இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் மீது ஏவப்பட்டுவரும் கொடுமைகள் பல “பௌத்தசானத்தைப் பாதுகாப்பது” என்கிற பெயரில் தான் நிகழ்ந்து வருவதை அவதானித்து இருப்பீர்கள். இலங்கையின் அரசியலமைப்பின் 9வது பிரிவிலும் கூட “புத்த மதத்துக்கு முன்னுரிமை, “புத்த சாசனத்தை” பாதுகாத்தலும், பேணி வளர்ப்பதும் அரசின் கடமை” என்கிறது.
“புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும்”, “புத்த சாசனத்துக்கு இழுக்கு”, “புத்த சாசனத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள்...” போன்ற புலம்பல்களை நாம் நாளாந்தம் கடந்து வந்திருப்போம். இப்போது புதிதாக “சாசன பாதுகாப்பு சபை” என்கிற பெரயரில் ஒரு அமைப்பும் பொதுபல சேனா வின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிக்கிறது. “சாசனம்” என்கிற சொல் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ஒரு இனவாத மந்திரச் சொல்லாக ஆகியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
அதிகரித்துவரும் காவிச் சீருடை சண்டித்தனதனத்தை எதிர்த்தல், கண்டித்தால், சட்ட நடவடிக்கை எடுத்தாலும் கூட அது சாசனத்துக்கு எதிரான சதி என்றே பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு இருக்கும் செல்வாக்கு அரசியலமைப்பாலும், அரச இயந்திரத்தாலும் பாதுகாக்கப்படுகிறது. அவர்களை எதிர்த்து நிற்கும் பலம் ஆட்சியாளர்களுக்கு கூட கிடையாது. சிங்கள பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் சக்திகள் இந்த பிக்குகளையே தமது முன்னரண் படையாக பிரயோகித்து வருகிறது. அதுபோல பிக்குமாரும் இந்த பேரினவாதமயப்பட்ட மக்களின் செல்வாக்கின் மீதிருந்துகொண்டு பேரினவாத சித்தாந்தத்துக்கு தலைமை கொடுத்து வருகின்றனர். பிக்குமார் நிக்காயக்களாக பிரிந்து இருந்தாலும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு தமது அனுசரணையை வழங்கத் தயங்குவதில்லை. அஸ்கிரிய, மல்வத்து, கோட்டே, அமரபுர போன்ற நிக்காயக்களுக்கு மகா நாயக்கர்கள் உள்ளனர். அதுவும் அமரபுர நிக்காயவுக்கு 20க்கும் மேற்பட்ட மகா நாயக்கர்கள் இருக்கின்றார்கள்.
“சாசனாரக்ஷ” வின் கண்டி யாத்திரை
இந்த நிக்காயக்கள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் இல்லையே என்கிற ஆதங்கத்தை சிங்கள பௌத்த தரப்பு தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் ஞானசார தேரோ நடத்திய ஊடக மாநாட்டில் நம்மெல்லோருக்கும் ஒரு பௌத்த தலைமை இல்லாதது தான் பௌத்தர்களின் தலையாய பிரச்சினை என்றார். அதேவேளை யுத்த காலப்பகுதியில் இந்த அனைத்து நிக்காயக்களும் யுத்தத்தை ஆதரித்து ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும், அழிவுக்கும் ஆசி வழங்கின என்பதை மறக்கமுடியாது.
இதுவரை அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டுவந்த பேரினவாத சக்திகள் இன்று நேரடியாக மகாசங்கத்தினருக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய வடிவிலான போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றன.
இதுவரை அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டுவந்த பேரினவாத சக்திகள் இன்று நேரடியாக மகாசங்கத்தினருக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய வடிவிலான போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றன.
ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க அனைத்து நிக்காயக்களும் ஒன்று சேர்ந்து முன்வராவிட்டால் தாம் புதிய நிக்காயவை ஆரம்பிக்கப் போவதாக கடந்த 19 அன்று கண்டிக்கு யாத்திரை சென்று கூட்டம் நடத்திய ஞானசார தேரர் எச்சரித்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த எச்சரிக்கையால் சகல நிக்காயக்களின் மகாநாயக்கர்களும் சற்று தடுமாறிப் போயுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒரு அழுத்தத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
"5000 பேராவது குறைந்தது வந்து விட்டால் நான் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வேன்" என்று ரிசாத் பதியுதீன் கூறியதாக பிரச்சாரம் செய்து தான் இந்த கூட்டத்தையும் நடத்த முடிந்தது.
இந்த கூட்டத்தின் வெற்றி "சைபர் - சமூக ஊடகங்கைக்” கொண்டு வெற்றிகரமாக ஒன்று கூட்டப்பட்டது என்று கண்டியில் அறிவிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்து செய்யப்போகும் காரியங்களையும் பட்டியலிட்டு அங்கே எச்சரித்திருந்தார்கள்.
இன்று எந்த ஊடகங்களும் அவர்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பொது பல சேனாவின் ஊடக மாநாடுகளுக்கு முன்னெரெல்லாம் பல ஊடகங்கள் சமூகமளிக்கும். ஞானசார தேரரின் முன்னால் பல மைக்குக்குகள் இருக்கும். இப்போதெல்லாம் அவை வெகுவாக குறைந்துவிட்டன. ஊடகங்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதில்லை என்று பகிரங்கமாகவே ஞானசார தேரர் உட்பட பல பிக்குமார் குற்றம்சாட்டிவருகின்றனர். ஆக அவர்கள் அதிகளவு நம்பியிருப்பது சமூக ஊடகங்களைத் தான்.
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியில் அதிக பங்களிப்பை வழங்கியது அவர்கள் உலகளவில் கொண்டிருந்த ஊடக பரப்புரை வலைபின்னல் தான். இன்று சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் தமது தமது நிகழ்ச்சிநிரலை வெற்றிபெறச் செய்வதற்கு பெருமளவு நம்பியிருப்பது சமூக ஊடகங்களைத் தான். இன்று வலைத்தளங்களும், சமூக ஊடக பக்கங்களையும் லட்சக்கணக்கில் நடத்தி வருகின்றன.
இனவாதத்தைப் பரப்ப வேண்டுமா, பொய்களையும், புனைவுகளையும், வதந்திகளையும் வேகமாக கொண்டு சேர்க்க வேண்டுமா, கூட்டங்களுக்கோ, ஆர்ப்பாட்டங்களுக்கோ, ஊர்வலங்களுக்கோ ஆட்களை ஒன்று சேர்க்க வேண்டுமா அனைத்துக்கும் அவர்களுக்கு இந்த சமூக வலைத்தளங்கள் இன்று போதுமானவை. குறிப்பாக பல்லாயிரக்கணக்கான முகநூல் கணக்குகள் அவர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் அவர்களை எதிர்த்து நிற்கும் சிறுபான்மை இனக் குழுமங்களுக்கோ, ஜனநாயக சக்திகளுக்கோ கூட அத்தனை கூட்டுப்பலம் இல்லை என்பதே கசப்பான உண்மை.
இந்த புதிய வடிவிலான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக பொதுபல சேனாவுடன், சிஹல ராவய, ராவணா பழைய, சிங்ஹலே போன்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து “சாசனாரக்ஷக சபாவ” (சாசன பாதுகாப்புச் சபை) என்கிற அமைப்பை உருவாக்கியிருந்தன. அதுமட்டுமன்றி சமகாலத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண தேரரும் முதற் தடவையாக இவர்களுடன் கைகோர்த்து இருக்கிறார். இந்த அமைப்புகளுக்கும் அவருக்கும் இடையில் இதுவரை நிலவிய விரிசல் இந்த புதிய வடிவ போராட்டத்தின் மூலம் சரி செய்யப்பட்டிருப்பதுடன் பரஸ்பர ஆதரவை பலமாக வழங்கத் தொடங்கியுள்ளன. அந்த கண்டி ஊர்வலத்தில் சுமண தேரர் ஆக்ரோஷமாக இனவாத கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்ற வீடியோக்கள் வெளியாகியிருந்தன.
சுமணராம தேரருக்கு பிரதியுபகாரமாக மட்டக்களப்பில் அவரது அராஜங்களுக்கு எதிராக போராடி வரும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பௌத்த தரப்பு எதிர்ப்பையும், பலத்தையும் காண்பிப்பதற்காக எதிர்வரும் டிசம்பர் 3 அன்று மட்டக்களப்புக்கு இந்த “சாசனாரக்ஷக சபாவ” போகப் போவதாக போஸ்டர்கள், விளம்பரங்கள், அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்றைய தினம் நாடெங்கிலும் இருந்து அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த இனவாத கோஷ்டி.
இந்தப் பாசிச கூட்டுக்கள் காலத்துக்குக் காலம் புதிய புதிய அமைப்புகளையும், புதிய புதிய சுலோகங்களை உருவாக்கிக் கொள்வதும் அவற்றுக்கிடையே புதிய கூட்டுக்களை உருவாக்கிக் கொள்வதும் வரலாற்றில் புதியதல்ல. அவற்றின் சுலோகங்களின் தீவிரம் கொஞ்சமும் குறைந்ததில்லை. மேலும் மேலும் அந்த சுலோகங்களும், கோரிக்கைகளும், தீவிரமும் புதிய வடிவமெடுத்து வளர்ந்து வந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
அரசும் புத்த சாசனமும்
1947 சோல்பரி யாப்பில் 29(2) சரத்தின் மூலம் வழங்கப்பட்ட சிறுபான்மையோரின் உரிமைகளுக்கான உத்தரவாதத்தை 1972 யாப்பு நீக்கியது, அதையே 1978 ஆம் ஆண்டு யாப்பு தொடர்ந்தது மட்டுமன்றி அந்த இரு குடியரசு அரசியலமைப்புகளும் தான் பௌத்தத்துக்கு சிறப்புரிமையை வழங்கி ஏனைய மதங்களுக்கு இருந்த பாதுகாப்பை மறைமுகமாக அழித்தது. இந்த இரண்டு யாப்புகளுமே சாசனத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பது குறித்து உத்தரவாதமளிக்கின்றன. புத்த சாசனத்தை அமுல்படுத்துவதற்கென்று “புத்த சாசன சட்டம்” என்கிற ஒன்று கூட இருக்கிறது.
1956 அரசியல் மாற்றத்துக்கான போராட்டத்தை “தர்ம யுத்தம்” என்றே சிங்கள பௌத்த தரப்பு பெயர் சூட்டியிருந்தது. பிரபல வரலாற்றாசிரியர் கே.எம்.டீ.சில்வா அந்த ஆட்சி மாற்றத்தை “மொழித் தேசியவாதத்தின் விளைவு” என்று அழைப்பார். மைக்கல் ரொபர்ட்ஸ் அதையே “கலாச்சார தேசியவாதம்” என்றே அழைக்கிறார்.
பண்டாரநாயக்க தனது ரோஸ்மீட் பிளேஸ் வீட்டு வாசலில் பிக்குவை வரவேற்கிறார். இதே வீட்டில் வைத்துத் தான் பிக்குவால் 1959இல் அவர் கொல்லப்பட்டார். |
பௌத்த விவகாரத்துக்கென ஒரு திணைக்களத்தை 1981 இல் முதலில் உருவாக்கியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. இலங்கையில் பௌத்த சமய விவகாரத்துக்கென்று ஒரு அமைச்சை உருவாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச. 16.06.1988 இல் உருவாக்கப்பட்ட அந்த அமைச்சு பின்னர் புத்த சாசன அமைச்சு என்று மாற்றப்பட்டத்துடன் அந்த அமைச்சை ஜனாதிபதியின் கீழ் நேரடி அமைச்சாக நிர்வகிக்கப்பட்டது. பௌத்த விவகார அமைச்சராக ஜனாதிபதியே இருந்தார். வரலாற்றில் முதற் தடவையாக கொவிகம அல்லாத சாதியைச் சேர்ந்த ஒரு ஜனாதிபதியாக அவர் தெரிவானதும்; தான் ஏனையோரைவிட தீவிர சிங்கள பௌத்தர் என்பதை வெளிக்காட்டுவதில் அவர் எடுத்த பிரயத்தனத்தின் விளைவு அது. எப்போதும் வெள்ளை தேசிய உடையில் ஏதாவது ஒரு பௌத்த விகாரையில் மலர்களுடன் சென்று வணங்குவதை அப்போதைய அரசாங்க தொலைகாட்சிகள் தினசரி காட்டிக் கொண்டே இருக்கும். பௌத்த மதத்துக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பை நடைமுறை ரீதியில் நேரடியாக பலப்படுத்தியவர் பிரேமதாச என்றால் அது மிகையாகாது.
பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா, அனைவருமே புத்த சாசன அமைச்சை தமது நேரடி கட்டுப்பாட்டுக்குள் நிர்வகித்து வந்தார்கள். சந்திரிகாவும் முன்னையவர்களைத் தொடர்ந்து அந்த அமைச்சை தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் வைத்திருந்த போதும் பதவிக்கு வந்து மூன்றே ஆண்டுகளில் 1997 ஆம் ஆண்டு அந்த அமைச்சை தன்னிலிருந்து பிரித்தெடுத்து லக்ஷ்மன் ஜெயக்கொடியை புதிய அமைச்சராக நியமித்தார். ஒரு பெண்ணாக மகா சங்கத்தினருடன் விவாகாரங்களைக் கையாள்வது சரிவராது என்று சந்திரிகா அப்போது கூறியதாக லக்ஷ்மன் ஜயக்கொடி அப்போது அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் (11.08.1997)
சுமனராம தேரருடன் மகிந்த - கடந்த ஒக்டோபர் மாதம் |
இந்த பௌத்த சக்திகளை திருப்திபடுத்துவதற்காக சந்திரிகா அரசாங்கம் புத்த சாசனமும், பௌத்தர்களும் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை கண்டறிவதற்கான “புத்த சாசன ஜனாதிபதி ஆணைக்குழு” ஒன்றை நியமித்தது. 17.09.2002 அன்று ஆணைக்குழு அந்த அறிக்கையை ஜனாதிபதி சந்திரிகாவிடம் சமர்ப்பித்தது. பௌத்தத்துக்கு மேலும் அதிக சலுகைகளை வழங்கவேண்டும் என்கிற பல யோசனைகளுடன், மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற யோசனையும் அதில் முன்வைக்கப்பட்டது. காலா காலமாக இப்படித்தான் அரசாங்கங்களை பௌத்த தரப்பு பணிய வைத்து வந்திருக்கிறது.
மகிந்த 2005 இல் பதவியேற்றபோது தனி அமைச்சாக இல்லாமல் “சமய விவகார” அமைச்சின் கீழ் மும்மதங்களுக்கான திணைக்களங்களுக்கூடாக இவற்றை செயற்படுத்திய போதும் பௌத்த விவகாரத்துக்குரிய அதி முக்கியத்துவ சலுகைகளை குறைத்ததில்லை. அந்த சமய விவகார அமைச்சும் நேரடியாக ஜனாதிபதியின் கீழேயே இயங்கியது கவனிக்கத்தக்கது.
பௌத்தத்துக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கியும் கூட 2004ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகள் இது போதாது பௌத்தத்தை அரசியலமைப்பின் மூலம் அரச மதமாக மாற்றும்படி பாராளுமன்றத்தில் யோசனை முன்வைத்தார்கள். பாராளுமன்றத்தில் அந்த யோசனையை கொண்டு வந்தவர் ஓமல்பே தேரர். வரலாற்றில் முதல் தடவையாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய மூலம் 200க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் போட்டியிட்டு 9 பிக்குமார் தெரிவானதும் இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.
மகிந்தவின் போக்கிலும் பௌத்த மதத் தலைவர்கள் திருப்தியுறவில்லை. குறிப்பாக யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் புத்துணர்வு பெற்ற சிங்கள பௌத்த சக்திகள் “மத விவகார” அமைச்சிலிருந்து பௌத்த விவகாரத்தைப் பிரித்தெடுத்து மீண்டும் புத்த சாசன அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.
2009ஆம் ஆண்டு சியம் நிகாய, அமரபுர நிகாய, ராமன்னன்நிகாய ஆகிய மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து இந்த கூட்டுக் கோரிக்கையை வைத்தார்கள். புத்த சாசன அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டதன் விளைவே பௌத்த பாடநூல்களில் விரும்பத்தகாத பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். 2010ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் மகிந்த மீண்டும் ஆட்சியமைத்ததும். மகாநாயக்கர்களின் கோரிக்கையை நிறைவேற்றினார். அதன்படி மீண்டும் தனியாக உருவாக்கப்பட்ட புத்த சாசன அமைச்சு பிரதம மந்திரி டீ.எம்.ஜயரத்னவின் கீழ் கொண்டுவரப்பட்டது.
2013ஆம் ஆண்டு பொதுபல சேனாவும், சிஹல ராவய அமைப்பும் இணைந்து புத்த சாசன அமைச்சை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வரம்புக்குள் கொண்டு வரும்படி பத்திரிகையாளர் மாநாடு நடத்தி கூட்டுக்கோரிக்கை விடுத்தனர். (26.05.2013 dailymirror)
மைத்திரிபால சிறிசேன 2015இல் ஆட்சியமைத்துடன் பௌத்த விவகார அமைச்சு முழு அமைச்சாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு அது முதற் தடவையாக ஜனாதிபதி/பிரதமரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி அமைச்சாக இப்போது இயங்குகிறது.
புத்த சாசன விவகாரத்தை அரசியலமைப்பிலிருந்தும், அரச இயந்திரத்தின் ஆதரவிலிருந்தும் இலகுவாக பிரித்தெடுக்க முடியாத ஒரு அம்சமாக ஆகியிருக்கிறது. எதிர்வரும் அரசியலமைப்பின் மூலம் மதச் சார்பற்ற நாடாக ஆக்க முடியுமா என்கிற கேள்வியை ஒரு பேசு பொருளாக கூட ஆகக் கூடாது என்பதில் விழிப்பாகவும், உறுதியாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கின்றன இனவாத சக்திகள். அரசுக்கு புத்த சாசனம் ஆசீர்வதிக்கிறதா, அல்லது புத்த சாசனத்துக்கு அரசு அசீர்வதிக்கிறதா என்பதற்கு உங்களுக்கு பதில் தெரியும்.
புத்தர் கூறிய சாசனத்துக்கும், இன்றைய சாசன எடுப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பேரினவாதம் நிருவனமயப்படுவதற்கும், அதனை தக்கவைப்பதற்கும் பௌத்த மதமும், சாசனமும் அதி தேவையாக இன்று இருக்கிறது என்பதை வரலாற்று நீட்சிக்கு ஊடாக கண்டிருப்பீர்கள்.
நன்றி - தினக்குரல்
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...