Headlines News :
முகப்பு » , » மலையக அரசியல் கூட்டணி உதயம் - டி.ஷங்கீதன்

மலையக அரசியல் கூட்டணி உதயம் - டி.ஷங்கீதன்


மலையகத்தில் முதன் முறையாக அரசியல் கூட்டணி புதன்கிழமை (3) கொழும்பில் உதயமாகவுள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டில் வெளியிடப்படவுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மலையகத்தின் முக்கியத் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் பலர் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது

கடந்த இரண்டு வருடங்களாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து வந்தனர்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கொட்டகலையில் போராட்டம் ஒன்றையும் இந்த கூட்டணி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியிலேயே மலையக கூட்டணி ஒன்றின் முக்கியத்துவம் தொடர்பாக அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு மட்டத்தில் நடைபெற்று வந்ததோடு மலையக புத்திஜீவிகள் பலரும் இந்த கூட்டணி தொடர்பாக வலியுறுத்தி வந்தனர்.

இதன் அடிப்படையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்ததை தொடர்ந்து இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான கே.வேலாயுதமும் கொள்கை ரீதியில் இணைந்து செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இந்த தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.
அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் அதனை வரவேற்றுள்ளதோடு இந்த கூட்டமைப்புடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டமைப்பின் பெயர் நிர்வாக சபை மற்றும் இதன் செயற்பாடுகள் தொடர்பாக நாளை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்படும் என கூட்டணியில் அங்கம் வகிக்கின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து தரப்பினரையும் இதில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டமைப்பு நுவரெலியா, கண்டி, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, பதுளை உட்பட பல மாவட்டங்களிலும் தமது உறுப்பினர்களை போட்டியிட வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கூட்டணியாக செயற்படுவதன் மூலம் மலையக மக்களின் பல விடயங்களை வென்றெடுக்க முடியும் என இந்த கூட்டணி எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது.

இது மக்களுக்கான கூட்டணி எனவும் தலைவர்களுக்கான கூட்டணி அல்ல எனவும் இதில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - தமிழ்மிரர்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates