Headlines News :
முகப்பு » » தேர்தல் முறை திருத்தம் : ஜனாதிபதிக்கு ஓர் பகிரங்க கடிதம்

தேர்தல் முறை திருத்தம் : ஜனாதிபதிக்கு ஓர் பகிரங்க கடிதம்


இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு - 01
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள்,
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்

மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு
செய்துள்ளதோடு, காலத்திற்கு காலம் தேசிய அரசியல் மாற்றத்திற்கும் உந்து சக்தியாக இருந்து வருகின்றனர். இம்மக்களின் அரசியல் வலுப்பெற அரசியல் யாப்பின் 20ஆம் திருத்தமான தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் எமது ஆலோசனைகளை முன் வைக்கின்றோம். எமது ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தேர்தல் சட்டத் திருத்தக் குழு செயற்பட்டு அமைச்சரவைக்கு ஆலோசனைகளை வழங்குமென எதிர்பார்கின்றோம்.

நன்றி,

இங்ஙனம்,

மலையக சக ஆய்வு மையம்
மலையக பாட்டாளிகள் கழகம்
மலையக சிவில் சக அமைப்புக்களின் கூட்டிணைவு

தேர்தல் முறை மறுசீரமைப்பில் மலையக மக்களின் பங்கு

அறிமுகம்

இலங்கையில் வாழும் பிரதான தேசிய இனங்களின் ஒன்றான மலையகத் தமிழர் இன்றைய இலங்கையின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 15 இலட்சம் ஆகும். அதாவது, மொத்த சனத் தொகையில் 7.27 ஆகும். உத்தியோகபூர்வ கணக்கெடுப்புகள் இத்தொகையை குறைத்தே காட்டுகின்றன. இதற்குப் பிரதான காரணம் மலையகத் தமிழில் அநேகர் தங்களை இலங்கைத் தமிழர்களாக பதிவு செய்துள்ளமையே ஆகும். மலையகத் தமிழர் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு, இரத்தினப்புரி, கேகாலை, மாத்தளை, புத்தளம், மாத்தறை, களுத்துறை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பரந்து வாழுகின்றனர்.

இலங்கையில் 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குமை அறிமுகப்படுத்தப்பட்ட போதே மலையகத் தமிழன் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அன்று நாடு முழுவதிலும் உருவாக்கப்பட்ட 50 தொகுதிகளில் மலையகத் தமிழருக்கு இரண்டு தொகுதிகள் (ஹட்டன், தலவாக்கலை) ஒதுக்கப்பட்டிருந்தன. 1947இல் 101 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் மலையகத் தமிழர் சார்பில் 08 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மேலும், பதுளை மற்றும் பலாங்கொடை என்பன இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும் காணப்பட்டன. இருந்த போதிலும் சோல்பரி ஆணைக்குழு குறித்த தொகுதிவாரி தேர்தல் முறையின் கீழ் 14 அங்கத்தவர்களை குறித்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு மலையகத் தமிழருக்கு உள்ளதாக வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையிலேயே 1948ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கை குடியுரிமை சட்டம், 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் மற்றும் தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பன காரணமாக மலையகத் தமிழர் தங்கள் அனைத்து விதமான அரசியல் உரிமைகளையும் இழந்தனர்.

1948ஆம் ஆண்டு இழந்த குடியுரிமையை முழுமையாக பெறுவதற்காக 2003ஆம் ஆண்டு வரை போராட வேண்டி இருந்தது. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே எமது மக்களின் பெருந் தொகையானோர் அவர்களின் அனுமதியின்றி இந்தியாவிற்கு பலாத்காரமாக நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையிலும் கூட இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப இன்றைய பாராளுமன்றத் தேர்தல் முறைமையின் கீழ் 16 உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பத்திற்கும் குறைவானவர்களே பாராளுமன்றத்தில் உள்ளனர்.

விகிதாசாரத் தேர்தல் முறைமை

ஜனநாயக விழுமியங்களின் ஒன்றான சுயாதீனமான தேர்தல் முறைமையில் மக்களின் தெளிவினை உச்சளவில் பிரதிபலிக்கும் ஒரு முறையாக விகிதாசார தேர்தல் முறைமை விளங்குகின்றது. இன்று உலகில் பல நாடுகளும் இந்த முறைமை பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளன. இம்முறைமை அனைத்து இன மக்களுக்கும் சார்பானது.

இலங்கையில் மலையகத் தமிழரை பொறுத்தமட்டில், சிதறி வாழும் மலையகத் தமிழ் மக்களை ஒரு அரசியல் அடையாளத்திற்குள் இணைப்பதற்கு இம்முறைமை உதவி உள்ளது. மாகாண சபைகளிலும், உள்ளுராட்சி சபைகளிலும் பிரதிநிதித்துவத்தை பெறக் கூடியதாக உள்ளது.

இந்த விகிதாசார தேர்தல் முறையில் அனைத்து இன மக்களுக்கும் சரியான பிரதிநிதித்துவத்தை வழங்கக்கூடிய விதத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதனூடாக இலங்கையில் வாழும் அனைத்து இனக்குழுமங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை விகிதாசார தேர்தல் முறைமையில் தேவையான மாற்றங்களை கொண்டு வருவதனூடாகவும், விகிதாசார தேர்தல் முறைமையினை பாதுகாப்பதனூடாகவும் உறுதி செய்யலாம்.

குறிப்பாக மலையகத் தமிழர்களை பொறுத்த மட்டில் அவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மீள் நர்ணயம் செய்வதனூடாக இம்மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யலாம். உதாரணமாக, பதுளை மாவட்டத்தின் பல தேர்தல் தொகுதிகளில் பிரிந்து காணப்படும் மலையகத் தமிழர், செறிந்து வாழும் மலைத் தொடரை குறித்த தொகுதிகளிலிருந்து பித்தெடுத்து ஒரு தனி தேர்தல் தொகுதியாக மாற்றி அமைத்தல் வேண்டும். அதே போன்று வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட ஹங்குரன்கெத்த தொகுதி மீண்டும் கண்டி மாவட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இது போன்றே நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மலையகத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் இம்மக்களின் குடிசன செறிவுக்கமைய புதிய உள்ளுராட்சி நிறுவனங்களையும் உருவாக்குதல் வேண்டும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை

உத்தேச தேர்தல் முறையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 இருக்கும் என அறிய முடிகிறது. இந்த முறைமை தொகுதிவாரி, மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என மூன்று பகுதிகளை கொண்டிருப்பதுடன், தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமையின் கலப்பாகவும் இருக்கும் எனவும் அறிய முடிகிறது. இந்நலையில், உத்தேச தேர்தல் முறையில் மலையகத் தமிழன் பிரதிநிதித்துவம் உரிய வகையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

நுவரெலியா மாவட்டம்
1.1   இன்றைய நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதியானது 300,000 மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட பல்அங்கத்தவர் தொகுதி ஆகும். இத்தொகுதியானது 75,000 வாக்காளர்களைக் கொண்ட நான்கு தேர்தல் தொகுதிகளாக மீள் நிர்ணயம் செய்தல் வேண்டும்.

1.2   கொத்மலை தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

1.3   வலப்பனை தேர்தல் தொகுதிக்கு அண்மித்த ஹங்குரன்கெத்த தேர்தல் தொகுதியின் தோட்டப் பிரதேசங்கள் வலப்பனை தேர்தல் தொகுதியுடன் இணைக்கப்பட்டு வலப்பனை தேர்தல் தொகுதியானது இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

1.4   வலப்பனை தொகுதியுடன் இணைக்கப்பட்ட தோட்டப் பிரதேசங்கள் தவிர்ந்த ஹங்குரன்கெத்த தேர்தல் தொகுதியின் ஏனைய பிரதேசங்கள் மீண்டும் கண்டி மாவட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

பதுளை மாவட்டம்
2.1   பசறை, பதுளை, பண்டாரவளை தேர்தல் தொகுதிகளின் மலையகத் தமிழர் செறிவாக வாழும் தொடர் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தனி தொகுதியாக உருவாக்கப்பட வேண்டும்.

2.2   அப்புத்தளை மற்றும் ஹாலிஎல தேர்தல் தொகுதிகள் பல்அங்கத்தவர் தொகுதிகளாக மாற்றப்பட வேண்டும்.

கண்டி மாவட்டம்
3.1   பஸ்பாகேகோரளை மற்றும் உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவுகள் இணைக்கப்பட்டு தனி தேர்தல் தொகுதி உருவாக்கப்பட வேண்டும். தெல்தொட்ட, தொலுவ பிரதேச செயலகப் பிவுகளின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளும் இதனுடன் இணைக்கப்பட வேண்டும்.

3.2   பாததும்பர தேர்தல் தொகுதியின் பன்விலை பிரதேச செயலகப் பிரிவுடன் குண்டசாலை தேர்தல் தொகுதியின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் இணைக்கப்பட்டு தனித்தொகுதி உருவாக்கப்பட வேண்டும்.

கொழும்பு மாவட்டம்
4.1   மத்திய கொழும்பு தொகுதியின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் கொழும்பு வடக்கு தொகுதியுடன் இணைக்கப்பட்டு கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

4.2   கொழும்பு கிழக்கும், பொரளைத் தேர்தல் தொகுதியும் இணைக்கப்பட்டு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட வேண்டும்.

4.3   கொழும்பு மேற்கும், கொழும்பு தெற்கும் இணைக்கப்பட்டு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட வேண்டும்.

மாவட்ட விகிதாசார முறைமை (னுPசு)
5.1   கீழ் குறிப்பிடப்படும் மாவட்டங்களில் மலையகத் தமிழன் பிரதிநதித்துவத்தை மாவட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் உறுதி செய்வதற்கு பொருத்தமான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

5.1.1  நுவரெலியா
5.1.2  பதுளை
5.1.3  கண்டி
5.1.4  இரத்தினபுரி
5.1.5  கொழும்பு
5.1.6  கேகாலை
5.1.7  மாத்தளை
5.1.8  களுத்துறை
5.1.9  புத்தளம்

5.2   இரட்டை வாக்களிப்பு முறைமையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக மாவட்ட மட்ட விகிதாசார முறையிலான தெரிவினையும் வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

பொது
6.1   அறிகப்படுத்தப்படும் புதிய தேர்தல் முறைமையானது ஜெர்மனிய முறையை ஒட்டியதான 50:50 முறைமையாக (507 தொகுதிவாரி ஊடாகவும், 507 விகிதாசாரம் ஊடாகவும் தெரிவு இடம்பெறும்) இருத்தல் வேண்டும்.

6.2   தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மீள் நிர்ணயத்தின் போது மலையகத் தமிழன் இனச் செறிவு, இன விகிதாசாரம் மற்றும் புவியியல் தொடர்ச்சி என்பன எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் அமைதல் வேண்டும்.

6.3   மாவட்ட அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போதும், தேசிய பட்டியலின் மூலம் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போதும் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும்.

6.4   பல் அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்கும் போது இருமொழி பிரதேச செயலகங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மலையக சக ஆய்வு மையம்
மலையக பாட்டாளிகள் கழகம்
மலையக சிவில் சக அமைப்புக்களின் கூட்டிணைவு.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates