கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்களுக்கு அருகிலுள்ள மலையின் ஒருபகுதி சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் இயற்கை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தேசிய கட்டட நிர்மாண ஆய்வு நிலையம் என்பன ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் அனர்த்தங்கள் ஏற்படுவதற்குரிய காரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்தே, அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பாகவே மேபீல்ட் தோட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
ஸ்காடு என்று அழைக்கப்படும் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் வசிக்கும் 38 குடியிருப்பாளர்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்தின் 16 மற்றும் 6ஆம் இலக்க குடியிருப்பாளர்களில் 59 பேர் அந்த தோட்டத்தின் கலாசார மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இத்தோட்டத்தின் 7 ஆம் இலக்க தொடர் வீட்டு குடியிருப்பாளர்களும் மாற்று இடங்களில் தங்க வைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேபீல்ட் தோட்டத்தின் பழைய தெப்பக்குளம் அமைந்துள்ள வீ. பீ 31ஆம் இலக்க தேயிலை மலை என்றும் தற்பொழுது என்.சீ 12ஆம் இலக்க தேயிலை மலை என்றும் அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் அரை அடி அகலத்திலும் 45 அடி நீளத்திலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாதிக்கப்படக்கூடிய தொடர் வீடுகளின் பகுதியிலிருந்து சுமார் 150 அடி நீளப்பகுதியில் இந்த வெடிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன் இத்தோட்ட மக்களுக்கு குடிநீர் குழாய் திருத்த வேலைகளுக்காக மேற்படி மலைப் பகுதிக்குச் சென்ற நபர் ஊடாக இவ் வெடிப்பு தொடர்பான தகவல் வெளி வந்துள்ளது.
இதனையடுத்து, இத்தோட்ட தலைவர்களால் கட்ந்த 4 ஆம் திகதியன்று தோட்ட அதிகாரி மற்றும் இப்பகுதி கிராம சேவகர் உட்பட திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் குறித்த இடத்திற்கு அருகில் உள்ள இலக்கம் 16 மற்றும் 6 ஆகிய தொடர் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து 05ஆம் திகதியன்று காலை தோட்ட நிர்வாகத்தினால் இம்மக்கள் கலாசார மண்டபம் ஒன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்காலிக மாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருக்கும் இம்மக்களில் 14 சிறுவர்கள், 24 ஆண்கள், 20 பெண்கள், ஒரு பார்வை அற்றவர் அடங்கலாக 59 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இவர்களுக்கான மூன்று நாட்கள் உணவை கிராம சேவகர் ஊடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மேலதிக நாட்களில் உணவுகளை வழங்க எவரேனும் முன்வர வேண்டும் என தோட்ட அதிகாரி ஸ்ரீ கணேசன் தெரிவித்தார்.
இவ்வாறு பிற இடங்களிலிருந்து வழங்கப்படும் உணவுகளை தோட்டத்தின் குடும்ப நல சேவையாளர் ஊடாக பொறுப்பேற்கப்படும் என்றும் இதன்போது பாகுபாடின்றி இதை வழங்க வேண்டும் என்றும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகம் காணிகளை தங்குதடையின்றி வழங்கும் என தோட்ட அதிகாரி உறுதியளித்துள்ள அதேவேளை, இம்மக்களுடைய நலத்தில் தோட்ட நிர்வாகம் அரச சார்பற்ற பொது அமைப்புகள் எவ்வாறு உதவுவதற்கு முன்வந்துள்ளனவோ, அதேபோன்று சந்தாவை பெற்றுக்கொண்டும் வாக்குகளை பெற்றுக்கொண்டும் செயற்படும் தொழிற்சங்கம் மற்றும் அரசியல்வாதிகளும் இவர்களின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது மேற்படி தோட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த மண்சரிவு அபாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்..
எஸ்.காளியம்மா
பாதிக்கப்பட்ட எங்களுக்கு தோட்ட நிர்வாகம் அதன் முகாமையாளர், அதிகாரிகள் கூடிய அளவு உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோன்று அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக எங்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன. அத்தோடு, நாங்கள் அங்கம் வகிக்கும் கட்சி முக்கியஸ்தர்களும் எம்மை வந்து பார்த்து சென்றார்கள். உதவிகளை செய்வதாக தெரிவித்தார்கள். தோட்ட தலைவர்களும் உதவிகளை செய்து வருவதோடு, நிச்சயம் எங்களுக்கு ஒரு வீடு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கின்றது.
தேவேந்திரன்
எங்களுக்கு சகல உதவிகளும் கிடைக்கும் அதே சந்தர்ப்பத்தில் நாம் எதிர்பார்ப்பது வீடுதான். ஒரே இடத்தில் மூன்று குடும்பங்கள் வசிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மற்றும்படி எமக்கு இத்தோட்டத்தில் உள்ள மக்களும் கடைகளில் உள்ளவர்களும் அருகில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் ஊடாகவும் பல்வேறு உதவிகளும் உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால், வீடு இல்லாமல் இருப்பது குறையாக நினைக்கின்றோம்.
எஸ்.லெட்சுமி (ஓய்வுபெற்ற தொழிலாளி)
பலரும் எம்மை வந்து பார்த்து சென்றுள்ளனர். அனைவரும் எமக்கு உதவிகளை செய்கின்றார்கள். தோட்ட நிர்வாகம் முழுமையான உதவியினை செய்கின்றது. ஆனால், வீடு இல்லாமல் வாழ்வது கஷ்டமாக உள்ளது. கடைகள் மற்றும் வியாபார நிலையங்களிலிருந்தும் எமக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேவேளை, தோட்ட தலைவர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாக சிறந்த உதவிகள் எமக்கு கிடைக்கின்றமை சந்தோஷத்தை தருகின்றது.
கே.ரவீந்திரன்
மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலவெடிப்பை கண்ட நான் உடனடியாக தோட்ட அதிகாரி மற்றும் தோட்ட தலைவர் ஆகியோருக்கு தெரிவித்தேன். யதார்த்தமாக இக்காட்டுப்பகுதிக்கு தண்ணீர் பார்ப்பதற்காகச் சென்ற போதே அங்கு வெடிப்பு ஏற்பட்டிருப்பதை நான் கண்டேன். அதேவேளை, கடந்த முதலாம் திகதி இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது பலத்த இடி ஒன்று இப்பகுதியில் விழுந்ததனால் இவ் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எனக்கு வந்தது.
பாதிக்கப்பட்ட 6ஆம் இலக்க குடியிருப்பில் வசிக்கும் நாம், இன்று வீட்டை இழந்து இங்கு (தற்காலிக முகாமில்) தங்கியிருக்கின்றோம். எங்களுக்கு அனைத்து உதவிகளும் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக கிடைக்கப்பெறுகின்றது.தோட்ட அதிகாரி நேரம் காலம் பார்க்காமல் எமக்கு உதவிகளை செய்து வருகின்றார். எதிர்வரும் காலத்தில் எமக்கு வீடுகளை கட்டி தருவதற்காக பலர் எம்மை வந்து பார்த்து சொல்லியிருக்கின்றார்கள்.
வீடுகளை கட்டியமைத்து தந்து உதவுமாறு இந்தவேளையில் அணைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
தற்போது மலையகத்தில் கடும் மழை பெய்துவருகின்றது. இந்த மழையில் மண்சரிவு ஏற்பட்டு,எமது வீடுகள் அழிந்துபோகும் அபாயம் காணப்படுகிறது. அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பாகவே இம்மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்துக்கொடுத்து, மீளக்குடியமர்த்தவேண்டிய பொறுப்பு மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு உள்ளது. அமைச்சு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...