சீரற்ற காலநிலையினால் பாதிப்புற்று தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு தற்காலிக நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டமைக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை அவர்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்கும் பொருட்டு தனி வீடுகளை அமைப்பதற்கு, தற்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் நிவாரண நிதியிலிருந்து விசேட நிதியீட்டம் செய்யப்படவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அன்ர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக நேற்று பாராளுமன்றில் விசேஷடமாக கூடி முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாத்த்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சபையில் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டில் உயிர்நீத்த அனைத்து மக்கட் பிரிவினருக்கும் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மலைப்பாங்கான மாவட்டம் என்ற வகையில் அடிக்கடி இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற அனர்த்தங்களைத் தொடர்ந்து மக்கள் பல்வேறுபட்ட இடங்களில் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அம்பகமுவ , நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குரங்கத்தை என அனைத்துப் பிரதேச செயலக பிரிவுகளிலும் பாதிப்புற்றிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கிராம அதிகாரிகள், இடர்முகாமைத்துவ நிறுவன அதிகாரிகள், கட்டட ஆய்வு மையத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் கொள்கின்றேன்.
பாதிப்புற்ற மக்களுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க இவர்கள் சிரமேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்தனர். நாட்டில் ஏனைய மாவட்டங்களில் நிர்கதிக்குள்ளான மக்கள் பொது இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட்ட போதும் குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்களை அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர தீர்வு தனி வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதேயாகும்.
மலையக தொழிலாளர் மக்களுக்கு தனிவீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுத்து வருகின்றார்.எனினும் சீரற்ற காலநிலையினால் பாதிப்புற்றுள்ள மக்களுக்கு உரிய வீட்டு வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்கு தற்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் விசேட நிவாரண நிதியிலிருந்து சிறப்பு நிதியீட்டம் செய்யப்படவேண்டும் என இந்த உச்ச சபையிலே எனது கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதேபோல இந்த வீடுகளை அமைப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகளிடம் இருந்து காணிகளைப் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெருந்தோட்ட கம்பனிகள் இந்த பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களைக் கூட மதிக்காது தோட்டத் தொழிலாளர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவை வழங்க மறுத்துவருகின்றார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு உரித்தான வீடமைப்பு காணியான 7 பேர்ச்சஸ் காணியினை அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய பெற்றுக்கொடுப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் துரிதமாக செயற்படவேண்டும் என உரிய அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...