Headlines News :
முகப்பு » » தேயிலை : பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியும், சிறு தோட்டங்களின் வளர்ச்சியும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்

தேயிலை : பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியும், சிறு தோட்டங்களின் வளர்ச்சியும் - கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ்


இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலையின் உற்பத்தியும் ஏற்றுமதி வருமானமும் பெருமளவு செல்வாக்கினை கொண்டிருந்தாலும், அவற்றில் பெரும்பாலான பங்களிப்பினை இப்போது சிறு தோட்டங்களே செய்கின்றன. சிறு தோட்டங்களின் உற்பத்தியாகும் தேயிலை நாட்டில் வருமானத்திற்கு போதுமானதென இப்போது உணரப்பட்டுள்ளது. சிறு தோட்டங்கள் பெருமளவில் இலங்கையில் தாழ்நிலப் பகுதிகளில் பரந்தளவில் வளர்ச்சி பெற்றுள்ளதன் காரணமாக சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் பெருமளவில் இல்லை என்று உணரப்படுகின்றது.

ஆனால், சரிவுமிக்க மலைப்பாங்கான பகுதிகளில் கடந்த 140 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேயிலைச் செய்கை பெருமளவில் பெருந்தோட்டங்களாக கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் காணப்படும் தோட்டங்கள் சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதென அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனைப் பின்னணியாகக் கொண்டு எதிர்கால பொருளாதாரத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

2030ஆம் ஆண்டில் இலங்கை எவ்வாறு இருக்க வேண்டுமென்று அரசாங் கத்தின் தேசிய பௌதீக திட்டத்தில் மலையகப்பகுதிகளில் தேயிலை வளர் ப்பு என்பது மிகச் சிறிய பரப்பில் பாதுகாப்பான சூழலில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படும் என்பதை யாவரும் அறிவர்.

இந்நிலையில் 1992இல் இலங்கையில் குறிப்பாக, மத்திய மலை நாட்டுப் பகுதி யில் பரந்துள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகளின் இப்போதைய நிலைவரங்கள் என்ன? பெருந்தோட்டங்கள் என்னென்ன வகையில் வீழ்ச்சியடைந்தன என்பவற்றினை அவதானிப்பதும், பெருந்தோட்டங்களின் உற்பத்திக்குப் பதிலீடாக வளர்ந்து வருகின்ற சிறு தோட்டங்களின் இன்றைய நிலைமையை பார்ப்பதும் இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.

முதலில் கம்பனிகள் கைவசம் காணப்பட்ட தேயிலைக் காணிகளில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானிப்போம்.

1992இல் பெருந்தோட்டகளை கம்பனிகள் கையேற்றபோது தேயிலை, இறப்பர் உட்பட சுமார் 160,000 ஹெக்டேயர்களை கைவசப்படுத்தினர். இதன்போது சிறுதோட்டங்களாக சுமார் 68,000 ஹெக்டேயர்கள் மட்டுமே காணப்பட்டன. ஆனால், இப்போது 20 வருடங்களின் பின்னர் கம்பனிகளிடம் இருப்பதுவோ சுமார் 1,23,000 ஹெக்டேயர் காணிகளாகும். இதில் தேயிலை செய்கை மேற்கொள்ளும் காணியின் பரப்பு சுமார் 86,000 ஹெக்டேயர்களாகும். இறப்பர் காணியின் அளவு 47,000 ஹெக்டேயர் காணிகளாகவும் காணப்படுகின்றன.

ஒப்பீட்டளவில் 1992ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கம்பனிகளின் தேயிலை செய்கைக்காக பயன்படுத்தும் நிலம் சுமார் 20 வீதத்தால் வீழ்ச்சியுற்று இப்போது 86,000 ஹெக்டேயர்களாக காணப்படுகிறது.

2005 – 2011 இடைப்பட்ட காலப் பகுதியில் சுமார் 6 வருடங்களில் 10,000 ஹெக்டேயர் காணிகளை பெருந்தோட்ட கம்பனிகள் இழந்துள்ளன. 2011ஆம் ஆண்டு தகவல்களின்படி 23 கம்பனிகளும் 86,000 ஹெக்டேயர்களை தமது கை வசம் வைத்திருப்பினும் சுமார் 71,000 ஹெக்டேயர்களில் மட்டுமே பயிர் செய்யப்படுகின்றன. இதைவிட 1992ஆம் ஆண்டளவில் எல்கடுவ பிளான்டேசன் லிமிடட், 'ஜனவசம' மற்றும் அரச, பெருந்தோட்ட யாக்கம் போன்றவற்றிற்கு 14,000 ஹெக்டேயர் காணிகள் வழங்கப்பட்டபோதும் அதன் பரப்பளவு 35 வீதமாக வீழ்ச்சியடைந்து. இப்போது சுமார் 9,000 ஹெக்டேயர் காணிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு கம்பனிகளால் கைவிடப்பட்ட காணிகள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட இறப்பர் கைத்தொழில் வளர்ச்சி காரணமாக பொருத்தமான இடங்களில் இறப்பர் செய்கையும் விஸ்தரிக்கப்பட்டது. ஆனாலும் கம்பனிகள் இறப்பர் செய்கையை நிறுத்தியதால் சடுதியான வீழ்ச்சியை கண்டது. உதாரணமாக 2005 இல் 58,900 ஹெக்டேயர் காணிகளில் கம்பனிகள் இறப்பர் செய்கையை மேற்கொண்டன. ஆனால் இப்போது அப்பரப்பு 47,000 ஹெக்டேயராக சுமார் 18வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகள் காணி கள் வருடாந்தம் சராசரியாக 1,650 ஹெக்டேயர் (2005 – 2011) வீழ்ச்சியடைந்து செல்கின்றன. இவ்வாறான நிலைவரம் நீடிக்குமாயின் அடுத்து வரும் 30 ஆண்டுகளில் சுமார் 50,000 ஹெக்டேயர் காணிகள் பெருந்தோட்ட செய்கையில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

சிறு தோட்டங்களின் நிலை மற்றுமொரு வகையில் வளர்ச்சியடைந்த வண்ணம் உள்ளன. சிறு தோட்டங்கள் பெருமளவில் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தளை மாவட்டங்களில் செறிவாகக் காணப்படுகின்றன. சுமார் 120,000 ஹெக்டேயர் காணிகளில் தேயிலை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுபர்வர்களின் எண்ணிக்கை இப்போது 400,000 பேராக காணப்படுகிறது. உண்மையில் 1995இல் இலங்கையில் சிறு தோட்டங்களில் உடைமையாக சுமார் 82,000 ஹெக்டேயர் காணிகளே காணப்பட்டன. சராசரியாக வருடாந்தம் சுமார் 2,300 ஹெக்டேயர் காணிகளாக விஸ்தரிக்கப்பட்ட தேயிலை சிற்றுடைமைகள் இன்று மொத்த உற்பத்தியில் 70 வீதத்தினை பங்களிப்பு செய்வதுடன் மொத்த நிலப்பரப்பில் 58 வீதமான பரப்பில் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்படுவதையும் காணலாம்.

சிறு தோட்டங்கள், காணிகள் மட்டுமல்லாது உற்பத்தியிலும் பெருமளவு பங்களிப்பினை மேற்கொள்கின்றன. 1990 களில் சுமார் 113 மில்லியன் கிலோகிராமாக உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு இப்போது (2012) சுமார் 230 மில்லியன் கிலோகிராமாக, 117 மில்லியன் கிலோ கிராமினால் அவர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

1990களில் ஒப்பிடும் போது சிறு தோட்டங்களில் உற்பத்தி வளர்ச்சி சுமார் 70% ஆகும். ஆனால் கம்பனி தோட்டங்களோ 1995இல் 98 மில்லியன்களிலிருந்து இப்போது (2012இல்) 94 மில்லியன் கிராமாகத் தமது உற்பத்தியை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளதையும் காணலாம்.

தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் 1995களில் சுமார் 300,000பேர் பதிவு செய்துக் கொண்ட தொழிலாளர்கள் கம்பனி தோட்டங்க ளில் காணப்பட்டனர். இப்போது அவர்களில் எண்ணிக்கை 20,5000 பேராக, அதாவது, 33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பெருமளவிலான பழைய தேயிலைச் செடிகளைக் கொண்டிருக் கும் கம்பனி தோட்டங்களை வேகமாக சுருங்கிக் கொண்டுவருவதையும் அங்கு ள்ள தொழிலாளர்கள் கணிசமாக வெளி யேறுவதும் தோட்டங்களில் இப்போது நிலைவரமாகும்.

மறுபுறம் சிறுதோட்டங்கள் வளர்ச்சி, இலங்கையின் தேயிலையை நின்று நிலை த்திருக்ககூடிய பொருளாதாரமாக மாற் றியமைத்துள்ளதாகக் காணப்படுகிறது. உண்மை யில் இலங்கையின் பொருளாதா ரத்தில் தேயிலை நிலைத்திருக்கும். ஆனால், மலை நாட்டின் இரம்மியமான குளிர், இதமான காற்றின் சுகபோகத்தில் தேயிலை இருக்கப்போவது இன்றும் சில வருடங்களுக்கு மட்டுமே ஆகும்.

குளிரில், குறைந்த வருமானத்தில், உடைந்த லயக்காமராக்களில் இதமான வாழ்க்கையை மலையக மக்கள் என்ற வரையறையில் தொடர்ந்து வாழ்வதற்கு தேசிய பொருளாதார திட்டத்தில் போது மான ஒழுங்குகள் இல்லை என்பது வேதனைமிக்க விடயமாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates