Headlines News :
முகப்பு » , » தொண்டா, திகா, ராதாவுக்கு மனோகணேசன் சவால்

தொண்டா, திகா, ராதாவுக்கு மனோகணேசன் சவால்


அமைச்சரவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்களான பி. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன ஆகியோர்  தமது செல்வாக்குகளை பயன்படுத்தி இவ்வருட வரவு- செலவு திட்டம் மலையக வீடமைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யமுடியுமா என  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று வியாழக்கிழமை (09) கொழும்பில் இடம்பெற்றது. 
இம்மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில், இந்த அரசாங்கத்துக்குள்ளே தமக்கு இருக்கின்ற செல்வாக்குகளை கூட்டாகவோ, தனித்தனியாகவோ  பயன்படுத்தி, உரிய அழுத்தம் கொடுத்து, மலையகம்  நீண்ட காலமாக எதிர்பார்த்து நிற்கும் மலையக வீடமைப்பு திட்டத்துக்;கான நிதி ஒதுக்கீட்டையும், தோட்ட தரிசு நில காணி பகிர்ந்தளிப்பையும்  வாக்களித்த தோட்ட தொழிலாளர்களுக்கு, இம்மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின் ஊடாக பெற்று கொடுக்க வேண்டும்.

மலையக மக்களின் வாக்குபலத்தின் மூலம் இன்று மத்திய அரசிலும் மாகாணத்திலும் அமைச்சர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து கொண்டே போகிறது. 

பழைய அமைச்சர்களையும் புதிய அமைச்சர்களையும் நான் வாழ்த்துகின்றேன்.  நம்மவர்கள் எங்கிருந்தாலும்  நன்றாக இருக்க வேண்டும், என்பதே என் விருப்பம். ஆனால், நமக்கு வாக்களித்த மக்கள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்பது என் கொள்கை. 

ஆகவே, வாக்களித்த  மலையக மக்களின் நீண்டகால அடிப்படை தேவைகளை தீர்க்கப்படுவதற்கே மக்களின் வாக்குப்பலம் அதிகமாக பயன்படவேண்டும்.      

கடந்த வருட வரவு- செலவு திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட, 50,000 வீடுகளை அமைக்கும் மலையக வீடமைப்பு திட்டம், ஐம்பது சதம்கூட  ஒதுக்கப்படாமல் கிடப்பில் இருக்கிறது. 

இந்த வருட வரவு- செலவு திட்டத்தை இம்மாதம் 24ஆம் திகதி,  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி; சமர்பிக்கப்படவுள்ளார். 

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருட நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய வரவு செலவு திட்ட உரையின்போது, மலையகத்தில் 50,000 தொடர்மாடி வீடுகளை தோட்ட தொழிலாளர்களுக்காக நிர்மாணிக்க போவதாக முன்மொழிந்து அறிவித்தல் தந்தார்.  

தோட்ட தொழிலாளர்களின் நீண்ட கால சொந்த வீட்டு கனவுகளை நனவுகளாக மாற்றும் மகா திட்டமாக இது அன்று பாராட்டி  வரவேற்கப்பட்டது.

தொடர்மாடி வீடுகளை மலைப்பாங்கான பிரதேசங்களில் கட்டுவது பாதுகாப்பானதா என்றும் இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதற்காக பண ஒதுக்கீடுகள் இல்லையே என்றும் நான் அப்போது வரவு- செலவு திட்ட உரை நிகழ்த்தப்பட்ட அன்றைய தினமே கேள்விகள் எழுப்பியிருந்தேன்.  
அரசில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவை, தொடர்மாடி வீடுகளை தாம் எதிர்ப்பதாகவும் ஆனால், ஜனாதிபதியின் இந்த 50,000 தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தை வரவேற்பதாகவும் கூறின. 

ஜனாதிபதி சொன்னது தொடர்மாடி வீடுகள் அல்ல என்றும், அவை இரண்டு தளங்களை கொண்ட தனி வீடுகள் என்றும் விளக்கம் கொடுத்த இலங்கை தொழிலாளர்  காங்கிரஸ், லயன் குடியிருப்புகளை அகற்றும் திட்டமாக 50,000 வீட்டு திட்டத்தை பாராட்டி வரவேற்றது. 

ஆனால், எவரும் வீடுகளை கட்ட பண ஒதுக்கீடு இல்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

கடந்த வருடம் முன்மொழியப்பட்ட  50,000 வீட்டு திட்டத்துக்;காக இந்த அரசாங்கம் 50 சதத்தையும் ஒதுக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. 

அந்த உறுதிமொழி வழமைப்போல் காற்றில் எழுதப்பட்ட வாக்கியமாக மாறியுள்ளது.  நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் கட்டப்பட போவதாக சொல்லப்பட்ட இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டம் தொடர்பாகவே அரசில் அங்கம் வகிக்கும் மலையக கட்சிகள் கொஞ்ச காலமாக பேசி வருகின்றன. 

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த மாகாணசபை தேர்தல்களில் மலையக தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளினாலேயே அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக பேசப்படுகிறது. 

அரசில் உள்ள மலையக கட்சி தலைவர்களும் இதையே சொல்கிறார்கள். அரச கூட்டணி பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த உட்பட முக்கிய அமைச்சர்களும் இதையே ஆங்காங்கு  கூறி வருகிறார்கள். 

நடைபெற போகும் ஜனாதிபதி தேர்தலில் தோட்ட தொழிலாளர்களின் வாக்கு தமக்கு கட்டாயமாக தேவை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் சொல்லப்படுகின்றது.

இப்பின்னணியில், தற்போது இந்த வருட வரவு- செலவு திட்டம் இம்மாதம் 24ம் திகதி,  பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் சமர்பிக்கப்படவுள்ளது. 
கடந்த வருடம் முன்மொழியப்பட்ட,  50,000 வீடுகளை அமைக்கும் மலையக வீடமைப்பு திட்டத்துக்கு, இந்த வருட பட்ஜட்டிலாவது நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என நான் இப்போது மீண்டும் கேள்வி எழுப்புகின்றேன். 

இந்த கேள்வியை நான் நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி எழுப்பவில்லை.  

நான் நாடாளுமன்றத்தில் தூரதிஷ்டவசமாக  இப்போது இல்லை. அங்கே நான் இருந்தால், வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தப்படும் போதே, அதை இடைமறித்து நாடாளுமன்ற மரபுகளையும் மீறி, கடந்த வருட உறுதிமொழி என்னாச்சு, ஜனாதிபதி அவர்களே? என்று நான் நிதியமைச்சர் மஹிந்தவிடமே நேரடியாக கேள்வி எழுப்புவேன்.

எனவே, இன்று நான் இந்த கேள்வியை அமைச்சரவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்கள் திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம்தான் எழுப்புகின்றேன்.

நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படும் இந்த மலையக வீடமைப்பு, காணி பகிர்ந்தளிப்பு ஆகிய விவகாரங்களை, தமது வாக்கு பலத்தின் மூலம் பேரம் பேசி பெற்றுகொடுக்க ஒரு அரிய சந்தர்ப்பம், அரசில் அமைச்சர் அந்தஸ்துகளைக்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இப்போது கிடைத்துள்ளது.

எதிர்கட்சியில் இருந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சுட்டிக்காட்ட வேண்டிய, கேள்வி எழுப்ப வேண்டிய என் கடமையை நான் செய்கின்றேன். உங்களுக்கு பதவிகளும், அதிகாரமும், வசதிகளும் இருக்கின்றன. 

ஆகவே, இதற்கு பதிலாக என்னை திட்டி தீர்க்காமல், உங்கள் பதவிகளை பயன்படுத்தி, உங்கள் ஆட்சி தலைவரிடம் எனது கேள்வியை சுட்டிக்காட்டி, வாக்களித்து உங்களுக்கு பதவிகள் வாங்கி தந்துள்ள தோட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏற்படுத்துங்கள்.  

நமது வாக்குகள் கட்டாயமாக தேவை என்ற இந்த தீர்மானக்கரமான சந்தர்ப்பத்தில் கூட நம்மால், இந்த அரசில் இருந்து உறுதியளிக்கப்பட்ட, இந்த வீடு, காணி விடயங்களுக்கு தீர்வு காண முடியாவிட்டால், நீங்கள் பெற்றுள்ளதாக கூறப்படும் வாக்கு பலத்தினால் மக்களுக்கு எந்த ஒரு பயனுமில்லை. 

அப்படியானால், வாக்களித்த மலையக மக்களின் நலன் கருதி எதிர்வரும் தேர்தலில் மாற்று தீர்வுகளை எடுக்க தயங்க கூடாது என்பதையும் நான் வலியுறுத்த  விரும்புகின்றேன் என்றார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates