Headlines News :
முகப்பு » » பெருந்தோட்டப் பொருளாதாரமும் பெருகிவரும் வாழ்க்கைச் செலவும் - நிஷாந்தன்

பெருந்தோட்டப் பொருளாதாரமும் பெருகிவரும் வாழ்க்கைச் செலவும் - நிஷாந்தன்


இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வீதம் கடந்த இரு ஆண்டுகளாகப் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளமை நாட்டின் பொருளாதார அபிவிருத்திச் சுட்டியின் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது. 2012ஆம் ஆண்டு 7.2 வீதமாக இருந்த எமது பொருளாதார அபிவிருத்தி வீதம் 2014ஆம் ஆண்டில் 6.5 வீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசு இலங்கையின் நாணயத்தை உலக சந்தையில் மிதக்கவிடப்பட்டிருப்பதால் பொருளாதாரம் மெல்ல மெல்ல நலிவடைந்து வருகிறது.

இன்னமும் அபிவிருத்திப் பாதையை நோக்கி நகரவில்லை என்பதே யதார்த்தம். இதன் தாக்கம் இலங்கையில் மத்தியதர வர்க்கத்திற்கே ஈடுகொடுக்க முடியாதுள்ள நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மலையக சமூகம் எவ்வாறு ஈடுகொடுக்கும் என்று கடுகளவும் எண்ணிப்பார்க்க முடியாதுள்ளது.

ஒருபுறத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் கூட்டு ஒப்பந்த விதிமுறைகளை மீறி சம்பளத்தை வழங்க மறுத்துவரும் சூழலில் அதிகரித்துவரும் பொருளாதார சுமைகளையும் இந்த மக்கள் சுமக்க வேண்டியுள்ளது. அன்றாட உழைப்பிலேயே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. பொருளாதார அபிவிருத்தியோ அல்லது உழைப்பில் போதிய வருவாயோ இல்லாத சூழலில் எவ்வாறு தற்போதைய பொருளாதாரம் இருக்கும் நிலைக்கு முகங்கொடுப்பது.

நூற்றாண்டுகள் பல கடந்துசென்றாலும் வறுமையும், வளம் செழிக்கும் வாழ்க்கையும், வாழ்வியல் மேம்பாட்டு பொருளாதாரமும், அடிப்படை உரிமையுமின்றி ஆண்டாண்டு காலமாய் மலையக மண்ணில் அடிமை வாழ்க்கை வாழும் மலையக மக்களின் உள்ளக்குமுறல்களை இலங்கை அரசு இன்னமும் உறுதிபடக் கண்டுகொள்ள வில்லை என்பது இன்று ஒரு யதார்த்தமான விடயம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

மலையக மக்கள் என்பவர்கள் இன்று இலங்கைப் பொருளாதாரத்தில் வலிமைமிக்க சக்தியாக இல்லாவிடினும் 19, 20ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய வருமானத்திலும், நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சியிலும் முதுகோடிகளாக இருந்ததை எவரும் மறுக்கமுடியாது. ஆனால், இந்தச் சமூகத்தின் உழைப்பை உறிஞ்சிய ஆங்கிலேயரும் சரி, சுதந்திர இலங்கையின் அரசியல் தலைவர்களும் சரி உரிமைகள் அற்ற ஓர் அடிமை சமூகமாகவே கொண்டு நடத்தப்பட்டு வந்தனர்; வருகின்றனர்.

இந்திய வம்சாவளி மக்கள் இனத்துவ அடிப்படையில் இந்த நாட்டில் நான்காவது நிலையில் கணிக்கப்படுகின்றனர். இவர்களின் பொருளாதாரமும் நான்காம் தரத்தில்தான் உள்ளது. பொருளாதார ரீதியில் நோக்குமிடத்து ஏனைய சமூகங்களைவிட முற்றிலும் மாறுபட்ட விதத்தில் மலையக மக்களின் பொருளாதாரம் காணப்படுகின்றது. இவர்களின் வாழ்வாதாரம் அவர்களின் மாதச் சம்பளத்திலேயே தங்கியுள்ளது. பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியை முன்னிறுத்தி ஆரம்பித்த இந்த மக்களின் பொருளாதாரம் இன்று அந்தப் பயிர்களை நம்பியே கடும் வீழ்ச்சி நிலையை நோக்கி நகர்ந்துவருகிறது.

மிக நீண்டகாலமாக தொழிற்சங்கங்கள் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை நிலையைத் தீர்மானித்தும், பாதுகாத்தும் வந்துள்ளன; வருகின்றன. 1988ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் மீள வழங்கப்பட்டதன் பின்னரே அரசின் அபிவிருத்தித் திட்டங்களும், அதன் பார்வையும் இந்திய வம்சாவளி தமிழர்களின் பக்கம் திரும்பியதுடன், மக்கள் சார் நலனில் அக்கறையும் ஓரளவு செலுத்தப்பட்டது. படிப்படியாகப் பெற்றுக்கொண்ட பிரதிநிதித்துவமும், பேரம் பேசும் தொழிற்சங்க சக்தியுமே இந்த மக்களை அரசின் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொள்ள வழிவகுத்தது.

தொழிற்சங்கங்கள் அடிப்படையில் மலையக மக்களை முன்னிறுத்தி பேரம் பேசும் சக்தியாக வலுவடைந்ததால் இவர்களின் பொருளாதார நலனில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து பிரிக்கமுடியாத சக்தியாக உருவெடுத்தன.

1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையின் காரணமாக இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதித்துவங்கள் மாகாண, உள்ளூராட்சி மட்டத்தில் ஓரளவு கிடைக்கப் பெற்றதால் காலங்காலமாகத் தட்டிக்கழிக்கப்பட்டுவந்த இந்த மக்களின் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மாகாணசபை, உள்ளூராட்சிசபைகளில் கேள்வியெழுப்பப்பட்டன.

1972முதல் 1992ஆம் ஆண்டுவரை தோட்டங்கள் தனியாரிடமிருந்து பறிக்கப்பட்டு அரசுடமையின் கீழ் கொண்டுவரப்பட்டமையால் இவர்களின் பொருளாதார நலன்களில் அரசு ஓரளவு அக்கறை கொண்டிருந்தது. வாக்கு வேட்டைக்காவது அரசு அவ்வப்போது ஒருசில திட்டங்களை மலையகத்தில் முன்னெடுத்தது. 1992ஆம் ஆண்டின் பின்னர் முழுமையாகத் தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களிடம் ஒப்படைக்கபட்டமையின் காரணமாக அரசு இவர்களின் நலன் தொடர்பில் சிந்திக்கவில்லை. காரணம், அரசு வகித்த இடத்திற்குத் தொழிற்சங்கங்கள் தலைமைதாங்கத் தொடங்கின.
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி உருவானதால் இங்கு முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்திய பொருளாதாரத் திட்டங்களும், கொள்கைகளும் கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாகத் தோட்டப்புற மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்தனர்.

இக்காலப்பகுதியில் போஷாக்கின்மை, ஊட்டச்சத்தின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மலையகத்தில் தலைவிரித்தாடத் தொடங்கின. குறிப்பாக, 1974 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் இறப்பு வீதம் 8.5 ஆகக் காணப்பட்டபோது மலையகத்தில் 15.5 வீதத்தைக் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வீடுகள், போக்குவரத்து, அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி எனப் பொருளாதார இருப்பைத் தக்கவைக்கும் எந்தவொரு அம்சமும் மலையக மக்களுக்கு முறையாக ஒழுங்குபடுத்தவுமில்லை. அதற்கு அரசும் வழிகோலவில்லை. இந்த மக்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கின்ற பொருளாதார ஒழுங்கமைப்புகள் அல்லது திட்டங்கள் என்று ஒன்றும் ஏற்படுத்தவில்லை. நாட்டுக்கு உழைத்துக் கொடுப்பது மட்டுமே இவர்களுக்கும் தெரிந்ததாகும். கண்மூடித்தனமாக நாட்டுக்காக உழைத்து உழைத்து தங்கள் பொன்னான வாழ்வை அர்ப்பணம் செய்கின்ற இந்த மக்களின் வாழ்க்கைச் செலவை ஈடுகொடுக்க எந்தவொரு ஏற்பாடும் கொண்டுவரப்படவில்லை.

தோட்டங்கள் தனியார் உடைமையாக்கப்பட்டபோது வெத்து மத்தாப்புக்காகத் தோட்டக் கம்பனிகள் தொழிலாளர் நலன் சார்ந்து செயற்படுவதுபோல் காட்டிக்கொண்டன. மறுபக்கத்தில் ஒட்டுமொத்த வருமானத்தையும் ஆங்கிலேய காலனித்துவத்தில் போல் சுரண்டிக்கொண்டன சுரண்டிக்கொண்டிருக்கின்றன.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் இந்த மக்களின் பங்கு கணிசமாக உள்ள நிலையிலும் இன்றுவரை இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளப் போதுமான பொருளாதார சக்தியை அரசும் கொடுக்கவில்லை, கம்பனிகளும் கொடுக்கவில்லை. குறிப்பாக, 1960களில் மொத்த தேசிய உற்பத்தியில் 60 வீதமான அந்நிய வருமானம் பெருந்தோட்டங்களில் இருந்தே கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கான தரவுகள் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தில் உள்ளன. இன்று 27 வீதமாக இந்தத் தொகை குறைவடைந்துள்ளது. இதற்கு காரணம் தொழிலாளர்கள் அல்ல என்பது உண்மை.

தோட்டங்கள் தனியாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டபின்னர் கம்பனிகள் பாரிய வருமானத்தைப் பெற்றபோது அதற்கு வழிகோலிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்தவொரு ஏற்பாடும் செய்திருக்கவில்லை என்பதுடன், தாங்கள் பெற்ற வருமானத்தை மறைத்து குறிப்பிட்டளவு வரியே கட்டியுள்ளனர் என்ற உண்மைகளும் வெளியாகியிருந்தன.

இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகோடிகளாக உள்ள பெருந்தோட்ட மக்கள் குறிப்பாக, இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பாரிய சிக்கல்களை இன்றளவும் சந்தித்தே வருகின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் இன்று அந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு பிரதிபலனையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கவில்லை.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது 730 ரூபா சம்பளத்தை ஒரு நாளைக்குப் பெறும் வகையிலேயே சரத்துகளும், ஏற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று 18 அல்லது 20 கிலோவிற்கு மேல் கொழுந்தைப் பறித்தால்தான் குறிப்பிட்ட சம்பளத் தொகையைப் பெறமுடியும் என்று கம்பனிகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டு ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சுகள் எதிர்வரும் 22ஆம் திகதி தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளன.

இன்றைய சூழலில் கூட்டு ஒப்பந்தத்தில் முறையான பொருளாதாரத் திட்டமிடல் இல்லாத பட்சத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் மாற்றுத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டியது அவசியமானதாகும். தோட்டங்கள் அரசுøடமையாக்கப்பட்டாலும் அதில் முறையான திட்டமிடலும், வழிக்காட்டலும் இருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

தொழிற்சங்கங்கள் மக்களிடம் வாக்குப் பெறுவதும், தொழிலாளர்களிடம் சந்தா பெறுவதும், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதும் மாத்திரம்தான் தங்களின் வேலை என்று எண்ணியுள்ளன. அந்த மமதையிலிருந்து அனைத்துத் தொழிற்சங்கங்களும் வெளிவர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பெருந்தோட்டங்களை மையப்படுத்தி உள்ளமையால் அதன் மூலம் அவர்கள் ஏனைய சமூகத்திற்கு இணையாக வருமானம் பெறும் வழியைக் காண்பிக்க வேண்டும். 

தொழிற்சங்கங்கள் கடந்த காலத்தில் அலட்சியப் போக்கிலும் மக்களின் நலனில் உண்மையாக அக்கறை கொள்ளாமலும் பேரம் பேசியிருந்தமையின் காரணமாகவே இன்று கூட்டு ஒப்பந்த சரத்துகளை மீறி கம்பனிகள் நடந்துகொள்கின்றன. அதனைத் தடுப்பதற்கு தொழிற்சங்கங்களால் முடியாத சூழல் தோன்றியுள்ளது.

மலையக மக்களின் பெருளாதார விடயத்தில் அரசு முழுமையாகத் தலையீடு செய்யும்வரை அவர்களின் வாழ்வாதாரம் இன்னமும் இரண்டு நூற்றாண்டுகள் சென்றாலும் உயர்வடையப்போவதில்லை. மொரிஸியஸ், மலேசியா, ரியூனியன் போன்ற நாடுகளில் ஏனைய மக்களின் வாழ்வாதாரத்துக்கு இணையான வாழ்வாதாரப் பெருக்கத் திட்டங்களை இவ்வாறு பெருந்தோட்டப் பயிர்களைப் பயிரிடுவதற்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர் வர்க்கத்திற்கு அமுல்படுத்துகிறது. அங்கு மட்டும் எவ்வாறு சாத்தியமாகியுள்ளது? முறையான திட்டமிடலுடன் கூடிய பொருளாதாரக் கட்டமைப்பே காரணம்.

இன்று கென்யாவின் தேயிலை உலகில் முதலாம் தர தேயிலையாக மாறியுள்ளது. 60, 70 மற்றும் 80 களிலும் இலங்கையின் தேயிலையே உலகின் முதல்தர தேயிலையாகக் காணப்பட்டது. இன்று மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்? கம்பனிகள் வருமானத்தை மட்டுமே இலக்காகக்கொண்டிருந்தன. அதன் விளைவுதான் இன்று இந்த மக்களின் வாழ்வாதாரம் வறுமைக்கோட்டின் கீழ் சென்றுள்ளதுடன், அந்நிய வருமானமும் அற்றுப்போயுள்ளது.

எனவே, பெருந்தோட்டப் பயிர்களைப் பொறுத்தமட்டில் ஒரு முறையான பொருளாதாரத் திட்டமிடல் என்பது அனைத்து மட்டத்திலும் அவசியமாக உள்ளது. பொருளாதார ரீதியில் வர்க்க பேதம் காணப்படுவதனால்தான் இன்று மலையக மக்கள் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலனை அனுபவிக்க முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டப் பயிர்களை முன்னிலைப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு மாற்றுப் பொருளாதார திட்டமிடல் உருவாக்கப்படும் போதுதான் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியும்; பொருளாதார அடிமை வாழ்விலிருந்து மீளவும் முடியும். அதற்கான வழியை அரசும், தொழிற்சங்கங்களும் காட்டுமா?

நன்றி - சுடரொளி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates