டகைமுனு பற்றிய இதைவிட அதிகமான விபரங்களை கம்போடிய மகாவம்சம் உள்ளடக்கியிருக்கிறது. குறிப்பாக பௌத்த மதத்துக்கு துட்டகைமுனு ஆற்றிய சேவை பற்றிய பகுதி அதில் அதிகம்.
பாளி வெளியீட்டு சங்க சஞ்சிகையில் 1902 ஆம் ஆண்டு வெளியான பேராசிரியர் ஹார்டியின் கட்டுரையில் டேர்னர் செய்த மகாவம்ச மொழிபெயர்ப்பு குறித்து கடுமையாக விமர்சிக்கிறார். கம்போடிய மகாவம்சத்தை டேர்னர் முழுமையாக ஆராயவில்லை என்றும் 1883இல் வெளியான அதன் பிரதியில் உள்ள ஆசிரியர் குறிப்பில் சில அடிக்குறிப்புகளையே பயன்படுத்தியிருக்கிறார் என்றும் அவர் விமர்சிக்கிறார். (4)
அசோகனும், அசோகனின் சின்னமுமே இன்றும் இந்தியாவின் முக்கிய அடையாளங்களாக எழுப்பப்பட்டுள்ளதை அறிவோம். பொதுவாக பல நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்திய வரலாற்றுத் தகவல்களைக் கண்டுபிடிப்பதற்கு மகாவம்சம் முக்கிய வகிபாகத்தை வகித்திருப்பதை பல இந்திய ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர். குறிப்பாக அசோகன் காலத்து ஆட்சியைப் பற்றிச் சொல்லலாம்.. அசோகனின் பட்டத்து ராணி “அசந்திமித்த” பற்றிய முதல் மூலத் தகவல்களை “கம்போடிய மகாவம்சம்” தான் தந்தது என்கிறார் மலலசேகர.(5) அசந்திமித்த பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய ஆய்வொன்று “CONSTITUTING COMMUNITIES” என்கிற நூலில் காணக்கிடைக்கிறது.(6) அசோகன் காலத்தை மகாநாம தேரரின் மகாவம்சத்தை விட “கம்போடிய மகாவம்சம்” அதிகமான தகவல்களைத் தந்துள்ளது எனலாம்.
மகாவம்சம் பற்றிய அறிதல்களின் போது தவிர்க்க முடியாத நான்கு மேற்கத்தைய அறிஞர்களை நாம் அறிந்தாகவேண்டும். ஜோர்ஜ் டேர்னர் (George Tuner, ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep), ஹர்மன் ஒல்டன்பேர்க் (Hermann Oldenberg) , வில்ஹைம் கைகர் (Wilhelm Geiger) ஆகியோரே அவர்கள். மகாவம்சத்தை வெறும் மொழியாக்கம் செய்தவர்கள் அல்லர் இவர்கள் வரலாறு, தொல்பொருள், சுவடியியல் என்பவற்றின் துணையோடு அவற்றை வெளிக்கொண்டுவந்தார்கள். அதில் உள்ள தகவல்களை உறுதிபடுத்த படாதுபாடுபட்டவர்கள். அதேவேளை அதில் உள்ள புனைவுகளை சிதைக்காமல் அப்படியே மக்களுக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள். அதே வேளை வின்சன்ட் ஸ்மித் (Vincent A. Smith) போன்றோர் மகாவம்சத்தில் உள்ள ஓட்டைகளை கட்டுடைத்தவர்களில் முக்கியமானவர்கள். 1908 இல் வெளிவந்த இந்தியாவின் பண்டைய வரலாறு (The Early History Of India)என்கிற அவரின் நூல் இதற்கொரு முக்கிய சான்று.
மகாவம்சத்தை எழுதுவதற்கு பிரதான நூலாக “சிஹல அத்தகத்தா” அமைந்ததாக மகாநாம குறிப்பிடுகிறார். அதன்படி பார்த்தால் மகாநாம தேரரால் சிஹல அத்தகத்தாவிலிருந்து தவிர்க்கப்பட்ட பகுதிகள் கம்போடிய மகாவம்சத்தில் இருப்பதாகக் கொள்ளலாம்.
இவ்வாறு மகாநாம தேரர் வரலாற்று இருட்டடிப்பு செய்தது ஏன்? எதற்காக? என்கிற கேள்விகள் இன்றும் உரையாடல்களாக நீள்கின்றன.
“மகாவம்சத்தின் மொக்கலான பிரதி” (මහාවංසයේ මොග්ගල්ලාන සංස්කරණය) என்கிற தலைப்பில் இப்போது சிங்கள நூல் விற்பனை நிலையங்களில் இந்தப் பிரதி விற்பனைக்குக் கிடைக்கின்றன. மகாவம்சத்தின் 6 தொகுதிகள் சிங்களத்திலும், பாளியிலும் வெளிவந்துவிட்டபோதும் இன்னமும் தமிழில் முதலாவது பிரதி மட்டுமே வெளிவந்துள்ளதை அறிவீர்கள். அப்படி இருக்கும்போது “கம்போடிய மகாவம்சம்” மட்டும் தமிழில் அவ்வளவு இலகுவாக கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இலங்கையின் சர்ச்சைக்குரிய வரலாற்றுக் கட்டுக்கதைகளை கட்டுடைப்பதற்கு இவை தமிழில் வெளிக்கொணரப்பட வேண்டும்.
மகாவம்சத்தின் தொடர்ச்சி
12 ஆம் நூற்றாண்டில் 1வது பராக்கிரமபாகு அரசனால் தம்மருச்சி நிக்காய (ධම්මරුචි නිකාය) கலைக்கப்பட்டத்தைத் தொடந்து பிக்குமார் வரலாற்றை பதிவுசெய்துவந்த மரபு அத்துடன் நின்று போனது.
பௌத்த மதம் இலங்கையில் பரவி, நிலை பெற்ற காலத்தில் பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த பௌத்த பிக்குகள் சமய மரபுகள் குறித்தும், அப்போது ஆண்ட மன்னர்களின் வரலாற்று புராணங்களையும் அவர்களின் பணிகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவை பற்றி ஏடுகளில் எழுதி வந்தார்கள். அவை வாய்மொழி வரலாறாகவும் காலாகாலமாகப் பேணி வந்தார்கள். இவற்றை “அத்தகத்தா” என்று அழைத்தார்கள். இப்படி விகாரைகளில் பேணப்பட்டு வந்த ‘அத்தகதாக்கள்’, ஒரு கட்டத்தில் சேர்த்து தொகுத்து ‘சீஹலத்தகத்தா-மகாவம்சம்’ என்று அழைத்தார்கள்.
‘அத்தகத்தா-மகாவம்சத்தின்’ ஏட்டுப்பிரதிகளைத் தழுவிப் பின்னாளில் தீபவம்சம் எழுதப்பட்டது. இது பல பிக்குகள் காலத்துக்கு காலம் எழுதியது. எனவே இன்றுவரை இதை எழுதியவர் யார் என்று எங்கும் அறுதியாக கூறுவதில்லை.
மகாவம்சத்தை எழுதுவதற்கு சீஹல அத்தகத்தா, தீபவம்சம் போன்றவை எவ்வாறு மூலாதார நூலாக இருந்ததோ அதுபோல “வங்சதப்பகாசீனி” (වංසත්ථප්පකාසිනි) என்கிற நூலும் மூலாதாரமாக இருந்திருக்கிறது என்பதை மகாவம்ச செய்யுள்களிலேயே ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
அபயகிரி விகாரையைச் சேர்ந்த வரலாற்று நிபுணத்துவம் பெற்ற பிக்குகளால் விஹாரட்டகத்தா (විහාරට්ඨකථා) என்கிற ஒரு மகாவம்சமும் எழுதப்பட்டு அது 9 ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்திருக்கிறது. “வங்சதப்பகாசீனி” எழுதப்படுவதற்கு மூலாதாரமாக இது இருந்திருக்கிறது.
தீபவம்சத்தை மூலாதாரமாகக் கொண்டு தான் மகாவம்சம் உருவானது. இன்னும் சொல்லப்போனால் தீபவம்சத்தின் திருத்தப்பட்ட வடிவமே மகாவம்சம்’ என்றும் கூறலாம். ஆக தீபவம்சம், மகாவம்சம் ஆகியாற்றின் மூலமானது ‘சீஹலத்தகத்தா-மகாவம்சம்’ என்று கூற முடியும். இவை இரண்டிலும் சில இடங்களில் ‘சீஹலத்தகத்தா’வில் இருக்கும் அதே செய்யுள்கள் அப்படியே இருப்பதையும் காண முடிகிறது. தீபவம்சத்தை விட மகாவம்சம் இலக்கிய நயம் கூடிய ஒன்றாகவும், பாளி மொழியின் செழிப்பும் மிகுந்ததாக காணப்படுவதாலும், தீபவம்சத்தில் இருந்த குறைபாடுகள் பல சரிசெய்யப்பட்ட்டிருபதாலும் தீபவம்சத்தை விட “மகாவம்சம்” தனக்கான தனியிடத்தை வரலாற்றில் பெற்றுக்கொண்டது என்று தான் கூற வேண்டும்.
மகாவம்சமானது அதற்கு முந்திய பல நூல்களில் இருந்து தொகுப்பட்டது போல மகாவம்சம் எழுதப்பட்டதன் பின்னரும் மகாவம்சத்தை விரிவாக்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படிப்பட்ட ஒன்று தான் சூளவம்சமும். மகாவம்சம் எனும் போது பாரம்பரிய வம்சங்களின் கதை என்கிற பொருளைக் கொண்டுள்ளது. அதுபோல சூளவம்சம் என்பது சிறு வம்சங்களின் கதை என்று சிங்களத்தில் வரைவிலக்கணப்படுத்துவார்கள். சூளவம்சத்தில் 1815 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி பதிவு செய்யப்பட்டுள்ளது. சூளவம்சம் தனியொருவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. மகாவம்சத்தின் இரண்டாவது தொகுதியாக அறியப்படுவது இந்த சூளவம்சம் தான்.
சூளவம்சம்
சூளவம்சம் 38 வது அத்தியாயத்தில் இருந்து 100வது அத்தியாயம் வரையான கதைகளைக் கூறுகிறது. மகாசேனன் மன்னன் காலத்திலிருந்து இலங்கையின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்கிரமசிங்கன் வரையான காலத்தைப் பற்றி பேசுகிறது. மகாவம்சத்தில் எப்படி துட்டகைமுனு பாட்டுடைத் தலைவனாக கொண்டாடப்படுகிறானோ அதேபோல சூளவம்சத்தில் மகா பராக்கிரமபாகு கொண்டாடப்படுகிறான். மகாவம்சக் கதைகளில் உள்ள ஐயங்கள் இந்த சூலவம்சத்தில் குறைவு என்கிறார் கெய்கர். பல கல்வெட்டு ஆதாரங்கள் சூலவம்சக் கதைகளுக்கு சான்று பகர்கின்றன.
ஒரு வகையில் சொல்லப்போனால் சூளவம்சம் என்கிற பெயரில் ஒன்று இருந்ததில்லை. அந்தப் பெயரில் அவை தொகுக்கப்பட்டதும் இல்லை. மகாவம்சத்தை மொழிபெயர்த்ததன் பின்னர் அதற்கடுத்த தொடர்ச்சியான வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் ஓலைச்சுவடிகளை முறையாக தொகுத்து ஒரே நூலாக ஜோர்ஜ் டேர்னர் தொகுத்தபோது அவரால் வைக்கப்பட்ட பெயர் தான் “சூளவம்சம்”.
சூளவம்சமானது
- தம்மகித்தி என்பவரால் முதலாம் பராக்கிரமபாகு காலம் (1186) வரை தொகுக்கப்பட்டிருக்கிறது.
- விஜயபாகு காலம் முதல் கி.பி 1332 ஆம் ஆண்டு நான்காம் பராக்கிரபாகு காலம் வரை எழுதப்பட்ட இந்தப் பகுதி யாரால் எழுதப்பட்டது என்பது நிச்சயமாக சொல்ல முடிவதில்லை.
- திப்பட்டுவாவே சுமங்கள தேரரால் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் காலம் வரை (1781) எழுதபட்டிருக்கிறது
- ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், பட்டுவந்துடாவே பண்டித தேரர் ஆகியோரால் ஆங்கிலேயர் 1815 இல் கைப்பற்றப்ப்படும்வரை எழுதப்பட்டுள்ளது.
இது வரை மகாவம்சம் 6 தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றில் மொத்தம் 133 அத்தியாயங்கள் உள்ளடங்கியுள்ளன. அவை சிங்களத்திலும் பாளி மொழியிலும் கிடைகின்றன. தமிழில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் முதலாவது தொகுதியை மாத்திரம் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவை எதுவுமே சிங்கள மகாவம்சத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டவை அல்ல. சொல்லப்போனால் மொழிபெயர்த்தவர்களின் சுருக்கமான - சொந்த விளக்கவுரை தான். இந்த ஐந்தையும் எடுத்து பரிசீலித்தால் அந்த வித்தியாசங்களை அப்படியே உணர்வீர்கள்.
மகாவம்சத்தை தமிழுக்கு கொண்டு வந்த ஐவரில் ஒருவர் கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்). அந்த நூல் 2003 வெளிவந்தது. அதுபோல அவர் சூளவம்சத்தையும் தமிழுக்குத் தந்தார் (2008). துரதிர்ஷ்டவசமாக இவை இரண்டும் மிகவும் சுருக்கப்பட்ட சாரம்சமே. முழுமையானவை அல்ல. மகாவம்சத்தின் 1வது பாகம் கி.பி.301 வரையான கதை. அதன் பின்னரான 1815வரை பேசுகிறது சூளவம்சம். அதாவது இதுதான் மகாவம்சத்தின் 2வது பாகம். கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த சூளவம்சம் இரு தொகுதிகளைக் கொண்டது. மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது.
சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. மகாவம்சத்தின் இந்த இரு பாகங்களைத் தவிர அடுத்த நான்கு பாகங்களில் எதுவுமே தமிழில் வெளிவந்ததில்லை.
சூளவம்சத்தின் இறுதி வசனம் பாளி மொழியில் இப்படி காணக்கிடைக்கிறது.
“Ingirisanamaka sabbam rajjam karagatam karum”
அதாவது
"ஆங்கிலேயர்கள் முழு ராஜ்ஜியத்தையும் கைப்பற்றிக்கொண்டார்கள்”
என்று நிறைவடைகிறது.
பாளி என்று ஒரு எழுத்துவடிவத்தை எவரும் பயன்படுத்துவதில்லை. அது வாய்மொழி மரபாக மட்டுமே இருந்து வருகிறது. எனவே தான் பாளி மொழி உச்சரிப்பை, பிராமி, சிங்களம், தாய், கிமர் மற்றும் இன்னும் பல மொழிகளின் எழுத்து வடிவத்தில் வருகிறது. இலங்கையில் சிங்கள எழுத்துக்களில் தான் பாளி எழுதப்பட்டு வருவதை கவனித்திருப்பீர்கள். சமஸ்கிருதத்துக்கும் இதே நிலை தான். உலகில் எழுத்தில்லாத பல மொழிகள் அந்தத்த நாடுகளில் புழக்கத்தில் உள்ள வேறு எழுத்துக்களின் வழியில் தான் உச்சரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றன. உலகெங்கும் பல இடங்களில் லத்தீன் - ரோமன் எழுத்துக்களை பாளி வெளியீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். நீண்டகாலமாக லண்டனில் உள்ள பிரபல பாளி வெளியீட்டு சங்கம் (Pali Text Society) தமது பாளி கற்கைகளையும், வெளியீடுகளையும் ரோமன் எழுத்துக்களில் தான் மேற்கொண்டு வருகின்றன.
யார் இந்த புத்தகோஷா
கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேரவாத பௌத்தம் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்தது. குறிப்பாக மகாயான – தேரவாத பௌத்த பிரிவிகளுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துகொண்டிருந்த காலம். மகாயான பௌத்த கருத்துக்கள் தேரவாத பௌத்தத்தை விழுங்கும் நிலைக்கு சென்று கொண்டிருந்தது.
கி.மு முதலாம் நூற்றாண்டில் காஷ்மீரில் நடத்தப்பட்ட நான்காவது பௌத்த சங்க மாநாட்டைத் தொடர்ந்து சமஸ்கிருத மொழி பௌத்த இலக்கியங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது என்றே கூறலாம். பௌத்த இலக்கியங்கள் அத்தனையும் அப்போது பாளி மொழியில் இருந்ததால். இது நேரடியாகவே பௌத்தத்தின் மீதான் ஆக்கிரமிப்பாக வடிவமெடுத்தது. அப்படி பௌத்த இலக்கியங்களைப் பாதுகாப்பதற்காக உழைத்த முக்கிய ஒருவராக புத்தகோஷா என்கிற பிக்குவை குறிப்படலாம்.
அவர் இந்தியாவிலிருந்து கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கைக்கு வந்ததாக நம்பப்படுகிறது. இதன் மூலம் அவர் மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரரின் அதே காலத்தவர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். ஆனால் மாகாநாம தேரருக்கு முந்தியவர். மகாநாம தேரர் தனது மகாவம்சத்தில் புத்தகோசாவைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். தேரவாத பௌத்தம் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடாக இலங்கை அப்போது இருந்ததென்கிற நம்பிக்கையில் புத்தகோசா இலங்கையை வந்தடைந்தார். புத்தர் பரிநிர்வாணமடைந்தது கி.மு 543 என்று கொண்டால் புத்தகோஷாவின் காலத்துக்கு இடையில் சுமார் ஆயிரம் ஆண்டுகால இடைவெளி உண்டு எனக் கொள்ளலாம். விஜயனின் வருகையும் புத்தரின் அதே பரிநிர்வாண நாளென்று கூறப்படுவதால் மகாநாம தேரரின் மகாவம்சம் எழுதப்பட்ட இடைவெளியும் கூட அதே ஆயிரம் கால இடைவெளிக்குப் பின் தான் என்றும் கணிக்கலாம்.
பௌத்தத் துறவிகளை சேர்த்துக்கொண்டு இலங்கையில் காணப்பட்ட பௌத்த இலக்கியங்களை “ஹெல” மொழியிலிருந்து “மகத” மொழிக்கு (பாளிக்கு) மொழிபெயர்த்தார். அதன் மூலம் பௌத்தத்தைப் பாதுகாக்கலாம் என்று அவர் நம்பினார். அப்படி அவர் இலங்கை வந்து மொழி பெயர்த்த பௌத்த இலக்கியங்கள் பௌத்தத்துக்கு மட்டுமல்ல இலங்கையின் வரலாற்றுப் பதிவுக்கும் பெரும் பங்களிப்பை செய்தது.
மகாவம்சத்தின் ஒரு பகுதியான சூலவம்சத்தை பாளிக்கு மொழிபெயர்த்ததும் புத்தகோஷா தான். அது தவிர அவர் மொழிபெயர்த்ததைத் தவிர அவரால் எழுதப்பட்டவையும் ஒரு பட்டியலே உள்ளது. அதுபோல மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த “அத்தகத்தா” வின் அரைவாசிப் பகுதியை அவர் தான் மொழிபெயர்த்திருக்கிறார். பாளி மொழிக்கு அவற்றைத் திருப்பும் போது பல திரிபுகளை செய்துவிட்டார் என்கிற விமர்சனங்களை இன்றும் வைக்கிறார்கள். பௌத்த தர்மத்தை பௌத்த மதமாக ஆக்கியதில் அவருக்கு முக்கிய பங்குண்டு என்கிறார் போபிட்டியே குசலதம்ம தேரர்.(7)
புத்தகோசா; “திபிடக” உள்ளிட்ட பல ஓலைச்சுவடிகளை பாளிக்கு திருப்பிவிட்டு மூல ஓலைச்சுவடிகள் அனைத்தையும் தீயில் இட்டு அழித்துவிட்டார் என்கிற கதை சிங்கள இலக்கியங்கள் பலவற்றில் சொல்லப்படுகின்றன. மகாவிகாரை பகுதியில் ஏழு யானைகள் உயரத்துக்கு குவிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் அப்படி அழிக்கப்பட்டன என்று சிங்கள பௌத்த இலக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதை காண்கிறோம்.(8) அதைப் பற்றிய பல கட்டுரைகளையும், விவாதங்களையும் நாம் இன்றும் காண முடிகிறது. ஆனால் திபிடகவின் மாதுல அலுலெனே என்கிற இடத்தில் மறைக்கப்பட்டிருந்த திபிடக ஓலைச்சுவடிகள் புத்தகோசாவின் கரங்களுக்கு கிடைக்காததால் அவை தப்பின என்கின்றன இந்த இலக்கியங்கள்.
1860 இல் ஜோர்ஜ் டேர்னர் கேகாலை அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். சிங்களமும் பாளியும் கற்ற ஒரு வரலாற்றறிஞர் என்கிறபடியால் அவர் இலங்கையில் உள்ள ஓலைச்சுவடிகளை தேடித் தேடி சேகரித்தார். பல வரலாற்று ஓலைச்சுவடிகளை பாரம்பரியமிக்க பௌத்த விகாரைகளில் இருந்து அவர் கண்டெடுத்தார். மாதுல அலுலெனே விகாரையில் பாதுகாக்கப்பட்டு வந்த திபிடக பிரதிகளையும் அவர் ஆராய்ந்தார். அங்கிருந்த பிக்குமாருக்கு சில பவுன்களை கொடுத்து அவற்றை கையெழுத்திட்டு விலைக்கு வாங்கி எடுத்துச் சென்றார். 1864 இல் அவர் இங்கிலாந்துக்கு செல்லும்போது அவர் சேகரித்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுவிட்டார்.
அவரைப் போலவே சிங்களமும் பாளியும் கற்ற இன்னொரு ஆங்கில சிவில் உத்தியோகத்தரான ஹியு நெவில் ஓலைச்சுவடிகளை சேகரிப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டவர். அவர் சேகரித்த 7000 க்கும் அதிகமான ஓலைச்சுவடிகளும் இப்படித்தான் இங்கிலாந்துக்கு கடத்திச் செல்லப்பட்டன என்பதை அறிந்திருப்பீர்கள். அவை லண்டன் அருங்காட்சியக நூலகத்தில் இன்றும் உள்ளன.
1899 இல் ஏ.பி.சொய்சா என்பவர் பாரிஸ்டர் பரீட்சையில் தொடருவதற்காக இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு மகதி மொழியில் எழுதப்பட்ட திபிடகவின் மூலப் பிரதிகளை கண்டார். அவர் சிங்களத்துக்கு அதை மொழிபெயர்த்து 1902 இல் வெளியிட்டார்.
வல்பொல ராகுல தேரோ, உடகந்தவல சரணங்கர தேரர், ஆதிகாரம், மார்ட்டின் விக்ரமசிங்க, போன்றோர் சொய்சாவின் மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டினார்கள் அவர்கள் களுத்துறையில் கூடி ஆராய்ந்து பிக்குமார்களின் தலைமையில் மீள சரிசெய்து வெளியிட்டார்கள். இதே காலத்தில் ரேருகானே சந்தவிமல தேரர் பர்மாவுக்குச் சென்று அங்கு கண்டெடுத்த திபிடக பிரதிகளையும் இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்து வித்தியாலங்கார பிரிவெனாவில் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தார்கள். பர்மாவில் கண்டெடுக்கப்பட்ட அந்த திபிடக பிரதியும் புத்தகோசா பாளி மொழிக்கு திருப்பிய பிரதிகள் தான்.
இங்கிலாந்தில் உள்ள முழுமையான திபிடக பிரதிகளை இன்றுவரை பெறமுடியவில்லை. பல்வேறு விதிகளின் காரணமாக அவற்றை வெளியில் கொண்டுவர இயலாமல் இருப்பதையிட்டு பலரும விசனம் கொள்கிறார்கள். இங்கிலாந்துக்கு வெளியில் பல்வேறு பௌத்த விகாரைகளிலும், நிறுவனங்களிலும் காணப்படும் திபிடக பிரதிகள் அனைத்துமே புத்தகோசா பாளிக்கு மொழிபெயர்த்த வைதீக - இந்து - ஜைன திரிபுகளைக் கொண்ட பிரதிகளே என்கின்றனர்.
புத்தகோஷாவின் பூர்வீகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வட இந்தியாவில் புத்தகயா பிரதேசத்தில் பிராமண குலத்தில் பிறந்தவர் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. சில பாளி இலக்கியங்களில் அவர் பர்மாவில் பிறந்து பின்னர் இலங்கைக்கு வந்து பௌத்த இலக்கியங்களை மொழியாக்கம் செய்தார் என்கின்றன. தமிழகத்தில் இருந்து வெளியான பௌத்த வரலாறு குறித்த சில நூல்கள் புத்தகோசா காஞ்சிபுரத்துப் பௌத்தப் பள்ளியைச் சேர்ந்த தமிழ் பௌத்த ஞானி என்கின்றனர்.
ஆனால் இந்தக் கதைகள் எல்லாவற்றையும் விட அவர் தென்னிந்தியர் என்கிற கருத்தே மேலோங்கி இருக்கிறது. அவரின் எழுத்துக்கள் பலவற்றில் மயூரதேவ பட்டினம், காந்திபுரம், நாகபட்டினம் போன்ற தென்னிந்திய இடங்களின் பெயர்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருப்பதையும் இக்கருத்துக்கு சாதகமாகக் கொள்கிறார்கள். இறுதியில் அவர் ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தவராக இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.
ஐந்தாம் நூற்றாண்டில் மூன்றாவது தசாப்தத்தில் இவர் இலங்கை வந்தடைந்திருக்கிறார். அவரது காலத்தில் மகாநாம என்கிற அரசர் ஆண்டுகொண்டிருந்தார்.
புத்தகோசா இலங்கைக்கு வந்ததன் நோக்கம் என்ன என்பதை பலரும் ஆராய்ந்திருக்கிறார்கள். சுஜீவ திசாநாயக்க எழுதிய கட்டுரையொன்றில் “இந்த காலகட்டத்தில் வட இந்தியாவில் தேரவாத பௌத்தம் நெருக்கடிக்கு உள்ளாகிக்கொண்டிருந்தது. அதேவேளை தென்னிந்தியாவில் தேரவாத பௌத்தம் தலைதூக்கிக்கொண்டிருந்தது. அப்படி பௌத்தம் தலைத்தொங்கிக்கொண்டிருந்த காலத்தில் பௌத்த இலக்கியங்களை படைப்பதற்கும், மொழியாக்கம் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த காலப்பகுதியில் அப்படி பௌத்த இலக்கியங்கள் இலங்கையில் தான் பாதுகாப்பட்டிருந்தன. அவற்றை மகத மொழியில் மொழிபெயர்த்து கொண்டு செல்வதற்காகத் தான் புத்தகோசா இலங்கை வந்தார் என்கிறார்.(9)
புத்தகோசாவின் எந்த படைப்புகளிலும் மகாநாம அரசனைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் அவர் ஸ்ரீனிவாச சிறிபால, சிரிகுட்ட என்கிற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். இந்த இருபெயர்களுமே மாநாம அரசருக்குத் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று மலலசேகர தெரிவிக்கிறார்.
அவர் இலங்கை வந்த சரியான ஆண்டு எது என்பது பற்றிய சில ஆராய்ச்சிகள் உள்ளன. அதில் காலம் குறித்த முரண்பட்ட தகவல்களுக்கு பல தர்க்கங்கள் முன் வைக்கப்படுகின்றன.எவ்வாறிருந்தபோதும் அவர் தீபவம்சத்தில் உள்ளவற்றையும் அவரது படைப்புகளில் வெளியிட்டிருப்பதால் தீபவம்சம் ஆக்கப்பட்ட காலத்துக்கும் மகாவம்சம் ஆக்கப்பட்ட காலத்துக்கும் இடையில் அவர் இலங்கை வந்திருக்கிறார் என்று கணிக்கிறார்கள். ஆனால் மகாவம்சத்தில் புத்தகோசா வந்த காலத்தில் மாநாம ஆண்டுகொண்டிருந்தார் என்று இருக்கிறது.
அசோகனைக் கண்டுபிடித்தல்
இடையில் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும் தேவனாம்பிய பியதசி என்ற பெயரிலேயே அசோகன் ஆட்சி புரிந்தார். அசோகன் காலத்து கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது. எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது. மாஸ்கி (Maski) என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பண்டைய பிராமி கல்வெட்டுக்களை ஆரம்பத்தில் வாசித்து கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep). பிரித்தானிய இந்தியாவின் நாணயங்களை உற்பத்தி செய்யும் அதிகாரியாக அவர் கடமையாற்றி வந்தார். அசோகன் காலத்து தூண்கள், கல்வெட்டுகளை ஆராய்ந்தார். இவற்றையெல்லாம் வாசித்தறிந்த போதும் அவற்றில் காணப்பட்ட தேவனாம்பிய பியதசி என்கிற பெயருடையவர் யார்? எந்த அரசன் என்பதை அவரால் கண்டு பிடிக்க முடியாத குழப்பத்தில் இருந்தார். இலங்கையில் இருந்து பௌத்த தீட்சை பெறுவதற்காக அம்பகஹாபிட்டியே ஞானவிமல திஸ்ஸ தேரருடேன் ரதனபால என்கிற தேரரும் பர்மாவுக்குப் பயணமானார்கள். அங்கே எதிர்பாராத விதமாக ஜேம்ஸ் பிரின்செப்பை சந்தித்தார்கள். அங்கு நிகழ்ந்த உரையாடலின் பின்னர் தான் ஜோர்ஜ் டேர்னரின் (George Turner) மகாவம்ச மொழிபெயர்ப்பை வாசித்தறிந்து இந்தியா பூராவும் இருக்கிற தேவனாம்பிய பியதசி என்கிற பெயர் அசோக சக்கரவர்த்தியைத் தான் குறிக்கிறது என்கிற முடிவுக்கு வந்தார். இந்திய வரலாற்றில் 19-ம் நூற்றாண்டுவரை கொண்டாடப்படாத அசோக மன்னன் ஜேம்ஸ் பிரின்செப்பின் கண்டறிதல்களால் புத்துயிர் பெற்றார். கடந்த 200 ஆண்டுகளாகப் பெரும் கவனம் பெற்ற பேரரசராக மாறியதன் பின்னணி இதுதான். பிரின்செப் பெரிய தனவந்தராக இருந்தவர் இறுதியில் தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.
மலலசேகர
கம்போடிய மகாவம்சத்தின் பிரதிகளை ஆராய்வது பற்றிய பொறுப்பை பேராசிரியர் மலலசேகரவிடம் ஒப்படைத்தது பற்றி ஆசிய ராஜரீக சங்கம் 1930 ஒக்டோபரில் வெளியிட்ட Journal of the Ceylon Branch of the Royal Society சஞ்சிகையில் காணக்கிடைகிறது. மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான ஒரு குழுவை நியமித்த பற்றி 1935 மார்ச்சில் வெளியான ஆசிய ராஜரீக சங்கத்தின் சஞ்சிகையில் காண முடிகிறது அதன்படி ரோமன் எழுத்திலும் (பாளி மொழியிலும்), சிங்களத்திலும் வெளியிடும் பேராசிரியர் G.P.மலலசேகரவின் பொறுப்பில் விடுவதாகவும் தீர்மானித்திருக்கிறார்கள். மலசெகர அப்போது அச்சங்கத்தின் உறுப்பினராக இயங்கிவந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் மகாபோதி அச்சகத்துக்கு அனுப்பிவிட்டதாக அச்சங்கத்தின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.(10) பின்னர் 1936 ஆம் ஆண்டு சஞ்சிகையில் 327 பக்கங்களில் அது வெளியிடப்பட்டுவிட்டதாக அறிவித்தது.
இறுதியில் முதற்தடவையாக கம்போடிய மகாவம்சம் “விரிவான மகாவம்சம்” (Extended Mahavamsa) என்கிற தலைப்பில் 1937 இல் வெளியானது. Extended Mahavamsa என்கிற பெயரை அதற்குச் சூடியதும் மலலசேகர தான். ஆனால் அவர் ரோமன் எழுத்துக்களால் பாளி மொழியில் தான் தொகுத்தார். இன்னமும் அது பரவலான பாவனைக்கு வராததன் காரணம் அது தான். ஆங்கிலத்தில் அது இன்னமும் மொழிபெயர்க்கப்படவில்லை. சிங்களத்தில் இது அருணா தலகல (අරුණ තලගල) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை அரசின் கலாசார அமைச்சினால் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் இந்தப் பிரதி குறித்தோ, இதன் வெளியீடு குறித்தோ அத்தனை தூரம் பேசப்படாதது இன்னமும் வியப்பாகவே இருக்கிறது.
“பாவம் மாநாம தேரர் இன்னமும் அவர் தொகுத்த மகாவம்சத்தை “கைகரின் மகாவம்சம்” என்றே அழைக்கிறார்கள்” என்று நகைச்சுவையாக மலலசேகர “விரிவான மகாவம்சம்” தொகுத்தபோது குறிப்பிடுகிறார். ஆனால் மலலசேகர தொகுத்த மகாவம்சத்தில் அவர் “மகாவம்சம்” என்று குறிப்பிடாமல் “விரிவான மகாவம்சம்” என்கிறார். இதைப் பற்றிய விமர்சனங்களை சில கட்டுரைகளிலும் காண முடிகிறது. (11)
பிற்காலத்தில் கம்போடிய – இலங்கை உறவைப் பலப்படுத்த மலலசேகர பெரும்பாங்கை ஆற்றியிருந்தார். மேலும் அவர் “உலக பௌத்த கூட்டுறவு” (World Fellowship of Buddhists) அமைப்பையும் தொடக்கி அதன் முதல் மாநாட்டை 1950 யூனில் கண்டி தலதா மாளிகையில் நடத்தினார். மியான்மார், தாய்லாந்து, கம்போடியா உட்பட 29 நாடுகளைச் சேர்ந்த 129 பேர் கலந்துகொண்டனர். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் தேரவாத, மகாயான, வஜ்ரயான என்கிற ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பௌத்த பிரதிகள் அனைவரும் இந்த மாநாட்டில் ஒன்று கூடியது தான். (12)
இலங்கையின் சிங்கள மொழியியல் ஆய்வில் பேராசிரியர் மலலசேகரவின் பங்கு பாரியது. இன்று எத்தனையோ சிங்கள அகராதிகள் வெளிவந்துவிட்டபோதும் “மலலசேகர அகராதி”யே சந்தையில் இன்றும் கொலோச்சிவருகிறது.
தென்கிழக்காசிய பௌத்த விரிவாக்கத்தில் இலங்கையின் வகிபாகம்
இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான உறவு பௌத்த பாரம்பரிய வரலாற்றுடன் தொடர்புடையது. குறிப்பாக மியான்மார், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளுடன் கொண்டிருந்த பௌத்த உறவுகள் பல நூற்றாண்டுகால பாரம்பரியம் மிக்கவை. தாய்லாந்தை ஆண்ட கியான்சித்தாவுக்கு (Kyanzitta) அடுத்ததாக அரியணை ஏறியவர் அவரின் மகன் ராஜகுமார். ராஜகுமார் பௌத்த ஜாதகக் கதைகளாலும், மகாவம்ச காவியத்தாலும் கவரப்பட்டவர். மியான்மரிலுள்ள மியன்காபா குபியுக் கி (Myinkaba Kubyank-gyi temple) என்கிற விகாரையில் 1113 இல் தனது தந்தையின் நினைவாக மகாவம்சக் கதைகளை அங்கே சுவரோவியங்களாக வரைந்தார். இன்றும் அதைக் காணலாம்.
இலங்கையில் பௌத்தத்தின் வரலாறு, அசோகனின் கதை, தேவனம்பியதிஸ்ஸனின் பட்டாபிசேகம், மகிந்த தேரரின் வருகை சங்கமித்தை கொண்டு வந்த அரச மரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஓவியம் மட்டுமல்லாமல் எல்லாளன் தனது மகனின் மீது தேரோட்டி கொன்று தனது நீதியை நிலைநாட்டியது, துட்டகைமுனு போருக்கு தயார்படுத்தல், எல்லாளனுடனான போர் என பல கதைகளும் ஓவியங்களாக அந்த சுவரில் உள்ளன.
அரசன் எல்லாளனிடன் பசு நீதி கேட்டு மணியை அடிக்கும் ஓவியம். இப்படி ஒரு ஓவியம் இலங்கையின் குகை / சுவர் ஓவியங்களிலும் கூட கிடையாது. |
ஓவியங்கள் ஒவ்வொன்றின் கீழும் விளக்கக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் பர்மிய எழுத்து முதற் தடவையாக எழுத்துவடிவில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஓவியங்களின் மூலம் தான். பர்மிய மொழி 12 ஆம் நூற்றாண்டில் தான் பாளி அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது என்கிறார் ஹேமா குணதிலக்க(13). மியான்மாரில் உள்ள மகாவம்ச ஓவியங்கள் பற்றி “The Mahavamsa Illustrated (Paintings from a 12th Century Myanmar Temple)” 2018 இல் இவர் விரிவான ஒரு நூலை வெளியிட்டவர் ஹேமா குணதிலக்க.
முன்னாள் தொல்பொருள் திணைக்கள ஆணையாளராக இருந்த C.E.கொடகும்புர குறிப்பிடும் போது மகாவம்சத்தை தமது பாரம்பரியக் கதையாக மியான்மார் மக்கள் வரிந்துகொண்டுள்ளார்கள் என்கிறார். மகாவம்சக் கதையை விளக்கும் பழைய சுவரோவிமாகக் கருதப்படுவது தம்புள்ளயில் உள்ள சுவரோவியங்கள். அதில் துட்டகைமுனுவின் ஆடை கண்டி கலாசாரத்துக்குரிய ஆடையாக தீட்டப்பட்டிருக்கிறது. ஆனால் மியான்மாரில் உள்ள மியன்காபா சுவரோவியங்களில் துட்டகைமுனு மியான்மார் நாட்டின் பண்பாட்டு ஆடையை அணிந்த்திருப்பத்தையும் கொடகும்புர குறிப்பிடுகிறார்.
மியான்மாரில் துட்டகைமுனுவை தமது பாரம்பரிய வீரராக கருதுவோர் இன்றுள் உள்ளார்கள் என்பதற்கு ஹேமா தனது கட்டுரையில் ஆதாரங்களைத் தருகிறார்.
தென்கிழக்காசிய நாடுகளில் மியன்மாருக்கு அயல் நாடான தாய்லாந்து நாட்டை நெடுங்காலமாக சீயம் என்று தான் அழைத்துவந்தார்கள். இலங்கையின் பௌத்த பிக்குமார் பௌத்த துறவியாவதற்கான தீட்சையை (உப சம்பத்தா) பெறுவதற்கு அங்கு தான் விரைந்தார்கள். பின்னர் இலங்கையில் தோன்றிய முதலாவது பௌத்த நிக்காய சீயம் நிக்காய தான். தாய்லாந்து சென்று தீட்சை பெற்று திரும்பியவர்களால் உருவாக்கப்பட்ட அந்த நிக்காய கொவிகம சாதியினரின் நிக்காயவாக ஆனா இன்னொரு உபகதையை அறிந்திருப்பீர்கள்.
கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தீபதுத்தாராமய விகாரை வரலாற்று ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பௌத்த கொடி உருவானது இங்கு தான். ஸ்ரீ குனானந்த தேரர், அநகாரிக தர்மபால போன்றோரின் கோட்டையாக இருந்த இடம். பிரசித்திபெற்ற பஞ்சமகா விவாதத்துக்கான வித்து இங்கிருந்து தான் சுமங்கள தேரரால் போடப்பட்டது. கேர்னல் ஒல்கொட் தனது நடவடிக்கைகள் பலவற்றை இங்கிருந்து தான் மேற்கொண்டார். அவர் இறுதியாக முரண்பட்டு இலங்கை விட்டு வெளியேறியதும் தீபதுத்தாராம விகாரையில் இருந்து தான். இந்த விகாரையின் வளர்ச்சியில் தாய்லாந்து அரச குடும்பம் தொடர்ச்சியாக பங்களித்து வந்துள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட தாய்லாந்து இளவரசர் வருகை தந்து பெரும்செலவில் தூபியொன்றை அமைத்து திறந்துவிட்டுச் சென்றார்.
மியன்மாருக்கு தென் கீழ் திசையில் உள்ள நாடு தான் கம்போடியா. கம்போடியாவிலும் மகாவம்சம் அவர்களின் பௌத்த மத பண்பாட்டின் புனிதக்கதையாக கொண்டாடப்பட்டு வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இலங்கையின் அரசியல், மத வரலாற்றுக் கதையைக் கூறும் இலங்கையில் கூட கிடைக்காத விரிவான மகாவம்சம் கம்போடியாவில் தான் கிடைத்தது என்பதை அங்கு இலங்கையின் பௌத்த மத செல்வாக்குக்கு சிறந்த உதாரணம்.
இந்த நாடுகள் ஒரு காலத்தில் தென்னிந்திய அரசர்களின் படையெடுப்புக்கு ஆளாகி இன்று வரை தென்னிந்திய பண்பாட்டின் அம்சங்கள் அவர்களின் பண்பாட்டில் இரடறக் கலந்துவிட்டிருக்கிற போதும் மறுபுறம் பௌத்த-மதப்-பண்பாட்டுச் செல்வாக்கு என்பது பௌத்தத்தின் ஊற்றாக திகழும் இந்தியாவின் செல்வாக்கால் ஆனதல்ல என்று கூறமுடியும். இந்தியாவை விட இலங்கையின் செல்வாக்கு இந்த நாடுகளில் மதப்பண்பாட்டில் ஆளுமை செழுத்தியிருந்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நாடுகளில் பயன்பாட்டில் உள்ள திபிடக இலங்கையில் இருந்து சென்றவை தான்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து பல பௌத்த துறவிகள் பௌத்த தீட்சை (உபசம்பத்தா) பெறுவதற்காக சீயம் என்கிற தாய்லாந்துக்கு சென்றதுபோல கம்போடியாவில் இருந்து பௌத்த தீட்சைப் பெறுவதற்காக இலங்கைக்கு பல பௌத்த துறவிகள் வந்து சென்றிருக்கிறார்கள்.
கம்போடியாவில் பௌத்தத்துக்கு பங்காற்றிய இலங்கைப் பிக்குமார்களின் பெயரில் பௌத்த விகாரைகளும் மன்னரால் (King Poòhea Yat) கட்டப்பட்டது. புத்தகோசா இலங்கையில் இருந்து கம்போடியா சென்று சில காலம் பணியாற்றியிருக்கிறார். புத்தகொசாவின் இறப்பின் பின்னர் அவரின் பெயரிலும் ஒரு விகாரை (Boddhaghosachar) கட்டப்பட்டது
எந்த “சிங்கள பௌத்தத்தின்” பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையின் எந்தவித பூர்விகத் தொடர்புமில்லை. பௌத்தமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள மொழியின் உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளி, சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்து தான் வந்தது என்பதை சிங்கள பௌத்த புனித வரலாற்று நூல்களில் இருந்தே ஆதாரங்களை முன்வைக்க முடியும்.இலங்கைக்கான சிங்கள பௌத்த வரலாற்று புனித நூலான மகாவம்சத்தை வார்த்த மகாநாம தேரரும் கூட இந்தியர் தான்.
மகாநாம தேரரின் மகாவம்சக் கட்டுக்கதைகளை உடைப்பதற்கு மகாவம்சத்தின் மூலப் பிரதியான விவிரிவான கம்போடிய மகாவம்சம் தமிழ் வரலாற்று அறிஞர்களின் ஆய்வுக்கு உட்படவேண்டும். மகாவம்ச மனநிலையானது நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த கட்டமைப்பு கட்டமைத்திருக்கிற ஐதீகங்களைக் கொண்டது. புனைவுகளைக் கொண்டது. மாயையை உள்ளடக்கியது. இறுதியாக
2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரையில் மகாவம்சம் குறித்து பேசிய வசனங்களுடன் நிறைவு செய்கிறேன்.
“சிங்களதேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில் , அந்தப் புராணக் கருத்துலகில் புதைந்து போய்க் கிடக்கின்றது. இலங்கைத் தீவானது, தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும், சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடமை என்றும் மகாவம்சம் திரித்து விட்ட புனைகதையில், சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கின்றார்கள்.”
இதுவரை சிங்களத்திலும் பாளி மொழியிலும் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டுள்ள மகாவம்ச தொகுதிகள்.
அடிக்குறிப்புகள்
- தொகுதி 1 - இலங்கையின் பண்டைய இதிகாசம் கி.பி 301 வரை - மகாநாம தேரரால் எழுதப்பட்டது (37வது அத்தியாயம் வரை)
- தொகுதி 2 - கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை (100வது அத்தியாயம் வரை)
- தொகுதி 3 - 1815 முதல் 1936 வரை (114 வரை வது அத்தியாயம் வரை)
- தொகுதி 4 - 1936 முதல் 1956 பண்டாரநாயக்க ஆட்சியேரும் வரை (124வது அத்தியாயம் வரை)
- தொகுதி 5 - 1956 முதல் 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரை (129 வது அத்தியாயம் வரை)
- தொகுதி 6 – 1978 முதல் 2010 தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிந்து மகிந்த மீண்டும் ஆட்சியேரும் வரை (133 வது அத்தியாயம் வரை)
- ஜே, ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலப்பகுதி (1978-1989)
- ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க ஆட்சிக் காலப்பகுதி (1989-1994)
- சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதி (1994-2005)
- மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலப்பகுதி (2005-2010)
- Albrecht Wezler and Michael Witzel - Indian Philology and South Asian Studies Edited - Volume 2 - Berlin· New York - 1996
- Oskar Von Hinüber, A Handbook of Pali Literature (Vol -II.). Walter de Gruyter. Berlin – New York (1996)
- Peter Skilling - Constituting Communities: Theravada Buddhism and the Religious Cultures of South and Southeast Asia (SUNY Series in Buddhist Studies) by John Clifford Holt, Jacob N. Kinnard, Jonathan S. Walters - The Eastern Buddhist NEW SERIES, Vol. 35, No. 1/2 (2003)
- Professor Edmond Hardy - Notes On The Enlarged Text Of The Mahavamsa Extant In A Kubodjan Manuscript - Pali Text Society Journal Of The Pali Text Society. 1902-1903
- K. R. Norman - A History Of Indian Literature (Edited By Jan Gonda) - Otto Harrassowitz • Wiesbaden - Vollume II, 1983
- John S. Strong - Toward a Theory of Buddhist Queenship The Legend of Asandhimitta - CONSTITUTING COMMUNITIES - STATE UNIVERSITY OF NEWYORK PRESS - ALBANY - 2003
- බෝපිටියේ කුසලධම්ම හිමි - ත්රිපිටකයේ සැගවුණු රහස් රැසක් එළියට (திபிடகத்தில் மறைக்கப்பட்ட இரகசியங்கள் அம்பலமாயின) – “மவ்பிம” பத்திரிகை /- 07.12.2019
- இந்தியாவில் பீகார் மாநிலத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பலமாக இருந்த 1400 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பௌத்த பல்கலைக்கழகமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் 1193-ல் துருக்கிய மன்னர் பக்தியார் கில்ஜியின் படையெடுப்பின் மூலம் அழிக்கப்பட்டு அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் எரித்து நாசமாக்கபட்டத்தையும் இங்கு நினைவுக்கு கொண்டு வரவேண்டும். மூன்று மாதங்களாக அது எரிந்துகொண்டிருந்ததாகக் கூறுவார்கள். மிகப் பாரிய அறிவுச்சொத்தழிப்பு சம்பவமாக வரலாற்றில் பதியப்பட்ட சம்பவம் அது.
- சுஜீவ திசாநாயக்க - හෙළ අටුවා පෙරළා බුදුදහම රැකි බුද්ධඝෝෂ හිමියෝ (ஹெல இலக்கியங்களை மொழியாக்கம் செய்து பௌத்தத்தை பாதுகாத்த புத்தகோசா) திவயின 10.08.2011
- Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society - 1935 - Volume XXXIII
- Kamalika Pieris - Some observations on the Mahavamsa - Daily news - 21.10.2008
- Dr. Hema Goonatilake, Sri Lanka-Cambodia Relations with Special Reference to the Period 14th – 20th Centuries. Journal of the Royal Asiatic Society of Sri Lanka, Volume XLVIII, Issued on July 21, 2003
- Dr Hema Goonatilake - Sri Lanka-Myanmar Historical Relations in Religion, Culture and Polity - Journal of the Royal Asiatic Society of Sri Lanka- Vol. 55 (2009)
நன்றி - காக்கைச் சிறகினிலே - யூன் - 2020
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...