மே 1 ஆம் திகதி உலக தொழிலாளர்கள் தினம். உலகத்திலேயே இலங்கையில் பெருந்தோட்டப்பகுதிகளில் மாத்திரம் தொழிலாளர் தினம் என்பதன் அர்த்தமே வேறு விதமாகத்தான் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது அல்லது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது எனலாம். தொழிலாளர் தினத்தின் தாற்பரியம் ,வரலாறு போன்றவற்றைப்பற்றி அறியாத மலையக பிரதிநிதிகள் மே 1 ஆம்திகதியன்றும் மேடைகளில் எதிர்ப்பு அரசியலை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதே தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இது தான் தொழிலாளர் தினம் என்ற அர்த்தத்தை தொழிலாளிகளுக்கு உணர்த்திய புண்ணியம் அவர்களையே சேரும்.
பல தோட்டங்களில் இருந்து பஸ்களில் தொழிலாளர்களை அழைத்து வந்து வெய்யிலில் அவர்களை நிறுத்தி மேடைகளில் ஒலி வாங்கியை கடித்து துப்பும் அளவிற்கு ஏதோ தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பெற்றுத்தந்து விட்டதாக அரசியல் பிரமுகர்கள் கர்ஜிக்கும் வரலாற்றை தொழிலாளர்கள் பாவம் இத்தனை வருடங்களாக பார்த்துக்கொண்டு தான் வருகின்றனர்.தொழிலாளர்களுக்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும் பெருமை சேர்க்கும் இத்தினத்தில் அரசியல் முதலாளிமார்கள் மேடைகளில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்து கீழே பசி.தாகத்தோடு கிட்டத்தட்ட மயக்க நிலையிலிருக்கும் தொழிலாளர்களை நோக்கி உரை நிகழ்த்துவதுதான் பெருந்தோட்டப்பகுதிகளின் மே தினம்.
அது ஒரு பக்கமிருக்க இம்முறை எந்த முகத்தை வைத்துக்கொண்டு மலையக அரசியல் பிரமுர்கள் தொழிலாளர் தினத்தை கொண்டாடப்போகின்றனர்? ஊதிய உயர்வில்லாத முதலாமாண்டு பூர்த்தியை மே தினத்தில் கொண்டாடப்போகின்றனரோ தெரியவில்லை. ஒருவாறு சர்வதேச பெண்கள் தினத்திற்கு பெண்கள் கூட்டத்தை சேர்த்தனர், மே தினத்திற்கு இருசாராரையும் சேர்க்க வேண்டும். தற்போது தொழிலாளர்கள் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் ஊதிய விவகராம் சம்பந்தமாக எவருமே மே தின மேடைகளில் பேச மாட்டர். அப்படி பேசினால் கல்லடி விழும் எனத்தெரியும் ஆகையினால் கடந்த காலத்தில் தொழிலாளர் உரிமைக்காக போராடியதை (வழமை போன்று பிரஜா உரிமை, வீட்டுக்கு தகரம் கொடுத்தமை, வீதிகள் கொங்ரீட் போடப்பட்டமை, கரப்பந்தாட்ட மைதானம் அமைத்துக்கொடுத்தமை, கோயில் கட்ட நிதியுதவி செய்தமை) கூறியே மே தினத்தை முடித்துக்கொள்வர் என்பதை சிறு பிள்ளையும் கூறி விடும்.
மட்டுமல்லாது இன்னொரு முக்கியமான அம்சம் இடம்பெறும் அதாவது நாங்கள் தொழிலாளர் உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் ,பணியாற்றுகிறோம் ஆனால் எதிர் அணியினர் எம்மை தடுக்கின்றனர் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் உரிமைகளை தட்டிப்பறிக்கின்றனர், நாம் ஆரம்பித்து வைத்ததை அவர்கள் சென்று ரிப்பன் வெட்டுகின்றனர் ஆகிய சர்வதேச புகழ் மிக்க கோஷங்களையும் (?) மேடைகளில் கேட்கலாம்.
மே தினத்திற்கு ஆட்கள் சேகரிக்க வரும் தோட்டத்தலைவர்களை நிற்க வைத்து முதலில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க வேண்டும். எல்லா உரிமையையும் விட உண்பதற்கு வழிகோலும் சம்பள உரிமையை எவர் வாங்கிக்கொடுக்கப்போகின்றனர் என்ற கேள்வியையே அவர்கள் கேட்க வேண்டும்.
அதை விட தேர்தலில் வென்ற பிறகு பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்து தொழிலாளிக்காகவே இங்கு வந்திருக்கிறேன் என முழக்கமிடும் அரசியல் பிரமுகர்கள், சம்பளப்பிரச்சினையை தீர்க்காது தொழிலாளர்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றி மே தின மேடைகளில் பேசுவதற்கு தமக்கு அருகதை இருக்கின்றதா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்டு கொள்வார்களாக. அதை விட இலவசமாக பஸ்களில் ஏறிச்சென்று தமது தலைவர்களுக்கு தேயிலை மாலை அணிவித்து அவர்கள் கொடுக்கும் பார்சல் வரப்பிரசாதங்களையும் ஏனையவற்றையும் பெற்றுக்கொண்டு வருவதுதான் சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டம் என்ற மாயையிலிருந்து முதலில் தொழிலாளர்கள் விடுபட வேண்டும். விடுபடுவார்களா?
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...