பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இழுத்தடிக்கப்படுவதில் திட்டமிட்ட சதி மறைந்திருப்பதாக பரவலான சந்தேகம் நிலவுகிறது.
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக காரணம் கூறப்படுகிறது. சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துவதற்கு தயங்காது என ஆளும் தரப்பில் கூறுகிறார்கள். கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும் போதெல்லாம் இவ்வாறு இரு தரப்பினரும் மிரட்டல் விடுவது வழக்கமான ஒன்றாகும். முன்னைய ஒப்பந்த காலங்களில் பேசப்படாத புது விசயம் ஒன்று முனைப்புடன் செயற்படுத்த ஆர்வம் காட்டப்படுகிறது.
தோட்டங்களைத் துண்டாடி தொழிலாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை பல தரப்புக்களாலும் விடுக்கப்பட்டு வருகின்றன. இன்று நாட்டில் சிறு தேயிலைத் தோட்டத்துறை இலாபத்தில் இயங்குவதாக பேசப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு தோட்டங்களை பிரித்துக் கொடுத்து நிர்வகிப்பதன் மூலம் கம்பனிகள் பல தொல்லைகளிலிருந்து விடுபட நினைப்பதாகத் தெரிகிறது.
நாட் சம்பளமோ மாதச்சம்பளமோ வழங்காமல் எடுக்கப்படும் கொழுந்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படும். சிறு தேயிலைத் தோட்டங்களில் இவ்வாறான நடைமுறைகள் உள்ளன. பருவ காலங்களுக்கேற்ப விலைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும். அரசாங்கத்தின் உர மானியம் போன்ற சலுகைகளும் வரட்சி நிவாரணம் போன்றவைகளும் சிறு தேயிலை சொந்தக்காரர்களுக்கும் கிடைக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக காணி உறுதி உடைய சிறு முதலாளிகளாக இவர்கள் இருக்கின்றனர். இந்த உரிமைகளும் சலுகைகளும் எமது மக்களுக்குக் கிடைக்குமா என்பதே எம்முன் உள்ள ஆயிரம் டொலர் கேள்விகளாகும். தோட்டத் தொழிலாளர்களை காணி உரிமையுள்ளவர்களாக்குவோம் எனக்கூறுவோர் இதனைச் சிந்திக்க வேண்டும். காணி உறுதி இல்லாமல் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படுவதிலுள்ள ஆபத்து உணரப்பட வேண்டும். குத்தகைக்காலம் முடிந்தவுடன் நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு எம்மக்களை இட்டுச்செல்லும் கைங்கரியத்தை நாம் செய்துவிடக்கூடாது.
முன்னர் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு எம்மக்கள் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கம் நாட்டில் 10 வருடங்களுக்கு மேல் அரச கட்டடங்கள், காணிகளில் வசிப்போருக்கு உறுதிப்பத்திரம் வழங்குகிறது. ஆனால் 200ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும் சொந்தக் காணியும் வீடும் இல்லாத கொத்தடிமைகளாகத்தான் நாம் இருக்கிறோம். பிரிட்டிஷார் காலத்தில் தேயிலைத் தோட்டங்களாக இருந்தவைகளில் பல இன்று கிராமங்களாகி விட்டன. அங்கு தொழில் புரிந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் விரட்டப்பட்டு விட்டனர்.
கிராமங்களில் கொத்தடிமைகளாய் சிதறிப்போய் சீரழிந்த நிலையில் உள்ளனர். தமது மொழியையும் கலாசாரத்தையும் இழந்து வாழ்கின்றனர்.
தேயிலைத் தோட்டங்களை மூடும் செயற்பாடுகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. கலஹா, கண்டி பிரதேசங்களில் இருந்த பாரிய பல தோட்டங்கள் மாற்று பயிர்ச்செய்கைகள் என்ற பெயரில் நட்சா என்ற அமைப்பினால் பொறுப்பேற்கப்பட்டு பின்னர் கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. கலஹா, மாத்தளை, இரத்தினபுரி, தெனியாய, ஹேவாஹெட்ட, வலப்பன, நில்தாணிடாகின்ன, பதியபலல்ல, ஹங்குரன் கெத்த, வத்துமுல்ல, வெலிஓயா, மகாஊவா, சூரியகாந்தி, சென் லெனார்ட்ஸ் போன்ற பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்டங்கள் மூடப்படும் அபாயங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றன.
கம்பனிகள் தோட்டங்களைப் பிரித்துக்கொடுத்து கொழுந்தை மட்டும் கொள்வனவு செய்கின்றன. தொழிலாளர்களின் எல்லாவித சலுகைகளும் அநேகமாக இங்கு இல்லாமல் செய்யப்படுகின்றன. காணிகளுக்கோ வீடுகளுக்கோ உறுதி இல்லாத காரணத்தால் எமது மக்கள் இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
அரசு பொறுப்பேற்கும் என கம்பனிகளுக்கு பூச்சாண்டி காட்டப்படுகிறது. அரசு நிர்வகிக்கும் ஜனவசம தோட்டங்கள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன என்று பார்த்தாலே தலைசுற்றும். மலையக பெருந்தோட்டங்களில் ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 48 வருடங்களாகின்றன.
இச்சபைக்கு உட்பட்ட தோட்டத்தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி 1250 கோடி ரூபா இதுவரை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இச்சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்கள் கூறு போடப்பட்டு குத்தகைக்கு விடப்படுவதாகக் கூறப்படுகிறது. அரசாங்க காணிகளை தனியார் துறை அபகரித்து அதன் மூலமாக கொள்ளை லாபமீட்டுவதை இ.தொ.கா. எதிர்ப்பதாக அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார்.
பல்லேகலை விமான நிலைய அமைப்பிற்காக கையேற்கப்பட தெல்தெனிய பாபேரிதென்ன தோட்டத்தில் பாதிப்படைந்துள்ள 181தமிழ்க் குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டன.
ஆனால் அந்தக் காணிகளில் அவர்கள் குடியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காணியில் பன்றிப்பண்ணை இருப்பதாகக் காரணம் கூறப்படுகிறது.
மத்திய மாகாண சபையின் உறுப்பினர் மதியுகராஜா இதுபற்றி சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் எதுவும் நடைபெறவில்லை.
எட்டியாந்தோட்டை லெவலண்ட் தோட்ட மக்கள் கேகாலை மாவட்டத்திற்கும் இந்திய வீடமைப்புத்திட்டம் வேண்டும் என்று சாத்வீப் போராட்டம் நடத்தி இருக்கிறனர். ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவதைப் போல தமக்கும் 20 பேர்ச்சஸ் காணி உறுதியுடன் வழங்கப்பட வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாகும். தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசனின் சொந்த இடம் எட்டியாந்தோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி. அந்தோனிமுத்து, இவர்களின் கோரிக்கை சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு வருவதாகத் தெரிகின்றது.
அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்து வரும் தனி வீட்டுத்திட்டங்களின் போது 7 பேர்ச்சஸ் காணி உறுதியுடன் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார். தேர்தல் முறை சீர்திருத்தம், அதிகாரப்பகிர்வு, ஏழு பேர்ச்சஸ் காணிப்பகிர்வு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக மூன்று ஆய்வுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் சிபாரிசுகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. சம்பள உயர்வு பிரச்சினைகளும் அமைச்சரவை சிபாரிசுக்கு சமர்ப்பிக்கப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கது.
மலையகத்திலும் இளைஞர்களும் யுவதிகளும் வெளியேற வேண்டும் என நாம்தான் கூறினோம். தலைவர்கள் மட்டும் கொழும்பில் செட்டிலாகலாம். நாங்கள் மட்டும் தேயிலை தூரிலேயே உரமாக வேண்டுமா என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. புத்திஜீவிகளும் நலன்விரும்பிகளும் கலந்துரையாடி சுமுகமான தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். இது குறித்து ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...