மலையக மக்களின் லயன் வீடமைப்பு வாழ்க்கை முறைமையை மாற்றுவதற்கான நடவடிக்கையை இந்தியா, இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகள் முன்னெடுக்க வேண்டும். மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் சர்வதேச மயமாக்கப்படாவிட்டாலும்கூட லயன் வீடமைப்பினை மாற்றுவதற்கேனும் பொதுநலவாய மாநாட்டின் மேற்படி நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் லோரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
200 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியர்கள் தமது காலனித்துவ நாடான இலங்கையில் தேயிலை, இறப்பர் பெருந்தோட்டங்களில் ஈடுபடுவதற்காக இன்று மலையக தமிழ் மக்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பெருந்தோட்டங்களில் நாட்கூலிகளாக வேலை செய்வதற்காக அழைத்து வந்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட லயன் காம்பராக்களில் குடியமர்த்தினர்.
இந்தியாவின் அனுமதியோடு பிரித்தானிய காலனியாதிக்க அரசாங்்கத்தால் இலங்கையில் குடியேற்றப்பட்ட இந்த 15 இலட்சம் மலையக தமிழ் மக்கள் அன்று தொடக்கம் இன்றுவரை இன்றும் இந்த அடிமைச்சின்னம் போன்ற லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். இவ்விதம் காலங்காலமாக அடிமைகள் போல் வாழும் இவர்களின் லயன் வாழ்க்கைக்கு இந்த பொதுநலவாய மாநாடு நடக்கும் இந்தச் சூழலில் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ள நிலையில், இந்த அடிமை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியிடும் வகையில் இலங்்கை, பிரித்தானியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் லயன் முறையை முற்றாக ஒழித்து இந்த அவல நிலைக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும்.
பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கும் கனடாவின் பிரதமரும் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றாமல் பகிஷ்கரித்தமைக்கு வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையே அடிப்படையாக அமைந்தது. இந்தளவுக்கு மலையக தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச மயப்படாவிட்டாலும். மலையக தமிழ் மக்களின் அடிப்படைத் தேவையான வீடமைப்பு விடயம் தொடர்பில் சிறந்த தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
பொதுநலவாய மாநாட்டுக்கு பிரித்தானிய எலிஸபெத் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை வரும் இளவரசர் சார்ள்்ஸ் நுவரெலியா பீட்று தோட்டத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் ஒரு சுற்றுலா பயணி போன்று பீட்று தோட்டத்தைப் பார்க்காமல் தோட்டத் தொழிலாளர்கள் காலங் காலமாக வாழும் இந்த லயன் முறையில் மாற்றத்தை கொண்டுவரும் வகையில் இலங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதாக அமைய வேண்டும்.
அதேநேரத்தில் வடக்குக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் மலையகத்திற்கும் விஜயம் செய்து மாநாட்டில் வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக வலியுறுத்தும் அதேநேரத்தில் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினை தொடர்பாகவும் வலியுறுத்த வேண்டும். வடகிழக்கு பிரச்சினை இந்தளவு சர்வதேச கவனத்தை ஈர்த்தமைக்கு அம்மக்களினதும் அதன் தலைவர்களினதும் போராட்டமும் அர்ப்பணிப்பும்தான் காரணம். ஆகவே, மலையக மக்களும் அதன் தலைவர்களும் வடகிழக்கு தமிழ் மக்கள் அதன் தலைவர்கள் போன்று பொதுநலவாய மாநாடு நடக்கும் இந்தச் சூழலில் மலையக தமிழ் மக்களின் பிரச்சினையையும் பொதுநலவாய சமூகத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். பிரஜாவுரிமை பிரச்சினையில் சகல சமூகங்களினதும் அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகளின் உதவியை பெற்றதைப் போன்று மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பல்வேறு சக்திகளின் தார்மீக ஆதரவைப் பெற்று தீர்ப்பதற்கு முன்வர வேண்டுமென அவர் மேலும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நன்றி -வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...