Headlines News :
முகப்பு » » தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம்

தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம்



இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன்.

ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up  country Tamils,  The Vanishing people?” என்ற கட்டுரையாகும்.   இந்த கட்டுரை   புது டெல்லியில் செயற்படும்   Observer Research Foundation   (ORF)  என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இக் கட்டுரையைப் போன்றே 20 ம் திகதி ஜனவரி மாதம் வெளிவந்த ஞாயிறு வீரகேசரியில்  கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் எழுதிய “மக்கள் தொகை கணிப்பீடும், மறைந்து செல்லும் இந்தியத் தமிழர்களும்” என்ற கட்டுரையும் பல முக்கியமான தகவல்களை  எடுத்துக் காட்டியுள்ளன. 

குடிசனத் தொகை கணிப்பீட்டாளர்கள் இனவாரியாகத் தகவல் சேகரித்ததில், எந்த முறையைக் கையாண்டுள்ளார்கள்  என்பது முக்கிய அவதானத்துக்குரிய விடயமாகும்.  இந்தக் கணிப்பீட்டை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாத முதல் கட்டுரையாளர் புள்ளி விபரங்கள்  முற்றிலும் பொய்யானவை  என்று ஆதங்கப்பட்டு எழுதியுள்ளார். 2011 ம் ஆண்டுக்குர்pய புள்ளி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவை  எவ்வாறு தகவல்கள் தந்துள்ளன என்பதை கவனிப்போம்.

1981 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரையிளான  30 ஆண்டுகளுக்குரிய விபரக் கோவையாக இந்தத் தகவல்களை நாம் அறிகின்றோம்.. இந்த முப்பதாண்டு கால வளர்ச்சியில் இலங்கையின் மொத்த சனத் தொகை 20,263723 (இரண்டு கோடியே இரண்டு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று இருபத்து மூன்று)  என காட்டப்பட்டுள்ளது.

இத் தொகையில் இன வாரியாகக் காட்டப்பட்டுள்ள விபரங்களை அறியும் போது, சிங்கள மக்களின் குடிசனத் தொகை  1981 ம் ஆண்டில்  10,979400 (ஒரு கோடியே ஒன்பது லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து நானூறு) ஆகவும் 2011 ம் ஆண்டில்  15இ173800  (ஒரு கோடியே ஐம்பத்தொரு லட்சத்து எழுபத்து மூவாயிரத்து எண்ணூறு)    ஆக வளர்ச்சியடைந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.   அதன்படி கடந்த முப்பதாண்டு காலப் பகுதியில் 4,194400 (நாற்பத்தொரு லட்சத்து தொண்ணூற்று நாலாயிரத்து நாணூறு)  பேர் இயற்கை வளர்ச்சியை கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வளர்ச்சியை 1981 ம் ஆண்டு 18,86900 (பதினெட்டு லட்சத்து என்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்) ஆகவும், 2011 ம் ஆண்டு 22,70900 (இருபத்திரண்டு லட்சத்து எழுபதாயிரத்துத் தொள்ளாயிரம்)  என வளர்ச்சிப் பெற்றுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.  

அடுத்து முஸ்லிம் மக்களின் குடிசனத் தொகையைக் காட்டும் போது, 1981 ம் ஆண்டு 10,46900 (பத்து லட்சத்து நாற்பத்தாறாயிரத்து தொள்ளாயிரம்)  எனவும்  2011 ம் ஆண்டில் 18,69800 ( பதினெட்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து எண்ணூறு)  என்றும், அதன்படி 8,22900       (எட்டு லட்சத்து இருபத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரம்)  பேர் இயற்கை வளர்ச்சி கொண்டுள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது. 

அடுத்து, இந்திய வம்சாவளி தமிழர்கள் 1981 ம் ஆண்டு 8,18700 (எட்டு லட்சத்து பதினெட்டாயிரத்து எழுநூறு) பேர் என்றும்  2011 ம் ஆண்டில்  8,42300 (எட்டு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூறு)  என்றும், அதன்படி  23,600 (இருபத்து மூவாயிரத்து அறுநூறு) பேர்கள் மட்டுமே கடந்த முப்பதாண்டுகளில்  இயற்கை வளர்ச்சி பெற்றுள்ளனர்  என்று காட்டப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீட்டை எவ்வாறு ஏற்றுக் கொள்வது..?  இக் கணிப்பீட்டின்படி முப்பதாண்டு கால இயற்கை வளர்ச்சியில் 2.8மூ வீதமாகவும், மொத்த சனத் தொகையில் 4.2மூ ஆகவும் குறைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் கடந்த கால வளர்ச்சி வீதத்தை கீழே அவதானிக்கலாம். :

1945 ம் வருடம் 16%
1953 ம் வருடம் 12%
1963 – 1983 வரை 10.6% ,  9.4% ,  5.6%

இந்த வளர்ச்சியினை நோக்கும் அதே வேளை, 1953 ம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களைவிட குடிசனத் தொகையில் அதிகமாகவிருந்தனர்  என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

2011 ம் ஆண்டு குடிசனக் கணக்கீட்டின்படி கடந்த முப்பதாண்டு கால வளர்ச்சியாக இந்த “23,600 பேர்”; எவ்வாறு சேகரிக்கப்பட்டனர் என்பது வியப்புக்குரிய கேள்வியாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர்; வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர்  காணாமல் போயினர். அநேகமானோர் வசிப்பிடமின்றி எந்த வித தகவல்களுக்கும் அகப்படாமல் மறைந்து கிடக்கின்றனர்.  இந்த நிலைமையில்  இன்றைய கணக்கீட்டின்படி   22,70900 பேர் இருப்பதாகக் கொடுக்கப்பட்டிருக்கும்  தகவல்  ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்து கொண்டதன் காரணமாக, இலங்கைத் தமிழர் பட்டியலில் அவர்களது தொகை சேர்க்கப்;பட்டிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இல்லையெனில் ஏறக்குறைய பதினைந்து லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களுள் ஏழு லட்சம் பேர் எங்கே மறைந்தனர் என்ற அதிர்ச்சிக்குரிய கேள்விக்கு விடை தேட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த குழப்ப நிலைக்குக் காரணம், மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தையும், இந்திய வம்சாவளி என்ற அடையாளத்தையும், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தையும் மூன்று வௌ;வேறு நிலைப்பாட்டில் வைத்து இந்த சமூகத்தினர் தங்களை குழப்பிக் கொண்டிருப்பதேயாகும்..! இருநூறு ஆண்டுகளாகியும் தங்களது தேசிய அடையாளத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியாத இம் மக்களின் அரசியல் அறியாமை விசனத்துக்குரியதாகும்.

இச் சமூகத்தினர் பெருந் தோட்டத் தொழிலாளர்களாகவும், தலை நகரில் குடியேறியுள்ள வர்த்தக சமூகத்தினராகவும், ஆரம்ப காலம் முதல் கடை சிப்பந்திகளாகவும் வியாபாரத் தளங்களை அண்டியுள்ள ஊழியர்களாகவும், நகரத் தொழிலாளர்களாகவும் , பல துறைகளில்  தங்களை நிலைநாட்டிக் கொண்டவர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ற தேசிய அடையாளங்களை அவ்வப்போது காட்டி வருகின்றனர். இவர்களது நிலைப்பாட்டில் எந்தவொரு அரசியல் சிந்தனை இல்லாமையும் இந்த நிலைமைக்கு காரணமாகும்.
கலாநிதி எஸ்.சந்திரபோஸ் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று இந்தியத் தமிழர்கள் என்றதும் அவர்கள் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. பெருந் தோட்டங்களைத் தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று அடையாளம் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.

கொழும்பைப் போன்ற தலை நகரங்களில் வாழும் வர்த்தக சமூகத்தினர் இந்தியாவிலும் சொத்துரிமைகள் கொண்டு  வியாபாரத் தொடர்புகளும்  வைத்துள்ளவர்கள் தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றனர். கோபியோ (Gopio) போன்ற ஸ்தாபனத்திலும் இவர்கள் நெருக்கமான உறுப்பினர்களாகவிருப்பதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.  இவர்களைத் தவிர்ந்த ஏனைய நகர்ப்புறங்களில்  குறிப்பாக கொழும்பு, நீர் கொழும்பு, புத்தளம், சிலாபம், மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினர் தங்களை இலங்கைத் தமிழர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.
இந்த இரு சாரார்களும் எந்த வித காரணத்தையும் முன்னிட்டு மலையகத் தமிழர் என்ற தேசிய அடையாளத்தின் கீழ் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. மலையகத் தமிழர் என்ற அடையாளம் பெருந் தோட்ட மக்களையே சார்ந்தது என்ற அபிப்பிராயத்தில் இருந்து வருகின்றனர் .பெருந் தோட்ட மக்களோ இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னா,; தாங்கள் முகங் கொடுத்த அரசியல் பிரச்சினைகளை படிப்பினையாகக்கொண்டு, தங்களை மேலும் இந்த நாட்டில் “இந்தியத்  தமிழர்”; என்ற அடைமொழியோடு அந்நியப்படுத்திக் கொண்டு வாழ விரும்ப வில்லை. 

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக  இந்த நாட்டில் வாழ்ந்துக் கொண்டு,  “இந்திய” என்ற இன்னொரு நாட்டின் பெயரை அடைமொழியாக  இணைத்துக் கொள்வதன் மூலம், தேசிய அந்தஸ்தை பெற முடியாது என்பதில் தெளிவாக இருந்து வருகின்றனர்.   சுதந்திரத்துக்குப் பின் இன்று வரை  65 ஆண்டுகளாக மலையகத் தமிழர் என்ற  தேசிய அடையாளத்தை தேசிய , சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். சர்வதேச சமூகமும் மலையகத் தமிழர் ஒரு தனியான  தேசிய சிறுபான்மை இனம் என்பதை அங்கீகரித்துள்ளன.

இந்த நிலைப்பாட்டுக்கான சான்றுகளை  இணைய தளங்களில் பரவலாக நாம் கண்டு கொள்ளலாம். மலையகத்  தொழிற்சங்க, அரசியல் தலைமைகளும், அரச சார்பற்ற சமூக நிறுவனங்களும், மலையகம் வாழ் அனைத்து சமூகப் பிரிவினர்களும் இந்த அடையாளத்தையே தங்களது தேசிய இன அடையாளமாக ஏற்றுக் கொண்டு வருகின்றன. களுத்துறை, மத்துகம, காலி, தெனியாய போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற பெருந்தோட்ட மக்களும் இந்த நிலைப்பாட்டினையே கொண்டுள்ளனர்.

அரசியலில் நேரடியாகப் பங்குகொண்டு, இரண்டாவது தேசிய சிறுபான்மை இனமாக இருந்து, பின்னர் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டு, இன்று நான்காவது தேசிய சிறுபான்மை இனமாக வீழ்த்தபட்டிருந்தாலும,; மலையகத் தமிழர் என்ற அடையாளம் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை  நாம் எற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் மலையக மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  “இந்தியத் தமிழர்”; என்ற அடையாளத்துக்குப் பதிலாக , “மலையகத் தமிழர்” என்ற தேசிய அடையாளத்தை  கொண்டு வரும் ஒரு திருத்தப் பிரேரணையை நாடாளு மன்றத்தில் முன் வைக்க வேண்டும். இந்த தேசிய அடையாளத்தின் கீழ் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கு, நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் முன்வர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வை அவர்களிடம் உருவாக்க வேண்டும். இந்திய வம்சாவளி தமிழர்களில்  பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் மலையகத் தமிழரின் அரசியல் நிழலில் அண்டி வாழ வேண்டிய கட்டாய நிலைமை எதிர் காலத்தில் இவர்களுக்கு ஏற்படும் என்ற உண்மையையும் உணர்த்த வேண்டும்.

இந்த இன அடையாளத்தின் மூலம்  தேசிய  அரசியலிலும், சர்வ தேசிய அரசியலிலும் நமது உண்மையான குடிசனத் தொகை மதிப்பீட்டை காட்டிக் கொள்ள முடியும். என்றும் இல்லாதவாறு தேசிய இனவாதம் கூர்மையடைந்து வருவதையும், சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படைவாதிகளின்  சக்தி பல வழிகளிலும் வளர்ச்சியடைந்து வரும் பேராபத்தையும், தங்களது  தேசிய அடையாளத்தில் முரண்படும் தமிழர்கள் உணர வேண்டும்.

இந் நாட்டின் பூர்வீகக் குடிகளான வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற தமிழர்கள் தங்களது பூர்வீக நிலத்தையும், வீடு, உடைமைகளையும் இழந்து, விரட்டப்பட்டு அகதி முகாம்களிலும் கூட இல்லாமல், காடுகளில்  வசிக்கும் நடைமுறை நிலைமைகளை, சொந்த காணி, நிலம், வீடு உடைமைகள் இல்லாது உதிரிகளாக சிதறி வாழும் இவர்கள், தேசிய அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லாது போனால்,  பர்மாவில் நடந்தது போன்று, இன்று மலேசியாவில் நடந்து கொண்டிருப்பது போன்று இந்திய எதிர்ப்புவாத நடவடிக்கைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இங்கே உருவாகலாம்.

குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள ஊழியர்களிடம் தமது தேசிய அடையாளத்தை முறையோடு வழங்கத் தவறியதால், பாதகமான முறையில் 2011 ம் ஆண்டில் எமது குடிசனத் தொகை குறைக்கப்பட்டிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இனங்களின் சனத்தொகைக்கேற்ப பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், முன்னுரிமைகள், அங்கீகாரங்கள், விகிதாசாரத்துக்குரிய தொழில் வாய்ப்புகள்,  எனும் பல தேசிய நலன்களை இழக்க நேரிடலாம். இவ்வாறான  அரசியல் ரீதியிலான பாதிப்புக்கள் பற்றியே மேற் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர்கள் அறியத் தந்துள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் இவ்வாறான சமூக, அரசியல் தகவல்களை , சமூக நலன் விரும்பிகள் பகிர்ந்து கொள்வது  மிக முக்கியமான அரசியல் பணிகளிலொன்றாகும். 


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates