Headlines News :
முகப்பு » , , , , , » பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசம் (1956- (6)) - என்.சரவணன்

பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசம் (1956- (6)) - என்.சரவணன்

1956 என்றால் அது பண்டாரநாயக்க, பண்டாரநாயக்க என்றால் அது 1956 என்கிற அளவுக்கு பண்டாரநாயக்கவை 1956 இலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசம் என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. ஒரு வகையில் பரம்பரைத்தனத்தின் அரசியல் நீட்சித் தான் அது.

வேயங்கொட அத்தனகல்ல ஹொரகொல்ல “வலவ்வ”யைச் சேர்ந்த சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகாமுதலிக்கும் டேசி எசலின் ஒபேசேகர அம்மையாருக்கும்  08.01.1889 இல் கொழும்பு முகத்துவாரம் எலிஹவுஸ் இல்லத்தில் பிறந்தவர் SWRD பண்டாரநாயக்க (SWRD Bandaranaike - சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க). பண்டாரநாயக்க மகா முதலியைப் பற்றி தனியாக பின்னர் பார்ப்போம்.

SWRD பெயரின் சூட்சுமம்
வெஸ்ட் ரிஜ்வே என்கிற பெயர் பண்டாரநாயக்கவுக்கு எப்படி சேர்ந்தது என்பது சுவாரசியமான கதை.  அது அவரின் பரம்பரைப் பெயரல்ல. மகாமுதலி சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலி அப்போது நாட்டை ஆளும் ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர். ஆளுநரின் நெருங்கிய நட்புக்கும் உரிய ஒருவராக இருந்தார். அதுபோல அவர் ஒரு தீவிரமாக கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவராகவும் இருந்தார்.  1898இல் அவருக்கு புதுக்கடை தேவஸ்தானத்தில் (All Saints Church – இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு முன்னாள் இருக்கும் தேவாலயம்) திருமணமானபோது அதற்கு சாட்சி கையெழுத்திட்டவர் ஆளுநர் ஜோசப் வெஸ்ட் ரிஜ்வே (Sir Joseph West Ridgeway). இலங்கையில் அவர் 1896-1903 வரையான காலப்பகுதியில் ஆளுநராக இருந்தார்.
ஆளுநர் ஜோசப் வெஸ்ட் ரிஜ்வே
மேற்படி அதே தேவஸ்தானத்தில் தான் பண்டாரநாயக்கவுக்கும் ஞானஸ்தானம் அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ஞானத் தந்தையாக இருந்தவர் ஆளுநர். அவரின் பெயர் தான் பண்டாரநாயக்கவின் முதற்பெயராக சேர்க்கப்பட்டது. SWRD என்பதில் உள்ள S என்பது சொலமன் என்கிற தகப்பனின் பெயர். அதன் பின்னர் வருகின்ற WR என்பது வெஸ்ட் ரிட்ஜ்வே என்கிற ஆளுநரின் பெயர். என்னதான் பின்னர் தன்னை தேசியவாதியாக ஆக்கிக்கொள்ள அவர் அதீத பிரயத்தனம் செய்துகொண்டாலும் ஆங்கிலேய விசுவாசத்தின் எச்சம் இறுதிவரை அவரது பெயரில் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது.

காலனித்துவ காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்த மேல்மட்டத்தில் இருந்தவர்களுக்கு முதலி, மகாமுதலி, ஆராச்சி போன்ற பதவிகள் வழங்கப்பட்டன. அவர்கள் வசித்த பெரிய பங்களாக்களையும் அதன் சுற்றுப்புற காணிகளையும் சேர்த்து “வலவ்வ” என்று அழைத்தார்கள். அப்படிப்பட்ட பெரிய “வலவ்வ” களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் தான் SWRD பண்டாரநாயக்கவின் தகப்பனார் மகாமுதலி சொலமன் டயஸ் பண்டாரநாயக்க. 

பண்டாரநாயக்கவோடு கூடப்பிறந்தவர்கள் இரு பெண் சகோதரிகள் அலெக்ஸாண்ட்ரா கெமிலியா பண்டாரநாயக்க, அண்ணா புளோரண்டினா பண்டாரநாயக்க. சிறு வயதில் இரு சகோதரிகளோடும் எலிஹவுஸ் இலத்திலும், ஹொரகொல்ல வலவ்வயிலும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களின் வயதையொத்த வெளிச்சிறார்களோடு கூட விளையாட அனுமதிக்கப்படாதவர்கள். இவர்களுக்கான உடைகள், விளையாட்டுப் பொருட்கள் கூட வெளிநாடுகளில் இருந்து தான் வருவிக்கப்பட்டன.
இளம் பண்டாரநாயக்கவும் தந்தையார் மகாமுதலி சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும்
கல்வி
ஆரம்பத்தில் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மட்டக்குளியில் அமைந்துள்ள எலிஹவுஸ் பிளேசில் தான் பங்களா அமைத்து இருந்தார்கள். அங்கு வாழ்ந்தபோது முகத்துவாரம் புனித தோமஸ் வித்தியாலயத்தில் SWRD பண்டாரநாயக்க ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பண்டாரநாயக்கவுக்கு பாடநூல்களை வைத்து ஆரம்பத்தில் கல்வி புகட்டியவர் மகாமுதலியின் வீட்தில் பணிபுரிந்த பறங்கி இனத்தைச் சேர்ந்த “வெம்பெக்” என்பவர். அதன் பின்னர்  “யங்” எனும் கல்வி கற்ற ஆங்கிலேயர் ஒருவரை ஆசிரியராக நியமித்தார். ஆனால் அவரோடு எப்போதும் குறும்புத்தனமாக பண்டாரநாயக்க இருந்ததால் “யங்”கை பணியில் இருந்து நிறுத்தினார். 

பண்டாரநாயக்கவுக்கும், சகோதரிகளுக்கும் மேலதிக கல்விக்காக இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டதாரியான ஏ.சீ.ரூட்பர்ட் என்பவரை இலங்கைக்கு அழைத்துவந்து அவரைக் கொண்டு கற்பித்தார். முதலாவது உலக யுத்தம் ஆரம்பமானபோது பிரித்தானிய இராணுவத்தில் சேவையாற்றுவதற்காக ரூட்பர்ட் செல்லும்வரை பண்டாரநாயக்கக்களின் ஆசான் ரூட்பர்ட் தான்.

அதன் பின்னர் 1907 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸவில் உள்ள புனித தோமஸ் வித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு கற்ற காலத்தில் அப்பாடசாலையின் அதிபராக இருந்த பாதிரியாரின் இல்லத்தில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

அதன் பின்னர் 1915 டிசம்பர் மாதம் உயர் கல்விக்காக இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்ட் கிரைஸ்ட் சேர்ச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், அரசறிவியல், பொருளியல் ஆகியவற்றைக் கற்று 1923 இல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்துடன், கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு போன்ற மொழிகளையும் கற்றார். அங்கு தான் அவர் அரசியல் அரிச்சுவடியைக் கற்றதுடன் அரசியல் பங்குபற்றல், தலைமைத்துவம் என்பவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்ந்துகொண்டார். தன்னை அங்கு தான் தயார்படுத்திக்கொண்டார்.

1921ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று பண்டாரநாயக்க ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கக் கூட்டத்தில் வைத்து “தற்போதைய பாராளுமன்ற அமைப்பு முறை நவீன ஜனநாயகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை” என்கிற தலைப்பில் ஆற்றிய உரையை அவரின் முதல் அரசியல் உரையாக கருதப்படுகிறது. அப்போதிருந்து வாத விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறந்த பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார். பிற்காலத்தில் “ஆசியாவின் வெண்கல மணி” என்று அழைக்கிற அளவுக்கு அவர் ஒரு சிறந்த பேச்சாளராகக் கருதப்பட்டார். ஒக்ஸ்போர்ட் மாணவர் அமைப்பின் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் பண்டாரநாயக்க. பண்டாரநாயக்கவுடன்  அப்பதவிக்கு அவரோடு போட்டியிட்டவர் அப்போதைய இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ரம்சே மெக்டொனால்ட் (Ramsay MacDonald) என்பவரின் மகன் மெல்கம் மெக்டொனால்ட். பிற்காலத்தில் இங்கிலாந்தின் அமைச்சராகவும் அவுஸ்திரேலியாவின் ஆளுநராகவும் ஆனார் மெல்கம்.

நின்றுகொண்டிருப்பவர்களில் கடைசியாக இருப்பவர் பண்டாரநாயக்க - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 
1924 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பரீட்சையிலும் தேறி பரிஸ்டர் பட்டமும் பெற்றார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிற்காலத்தில் சுவரில் வைக்கப்பட்ட பண்டாரநாயக்கவின் பெரிய உருவப்படம் இன்றும் அங்கு காணப்படுகிறது.
பிற காலத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டிருக்கிற பண்டாரநாயக்கவின் உருவப்படத்தை பார்க்கின்றனர் அவரின் துணைவி சிறிமா பண்டாரநாயக்கவும் புதல்வர் அனுரா பண்டாரநாயக்கவும்.
ஆரூடம்
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ரொபர்ட் பார்னேஸ் (Robert Bernays) என்பவர் 1931 இல் மகாத்மா காந்தியைப் பற்றி 350 பக்கங்களிலான ஒரு நூலை எழுதினார். “Naked Fakir” என்பது அந்த நூலின் தலைப்பு. இன்றுவரை மகாத்மா காந்தி பற்றி ஆராய்கிற ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி வருகிற நூல் அது. அந்த நூலின் ஆரம்பப் பக்கங்களில் பண்டாரநாயக்கவைப் பற்றி பல இடங்களில் வியந்து பேசுகிறார். 14 ஆம் பக்கம் பண்டாரநாயக்க எதிர்காலத்தில் அந்நாட்டின் பிரதமராக ஆவார் என்று ஆரூடம் சொல்கிறார் அந்த நூலில். 

இலங்கை வருகை
24.02.1925 அன்று அவர் இலங்கை வந்தடைந்தார். கப்பலில் வந்திறங்கும் போது அவரின் தந்தையும் தாயாரும் பெரும் வரவேற்பு ஏற்பாட்டை செய்திருந்தார்கள். பெருமளவு மக்கள் அவரின் வருகைக்காக குழுமியிருந்தார்கள். அங்கிருந்து புதுக்கடை தேவஸ்தானத்துக்கு கத்தோலிக்க பூஜைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் பிரமுகர்களுக்கு விருந்துபசாரம் கொடுக்கப்பட்டு அங்கிருந்து ஹொரகொல்ல வலவ்வ வரை மேள தாளங்களுடன் பெரஹர ஏற்பாட்டுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இலங்கை வந்ததும் அவர் புதுக்கடையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வழக்கறிஞராக கடமையாற்றவும் செய்தார். இதன் பின்னர் அவரது அரசியல் வாழ்க்கை வேகமாக வளர்ச்சியுறத் தொடங்கியது.
ஒக்ஸ்போர்ட்டிலிருந்து திரும்பிய போது ஹொறகொல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பு
மகாமுதலியாரின் கனவெல்லாம் தனக்குப் பின்னர் தான் கொண்டிருக்கிற பதவியில் மகனையும் அமர்த்துவதே. அல்லது இலங்கைக்கான உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிவரை அடைவதற்கு ஏதுவான வழிகளை செய்துகொடுத்தல். ஆனால் பண்டாரநாயக்கவின் தெரிவு அரசியலாக இருந்தது. நிட்டம்புவ கிராமிய சபையின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டு அரசியல் செயற்பாடுகளுக்குள் தன்னை உள்நுழைத்துக்கொண்டார் பண்டாரநாயக்க.

அவரிடம் அப்போது  தாராளவாத ஜனாநாயக அரசியல் கருத்து செல்வாக்கு பெற்றிருந்தது. இந்தக் காலப்பகுதியில் தான் இலங்கைக்கான சிறந்த அரசியல் முறைமை என்பது சமஸ்டியே என்கிற கருத்து அவரிடம் குடிகொண்டிருந்தது. எனவே தான் கரையோரச் சிங்களவர், கண்டியச் சிங்களவர், வடக்கில் தமிழர்கள் என மூன்றாக பிரிக்கப்பட்ட சமஷ்டி முறை இலங்கைக்கு பொருந்தும் என்றார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே அவர் அரசியல் தலைமைக்கு வருவதாயின் அதற்குரிய குறுக்குவழி சிங்கள பௌத்தத் தனத்துக்கு தலைமை கொடுப்பதே என்பதை கணித்தார். வேகமாகவே தன்னை அதற்காக தயார்ப்படுத்தி தகவமைக்கவும் செய்தார்.

ஏ.ஈ.குணசிங்கவைத் தோற்கடித்தார்
அதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக அரசியல் இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதுடன்  “தேசபக்தி கட்சி” என்கிற பேரில் ஒரு கட்சியையும் 1926 இல் (ජාති හිතෛෂී පක්ෂය) தொடக்கினார். அதன் தலைவராகவும் இயங்கினார். இலங்கைக்கான சுயாட்சி கருத்தாக்கத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் அந்தக் கட்சியை அவர் அமைத்தார் என்று பொதுவில் கூறப்படுவதுண்டு. ஆனால் இந்தக் கட்சியை அவர் வெகுகாலம் கொண்டு நடத்தவில்லை.

இதற்கான காரணம் 1926 இல் கொழும்பு மாநகர சபையின் மருதானைத் தொகுதியில் நடத்த நேரிட்ட இடைத்தேர்தல். அத் தொகுதியின் உறுப்பினராக இருந்த ஈ.ஏ.த.சில்வா திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தலுக்கான அவசியம் ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் பண்டாரநாயக்கவுடன் போட்டியிட முன்வந்த அடுத்த போட்டியாளர் அப்போது கோடி கட்டிப்பறந்த இலங்கை தொழிற் கட்சியின் தலைவர் ஏ.ஈ.குணசிங்க. இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலைக்காகத் தான் அவர் இலங்கை தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஆனார். அச்சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியே அவர் அத்தேர்தலில் ஏ.ஈ.குணசிங்கவை எதிர்த்துப் போட்டியிட்டார்.

ஏ.ஈ.குணசிங்க கொழும்பு தொழிலாளர் வர்க்கத் தலைவராக சாதாரணர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்ற ஒருவர். அவரைத் தோற்கடிப்பது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால் பண்டாரநாயக்கவுக்கு இது தான் தனது அரசியல் பிரவேசத்துக்கு சரியான தருணம்.

இந்த வருடம் தான் பண்டாரநாயக்கவின் தந்தை சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கு பிரித்தானிய அரசின் உயரிய பட்டமான நைட் பட்டம் (KCMG – Knight Commander of the Order of St Michael and St George) வழங்கப்பட்டது. இந்தப் பட்டத்தைப் பெற்ற முதலாவது இலங்கையர் அவர் தான்.  தேசிய காங்கிரசும் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் மகனைப் போட்டியிடச் செய்வதே தமக்கு சாதகமானது என்று கருதி அவரை அச்சங்கத்தின் சார்பாக தேர்தலில் நிறுத்தினர்.

பண்டாரநாயக்கவின் அரசியல் அதிகாரத்துவத்துக்குள் பிரவேசிக்க அவரின் குடும்பப் பின்புலம், பணம், செல்வாக்கு, அந்த செல்வாக்குகளால் வளைத்துப்போட முடிந்த அன்றைய இலங்கை தேசிய காங்கிரஸ் என பல்வேறு மேட்டுக்குடிக் காரணிகள் செல்வாக்கு செலுத்தின என்றால் அது மிகையில்லை.

சுயாதீன தொழிற் கட்சியின் தலைவராக இருந்த தம்பிராஜா சரவணமுத்து என்பவரை அழைத்துக்கொண்டு வீடுவீடாக தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் சென்றார்.

இந்தக் காலப்பகுதியில் 21 வயதுக்கு மேற்பட்ட, ஆங்கிலம் அல்லது  சிங்களம் அல்லது தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்த, ஆண்டுக்கு 600 ரூபாவுக்கு குறையாத வருமானமுள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்கும் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். எனவே இந்தத் தேர்தலில் 4029 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் காணப்பட்டனர். 14.12.1926 நடந்த அத் தேர்தலில் பண்டாரநாயக்கவுக்கு 1801 வாக்குகளும், ஏ.ஈ.குனசிங்கவுக்கு 1186 வாக்குகளும் கிடைத்தன. ஏ.ஈ.குணசிங்கவை விட 615 வாக்குகள் அதிகமாகப் பெற்று அமோக வெற்றியைப் வெற்றிபெற்றார் பண்டாரநாயக்க.

ஏ.ஈ.குணசிங்கவைத் தோற்கடித்து வெற்றி பெற்றது முக்கியமான ஒரு அரசியல் திருப்புமுனை. அடுத்த ஐந்து ஆண்டுகளும் அவர் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும், சட்ட பரிபாலனம் குறித்த துணைக்குழுவில் அங்கம் வகித்தபடி தனது கடமையை ஆற்றினார். அது மட்டுமன்றி 1927இல் தேசிய காங்கிரசின் செயலாளராகவும் அதே வருடம் அதன் பொருளாளராகவும் தெரிவானார்.

தேசியவாத தலைவராக வளர்சியுறல்
1927 ஆம் ஆண்டு இலங்கையின் புதிய அரசியல் திட்டத்துக்கான வழிகளை ஆராய்வதற்காக வந்த டொனமூர் ஆணைக்குழு இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கி இருந்து 34 இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்தனர். இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்களின் பட்டியலில் பண்டாரநாயக்க இல்லை. ஆனால் பண்டாரநாயக்கவின் தந்தை மகாமுதலி சொலமன் டயஸ் பண்டாரநாயக்க 01.12.1927 அன்று சேர் மார்க்கஸ் பெர்னாண்டோவோடு “ஒருமையாளர் சங்கம்” என்கிற சங்கத்தின் சார்பில் சந்தித்து முறைப்பாடுகளை செய்திருக்கிறார் என்று அந்த அறிக்கையில் இருந்து அறியக் கிடைக்கிறது.

அதுவும் தன் மகன் அங்கம் வகித்த தேசிய காங்கிரஸின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார் என்று தெரியவருகிறது. 

தேசிய காங்கிரஸ் சர்வஜன வாக்குரிமையை முழுமையாக ஆதரிக்கவில்லை. மட்டுபடுத்தப்பட்ட வாக்குரிமையைத் தான் முன்மொழிந்தது. டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஐரோப்பியர் சங்கத்தின் சார்பில் கேர்னல் டீ.வை.ரைட் சாட்சியமளிக்கும் போது இலங்கையில் உள்ள அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று நவம்பர் 24 அன்று சாட்சியமளித்தார். இதன் மூலம் தென்னிந்திய “கூலித் தொழிலாளர்கள்” அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்துவிடும் என்று சிங்கள தரப்பினர் அஞ்சினர். பண்டாரநாயக்கவின் சகாக்களுக்கும் இதே அச்சம் இருந்தது.  ஆனால் மத்திய மலைநாட்டில் உள்ள தங்கள் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஸ்திரத்தன்மைக்காகத் தான் அவர்கள் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும்படி வற்புறுத்துகிறார்கள் என்று வியாக்கியானம் செய்தது சிங்கள தேசியவாதத் தரப்பு. இறுதியில் சர்வஜன வாக்குரிமையுடன் கூடிய டொனமூர் திட்டம் 1931 இல் அமுலுக்கு வந்தது.

1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் 04.05.1931 அன்று நடத்தப்பட்ட முதலாவது தேர்தலில் வேயன்கொட தொகுதியில் போட்டியின்றியே அரசாங்க சபைக்குத் தெரிவானார். அதே வருடம் டிசம்பர் 18 அன்று இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராகத் தெரிவானார். இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக அதுவரை தெரிவானவர்களிலேயே வயதில் குறைந்த தலைவராக அவர் அப்போது இருந்தார். பண்டாரநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை தேசிய காங்கிரசுக்குள் தேசியவாதிகள் தலையெடுத்தனர். டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு தேசிய காங்கிரசில் இருந்த செல்வாக்கும் இதன் மூலம் பலவீனப்பட்டுக்கொண்டுவந்தது. இதே காலத்தில் தேசிய காங்கிரசில் தீவிர செயற்பாட்டாளராக தலையெடுத்து வந்த இளம் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் பண்டாரநாயக்கவும் இடதுசாரிக் கட்சிகளை தேசிய காங்கிரசுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டனர். டீ.எஸ்.சேனநாயக்க இதனை எதிர்த்து தேசிய காங்கிரசில் இருந்து 21.12.1943 அன்று விலகினார்.

இலங்கையின் பூரண சுதந்திர யோசனையை எதிர்த்தும், டொமினியன் அந்தஸ்தே போதும் என்று தான் டீ.எஸ்.சேனநாயக்க அதிலிருந்து விலகியதாக பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் ஹென்றி அபேவிக்கிரமவின் நூலிலும், ஜே.ஆர். ஜெயவர்த்தன குறித்து கே,எம்.டீ.சில்வா எழுதிய நூலிலும் இதனை உறுதிபடுத்தி விபரிக்கப்பட்டுள்ளன. 

அன்றைய அரசாங்க சபை உறுப்பினர் சார்ல்ஸ் பட்டுவந்துடாவேயின் தலைமையில் இயங்கிய உள்துறை நிறைவேற்று கமிட்டியின் உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். 

1936 இல் நடந்த அரசாங்க சபைத்தேர்தலிலும் போட்டியின்றியே அதே தொகுதியில் தெரிவான அவர் மேற்சொன்ன அதே உள்துறை நிறைவேற்றுக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பை வகித்தார். பின்னர் உள்துறை பரிபாலன அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1947 வரை மொத்தம் 11 ஆண்டுகள் பண்டாரநாயக்க உள்துறை அமைச்சராக தொடர்ந்தார். இந்த இரண்டாவது அரசாங்க சபையின் அமைச்சரவையில் இருந்த வயதில் குறைந்த அமைச்சர் பண்டாரநாயக்க தான். 

பண்டாரநாயக்கவின் அரசியல் கனவுக்கு இடையூறாக இருந்த முக்கிய பிரச்சினை அன்று அவருக்கு இருந்த அடையாளம். எனவே அவர் தனது மதம், ஆங்கில மொழி செல்வாக்கு, தனது உடைக் கலாசாரம் அனைத்துமே அவரின் அடத்த கட்ட நகர்வுக்கு இடைஞ்சலாக இருந்தது. இதனை எப்படி துறந்தார் என்பது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

உசாத்துணை

  1. සෝමදාස අබේවික්‍රම - හෙන්රි අබේවික්‍රම දුටු බණ්ඩාරනායක පරිවර්තන යුගය - S.Godage Brothers – Colombo - 1973
  2.   Robert Bernays - "Naked fakir," - Victor Gallancz Ltd, London - (1931) – p.14
  3. K M De Silva - A History of Sri Lanka - University of California Press, 1981
  4. யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை (தொனமூர் அறிக்கை) – அரச கரும மொழி வெளியீட்டுக் கிளைப் பிரசுரம் - 1961
  5. K. M. De Silva, William Howard Wriggins - J.R. Jayewardene of Sri Lanka: 1906–1956 p. 127-8 & 168-70 Univ of Hawaii - 1988

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates