Headlines News :
முகப்பு » , , , » கூட்டு ஒப்பந்தமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனமும்

கூட்டு ஒப்பந்தமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனமும்


இரா. ரமேஷ்
பேராதனைப் பல்கலைக்கழகம்

1. அறிமுகம்:
தொண்ணூறுகளின் அரம்பத்தில் பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட வில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டன. எவ்வாறாயினும் 1998ம் ஆண்டு முதற் கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்றது. இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது ஒரு பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் நலன்களோடு தொடர்புடையதாகும். ஒரு வகையில் அது முழு மலையக மக்களினது வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சம் என்றே கூறலாம். எனவே கூட்டு ஒப்பந்தம் அரசியல் தொழிற்சங்க ரீதியில் மலையக்தில் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது. அத்தோடு தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் விடயமாக உள்ளது. உண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது விடயத்தில் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும் பணி பகிஸ்கரிப்பும் இடம்பெற்றுவந்துள்ளன. அந்தவகையில் இன்று தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெறுகின்றன.

2. தொழிலாளர்களின் வேதனம்: தற்போதைய நிலை 
 2011ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி செய்யப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் படி தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் 380 ரூபாவாகவும் 75% மேல் வருகை காணப்படுமாயின் 105 ரூபாவும் ஒரு நாளுக்கான நியமத்தைப் பூர்த்தி செய்தால் 30 ரூபாவும் வழங்கப்படுகின்றது. மொத்தமாக 515 ரூபா சம்பளம் ஒரு நாளைக்கு வழங்கப்படுவதாக கம்பனிகள் சார்பில் வாதிடப்படுகின்றது. ஆயினும் நடைமுறையில் 515ரூபா சம்பளம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதற்குப் பல காரணிகள் உண்டு. சில தோட்டங்களில் வரவு கொடுப்பனவை இல்லாது செய்யும் வகையில் முகாமைத்துவம் சில உபாயங்களை கையாள்கின்றன. இதனால் 105  ரூபா கொடுப்பனவினை 60-70% மான தொழிலாளர்களால் பெற முடிவதில்லை. தேயிலை விளைச்சல் இல்லாத காலங்களில் 17 அல்லது 18 கிலோகிராம் தேயிலையினைப் பறிக்க வேண்டுமெனவும் இறப்பர் தோட்டங்களில் சாதாரண காலங்களில் 6மப இறப்பரையும் விளைச்சல் காலங்களில் 9மப இறப்பரையும் பெற்றுதருமாறு தோட்ட முகாமைத்துவத்தால் நிபந்தனை விதிக்கப்படுவதுடன் அது நியம கொடுப்பனவு 30 ரூபாவினைப் பெற அவசியமெனவும் குறிப்பிடப்படுகின்றது. சில தோட்டங்களில் ஒரு நாள் நியமத்தை பூர்த்தி செய்யாவிடின் ஒப்பந்தத்தை மீறும் வகையில் ½ பெயர் வழங்கப்படுகிறது (அதாவது அடிப்படை சம்பளத்தில் அரைவாசி மாத்திரம் வழங்குதல்). உண்மையில் இன்று ஒரு நாளுக்கான நியமத்தைத் தீர்மானிப்பதில் தோட்ட முகாமைத்துவத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரம் உண்டு என கூட்டு ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது. ஆயினும் நடைமுறையில் தோட்ட முகாமைத்துவத்தாலே தீர்மானிக்கப்படுகின்றது. அதனால் நாளுக்கு நாள் இது மாற்றமடைகின்றது. மறுபுறமாக 25 நாட்கள் தோட்டத்தில் வேலை வழங்கப்படுமாயின் அதில் குறைந்தது 18 நாட்கள் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். அவ்வாறன்றில் வருகைக் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. இதன்படி பார்க்கும்போது 75%மான தொழிலாளர்களின் வேதனம் 380 ரூபாவுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. தேயிலை விளைச்சல் அதிகமாக இருக்கும்  மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் மாத்திரமே தொழிலாளர்கள் நியமக் கொடுப்பனவு 30 ரூபாவினை பெற முடியும்.  இன்று காலநிலை மாற்றம் தேயிலை விளைச்சல் பருவங்களிலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளமையால் இதுவும் கடினமாகவே உள்ளது.

3. வாழ்க்கைச் செலவும் தொழிலாளர் வேதனமும்
2011ம் ஆண்டு சம்பளம் நிர்ணயம் செய்யும்போது வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கும் இன்று காணப்படுகின்ற விலைகளுக்கும் இடையே பெரியளவிலான வேறுபாடு உண்டு. 2011க்குப் பின்னர் பொருட்களின் விலைவாசி தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டதுடன் இரு தடவைகள் பெற்றோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இவை நேரடியாக வாழ்க்கை செலவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மிகக் குறைந்த வேதனம் பெறும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வாழ்க்கையிலும் எதிர்மiறாயன தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. பின்வரும் அட்டவணை கடந்த மூன்று ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பினைக் காட்டுகின்றது.

ஆகவே மேற்கூறிய அட்டவணையானது விலைவாசி அதிகரிப்பினையும் அதற்கேற்ற வகையில் சம்பள அதிகரிப்பிற்கான தேவையை வெளிக்காட்டுகின்றது. 2009ஃ2010ம் ஆண்டு குடும்ப வருமானம் மற்றும் செலவு தொடர்பாக இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒரு குடும்பத்திற்கு (4 பேர் கொண்ட) உணவு மற்றும் உணவில்லாத செலவுகளுக்கு சராசரியாக 31331ரூபா தேவை எனக் குறிப்பிடுகின்றது. மேலும் 2பேர் தொழில் செய்யும்  குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 36451 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பெருந்தோட்ட மக்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.  ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 பேர் வேலை செய்தால் மாத்திரமே 36451ரூபா வருமானத்தை பெருந்தோட்டத்துறையில் பெற முடியும். 2013ம் ஆண்டு ஒரு மதிப்பீட்டின்படி 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாத செலவுக்கு சராசரியாக 40000 ரூபா வரை தேவை எனக் குறிப்பிடப்படுகின்றது. வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும். ஆயினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்றுள்ள சம்பளக் கட்டமைப்பில் இருந்துக் கொண்டு மேற்கூறியத் தொகையினை எட்டுவது இயலாத காரியமாகும். இன்றுள்ள சம்பளக் கட்டமைப்பின்படி மாதத்தில் 30 நாற்கள் வேலை வழங்கப்பட்டாலும் 40000 வருமானத்தை தோட்டத் தொழிலாளர்களால் உழைக்க முடியாது என்பதனை மனங்கொள்ள வேண்டிய விடயமாகும்.  இது தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பெரிதும் நியாயப்படுத்துகின்றது. 

4. தொழிலாளர் வேதனத்தில் பாதிப்பு செழுத்தும் காரணிகள் 
இன்று தோட்டங்களில் இரண்டு பேர் சராசரியாக வேலை செய்கின்றார்கள். நன்கு விளைச்சல் உள்ள தோட்டங்களில் 20 தொடக்கம் 24 நாட்கள் வரை வேலை வழங்கப்படுகின்றது. 25 நாட்கள் வேலை செய்தாலும் மாதம் ரூபா 12875 மட்டுமே பெற முடியும் (380X 25 + 9500,  105X25+ 2625, 25X30) (9500+2625+750 = 12875) இதில் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி கோவில் கொடுப்பனவு தொழிற்சங்க சந்தா கூட்டுறவு சங்கம் மரண சங்கம் உணவுக்கான கழிப்பனவு தேயிலை பெருநாள் முற்பணம் சம்பள சீட்டுக்கான கழிப்பனவு என மொத்த வேதனத்தில் 30-40 வீதம் கழிப்படுகின்றன. விபரிக்கப்பட்ட சம்பள சீட்டுக்கு கூட சில தோட்டங்களில் 7 ரூபாய் கழிக்கப்படுவது வியப்புக்குரிய விடயமாகும். மேலும் வேறு கழிப்பனவுகள் என 6 ரூபாய் அறவிடப்படுகின்றது. இது எதற்கான அறவீடு என்பது குறித்த விபரங்கள் சம்பள சீட்டில் குறிப்பிடப்படவில்லை. இன்று அதிகமான தொழிலாளர்கள் லயன் அறைகளைத் திருத்துவதற்காக கடன் பெறுகின்றார்கள். இதற்குத் தமது வேதனத்திலிருந்து 22% வட்டியைச் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. உழைக்கும் பணத்தில் பெரும்பகுதி வட்டிக்காகவே செலவாகின்றமையினை பல தோட்டங்களில் காண முடிந்தது. உண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 31331 ரூபாவினை குடிமனை தேவைகளுக்கு செலவிட வேண்டுமாயின் அவர்களின் ஒரு நாள் வேதனம் குறைந்தது 650ரூபாக அதிகரிக்கப்பட வேண்டும். அப்பொழுதே இருவர் தொழில் செய்யும் குடும்பமொன்றில் மாத வருமானம் சராசரியாக 26000 ரூபாவினையேனும் பெற முடியும்.

இன்று தோட்டங்களில் வரவு கொடுப்பனவு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. உண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு கொடுப்பனவு கிடைக்காமைக்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் திருமணம்  மரணம் பண்டிகைகள் திருவிழாக்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல் சடங்கு சுகயீனம் போன்ற பல தனிப்பட்ட காரணங்களால் வேலை வழங்கப்படுகின்ற அத்தனை நாட்களும் வேலைக்குச்  செல்வதில்லை. உண்மையில் 515 ரூபா சம்பளத்தினை மொத்த தொழிலாளர் படையில் 10 வீதத்துக்கு குறைவாக இருக்கின்ற காவலாளிகள் பங்களா சேவையாளர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் தொழிற்சாலை ஊழியர்கள் போன்றோரே பெறுகின்றனர். வரவு கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கு தொடர்ச்சியான காலநிலை மாற்றம் பாடசாலைகளில் இடம்பெறும் கூட்டங்கள் ஞாயிறு தினங்களில் வேலை செய்தல் பெண் தொழிலாளர்கள் 15-20 கிலோகிராம் நிறையுடைய பச்சை கொழுந்து பைகளை கடும் வெயிலில் சுமப்பதால் ஏற்படும் சுகவீனம் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.

தொழிலாளர் வரவு கொடுப்பனவு சில நேரங்களில் 18 நாள் தொடர்ந்து  தொழில் செய்கின்ற ஒருவருக்குக் கிடைக்காமல் போகலாம். அதற்கு தோட்ட முகாமைத்துவத்தின் திட்டமிட்ட செயல்கள் காரணமாகும். தொழிலாளர் வரவு தொடர்பான பதிவுகள் தோட்ட முகாமைத்துவத்திடமே கானப்படும். இதில் மாற்றங்கள் செய்தாலும் தொழிலாளர்களுக்குத் தெரிவதில்லை. தோட்ட முகாமைத்துவம் சராசரியாக 25 நாட்கள் வேலை வழங்கினாலும் பெண் தொழிலாளர்கள் 18 அல்லது 19 நாட்கள் மாத்திரமே செல்வர். அதற்கு அவர்களுக்குள்ள குடும்பஃதனிப்பட்ட அர்ப்பனிப்புகள் பிரச்சினைகள் என்பனவே காரணமாகும்.

5. கூட்டு ஒப்பந்த வரலாறும் அதன் இன்றைய நிலையும்
1996ம் ஆண்டிலிருந்து தொழிலாளர்களின் வேதனம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது. நாட்சம்பளமும் சில நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் மாத்திரமே இவர்களின் மாத வருமானத்தில் அடங்குகின்றன. குறைந்தபட்ச சம்பளம் என்ற விடயம் முதன் முதலில் 1927ம் ஆண்டு சம்பளக் குழுவினால் குறைந்தபட்ச சம்பள சட்டத்தின்(Minimum Wages Ordinance)  கீழ் தீர்மானிக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபை தாபிக்கப்படும் வரை தொழிலாளர்களின் சம்பளம் முதலாளிகளிடம் இருந்து நேரடியாக வழங்கப்படவில்லை. சம்பளத்தை தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகத் தீர்மானித்தனர். சம்பளத்திற்குப் பதிலாக அரிசி மற்றும் ஏனைய உணவு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியான சம்பளமும் வழங்கப்படவில்லை. பின்னர் குறைந்தப்பட்ச சம்பள சட்டத்தின் கீழ் தோட்ட சம்பள சபை தாபிக்கப்பட்டது. அதில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள் தோட்;ட முதலாளிகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் இடம்பெற்றனர். இதுவே 1996ம் ஆண்டிலிருந்து கூட்டு ஒப்;பந்தம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.

1984ம் ஆண்டு மறைந்த தலைவர் தொண்டமான் தலைமையில் சம்பள அதிகரிப்பிற்கானப் போராட்டம் இடம்பெற்றது. இதன் பயனாக வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. (ஒரு நாளைக்கு மூன்று ரூபா என்றடிப்படையில்) அத்துடன் நாட்டில் வாழ்க்கைச் செலவு சுட்டி அதிகரிக்கும் போது வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. ஆயினும் இவை இன்று பின்பற்றப்படுவதில்லை. எவ்வாறாயினும் இந்தப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் குறைந்த வேதனம் 23.75சதமாக நிர்ணயிக்கப்பட்டது. 1994ம் ஆண்டு தொழிலாளர் சம்பளம் ரூபாய் 72.24 சதத்தில் இருந்து 83 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இதற்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களின் அழுத்தம் ஆதரவு காரணமாக அமைந்தது. 1994க்குப் பின்னர் அரசாங்கம் சம்பள நிர்ணய விடயத்திலிருந்து விலகிக் கொண்டது. அதன் பின் பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களைக் கொண்டு கூட்டுஒப்பந்தம் ஒனறின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க ஆரம்பித்தன. 1996ம் ஆண்டு பிரிதொரு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்டக் கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திட்டன. இவை தொழிலாளர்கள் சார்பிலும் முதலாளிமார் சம்மேளனம் முதலாளிகள் சார்பிலும் கைச்சாத்திட்டன. 1997ம் ஆண்டு தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் 83 ரூபாவாக காணப்பட்டது. இது 1999ம் ஆண்டு 95 ரூபாவாக உயர்த்தப்பட்டது. உண்மையில் தொழிலாளர்களின் வேதனக் கட்டமைப்பில் 2000க்குப் பின்னரேயே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. அதனை பின்வரும் அட்டவணையின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

6. தேயிலை உற்பத்தி உற்பத்தி செலவு விற்பனை கம்பனி வருமானம்
இன்று பெருந்தோட்ட கம்பனிகள் உற்பத்தி செலவு அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் சேமநல வசதிகள் இதற்குக் காரணம் என்பது அவர்களின் தர்க்கமாகும். ஆயினும் மொத்த உற்பத்தி செலவில் தொழிலாளர்களுக்கான செலவு 60 வீதம் எனவும் ஏனையவை தேயிலை உற்பத்தி விநியோகம் விற்பனைக்கான நிர்வாக செலவாகும். உண்மையில் கம்பனிகள் இது தொடர்பாக தெளிவான தரவுகளை வெளியிடுவதில்லை. இதனால் உண்மையான உற்பத்தி செலவு குறித்த விடயங்களை தொழிலாளர்களால் அறியமுடியாதுள்ளது.  பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டதனைத் தொடர்ந்து தகவல் அறிவதற்கான உரிமை பெரியளவில் மறுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்குத் தோட்டத்தின் வருமானம் அல்லது உற்பத்தி தொடர்பான எந்தவிதமான தகவல்களும் வழங்கப்படுவதில்லை. அவ்வகையில் இது ஒரு மனித உரிமை மீறலாகவும் காணப்படுகின்றது.

இன்று சராசரியாக ஒரு தொழிலாளி 16-19 வரையான கிலோகிராம் பச்சை தேயிலையைப் பறிக்கின்றார். இது எல்லா தோட்டங்களிலும் உள்ள பொதுவான நியமமாகும். இதனைக் கொண்டு 4 கிலோகிராம் தேயிலையைத் தயாரிக்க முடியும். இன்று கொழும்பு ஏல விற்பனையில் 1 கிலோகிராம் தேயிலை 380 ரூபாவுக்கு மேல் (2013) விற்கப்படுகின்றது. இதன் மூலம் ஒரு தொழிலாளியிடமிருந்து 1520 ரூபாய் இலாபம் கிடைக்கின்றது. இதில் சம்பளம் நுPகுஃ நுவுகு என்பவற்றுக்கு 600 ரூபாவை கழித்தாலும் ஒரு தொழிலாளியிடமிருந்து எல்லை இலாபமாக 905 ரூபாய் கம்பனிக்குக் கிடைக்கின்றது. ஆகவே தொழிலாளர்களே தோட்டம் நஸ்டத்தில் இயங்க காரணம் என்ற வாதம் இதன் மூலம் முறியடிக்கப்படுகின்றது. இன்று கம்பனிகள் உற்பத்தி செலவினை கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் இருந்தும் அது விடயத்தில் பெரிதும் அக்கரைக்காட்டுவதில்லை. இறுதியில் தொழிலாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட்டமையே உற்பத்தி செலவுக்கு காரணம் என்ற தர்க்கத்தை கட்டியெழுப்புகின்றனர். உற்பத்தி செலவில் அடங்கும் காரணிகளை பகுப்பாய்வு செய்து அதனை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். இன்று தோட்டங்களில் இடம்பெறும் பல அநாவசியமான செலவுகள் இதனுள் உள்வாங்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவு இலாபம் என்பவற்றுக்கு அப்பால் இன்று வாழ்வுக்கான வேதனம் (டiஎiபெ றயபந) என்பது உலகளாவிய ரீதியில் முக்கிய எண்ணக்கருவாக மாறியுள்ளது. ஒரு மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வேதனம் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். இதனை சர்வதேச தொழிலாளர் தாபனமும் வலியுருத்தி வருகின்றது. அந்தவகையில் பெருந்தோட்ட மக்களுக்கும் வாழ்வுக்கான சம்பளத்தை வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வரவேண்டும். பெருந்தோட்ட மக்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் வாழ்வுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கத்துக்கும் கடப்பாடுண்டு. இது விடயத்தில் உற்பத்தி செலவு இலாபம் ஆகியவற்றுக்கு அப்பால் நின்று செயலாற்ற வேண்டும்.  பின்வரும் அட்டவணை தேயிலை மறறும் இறப்பருக்கான உற்;பத்தி செலவினைக் காட்டுகின்றது. இன்று இறப்பர் ஒரு கிலோ கிராமுக்கான உற்பத்தி செலவு 120 ரூபாவாகும். ஆயினும் அதன் சராசரி விற்பனை விலை 360 ரூபாவாகும். இதன் மூலம் ஒரு கி.கி இறப்பரிலிருந்து கம்பனி பெறும் இலாபம் வெளிப்படுகிறது. உற்பத்தி செலவுக்கு அப்பால் கம்பனிகள் ஈட்டும் இலாபத்தினையும் நோக்க வேண்டும். அதனை பின்வரும் அட்டவனை மூலம் விளங்கிக்கொள்ளலாம். 

இவ்வட்டவணை இலங்கை தேயிலை கொழும்பு ஏல விற்பனையில் உயர் விலைக்கு விற்கப்படுவதனை காட்டுகின்றது. இப்புள்ளிவிபரங்கள் தேயிலைக்கான விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற கருத்தினை வலுவற்றதாக்கின்றது.
இவ்வட்டணை தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் தேயிலை முக்கியப் பங்கினை வகிப்பதனைக் காட்டுகின்றது.

இவ்வட்டவணை தேயிலை இறப்பர் என்பவற்றின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை காட்டுகின்றது. குறிப்பாக இறப்பர் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பினைக் காட்டுகின்றது. கீழுள்ள அட்டவனையானது தேயிலை உற்பத்தி செய்யப்படும் மூன்று பிரதேசங்களையும் அவற்றின் உற்பத்தி அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் காட்டுகின்றது. தாழ்நிலப்பகுதிகளில் தேயிலை விளைச்சல் அதிகமாகக் காணப்படுவதுடன் அதற்கான கேள்வியும் அதிகமாகும். 

2010ம் ஆண்டு தேயிலைத் துறையின் மூலம் 17 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்தமை வரலாற்றில் மிக உயர்ந்த வருமானமாகும். தேயிலை ஏற்றுமதி வருமானம் 2009 2010 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே 136171 162793 164869 மில்லியன் ரூபாவாகும். 2009ம் ஆண்டு 291ஆமப மாக காணப்பட்ட தேயிலை உற்பத்தி 2010ம் ஆண்டு 331.4 ஆமபமாக பெரியளவில் அதிகரித்தது. அதேபோல் ஏற்றுமதி அளவும் 2009ல் 208ஆமபலிருந்து 2010ல் 298ஆமபமாக அதிகரித்தது. உலகளாவிய ரீதியில் இலங்கை தேயிலைக்கான கிராக்கி குறைவடையவில்லை. உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. பின்வரும் அட்டவணை இதனை மேலும் தெளிவுபடுத்துகின்றது.

7. தொழிலாளர் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியம்
மேலே வழங்கப்பட்டுள்ள தரவுகள் பெருந்தோட்டத்துறை இலாபத்தில் இயங்குவதனைக் காட்டுகின்றது. இவ்வாறு இலாபத்தினை ஈட்டுகின்றபோதும் தொழிலாளர் வேதனக் கட்டமைப்பில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்று தற்காலிகமாக நகர்புறங்களில் தொழில் செய்வோர் நாட் சம்பளமாக சராசரியாக 600 வரையில் உழைக்கின்றார்கள். நகரப்புற கடைகளில் வேலை செய்வோர் 800 ரூபா வரையில் உழைக்கின்றார்கள்.  கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர் 900-1000 ரூபா வரை சம்பளம் பெறுகின்றனர். தனியார் துறைகளில் பணிபுரியும் திறனுள்ள தொழிலாளர்கள் (ளுமடைடநன டுயடிழரச) 1000-2000 வரையில் சம்பளம் பெறுகின்றனர். ஆயினும் உடலை வருத்தி தொழில் செய்யும் தேசிய பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் 380 ரூபாய் வேதனத்தை மாத்திரமே பெறுகின்றனர். ஏனைய துறைகளில் தொழில் செய்வோரின் வேதனம் வாழ்க்கைச் செலவு ஏற்றத்திற்கு ஏற்ப வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகிறது. அரச துறையில் வருடாந்தம் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது (inஉசநஅநவெ). அத்துடன் ஏனைய துறைகளில் அதிகமானோர் மாத சம்பளத்துக்காகவே தொழில் செய்கின்றார்கள். ஆயினும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சுமார் 200 வருட காலமாக நாட் கூலிக்காகவே தொழில் செய்கின்றார்கள். இவர்களின் வேதனம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்பட்டாலும் அது நாகரீகமான மானிட வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துவதற்குப் பொருத்தமற்றது. வாழ்க்கைச் செலவு சுட்டிகள் தொடர்ந்து அதிகரித்து சென்ற போதும் அதற்கான சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயினும் அரச மற்றும் தனியார் துறையில் உள்ளோர் இச் சலுகைகளை அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பளத்திற்கு அப்பால் நுவுகுஃநுPகு க்கான கொடுப்பனவு வாடகையற்ற வீடு தண்ணீர் வசதி இலவச சுகாதாரம் சலுகை விலையில் தேயிலை போன்ற பல சேமநல வசதிகள் வழங்கப்படுவதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிடுகின்றது. ஆயினும் இவற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. இன்று அரசசார்பற்ற நிறுவனங்களே பெருந்தோட்டப் பகுதிகளில் இம்மக்களின் சேமநல விடயங்களில் அதிகளவில் செயற்பட்டு வருகின்றன.

மேலும் தோட்ட முதலாளிகள் சம்மேளனம் சராசரியாக ஒரு வீட்டில் 3 பேர் வேலை செய்வதாகக் குறிப்பிடுகின்றனர். அதில் 16 வயதைப் பூர்த்தி செய்த பெண்களை உள்ளடக்குகின்றார்கள். இது தவறான வாதமாகும். இன்று இந்நிலை மாறிவிட்டது. இன்றைய இளைஞர்கள் தோட்டத்துறை தொழிலை நாடுவதில்லை அதிகமானோர் சாதாரண தரம் வரை கற்றுள்ளனர். அவர்கள் இன்று நகர்ப்புறங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் சுயத்தொழில்களிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். மொத்த இளைஞர் யுவதிகளில் 8% மானவர்களே இன்று தோட்டத்துறை தொழிலை நாடுகின்றார்கள். அவர்கள் பாடசாலை கல்வியை முழுமையாக பூர்த்தி செய்யாதவர்களாகும். மேலும் பெருந்தொகையான இளைஞர் யுவதிகள் தொழில் இன்றி காணப்படுகின்றனர். இந்நிலையிலும் அவர்கள் தோட்டத் தொழிலை நாடுவதில்லை. இதற்கு குறைந்த வேதனமும் தொழில் கௌரவம் இன்மையும் காரணமாகும். 2011ம் ஆண்டு முதலாளிமார் சம்மேளனம் விடுத்த அறிக்கையொன்றில் ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு தொழிலுக்கு சமூகம் தந்தால் 527 ரூபாய் வேதனம் பெறுவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.  அதில் அடிப்படை சம்பளம் 380 ரூபாய் நுவுகுஃநுPகு கொடுப்பனவு 57 ரூபாய் ஊக்க கொடுப்பனவு 30 ரூபாய் வருகைக்கான கொடுப்பனவு 105 ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தது. இங்கு புரிந்துகொள்ள வேண்டிய விடயம் யாதெனில் எத்தனை பேர் இந்த 572 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர் என்பதாகும். கலாநிதி சந்திரபோஸ் மற்றும் சிவப்பிரகாசம் ஆகியோர் 2011 இல் மேற்கொண்ட ஆய்வொன்றின்படி 1.41% மட்டுமே அத்தொகையினைப் பெறுகின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டது.

உண்மையில் இவ்வாறான அறிக்கைகளை வெளியாட்கள் பார்க்கும்போது இது உண்மையென நம்புவதுடன் மறுபுறமாக தொழிலாளர்கள் உயர் வருமானத்தைப் பெறுவதாக எண்ணுவர். முதலாளிமார் சம்மேளனம் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொழிலாளர் வேதனத்தை திரிபுப்படுத்தி கூறுவதுடன் அவர்களுக்குக் கிடைக்கின்ற தரம் குறைந்த சேம நலன்களையும் உயர்த்தி கூறி வருகின்றனர். இவ்வாறான கருத்துக்களுக்கு எதிராக எதிர் வினைகளை சரியான ஆதாரங்களுடன் காட்டி வாதிடவேண்டும். கடந்த கால கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தைகளிலும் கம்பனிகளின் இலாபம் உற்பத்தி ஏற்றுமதி தொடர்பான தகவள்களை திரிபுப்படுத்திக் கூறியுள்ளனர். தொழிற்சங்கங்கள் இவற்றை உணர்ந்து பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக வேண்டும். ஊடகங்களுக்கு தகவல்களை சரியாக வழங்குவது அனைவரினதும்  கடப்பாடாகும். சுமார் 80% தொழிலாளர்கள் அடிப்படை வேதனத்தினை மாத்திரமே பெறுகின்றனர். எல்லா கழிப்பனவுகளும் போக சராசரியாக 6000-7000 க்கும் குறைவான வேதனமே வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. (சுமார் 21-23 நாட்கள் வேலை செய்திருந்தால்) ஒரு பெண் தொழிலாளி 25 நாட்கள் வேலை செய்தால் அவரால் 515ரூபா என்றடிப்படையில் 12875 ரூபாய் வேதனம் கிடைக்கும். இதில் எல்லா கழிப்பனவுகளும் போக 80000 ரூபாய் எஞ்சும். ஆயினும் அவரது கணவரால் இவ் வேதனத்தைப் பெற முடியாது. அவரால் (515 என்றடிப்படையில் பார்த்தால்) சராசரியாக 18ஃ19 நாட்கள் வேலை செய்திருந்தால் 9785 ரூபாய் பெற முடியும். (தோட்டங்களில் ஆண்களுக்கு ஒரு மாதத்தில் சராசரியாக 18-20 நாட்களே வேலை வழங்கப்படுகின்றது). இதில் கழிப்பனவுகள் போக 7000 ரூபாவரை மிஞ்சும். ஆகவே இருவரினதும் வருமானம் 15000 ரூபாவேயாகும். இதனைக் கொண்டு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவது பெரிதும் கடினமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கான மாற்று வருமான மூலங்கள் பெரிதும் குறைவாகும். மரக்கறி செய்கை வீட்டுத் தோட்டம் ஆடு மாடு கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட நிலம் நேரம் முதலீடு இவர்களிடம் இல்லை. மொத்த தொழிலாளர்களில் சுமார் 3% மானோரே இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவர். இதனை அனைவருக்கும் பொதுமைப்படுத்த முடியாது. 75% க்கு மேல் வேலைக்கு சமூகமளித்த குடும்பங்களின் நிலை இவ்வாறாயின் வெறுமனே அடிப்படை சம்பளம் மாத்திரம் வாங்கும் இருவர் தொழில் செய்யும் குடும்பங்களின் மாத வருமானம் எல்லா கழிப்பனவுகளும் போக சராசரியாக 10000  ரூபாவாக காணப்படும்.

8. குடிமனை செலவும் தொழிலாளர்களின் தற்போதைய வேதனமும்
2009ஃ2010ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமனை வருமானம் மற்றும் செலவு தொடர்பான ஆய்வு அறிக்கையானது இலங்கையில் ஒரு குடும்பம் (4-5 பேர்) சராசரியாக உணவு மற்றும் உணவல்லாத பண்டங்களுக்காக 31331 ரூபாவை செலவிடுவதாகக் குறிப்பிடுகின்றது. இதில் உணவு மற்றும் பானத்திற்காக 13267 ரூபாவும் உணவல்லாத விடயங்களுக்காக 18064 ரூபாவும் செலவிடுதாகக் குறிப்பிடுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பார்க்கும்போது மிகக் குறைந்த வருமானத்தையே பெறுகின்றார்கள் என்ற முடிவுக்கு வரமுடிவதுடன் நாகரிகமான வாழ்க்கை ஒன்றினைக் கொண்டு நடாத்தக்கூடிய வருமானம் கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது வெளிப்படுகின்றது. இது குறித்த துறை சார் தரவுகள் பின்வருமாறு.

தோட்டத்துறை மக்கள் குறைந்த வேதனம் பெறுவதனால் அவர்களின் மாத செலவு குறைவாகக் காணப்படுவதுடன் மொத்த வருமானத்தில் 51% உணவுக்காக செலவிடுகின்றனர் என்பது இவ்வட்டவணை மூலம் வெளிப்படுகிறது. கல்வி சுகாதாரம் மற்றும் பௌதீக முன்னேற்றத்துக்கு ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பணத்தினை செலவிடுகின்றனர். மறுபுறமாக தோட்ட மக்கள் அதிக பணத்தை உணவுக்காக செலவிடுவதற்கு அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாகும். வாழ்க்கை செலவுக்கேற்ப வேதனம் அதிகரிக்கப்பட்டால் பெருந்தோட்ட மக்கள் மத்தியில் சமூக பொருளாதார நிலைகளில் விருத்தி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. தோட்டத்துறை மக்கள் சமூக பொருளாதார வளர்ச்சி நிலையில் பின்னடைந்து இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் இரண்டு பேர் தொழில் செய்யும் ஒரு குடும்பத்தில் மாதம் 23998 ரூபாய் வருமானத்தினைப் பெற முடியுமா என்பதாகும். இக் கட்டுரையில் ஏலவே குறிப்பிட்டதன்படி இருவர் தொழில் செய்யும் குடும்பத்திற்கு மாத வருமானம் சராசரியாக 14000 ரூபா வரையிலேயே கிடைக்கின்றது.

தொழிலாளர் வேதனம் தொடர்பாக ஆய்வு செய்யும்போது இவ்வருடம் ஜனவரி மாதம் 27 நாட்கள் வேலை செய்த ஒரு பெண் தொழிலாளியின் சம்பளச் சீட்டைக் காணக்கிடைத்தது. அதன் விபரங்கள் வருமாறு.

27 நாட்கள் வேலை செய்த தொழிலாளிக்கே வீட்டிற்கு எடுத்துச் செல்ல வெறும் 7103 ரூபாய் மாத்திரமே கிடைக்கின்றது எனின் சாதாரணமாக 18 நாட்கள் அல்லது அதற்குக் குறைவாக வேலை செய்வோரின் மிகுதி சம்பளம் என்னவாக இருக்கும் என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது. எல்லா மாதங்களும் 27 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை என்பதுடன் அனைத்து நாட்களும் வேலை செய்யக்கூடிய உடல்நிலை குடும்பச் சூழல் எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை. மொத்த தொழிலாளர் படையில் 5%மானோரே இவ்வாறு காணப்படுவர். இதுவரை பார்த்த புள்ளிவிபரங்கள் தரவுகள் யாவும் இலங்கையின் தேயிலைக்கு இன்றும் பெரியளவில் கேள்வி இருப்பதனையும் தொடர்ந்து இலாபத்துடன் இத்துறை செயற்படுவதனையும் வெளிப்படுத்துகின்றது. ஒரு சில ஆணடுகளில் சிறியளவில் சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை பெருந்தோட்டத் துறையினை பெரியவில் பாதிக்கவில்லை.

அதேபோல் இறப்பருக்கும் இன்று பெரியளவில் கேள்வி இருப்பதனை அவதானிக்க முடியும். 2009 2010 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே 11327 19580 22811 மில்லியன் ரூபாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்று இறப்பருக்கு உயர் விலையும் அதிகரித்த கேள்வியும் உண்டு. இறப்பர் 1மப க்கான உற்பத்தி செலவு 120 ரூபாவாகக் காணப்படுவதுடன் அது 535 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 2009ல் ஒரு கிலோகிராம் இறப்பர் விலை 202 ரூபாவாகவும் 2010ல் 377 ரூபாவாகவும் 2011ல் 535 ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது. இது இறப்பர் விலையின் அதிகரிப்பினைக் காட்டுகின்றது. இன்றைய நிலையில் இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை 650 ரூபா வரை அதிகரித்தாலும் எத்தகைய பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

9. 2013ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தமும் தொழிலாளர் வேதனமும் :சில சிபாரிசுகள் 
தற்போதைய நிலையில் இறப்பர் தேயிலைக்கான வருமானத்தைப் பார்க்கும் போது தொழிலாளர்களுக்கான ஒரு நாள் அடிப்படை வேதனத்தை 500 ரூபாவாகவும் ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தையும் சேர்த்து (105+30) மொத்தம் ஒரு நாள் சம்பளமாக 635 ரூபாவை வழங்க முடியும். காரணம் ஒரு தொழிலாளியிடமிருந்து கம்பனி எல்லை வருமானமாக 885 ரூபாவினை (4x380=1520-635=885) பெறுகின்றது. இப்போது வழங்கப்படுகின்ற சம்பள முறைப்படி பார்த்தால் 1005 ரூபா ஒரு தொழிலாளியிடமிருந்து கம்பனி இலாபமடைகின்றது (4x380=1520-515=1005). அடிப்படை சம்பளம் 500 ரூபாவாக மாற்றப்பட்டு ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தும் சேர்த்து 635 ரூபாவுடன் நுPகுஇ நுவுகு க்கான கொடுப்பனவுகளை சேர்த்தாலும் ஒரு தொழிலாளியிடமிருந்து கம்பனிக்கு சராசரியாக 650 ரூபா வருமானம் உண்டு. இன்று ஒரு கிலோகிராம் தேயிலைக்கான சராசரி உற்பத்தி  செலவு 420 ரூபாவாகும். இதனுள் தொழிலாளர்களின் மற்றும் முதலாளிகளின் (தோட்ட நிர்வாகம்) வேதனம் உரம் இரசாயனப் பொருட்கள் போக்குவரத்து பெற்றோல் டீசல் விறகு மின்சாரம் எழுதுகருவிகள் தொலைபேசி போன்றவற்றுக்கான அனைத்து செலவுகளும் அடங்கும். ஆகவே உற்பத்தி செலவுக்கு வெறுமனே தொழிலாளர்களின் வேதனத்தை காரணம் காட்டி அதனை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 635ரூபா சம்பளத்தினை வழங்க முடியும். இன்று இறப்பர் தோட்டத் தொழிலாளி ஒருவர் சராசரியாக 20-22 லீற்றர் பால் எடுக்கின்றார். அதிலிருந்து 6-7 கிலோகிராம் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இன்று 1 கிலோகிராம் பாலின் விலை சராசரியாக 365 ரூபாவாகும். ஆகவே ஒரு தொழிலாளி 2190-2555 ரூபா வரை இலாபத்தினைத் தேடி கொடுக்கின்றார். ஆனால் அவருக்கு நாள் சம்பளத்துடன் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்தால் மொத்தம் 650 வரையில் கிடைக்கும். ஆயினும் கம்பனி எல்லை வருமானமாக ஒரு இறப்பர் தோட்டத் தொழிலாளியிடமிருந்து 1700 அல்லது 1800 ரூபாவைப் பெறுகின்றது. இறப்பர் மே மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையில் அதிகளவான உற்பத்தியைத் தருகின்றது. இக் காலங்களில் ஒரு தொழிலாளி 25-35 லீற்றர் பால் எடுக்கின்றார். அதிலிருந்து 10 கிலோகிராம் இறப்பர் உற்பத்தி செய்ய முடியும். இக் காலப்  பகுதியில் ஒரு தொழிலாளி சராசரியாக 3000 ரூபா வருமானத்தினை தோட்டத்திற்குப் பெற்றுக் கொடுக்கின்றார். இன்று இறப்பர் தோட்டங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஒரு வகை மருந்து (Attaral) பயன்படுத்தப்படுகின்றது. இம் மருந்தைப் பயன்படுத்தினால் விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் ஒரு தொழிலாளியால் 60-70 லீற்றர் பால் எடுக்க முடியும். இதன் மூலம் 20-28 கிலோகிராம் இறப்பர் உற்பத்தி செய்ய முடியும். அதன் பெறுமதி 10220 ரூபாவை தாண்டுகின்றது. ஆயினும் தொழிலாளர்களுக்கு 515 ரூபாவும் மேலதிக 1 கிலோகிராம் பாலுக்கு 35 ரூபாவும் மாத்திரமே வழங்கப்படுகின்றது. விளைச்சல் காலங்களில் 9 கிலோகிராம் ஒரு நாளுக்கான நியமமாகும். அதன்படி பார்த்தால் மொத்தம் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1180 ரூபா மாத்திரமே கிடைக்கின்றது. 

ஆயினும் கம்பனிகளுக்கு ஒரு தொழிலாளியிடமிருந்து 9040 ரூபா இலாபம் கிடைக்கின்றது. இந்த வருமானம் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு தொழிலாளியிடமிருந்து கம்பனிக்குக் கிடைக்கின்றது. இன்று இறப்பர் தோட்டங்களில் சாதாரண காலங்களில் 6 கிலோகிராமும் உற்பத்தி அதிகமான காலங்களில் 9 கிலோகிராம் இறப்பரும் ஒரு நாளுக்கான நியமமாகக் காணப்படுகின்றது. சாதாரண காலங்களில் மாத்திரம் ஒரு தொழிலாளியிடமிருந்து 1590 ரூபா எல்லை வருமானத்தைப் கம்பனி பெறுகின்றது. இதன் மூலம் தேயிலைத் துறையினைவிட இறப்பர் துறை அதிக இலாபத்தினைத் தருவதனை அறிய முடிகின்றது. ஆகவே 635ரூபா சம்பளம் என்ற கோரிக்கையினை இம்முறை முன்னெடுப்பது சிறந்தது. அதனை வழங்கும் இயலுமை இலாபம் கம்பனிகளுக்கு உண்டு. மறுபுறமாக கௌரவமான வாழ்க்கையினை தொழிலாளர்கள் கொண்டு நடாத்த 635ரூபா நாட்சம்பளம் ஒப்பீட்டளவில் சமாளிக்கக்கூடியதாகும். 500 அடிப்படைச் சம்பளமாக மாற்றப்பட்டால் ETF க்கு 60 ரூபாவினையும் நுவுகு க்கு 15ரூபாவினையும் கம்பனிகள் செலவிடவேண்டியிருக்கும். ஆகவே மொத்தம் 575ரூபாவினை ஒரு தொழிலாளிக்குக் கம்பனி செலவிடும். இதனுடன் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்தால் (105+30) 711 ரூபா ஒரு தொழிலாளிக்கான செலவு. இது எல்லா சந்தர்ப்பங்களிலும் இடம்பெறுதில்லை. 90% மானோருக்கு 575 ரூபாவினையே செலவிட நேரிடும். கம்பனி ஒரு தொழிலாளிக்கு 711 ரூபாவினை செலவிட்டால் கம்பனிக்கு எல்லை வருமானமாக ஒரு தொழிலாளியிடமிருந்து 809ரூபா கிடைக்கின்றது. மறுபுறமாக 575 ரூபாவினை ஒரு தொழிலாளிக்கு செலவிட்டால் கம்பனிக்கு 929ரூபா ஒரு தொழிலாளியிடமிருந்து எல்லை வருமானாகக் கிடைக்கின்றது. அதேபோல் இறப்பர் தோட்ட தொழிலாளி ஒருவருக்கு கம்பனி 711 ரூபாவினை செலவழித்தாலும்கூட கம்பனிக்கு சாதாரன காலங்களில் 1479 எல்லை வருமானமும் பால் விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் 2574ரூபா எல்லை வருமானத்தினையும் ஒரு தொழிலாளியிடமிருந்து கம்;பனி பெறுகின்றது. இதனடிப்படையில் பார்க்கும் போது இறப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு 500 அடிப்படை சம்பளமாக வழங்குவதில் எந்தவித பாதிப்போ நஸ்டமோ ஏற்படபோவதில்லை.

10.முடிவுரை
இக்கட்டுரையில் பெருந்தோட்டத் துறை இலாபத்தில் செல்வதனை நிரூபிப்பதற்காகவே  அதிகமான புள்ளி விபரங்கள் காட்டப்பட்டுள்ளன. ஆகவே சிவில் அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் கட்சிகளும் இவற்றை நன்கு அறிந்து செயற்பட வேண்டும். ஊடகங்களுக்கு நேர்காணலுக்குச் செல்லும் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசியல்வாதிகள் பெருந்தோட்டத்துறையின் உற்பத்தி இலாபம் உற்பத்தி செலவு மற்றும் இன்றைய நிலை தொடர்பான போதிய தெளிவில்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர். சரியான புள்ளி விபரங்களுடன் தரவுகளுடன் வாதிடுவதன் மூலமே தொழிலாளர் வேதனத்தை அதிகரிக்க முடியும். அறிவு பூர்வமாகப் பேசுதல் சிந்தித்து செயற்படுதல் இம் முறை அவசியமாகும். தொழிலாளர்கள் சார்பாக பேசுபவர்கள் சரியான ஆதாரத்துடன் வாதிடத் தவறுவதால் முதலாளிமார் சம்மேளனம் தோட்டக் கம்பனிகளின் செயற்பாட்டையும் தற்போதைய வேதனக் கட்டமைப்பையும் சேம நலன்களையும் நியாயப்படுத்தி சம்பள அதிகரிப்பை நிறுத்திவிடுகின்றார்கள்;. அதற்கான ஆயத்தங்களை இம்முறையும் மேற்கொள்வர். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சில சேம நலன்களையும் சம்பளத்தின் உள்ளடக்குகின்றார்கள். இவை தவறானக் கணிப்பாகும். மலையக சிவில் அமைப்புகள் மக்களை கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக இயன்றளவு தெளிவுபடுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு உற்பத்தி வருமானம் உற்பத்தி செலவு தொடர்பாக விளக்க வேண்டும். இதன் மூலம் சம்பள அதிகரிப்பிற்கு ஒரு கூட்டிணைந்த அணுகுமுறையினைக் கையாள வேண்டும். அன்றில் சில தொழிற்சங்கங்களின் தவறான கருத்துக்களையும் சலுகைகளையும் கண்டு தொழிலாளர்கள் ஏமாந்துவிடுவர். இம் முறை கூட்டு ஒப்பந்தத்திற்கு முன் கூட்டியே தயாராகவேண்டும். அதற்கு அவசியமான செயற்பாடுகளை  எல்லா மட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். மலையக அரசியல் தலைமைகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சு வார்த்தைகளில் அரசாங்கத்தினை தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகளாகவும் தேசிய பொருளாதாரத்தின் முக்கியப் பங்காளிகளாகவும் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்துக்குக் கடப்பாடு உண்டு. காரணம் அரசாங்கத்தினை அமைப்பதில் மாற்றுவதில் இம் மக்கள் பங்காளிகளாக உள்ளனர். பேச்சு வார்த்தையில் அரசாங்கப் பிரதிநிதிகளும் ஒரு தரப்பாக பங்கேற்க வேண்டும். அன்றில் தொழிலாளர்களுக்கான மாதசம்பள முறை ஒன்றினை அறிமுகப்படுத்த முடியாமல் போகும். மாதசம்பள முறையே இன்றைய தேவையாக உள்ளது. இவ்விலக்கினை அடைய சகல தரப்பினரையும் கொண்ட கூட்டிணைந்த செயற்பாடு அவசியமாகும். கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது பல தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தொடர்ந்து விமர்சிப்பதில் பயனில்லை. அதிலிருந்து பாடங்களைக் கற்று இவ்வாண்டுக்கான கூட்டு ஒப்பந்தத்திற்குத் தயாராக வேண்டும்.

முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசுவோர் சரியான தரவுகளுடன் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும். இதற்கு அறிவு சார் அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும். மலையக அரசியலில் காணப்படுகின்ற மிகப்பெரிய குறைபாடு இதுவேயாகும். பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குக் கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வரவும் அது தொடர்பாக தேசிய மற்றும் சர்தேச ரீதியாகவும் நியாய பிரசாரம் செய்யக்கூடிய இயலுமைக் கொண்ட அறிவுசார் அரசியல் தலைமைத்துவத்தை நோக்கி இச்சமூகம் செல்ல வேண்டிய தேவை மிக வேகமாகவே அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எல்லா ஊடகங்களிலும் கூட்டு ஒப்பந்தம் குறித்து பேச வேண்டும் எழுத வேண்டும். இதன் மூலம் சம்பள அதிகரிப்பினை நியாயப்படுத்தியும் அதற்கு ஆதரவாகவும் ஒரு சூழ்நிலையைக் கட்டியெழுப்ப முடியும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஏனைய சமூகத்தவர்களின் ஆதரவினையும் வென்றெடுக்க முடியும். நீடித்தப் பிரயத்தனம் அர்ப்பணிப்பு கூட்டு செயற்பாடுகள் மற்றும் புலமைசார் பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மூலம் தொழிலாளர் வேதனத்தை அதிகரிக்க முடியும்.

எல்லாவற்றுக்கும் அப்பால் 2013ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தமானது சம்பள கூட்டு ஒப்பந்தம் என்பதை கடந்து அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக தோட்ட முகாமையாளர்களும் தோட்ட தலைவர்களும் பேரம் பேசும் நிலையை ஏற்படுத்ததாத வகையில் அமைய வேண்டும். 02 வருடத்திற்கு ஒரு முறை சம்பளம் பற்றிப் பேசுவது தொழிலாளர்களுக்குப் பாதகமானது. எனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சம்பளம் வருட வருடம் தீர்மானிக்கப்பட வேண்டும். பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டத் துறையைப் சிறப்பாக பராமரிப்பதனை உறுதிப்படுத்தி பெருந்தோட்டங்கள் சிறுதோட்ட உடைமையாளர்களுக்கு குத்தகைக்கு நிலையை தடுப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். பெருந்தோட்டக் காணிகள் சிறுதோட்ட உடமையாளர்களுக்குத் குத்தகைக்கு விடப்படுகின்ற நிலையில் தொழிலாளர்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்த மக்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கோடுக்க வேண்டும். 

மிக முக்கியமாக இன்று பெருந்தோட்டங்களில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் காணப்படும் 37000 ஹக்டயர் காணியை சிறு உடமையாளர்களுக்குப் பிரித்து வழங்குவது தொடர்பாக 2012ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இன்று பல தோட்டங்களில் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம் பெருந்தோட்டங்களை படிப்படியாக சிறு உடமையாளர்களிடம் கையளிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் உண்டு. இதனை கம்பனிகள் நன்கு உணர்ந்து செயற்படவேண்டும். பயிரிப்படாத நிலங்களில் மீள் நடுகைகளை செய்ய வேண்டும். தோட்டங்கள் காடுகளாவதற்கு தொழிலாளர் பற்றாக்குறை காரணமென்பது கம்பனிகளின் வாதமாகும். தொழிலாளர் பற்றாக்குறைக்கான காரணத்தை கம்பனிகள் உணரவேண்டும். கவர்ச்சிகரமான சம்பளம் தொழில் கௌரவம் காணப்படுமாயின் இப்பிரச்சினை ஏற்படப்போவதில்லை. பெருந்தோட்டத்துறையினை பாதுகாக்கும் கடப்பாடு கம்பனிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு. தோட்டக்காணிகளை அபகரித்தல் இன்று தீவிரப்பிரச்சினையாக மாறியுள்ளது. இது தொடருமாயின் தோட்டங்களின் இருப்பிலும் தொழிலாளர்களின் வாழ்விலும் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மறுபுறமாக இன வன்முறைகள் வெடிப்பதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துவிடும். இது குறித்தும் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் பேசப்படவேண்டும்.  அத்துடன் வேதனத்துக்கு அப்பால் தொழிலாளர்களின் சேம நலன் மற்றும் தொழில் நியமங்கள் குறித்தும் பேசுவது அவசியமாகும். இவை தொடர்ந்து கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் மறக்கப்படும் மறுக்கப்படும் விடயமாக காணப்படுகின்றது. 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates