வேலையின்மை என்பது தொழில் இன்மை என்பது மட்டும் அல்ல... மன விருப்பம் இன்றி பிடிக்காத தொழிலை சிலுவை போல சுமப்பதும் மனதளவில் வேலையின்மை போன்றதே.. இத்தனை வருடங்கள் லயத்து பிரச்சினை பற்றி பேசியது போதும் இனி சமூக மாற்றத்தை உருவாக்க சிறந்த தொழில் வாய்ப்பை பெற உதவுங்கள் மலையகத்தில் மாற்றம் தானாகவே உருவாகும்....
வேலையில்லா பட்டதாரி இது தனுஷோட படம் கிடையாது. எங்களோட வாழ்க்கை. தேயிலைக்கு இரத்தத்தை பாய்ச்சி தேநீருக்கு நிறத்தை கொடுத்த ஒரு சமூகத்தின் இன்றைய படித்த தலைமுறையின் ஒரு குரல் என் பேனாவின் வழியாக இங்கு ஒலிக்கிறது..
இயற்கையோட இயைந்த வாழ்வு சங்க காலம் என்பார்கள். உண்மையில் மலையகத்தை விட இயற்கை சார்ந்த ஒரு அழகான வாழ்க்கை இந்த பூமியில் இல்லை என்பது அதனை தவறவிட்டவர்களினால் மட்டுமே உணரமுடியும்... மலைகளுக்கு நடுவிலான பசுமை நிறைந்த அந்த வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத ஆறுவயசுல அப்பா கைபிடித்து தாத்தா கைபிடித்து ஆரம்பமான கல்விப்பயணம்... கனவுகள் காணத்தெரியாத வயசுல நிலா நிலா ஓடி வா பாட்டு படிச்சிட்டு... கொலை கொலையா முந்திரிக்கா விளையாடிய காலத்துல யாராச்சும் உன் இலட்சியம் என்னன்னு கேட்டா நான் டொக்டராகனும் லோயராகனும் என்று கூறியவர்களில் எத்தனை பேர் அந்த மலைகளை தாண்டி வந்து நம் இலட்சியத்தை தொட்டிருக்கிறோம் என்று தெரியாது.
ஆனால் மலையகத்திலிருந்து ஒருவன் படித்து பட்டதாரியாவது என்பது இலகுவான செயல் கிடையாது... அதுவும் ஒரு தோட்டத்தொழிலாளியின் பிள்ளை பட்டதாரியாவது என்பது மிகப்பெரிய விடயம் தான்.. தோட்டப்புற பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்கும் போது எமக்கு வைத்தியருக்கு என்ன துறையை தேர்வுசெய்ய வேண்டும். கணக்கியலாளனாக என்ன துறையை தேர்வு செய்ய வேண்டும் என்ற அறிவு கூட இருக்க வாய்ப்பில்லை.. அதற்கு பின்னரான சிறு பராயத்தில் எப்போ ஸ்கூல் முடியும் வீட்டுக்கு போகனும்.. நண்பர்களோட இணைந்து விளையாடனும்.. விறகு காட்டுக்கு போகனும்.. அம்மா எப்போ மலையிலிருந்து வேலை முடிந்து வீட்டு வருவாங்க.. இப்படிதான் மனசு இருக்கும்.. பதினென் பருவம் ஆரம்பிக்கும் போது இது வாழ்க்கை... இப்போ நாம போடுகிற அடித்தளம்தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று சொல்லித்தர எத்தனை பேருக்கு குருமார் கிடைத்திருப்பர் என்று தெரியாது... அதனால்தான் 9 ஆம் ஆண்டு படிக்கும் போது வரும் பருவ காதலிலேயே பலர் தமது வாழ்க்கையை தொலைத்து கல்வியை இடைவிட்டு இன்று நகர்ப்புற ஆடைதொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்..
இன்னும் சிலருக்கு வறுமையே கல்வியை இடைநிறுத்த வைக்கிறது... அதெல்லாம் மீறி படிக்கும் போது, பாடசாலை கட்டணங்களை விட மேலதிக வகுப்புகளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது... இன்னும் மலையகத்தின் பல இடங்களில் ஒரு ரயிலை விட்டாலோ பஸ்ஸை விட்டாலோ அதற்காக பலமணிநேரம் காத்துக்கிடக்க வேண்டும்... போக்குவரத்து வசதிகள் இன்றி ஆறுகளை தாண்டியும் தேயிலை காடுகளை கால் கடுக்க நடந்தும் பயணிக்கின்ற நிலை இன்றும் உள்ளது... இப்படி ஆயிரமாயிரம் பிரச்சினைகள்.. இதெல்லாம் தாண்டி ஒருவர் படிச்சு மேலே வருகின்றமை என்பது ரொம்ப பெரிய விஷயம்..
எப்படியோ கஷ்டப்பட்டு சாதாரண தரம் பாஸ் பண்ணிட்டா அடுத்து உயர்தரம்.... இங்குதான் நம்ம வாழ்க்கையின் வெற்றிதோல்வி மாறுகிறது... மருத்துவராகனும் பொறியியலாளராகனும் என்ற கனவோட படிக்கிற மாணவர்களுக்கு அந்த கல்வியை போதிக்க தகுதியான ஆசிரியர்கள் மலையகத்தை பொறுத்தவரை மிக குறைவு.
1983 களுக்கு முன்னர் மலையகத்தை பொறுத்தவரை வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களே அதிகளவில் உள்வாங்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் வளமான கல்வி சமூகம் ஒன்று உருவாக வித்திட்டப்பட்டிருந்தது. எனினும் துரதிர்ஷ்டவசமாக இடம்பெற்ற 1983 ஜூலை கலவரத்துக்கு பின்னர் மலையக கல்வி நாசம் செய்யப்பட்டு விட்டது என்று கூறினாலும் மிகையில்லை. பாடசாலைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். வளங்கள் சூறையாடப்பட்டன. பின்னர் இனப்பிரச்சினை தீவிரம் அடைந்ததும் வடக்கு, கிழக்கிலிருந்து மலையகத்துக்கு வந்து கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் விரும்பவில்லை. இதனால் மலையகத்தில் பாரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது... இதற்கு தீர்வு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் கிடைத்தது. அவர் மலையக பகுதியில் படித்த திறமையான இளைஞர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினார். இதற்கு பின்னர் ஆசிரியர் நியமனம் என்பது தகுதி அடிப்படை என்பதை விட வேலையில்லா பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவே மலையகத்தில் மாறியது.
சில பாடங்களில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் என்பது இன்று வரை மலையகத்தில் ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய பாடசாலைகளிலேயே உள்ளனர்... அது போன்ற பாடசாலைகளில் எல்லா மாணவர்களையும் இணைப்பது என்பது எளிதல்ல.. ஏனெனில் குறிப்பிட்ட தூரத்தில் வசிக்கும் மாணவர்கள் அப்பகுதியில் உயர்தர பாடசாலை ஒன்று இருக்கும் பட்சத்தில் வேறு பாடசாலையில் இணையமுடியாது... எனவே மேலதிக வகுப்பு என்பது தவிர்க்க முடியாததாகின்றது.. ஆனால் பலர் வெறும் பணத்திற்காக மட்டுமே மேலதிக வகுப்புகளை நடத்துகின்றனர் என்பது துரதிர்ஷ்டம்... இருப்பினும் தேர்ச்சி பெற்றவர் இல்லாமல் இல்லை..எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் இவையனைத்தையும் தாண்டி கல்வி கற்று இரவு பகலாக தூக்கத்தை தொலைத்து பல்கலைக்கழகம் எனும் இடத்திற்கு ஒருவன் வரும் போது எத்தனை எத்தனை கனவுகள் இருக்கும்....
தேயிலை காடுகளில் உள்ள அட்டைகளுக்கு தனது உதிரத்தை உணவாக்கியும்.. தேனீக்கடிகளுக்கு தன் தேகத்தை இலக்காகியும் துயர வாழ்வு வாழும் ஒரு தாயின் கைப்பிடித்து வளர்ந்தவனுக்கு பல்கலைக்கழகத்துக்கு நுழையும் போது அந்த பல்கலைக்கழக கட்டடமே பிரமிப்பு ஊட்டுவதாகத்தான் இருக்கும். அதுவும் கிராமப் புறத்தை தாண்டி நகர்ப்புறத்துக்கு நுழையும் அந்த வாழ்க்கையில் எத்தனை கனவுகள் சிறகடிக்கும்... நானும் கார் வாங்கனும்... நானும் நகரத்துல வீடு வாங்கனும் இப்படி ஆயிரம் கனவு இருக்கும்.. இதெல்லாம் வார்த்தையால சொல்ல முடியாது.. பல்கலைக்கழகம் கல்வியை தொடரும் போது வறுமை பலரை வாட்டுவது இயல்பே.. புலமைப்பரிசில்கள் கிடைத்தாலும் அம்மா வீட்டுல இருந்து அனுப்புற காசுக்காக காத்திருக்கனும்... பல்கலைக்கழக கல்வியிலும் பிரதேச வாதம்...இனவாதம்.. செல்வாக்கு இப்படி பல விடயங்கள் தலைகாட்டும் இதெல்லாம் தாண்டி.. கஷ்டப்பட்டு அங்கேயும் இரவு பகலாக படிச்சு ஒரு பட்டத்த வாங்கிற கஷ்டம்.. அதன் பின் வருகின்ற ஆனந்தம்... அம்மா அப்பா நம்ப உறவுகள் இதனால் அடைகின்ற மகிழ்ச்சி இதெல்லாம் வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது..
ஆனால் பட்டதாரியான பிறகும் தகுதிக்கு ஏற்ப பிடித்தமான வேலையில்லாமல் கஷ்டப்படுற நிலைமை...இது நம்ம எதிரிக்கு கூட வரக்கூடாது... மலையகத்துல பிரச்சினைனு 100 வருஷத்துக்கு மேல் எதை எதையோ பேசிட்டாங்க.... ஆனால்.. இப்போ... படிச்சுட்டு நமக்கு பிடிச்சமாதிரியான வேலை வாய்ப்புகள் இல்லாமல் நாம் படுகின்ற மன உளைச்சல் யாருக்கும் புரியாது... இத பற்றி பேசவோ யோசிக்கவோ யாரும் இல்லை... மலையகத்தில் குறிப்பாக கலை பட்டதாரி இளைஞர்களுக்கு கிடைக்கின்ற ஒரே வாய்ப்பு ஆசிரியர் நியமனம் மட்டுமே... எப்போதாவது உள்ளூராட்சி மன்றங்களில் வேலைவாய்ப்பு அதுவும் ஆளணி தட்டுப்பாட்டு ஏற்படும் போது கிடைக்கும்.. ஆனால் எல்லா பட்டதாரிகளையும் அதற்குள் உள்வாங்க முடியாது... பொதுவாக பட்டதாரிகளுக்கு கிடைக்கின்ற வேலைவாய்ப்பு என்பது ஆசிரியர் நியமனம் மட்டுமே.. ஆசிரியர் நியமனம் என்பது தவறில்லை... அந்த தொழிலை விரும்பி ஏற்றால் மட்டுமே அது பூரண பலனை வழங்கும்... ஆனால்.. இங்கு வேலையில்லை.. என்பதற்காக அந்த தொழிலை தேர்ந்தெடுத்தவர்களே அதிகம்... ஒரு ஆசிரியரால் மட்டுமே ஒரு மருத்துவனை ஒரு சட்டத்தரணியை ஏன் இந்த நாட்டின் நல்ல தலைவனை உருவாக்க முடியும்... ஆனால், அந்த தொழிலை தகுதியுள்ள ஒருவன் அர்ப்பணிப்புடன் செய்யும் பட்சத்திலேயே அது பூரண பலனை வழங்கும்...
அண்மையில் மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது... அதுவும் 10 வருடங்களுக்கு ஒரு ஆசிரியர் குறித்த கஷ்ட பிரதேசத்திலேயே பணியாற்ற வேண்டும்... இடமாற்றம் கோரமுடியாது... ஆரம்பப்பிரிவு பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள்.. உண்மையில் அதனை எத்தனை பேர் மன மகிழ்சியுடன் ஏற்றனர் என்பது கேள்விக் குறியே.. பட்டதாரி ஆசிரியர்கள் ஆரம்ப பிரிவுக்கு கல்வி கற்பிப்பது தவறல்ல.. ஆனால் அவர்களது கல்வி வளம் வீணடிக்கப்படுகின்றது. என்பது புரிந்து கொள்ளப்படாமல் உள்ளது... சில வருடங்களுக்கு முன்னர் மலையகத்தில் பெரியளவில் தகுதி எதுவும் பார்க்காமல் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. அப்போது அதற்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதிலும்... அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.. இன்று அந்த நியமனம் பெற்றவர்களில் பலர் உயர்தர ஆசிரியர்களாக உள்ள நிலையில் ஒரு புவியியல் பட்டதாரியையும் விஞ்ஞான பட்டதாரியையும் ஆரம்ப பாடசாலை ஆசிரியராக்குவது எந்தளவு கல்வி வளம் வீணடிக்கப்படுகின்றது என்பதை உணரவைக்கிறது...
மலையக பட்டதாரிகளில் பலர் ஒரு அரச நிறுவனம் அல்லது குறிப்பிட்டளவு சம்பளத்துடன் ஒரு மகிழ்ச்சியான தொழில் என்பதனை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.. ஆனால் இயல்பில் இதனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது... தொழில் வளம் என்பது அங்கு மிக குறைவாக உள்ளது.. சாதாரணமாக படித்தவர்களும் ஆசிரியர் நியமனம் பெற்றுவிடுகின்றனர். ஆசிரியராக வேண்டும் என்று ஆசிரியர் கல்வி கல்லூரிகளில் படித்து வருகின்ற ஒருவர் மகிழ்ச்சியுடன் கற்பிக்கும் அளவுக்கு மனம் விரும்பாமல் ஆசிரியர் தொழிலை வெறும் தொழிலுக்கு பெறுகின்ற ஒருவரால் மகிழ்ச்சியாக செய்ய முடியாது. நான்கு, ஐந்து வருடங்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறும் போது அதற்கான தொழில் வாய்ப்பு இங்கு இல்லை. வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அவர்களுக்கும் ஆசிரியர் நியமனத்தை வழங்குகின்றனர்.
ஏன் படிச்சோம் ஏன் பல்கலைக்கழகம் சென்றோம் என்று பலருக்கு இதனால் தோன்றுகிறது. என்ன படித்தாலும் ஆசிரியர் தானே. இதற்கு எதற்கு பல்கலைக்கழகம் என்று எண்ணாதவர்கள் குறைவு.. வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் கூட இறுதியில் தனுஷ் தனக்கு பிடித்த தொழிலை வெற்றிகரமாக பணியாற்றுவார்..ஆனால்... நாம்... பொருளாதாரம்.. இறுதிக்கால நன்மை என்பதற்காக விரும்பியோ விருப்பம் இல்லாமலோ தொழிலை தேர்வு செய்கிறோம்.
உண்மையிலேயே இன்றைய அரசாங்கத்துக்கு மலையக கல்வியின் மீது உண்மைத்தன்மையான அக்கறையும் அனுதாபமும் இருக்குமாக இருந்தால் முதலில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவரவரின் நிகழ்ச்சி நிரல்களில் இருந்து வெளிவந்து பொதுவான செயற்றிட்டம் அல்லது பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டியது மிக மிக அவசியமாகின்றது. அதுமாத்திரமன்றி மலையக பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்குள் மட்டும் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்கி விடாது வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம். .. வெளிநாட்டு முதலீடுகளை பெற்றாவது வேறு தொழில் வாய்ப்புகளை மலையகத்தில் ஏற்படுத்த முடியும். அது மலையகம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அர்த்தப்பட தேவையில்லை. மாறாக மலையகத்துக்கு வெளியிலும் இதனை நடைமுறைப்படுத்த முடியும்.
தொழில் பேட்டைகளையும் தொழில் நிறுவனங்களையும் உருவாக்குவதற்கு எமது நாட்டில் வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ... இவற்றை முறையாக பாவித்து அல்லது வரையறை செய்து தரமான தொழில் வாய்ப்புகளை அமைத்துக்கொடுக்க முடியும் . இல்லையெனில் வெளிநாட்டிலேனும் தொழில் வாய்ப்புகளை பெறக்கூடிய வகையில் எமது கல்வி முறையில் மாற்றத்தை செய்து பாடசாலை முடித்து பல்கலைக்கழகம் நுழையும் போது தொழில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்...
வேலையின்மை என்பது தொழில் இன்மை என்பது மட்டும்.. அல்ல... மன விருப்பம் இன்றி பிடிக்காத தொழிலை சிலுவை போல சுமப்பதும் மனதளவில் வேலையின்மை போன்றதே.. எனவே மாற்றத்தை உருவாக்குங்கள்.. லயத்து பிரச்சினை பற்றி பேசியது போதும்.. இந்தியாவில இருந்து இந்த மண்ணில் குடியேறி 150 வருடங்களாகிவிட்டன.. இன்னும் இதை பேசியே அங்கு கட்சிகள் வாழ்கின்றன.... அடுத்த தலைமுறை வந்துவிட்டது.. மலையகம் முன்னேற்றம் அடைய பிரச்சினைகளில் இருந்து வெளியேற ஒரே வழி கல்வி கல்வி...கல்வி.. என்று சொன்னார்கள்... ஆனால்.. இன்று ஏன் படித்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.. பல்கலைக்கழக தேர்வு என்பது ஒரு காலத்தில் பகல் கனவே.... ஆனால் இன்று சாத்தியமானது... ஆனால் வேலையின்மை பின் தொடர்வது வேதனையானதொன்று.. மலையகத்தின் ஒவ்வொரு பட்டதாரி மாணவரையும் குறிப்பாக கலை பட்டதாரிகளை இப்பிரச்சினை களையிழக்க வைத்துக்கொண்டிருக்கிறது... பச்சை போர்வைகளை போர்திக்கொண்ட மலையகத்தின் பசுமை அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ள மறுப்பது பரம்பரை நோயாகி கொண்டிருக்கிறது..
இனி பிரச்சினை பற்றி பேசாமல்.. தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.. தொழில் வாய்ப்புகளை மலையகத்தில் உருவாக்குங்கள்... நல்ல தொழில் கிடைத்தாலேயே வீடு, வாசல், வாகனம் என்று அனைத்தும் கிடைத்து விடும்... நாம் எதிர்பார்க்கின்ற வாழ்க்கை முறைமை மாற்றம் சாத்தியப்பட்டு விடும்.. ஒருவன் படித்து முன்னேறுவது அவனது சொந்த முயற்சியினால் மட்டுமே... அரசியல் உதவியோடு அல்ல. அப்படி முன்னேறுபவனுக்கு உதவி செய்யுங்கள்.. தொழில் ரீதியான உதவியை பெற்றுக்கொடுங்கள்.... உங்கள் கல்வி தகைமைகளை பாராது உங்களுக்கு வாக்களித்த பெற்றோர்களின் வாழ்வு வளமாக நீங்கள் வேறொன்றும்.. செய்யாதீர்கள்.. தொழில் பேட்டைகளை மலையகத்தில் உருவாக்கி தொழில் வாய்ப்புகளை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுங்கள்... அதுவே மலையகத்தை மாற்றிவிடும்.. மலையக சமூகத்தை மேம்படுத்த வேண்டும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். என்பதே இக்கட்டுரையின் நோக்கம்..
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...