Headlines News :
முகப்பு » » தேயிலை, இறப்பர் விலை சரிவுகளுக்கு சர்வதேச சூழ்நிலையே காரணம் - பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

தேயிலை, இறப்பர் விலை சரிவுகளுக்கு சர்வதேச சூழ்நிலையே காரணம் - பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்



2015இல் சர்வதேச சந்தையில் தேயிலை, இறப்பர் விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் சாத்தியம் காணப்படுகின்றது. உள்நாட்டு தேயிலை மற்றும் இறப்பர் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான சரிவு காரணமாக, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் பாரியளவு இழப்புகளை எதிர்நோக்கியுள்ளன. இந்த விலைச்சரிவுகளுக்கு சர்வதேச நாடுகளில் காணப்படும் பொருட்கள் மீதான விலைச்சரிவு காரணமாக அமைந்துள்ளதெனவும், தொடர்ந்தும் சரிவான விலைகள் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் உலக வங்கி வெளியிட்டிருந்த பொருட்களின் விலை தொடர்பான அறிக்கையில், 2015 ஆம் ஆண்டில் பிரதான ஒன்பது பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுமென அறிவித்திருந்தது. 2016 ஆம் ஆண்டு முதல் சில பொருட்களின் விலைகளில் மீட்சி ஏற்படலாம், இருந்த போதிலும், ஏற்பட்ட விலை வீழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் விலை உயர்வு என்பது குறைவானதாகவே அமைந்திருக்கும். விவசாயத்துறை தொடர்பான பொருட்கள் 2011 மற்றும் 2014 ஆகிய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வீழ்ச்சிடைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் இவ்வாண்டில் சரிவடையும் எனவும் அறிவித்திருந்தது.

ஏனைய பொருட்களைப் போலவே, தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் விலைகளும் சர்வதேச சந்தைகளில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. உலக வங்கியின் தரவுகளுக்கு அமைவாக, 2014 இல் சர்வதேச சந்தையில் தேயிலை கிலோ ஒன்றின் சராசரி விலை 2.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இது 2013 மற்றும் 2012 ஆகிய வருடங்களுடன் ஒப்பிடுகையில் பெருமளவு வீழ்ச்சியாகும். குறித்த ஆண்டுகளில் விலை முறையே 2.86 அமெரிக்க டொலர்கள் மற்றும் 2.9 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட்ட அமைதியற்ற சூழல் போன்றவற்றால் இலங்கை தேயிலையின் விலை அதிகளவு குறைந்திருந்தது.2015 ஏப்ரல் மாதம் முதல் வாரமளவில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேயிலை கிலோ ஒன்றின் சராசரி விலை 66 ரூபாவினால் குறைந்து பதிவாகியிருந்தது.

சர்வதேச சந்தையில் இறப்பர் விலை வீழ்ச்சி என்பது ஆச்சரியமூட்டும் .வகையில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 3.38 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட RSS 3 ரக இறப்பரின் விலை, 2014 இல் சுமார் 40 வீத சரிவை பதிவு செய்து 1. 96 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு சந்தையிலும் RSS 3 ரக இறப்பரின் விலை கிலோ கிராம் ஒன்று 295 ரூபாவிலிருந்து 2015 மார்ச் மாதமளவில் 217.5 ரூபாவாக வீழ்ச்சியடைந்திருந்தது.

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளத் தின் தலைவர் ரொஷான் ராஜதுரை கருத்து தெரிவிக்கையில், ''பொருட்களின் விலைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளமை பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாக மட்டுமல்லாமல், மறைமுகமாகவும் இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போன்ற இலங்கை யின் பாரிய தேயிலை கொள்வனவாளர்கள் தமது கொள்வனவு அளவுகளை குறைத்துள்ளனர்'' என்றார்.

''இந்த சூழ்நிலை மிகவும் சவாலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் உக்ரேன் போன்ற நாடுகள் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் 70 சதவீதத்தை கொள்வனவு செய்கிறன. அந்நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், நாணய மதிப்பிறக்கங்கள் மற்றும் இராணுவ மோதல்கள் காரணமாக அவை பெரும் சிக்கல் நிலைகளை எதிர்நோக்கியுள்ளன, எனவே, கொள்வனவாளர்கள் தரம் குறைந்த தேயிலை குறித்து தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். இதன் காரணமாக, வாராந்த தேயிலை ஏல விற்பனையிபோது பெருமளவு தேயிலை விற்பனை செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. பெருந்தோட்ட கம்பனிகள் தமது பண வருகைகளை அதிகரிப்பதற்கு கடுமையாகப் போரா வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் இதர அர்ப்பணிப்புகளை நிறைவேற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது'' என ராஜதுரை மேலும் குறிப்பிட்டார்.

தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் மீது பாரியளவு இழப்புகள் காரணமாக, உற்பத்தி செலவு என்பது ஏல விற்பனையில் கிடைக்கும் விலைகளைவிட அதிகளவில் காணப்படுகின்றன. 2014 இல 19 பெருந்தோட்டக் கம்பனிகளும் மொத்தமாக 2,850 மில்லியன் ரூபாவை திரட்டிய இழப்பாக பதிவு செய்திருந்தன. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், தென் இந்தியாவைச் சேர்ந்த தேயிலை செய்கையாளர்கள் விலைச் சரிவு காரணமாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்ததாக அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு குறைந்தளவு சம்பளம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நலன் புரிப்தொடர்பான கம்பனிகளின் பொறுப்பும் குறைவாகவே அமைந்துள்ளன. இந்த இறப்பர் தோட்டங்கள் 80 ஆண்டுகளில் முதல் தடவையாக இழப்புகளை பதிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தைகளில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமை உறுதியாகப் புலப்படுவதுடன் குறிப்பாக தேயிலை மற்றும் இறப்பர் மீதான தாக்கமும் உறுதியாகியுள்ளது. இவை இலங்கையின் பெருந்தோட்டத்துறையையும் பெருமளவு பாதித்துள்ளன.

4,00,000 தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் 2,00,000 இறப்பர் சிறுதோட்ட உரிமையாளர்களும் இலங்கையில் உள்ளனர். பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கம் தேயிலை பச்சை இலை கிலோ ஒன்றுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட விலையாக கிலோ ஒன்றுக்கு 80 ரூபாவையும், இறப்பருக்கு (RSS 1) 350 ரூபாவையும் நிர்ணயித்திருந்தது.

''சிறுதோட்ட உரிமையாளர்கள் மீது அரசாங்கம் கரிசனை செலுத்தியுள்ளமையை வரவேற்றுள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், பிராந்திய பெருந் தோட்டக் கம்பனிகளும் விநியோக தொடரில் முக்கிய இட த்தை வகிப்பதை குறிப்பிட்டுள்ளதுடன், இந்த துறையையும் முன்னேற்றுவதற்கு பங்க ளிப்பை வழங்க முன்வர வேண்டும். பெருந்தோட்டத் துறையில் ஏதேனும் இடையூறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அது சுமார் ஒரு மில்லியன் மக்களின் வாழ் வாதாரத்தை கேள்விக் குறியாக்கிவிடும் விடயமாக அமைந்துவிடும் என்பதுடன், பெருந்தோட்டங்களின் வசிக்கும் மக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடும்'' என ரொஷான் ராஜதுரை எச்சரித் துள்ளார்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates