Headlines News :
முகப்பு » » அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பும், சாரல் நாடனின் 'மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்' நூல் பற்றிய குறிப்புகளும்!

அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பும், சாரல் நாடனின் 'மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்' நூல் பற்றிய குறிப்புகளும்!

சாரல் நாடன்
சாரல்நாடலின் 'மலைய இலக்கியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்னும் சிறு நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 'சாரல் வெளியீட்டகம்' (கொட்டகலை, இலங்கை)  வெளியீடாக வெளிவந்த இந்த நூலில் சாரல்நாடன் மலையக இலக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இந்நூலில் மலையக இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பிறபகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் ஓரளவு குறிப்பிட்டுள்ளார் சாரல்நாடன். மலையக இலக்கியத்துக்குப் பிற பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு பற்றிய விடயத்தில் அவருக்குப் போதிய பரிச்சயமில்லையென்பதை நூல் வெளிப்படுத்துகின்றது.  மலையக மக்கள் பற்றிய நாவல்கள் படைத்த எழுத்தாளர் நந்தி, புலோலியூர் சதாசிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அட்டனின் நடைபெற்ற 'ஏனிந்தப் பெருமூச்சு' கவியரங்கில் பங்குபற்றிய கவிஞர் கந்தவனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மலையகம் பற்றிப் பாடிய வி.கந்தவனம் என்று குறிப்பிடுகின்றார். அட்டன் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எழுத்தாளர் சொக்கன், நவாலியூர் நா.செல்லத்துரை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆனால் மலையகத் தொழிலாளர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றிய முக்கியமான ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் ஒருவரைப் பற்றி, மலையக மக்கள் பற்றிக் கவிதைகள், சிறுகதைகள் படைத்த எழுத்தாளரைப் பற்றி , இறப்பதற்கு முன்னர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய நாவலொன்றினை எழுதிய முக்கியமான எழுத்தாளரைப் பற்றி நூலாசிரியர் சாரல்நாடனுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியத்தைத் தருகின்றது. இவ்விதமான விடுபடுதல்களால் நட்டப்படுவது இவ்விதமான நூல்கள்தாம். இவ்விதமான நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள்தாம். இவ்விதம் சாரல்நாடனின் கண்களில் தென்படாமல் விடுபட்டுப் போன எழுத்தாளர் வேறு யாருமல்லர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமிதான். 

அ.ந.க.வின் மலையக மக்கள் பற்றிய இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

1. "கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்."

2. "இனிமேல் தான் நான் நாவல் துறையில் அதிக அக்கறை காட்டப் போகின்றேன்" எனக் குறிப்பிட்டார். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்சிகளை வைத்து 'களனி வெள்ளம்' என்ற நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 'களனி வெள்ளத்திற்கு' முன்னால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது. 'நாவல் துறையில் காட்டப்போகும் அதே அக்கறையை உங்கள் உடல் நிலை பற்றியும் காட்டுங்கள்' என்றேன். கடும் நோயின்  பாதிப்புக்கிடையில் அ.ந.க கணிசமான அளவு எழுதியது வியப்புக்குரியது."

3. "தொழிலாளியாக வாழ்ந்த அவரது சொந்த அனுபவமே, அவரது கதைகளுக்கு உயிரூட்டிற்று என்று விமர்சகர்கள் கூறுவது போல் தொழிற்சங்கவாதியாகச்  சிலகாலம் இருந்த அ.ந.க. தோட்டத் தொழிலாளர்களுடன் இரண்டறக் கலந்து அவர்களின் துன்ப, துயர்களை உணர்ந்ததால், தோட்டத் துரைமார்களின் அதிகாரங்களை நேரில் கண்டதால் அவைகளைத் தமது சிறுகதைகளில் தத்ரூபமாகச் சிருஷ்ட்டித்தார் என்றே கூறவேண்டும்."

அ.ந.க.வின் படைப்புகள் பல பல்வேறு சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் சிதறிக்கிடக்கின்றன. எழுத்தாளர் அகஸ்தியர் தினகரனில் எழுதிய 'அ.ந.க.வும் அ.செ.மு.வும்  அசல் யாழ்ப்பாணிகள்!' என்னும் கட்டுரையில் இருவரினதும் மலையக மக்கள் மீதான பங்களிப்புப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"அ.ந.கந்தசாமியின் 'நாயினுங் கடையர்' அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் 'காளி முத்துவின் பிரஜா உரிமை' படித்ததுண்டா? அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின.  இரு கதைகளும் சான்று."

நூலின் முன்னுரையில் சாரல்நாடன் எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார். ஆனால் நூலில் அந்தனி ஜீவாவின் பங்களிப்பு பற்றிய குறிப்புகள் அதிகமில்லை. அவர் வெளியிட்ட 'கொழுந்து' இதழ் பற்றிக் கூட குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.

அ.ந.க தனது இறுதிக்காலத்தில் களனி வெள்ளம் என்றொரு நாவலைத் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக்கொண்டிருந்ததாக அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் குறிப்பிடுவார்.  அ.ந.க.வின் அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் செ.க. கூறியதாக ஞாபகம்.

தமிழ்முரசு (சிங்கப்பூர்) 17 ஜூன் 1955 பதிப்பில் அ.ந.க.வின் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. இதன் பெயர் 'குடும்ப நண்பன் ஜில்'. இதுவரை எங்குமே பேசப்பட்டிராத அ.ந.க.வின் இந்தச் சிறுகதையினைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து 'பதிவுகள்' இணைய இதழே முதன் முதலாகப் பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைப் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்கலாம்.

அ.ந.க.வின் (கவீந்திரன் என்னும் புனைபெயரில் எழுதிய) தோட்டத் தொழிலாளர் பற்றிய 'பாரதி' இதழில் வெளிவந்த கவிதை கீழே:

தேயிலைத் தோட்டத்திலே

- அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -

1.
காலையிலே சங்கெழுந்து பம்மும்! "நேரம்
கணக்காச்சு! எழுந்துவா! தூக்கம்போ தும்.
வேலைசெய வேண்டு"மெனச் சொல்லு மஃது!
வேல்விழியாள் உடன்வித்தாள்! துடித்தெழுந்தாள்!
பாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்
பதறுமன்றோ?என நினைத்தாள் பாய்மேற்பாலன்
காலைமெல வருடினாள் கமலப் பூபோல்
கண்விரித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன்!

2.
முகத்தைமெல முத்தமிட்டாள்! ராசா வென்றாள்!
முத்தம்பின் முத்தமிட்டு முறுவலித்தாள்!
அகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்
அமுதமாய் மார்பிடையே சுரக்கவஃதை
அகம் குளிரப் பசிதீர உடல்வளர
அருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்!
முகம்மலர வாய்குவித்துச் சிரத்தையோடு
முழித்தவண்ணம் பாலகந்தான் பருகுகின்றான்!

3. 
அன்னையுளம் அழகிய பூங்கனவுபல
அரும்பிவரும்! சின்னவந்தப் பாலகன்தான்
மன்னவன்போல் மல்லார்ந்த புயத்தனாகி
மண்ஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்
பொன்னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்!
பொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை!
என்னென்ன நினைவெல்லாம் என்மனத்தே!
எனநினைந்து தன்னுள்தான் வெட்கிக்கொள்வாள்!

4.
பால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்
பசுமுகத்தில் பால்வடியக் கலகலென்று
மால்தீர உளத்துன்ப மாசு ஓட
மனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி
காலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்!
காரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்!
நாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,
நங்கைதன் வேலைக்குக் கிளம்புகின்றாள்!

5.
பானையிலே தண்ணீரில இட்டிருநத 
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்!

வ.ந.கிரிதரன்
ngiri2704@rogers.com

நன்றி - பதிவுகள்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates