Headlines News :
முகப்பு » , » 150 வருடங்களில் வீழ்ச்சிப்போக்கை நோக்கிச் செல்லும் தேயிலை - மல்லியப்புசந்தி திலகர்

150 வருடங்களில் வீழ்ச்சிப்போக்கை நோக்கிச் செல்லும் தேயிலை - மல்லியப்புசந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 29)  


இலங்கையில் தேயிலை உற்பத்தி முதல் ஏற்றுமதி வரையான செயன் முறையில் பங்கேற்கும் நிறுவனங்கள் பற்றிய சுருக்கமான பார்வையினூடாக தேயிலைத் தொழில் துறையானது எவ்வாறு நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஓரளவுக்கு அறிந்துக்கொள்ளக்கூடியதாக அமைந்தது. இலங்கையில் 150 வருடகால தேயிலை உற்பத்திக் கைத்தொழிலின் பின்னணியிலேயே ரயில் போக்குவரத்து, வங்கித்துறை, பங்குசந்தை வரையான பல்வேறு பொருளாதார அம்சங்கள் வலுப்பறெத் தொடங்கின எனும் விடயத்தை  கடந்த அத்தியாங்களில் பார்த்தோம். தொழிற்படை அடிப்படையில் அதிகளவான சனத்தொகையை ஒரே துறையில் கொண்டிருந்த துறையாகவும் தேயிலையே காணப்பட்டது. இந்த நூற்றியைம்பது கால வரலாற்றில்  தேயிலைத் தொழில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதற்கு அப்பால் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது என்பதுதான் இன்றைய போக்காகக் காணப்படுகின்றது. 

அதேநேரம் இதே பெருந்தோட்டத் துறைக்குள் கடந்த பத்தாண்டுகளில் புதிதாக ஒரு தொழில் துறையாக உள்நுழைந்ததே முள்ளுத்தேங்காய்  (Palm Oil) கைத்தொழில். முள்ளுத் தேங்காய்த் தலையங்கத்துடன் தொடராக வெளிவரும் இந்த கட்டுரைகளில் முள்ளுத்தேங்காய்  தவிர்ந்த பெருந்தோட்டத் துறையில் பயிரிடப்படும் ஏனைய விடயங்கள் உரையாடப்பட்டு வந்ததே எவ்வாறு பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுவந்த, ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அது சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்திலும் எதிர்காலத்திலும் தாக்கத்தை செலுத்தப்போகின்றது என்பதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான். 

இலங்கை ஒரு விவசாய நாடு என்கின்ற வகையில் நாட்டிலே இடம்பெற்று வந்திருக்க கூடிய நெற்செய்கை உள்ளிட்ட மரக்கறிகள் வரையான விவசாய உற்பத்திப் பொருட்கள் வாசனைத்திரவிய உற்பத்தி அனைத்துமே விவசாயிகளால் தமது நிலத்தில் சொந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அவற்றை மேம்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் அமையப்பெற்றன. விவசாயத்திணைக்களம், கமத்தொழில் சேவைத் திணைக்களம் போன்றன குறிப்பிட்ட  துறைகளை ஊக்குவிப்பதற்கான அரச பொறுப்பு நிறுவனங்களாக அமைந்தன. 

ஆனால்,பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரை அவை ஆரம்பம் முதலே முதலாளிகளுக்குச் சொந்தமான தொழில் துறையாகவும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது உழைப்பை விற்று கிடைக்கும் கூலி வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்துபவர்களாக இருந்து வந்துள்ளனர். பிரித்ததானியர் காலத்தில் மிக இறுக்கமாக  இந்த நிர்வாகக் கட்டமைப்பு அமைந்தது. எனவே சுயாதீன கிராமிய பொருளாதாரததில் வாழ்ந்து வந்த இலங்கை மக்கள் பிரித்தானியரின் இந்த நிர்வாக இறுக்கத்துடன் கூடிய தொழில் துறையை விரும்பியிருக்கவில்லை. எனவேதான் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து தமது தொழிலை முன்னெடுக்கும் தேவை பிரித்தானியருக்கு ஏற்பட்டது. எனவே உள்நாட்டு மக்கள் ஆரம்பம் முதலே அந்நிய முதலீட்டிநாளும் அந்நிய உழைப்பினாலும் உருவாக்கப்பட்ட ஒரு தொழில் துறையாக அடையாளம் காணப்பட்டு அத்தகைய பெருந்தோட்டப் பொருளாதாரத்திற்கு எதிரான மனநிலையையே காணப்பட்டது. இன்றும் காணப்படுகின்றது.

பிரித்தானியர்களின் வெளியேற்றத்துடன் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிட்டார்கள் என்கிற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், அந்நியராகவந்த தொழிலாளர்கள் வெளியேறவில்லை என்கிற மனநிலை அவர்களிடம் இருந்தது. அதனால்தான் சுதந்திரம் அடைத்த அதே வருடத்தில் இலங்கை குடியுரிமையை அவர்களிடம் இருந்து பறித்தெடுத்தது. அந்த நாள் வரை கணக்கெடுத்தாலே தேயிலைக் கைத்தொழில் ஆரம்பித்த நாளில் இருந்து இந்திய தொழிலாளர் மக்கள் இலங்கை நாட்டில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருந்தனர். 

வரலாற்றின்படி தேயிலைக்கு முன்பதாக கோப்பிக் காலத்திலேயே இந்திய தொழிலாளர் மக்கள் இலங்கை வந்திருந்தனர் என்று பார்த்தால் இலங்கையில் இந்திய தொழிலாளர்களான மலையக மக்களின் குடியுரிமை நீக்கப்படும்போது அவர்கள் இலங்கையில் 100 ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டனர். அந்த நூறாண்டுகால வாழ்வில் 1930 க்கும் 1948 க்குமான காலப்பகுதியான 18 ஆண்டுகள் சர்வஜன வாக்குரிமையின் கீழ் வாக்குரிமை பெற்றவர்களாக வாழ்ந்து விட்டனர்.  எனினும் அவர்களை அந்நியர்களாகவே பார்த்துப் பழகிய உள்நாட்டு சக்திகள் அந்நிய முதலீட்டைச் செய்த பிரிதானியர் வெளியேறிச் சென்றதோடு அவர்கள் அழைத்து வந்த உழைப்பாளர்களையும் வெளியேற்றவேண்டும் என தீர்மானித்தனர். அதன் முதல்படிதான் குடியுரிமை பறிப்பு. பின்னாளில் மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் 1980 களுக்குப்பின்னர் குடியுரிமை கிடைக்கப்பெற்றதை மலையக மக்களுக்கு குடியுரிமை கிடைத்து விட்டது அல்லது பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்பதே தவறான பிரயோகம்தான். மாறாக மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை மீளவும் கிடைத்தது அல்லது பெற்றுக்கொடுக்கப்பட்டது என்பதே சரியானதாகும். 

இவ்வாறு, வாக்குரிமை மீளக்கிடைக்கப்பெறும் காலத்தில் அதாவது 1948 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட 30 வருட காலத்தில் இடம்பெற்றிருந்த இன்னொரு திட்டமிடப்பட்ட செயற்பாடுதான் 1964ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம். இதன் மூலமாக குடியுரிமை பறிக்கப்பட்ட மக்கள் அத்தோடு நிறுத்தப்படாமல் இலங்கையை விட்டு நாடு கடத்தப்படனர்.  ஒப்பந்தப்படி விருப்பத்தின் பேரில் சென்றதாகச் சொல்லப்பட்டாலும் அவர்கள் அவ்வாறு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். சுமார் ஐந்து இலட்சம் அளவான சனத்தொகை இவ்வாறு திருப்பி அனுப்பபட்டார்கள். இவ்வாறான திருப்பி அனுப்புதலின் அரசியல் சார் விளைவுகள் மலையக மக்கள் விடயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

1961 ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் இரண்டாவது, அதிகளவான சனத்தொகையாக இருந்த இந்தியத்தமிழர் எனப்படும் மலையக மக்கள் 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது தற்செயல் நிழ்வு அல்ல. 

இந்த இரண்டு நிகழ்வுகளையும் தொழில்சார்ந்த அடிப்படையில் பார்த்தால் குறித்த பெருந்தோட்டத் கைத்தொழில் 150 வருட காலத்தில் எவ்வாறு வீழ்ச்சிப்போக்கில் சென்றிருக்கும் என்பதை அவதானிக்கலாம். 1948 இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கி பிரித்தானிரயர் வெளியேறினாலும் அவர்களின் முதலீடும் நிர்வாகமும் 1972ஆம் ஆண்டுவரை இருந்தது. அதேபோல 1948 இல் குடியுரிமை பறிக்கப்பப்பட்டு 1964இல் நாடு கடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது நடைமுறைக்கு வந்தது 70களிலேயே. எனவே தொழில் துறை ஓரளவு நின்றுபிடித்தது. 

எனினும் 1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்தின் வருகையோடு பிரித்தானியர் பெருந்தோட்டக்கைத் தொழிலில் இருந்து விலகிச் செல்ல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட அவர்களை பொறுத்தவரை அந்நிய முதலீடும், அந்நிய உழைப்பும் ஓரளவுக்கு வெளியேற்றப்பட்டுவிட்டது இனி இந்த பெருந்தோட்டக் கைத்தொழிலை தாம் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். இந்தப் பின்னணியில் உருவானது தான் சிறுதோட்ட உடமையாளர்கள் எனும் திட்டம். இதனை மேற்பார்வை செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் அவ்வப்போது உதவ தொடங்கியது.

இத்தகைய தொலைநோக்குத் திட்டத்தின் இன்றைய விளைவு பெருந்தோட்டக் கைத்தொழிலில் நிறுவன ரீதியாக செயற்படும் நிறவனங்களில் தொழிலாளர் எண்ணிக்கை  ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேராகவும் சிறுதோட்ட உடமையாளர்கள் நான்கு இலட்சமாகவும் மாறியிருப்பதாகும். தொடர்ந்தும் நாட் சம்பளத்துக்காகப் போராடும் கூலித் தொழிலாளர்களான ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேரில் 99 சதவீதமானோர் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களாக இருக்க சிறுதோட்ட உடமையாளர்கள் எனப்படும் நான்கு இலட்சம் பேரில் 99 சதவீதமானவர்கள் சிங்கள மக்கள் என்பதுதான் பெருந்தோட்டக் கைத்தொழிலில் ஏற்பட்டிருக்கூடிய மாற்றம்.

இது எப்போது எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதை மேற்சொன்ன வரலாற்று  அம்சங்களோடு ஒப்பிட்டு அறியலாம். இந்த செயற்பாடுகளின் விளைவாக இன்று தேயிலை ஏற்றுமதியில் 70 சதவீதமானவை சிறுதோட்ட உடமையாளர்களிடம் இருந்தும் 30 சதவீதமானவையே பெருந்தோட்டங்களிலும் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே பெருந்தோட்டங்களின் நிலையில் நின்று பார்க்கின்றபோது 150 வருட காலத்தில் தேயிலையின் வீழ்ச்சிப்போக்கு என்பது தெட்டத்தெளிவு. எனவே பெருந்தோட்டக் கம்பனிகள் தாம் நட்டம் அடைகின்றோம் என சொல்வதும், தேயிலை மலைகள் காடாவதும், பெருந்தோட்டத் தேயிலைத் தொழிலை விட்டு மலையகத் தமிழ் மக்கள் வேகமாக விலகிச் செல்வதும் தற்செயல் நிகழ்வல்ல. 

தென்னைக் கைத்தொழில் ஏற்கனவே பெருந்தோட்டக் கட்டமைப்பில் இருந்து விலகி சிறுதோட்ட உடமையாக மாற்றபட்டுவிட்ட நிலையில் தேயிலை, ரப்பர் கைத்தொழில்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டம் சார்ந்து கைவிடப்பட்டு சிறுதோட்ட உடமைக்குள் கொண்டு செல்லப்படுவதும் பெருந்தோட்டக் கைத்தொழில் துறைநோக்கி முள்ளுத்தேங்காய் உற்பத்திக் கைத்தொழில் உள் நுழைக்கப்படுவதும் அவதானத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களாகின்றன.

(உருகும்)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates