Headlines News :
முகப்பு » » கலை இலக்கியத்தில் அக்கறையில்லாத மலையக அரசியல் கட்சிகள்

கலை இலக்கியத்தில் அக்கறையில்லாத மலையக அரசியல் கட்சிகள்


கலை இலக்கியத்தில் அக்கறையில்லாத மலையக அரசியல் கட்சிகள்
இ.தொ.கா. என்றில்லை எந்த மலையக அரசியல் தொழிற்சங்கக் கட்சியானாலும் சரி அவை அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தில் ஒன்றுபடுகின்றன. அதுதான், மலையக இலக்கியத் துறைக்கு எந்த பங்களிப்பும் செய்யாமல், அந்தத் துறையை முற்றிலும் கண்டு கொள்ளாதிருப்பதில் பயங்கர ஒற்றுமை பேணுதல்.

மலையகத்தைச் சேர்ந்த ஓர் இலக்கிய பிரமுகர் அல்லது  ஒரு கலைஞர் மறைந்தால் அல்லது அவருக்கு உயர் கௌரவம் கிடைத்தால், இக்கட்சிகள் அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இறுதி மரியாதை செலுத்துவதில் தலைமைகள் அக்கறை கொள்வதில்லை. சில சமயம் ஊடக அறிக்கையை தாமதமாக வெளியிட்டு திருப்தி அடைவார்கள். ஒரு மலையக கலைஞருக்கோ, படைப்பாளருக்கோ அவருக்கு வீடு வழங்க அல்லது நீதி வழங்க எந்தவொரு மலையகக் கட்சியாவது முன்வந்ததாக செய்தி இல்லை.

மலையகம் கொண்டாடக் கூடிய ஒரு பெரும் படைப்பாளன்தான் தெளிவத்தை ஜோசப். இன்றைக்கு 80 வயதில் இளைஞனைப் போல் உற்சாகத்துடன் இலக்கியப் பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் அவருக்கு கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் ஜெய் மோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் இந்திரா பார்த்த சாரதி மற்றும் இயக்குநர் பாலா ஆகியோர் கலந்து கொண்டு தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருதை வழங்கியதோடு இந்திய நாணய பெறுமதியில் ஒரு லட்சம் ரூபாவையும் கையளித்து மலையக படைப்பாளரை கண்ணியப்படுத்தினர்.

தெளிவத்தை ஜோசப்புக்கு இலங்கையில் ஏற்கனவே சாகித்திய அரச விருது, கொடகே சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளும் கௌரவங்களும் கிடைத்துள்ளன. இலங்கை அரசு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதாகக் கருதப்படும் சாகித்திய ரத்னாவிருதும் இவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ் இலக்கிய வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. கிடைக்குமானால் அது மிகப் பொருத்தமான விருதாகவே இருக்கும்.

ஜோசப்புக்கு விருதுகள், கௌரவங்கள் கிடைத்த போதெல்லாம் இலக்கிய வட்டாரமும் சிங்கள இலக்கிய பிரமுகர்களும்தான் குதூகலித்தார்களே தவிர மலையக அரசியல் தலைமைகள் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. ஆகிய மலையகக் கட்சிகள் அவரை அழைத்து விழா நடத்தி கௌரவித்திருக்க வேண்டும். பரிசுகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவிலலை. தகரம், குடிநீர் தாங்கி, சீமெந்து, சாராயம் என்றெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் தேர்தல் காலங்களில் மட்டும் பணத்தை விரயம் செய்யும் மலையகக் கட்சித் தலைமைகள், இலக்கியம் என்றதும் கப்சிப் ஆகிவிடுகின்றன.

சிங்கள, முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் இந்த வரட்சி நிலை அங்கில்லை. அதனுடைய கட்சித் தலைவர்களே கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். ஜனாதிபதி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விமல் வீரவன்ச, சஜித் பிரமதாச மற்றும் இன்னும் பல தலைவர்கள் மேடைகளில் பாடக் கூடியவர்கள். ரவூப் ஹக்கீம் நல்ல கவிஞர், பேச்சாற்றல் மிக்கவர். அமைச்சர் அதாவுல்லாஹ் பாடும் திறமை படைத்தவர். இப்படிப் பலர் முஸ்லிம் கடசிகளில் உள்ளனர்.

இ.தொ.கா, ம.ம.மு மற்றும் ஏனைய மலையகக் கட்சிகளில் இலக்கிய வாசனை கொண்டவர்கள் எருமே இல்லை. அப்படியே கலையார்வம் கொண்டவர்கள் கட்சியின் மூன்றாம் நான்காம் வட்டங்களில் இருந்தாலும் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை.

சமீபத்தில் மலையக எழுத்தாளரும் ஆய்வாளருமான சாரல் நாடன் தனது எழுபதாவது வயதில் கொட்டகலையில் காலமானார். மலையக இலக்கிய பரப்பில் அவர் பல பெருமை மிக்க பணிகளை ஆற்றியிருக்கிறார். மலையகத்தில் பலரும் படைப்பாளர்களாகத்தான் தடம் பதித்திருக்கிறார்கள் தவிர, மலையக சமூக மற்றும் இலக்கிய வரலாற்றை ஆய்வுக்குட்படுத்தியதில்லை. பேராசிரியர் அருணாசலம் போன்ற மிகச் சிலரே கை வைத்த இக்கஷ்டமான துறையில் அகலக் கால் பதித்து அடுத்தடுத்து பல நூல்களை வெளியிட்ட பெருமை சாரல் நாடனைச் சாரும். கோ. நடேசய்யர் நமது சங்கங்களினால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த காலத்தில், நடேசய்யர் யார் என்பதை சாதாரண மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் இந்த சாரல் நாடன். தன் சொந்தச் செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு தன் வெளியீட்டகம் மூலம் நூல்களையும் வெளியிட்டவர், இவர்.

தொழிற்சாலை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டே நூல்களை எழுதினார். ஓய்வு பெற்ற பின் மலையக மக்கள் வரலாறு, இதழாளர் நடேசய்யர் போன்ற பல நூல்களை வெளியிட்டார். மூன்று தடவைகள் சாகித்திய பரிசும் பெற்றார். தேசிய தொழிலாளர் சங்கம், இ.தொ.கா. ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். நுவரெலிய மாவட்டத்திலேயே இருந்தவர் என்பதால் அம்மாவட்டத்து அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பது இயல்பானது.

ஆனால், இவர் மறைந்ததும் அதைக் கண்டு கொண்டது எத்தனை அரசியல் வாதிகள்? எத்தனை சங்கங்கள்? இதற்கான பதில் வெட்கக் கேடானது.

அவரது இறுதிக் கிரியைகளின் போது உடனிருந்தார் ஊர்க்காரரான புத்திரசிகாமணி. நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர் நுவரெலியாவில் வசிக்கும் இராதா கிருஷ்ணன். இவர்களைத் தவிர, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழ் மலையக அரசியல் வாதிகளோ, சங்கத் தலைவர்களோ அஞ்சலி செலுத்த வரவில்லை. இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை. கண்டு கொள்ளவே இல்லை. என்ன பாவம் செய்தார் சாரல் நாடன்?

சி.வி. வேலுப்பிள்ளையும் வெள்ளையனும் உருவாக்கிய தொழிலாளர்களுக்கான மாற்றுச் சங்கமே தேசிய தொழிலாளர் சங்கம். இது, இன்று கொழும்பு முதலாளி திகாம்பரத்தினால் வாங்கப்பட்டு விட்டது. சாரல் நாடன் இதன் ஆரம்பகால உறுப்பினர். அச்சங்கத்துக்காக உழைத்தவர். ஆனால், அதன் தலைவரோ, அவரது பிரதிநிதியோ எட்டியும் பார்க்கவில்லை. கொட்டகலை இ.தொ.கா. வின் கோட்டை. ஆறுமுகன் தொண்டமானோ, அவரது பிரதிநிதியோ ஒரு மலையக ஆய்வாளரைக் கௌரவிக்கும் வகையில், உயிருடன் இருந்தபோதுதான் இல்லை என்றால், இறந்த பின்னராவது வந்து அஞ்சலி செலுத்தியிருக்கலாம் அல்லவா? முன்னர் எம்.எஸ். செல்லசாமி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்வார் அனுதாப செய்தி வெளியிடுவார். இப்போது எவருமே கண்டு கொள்ளாத ஒரு முரட்டுப் போக்கை இச்சங்கங்கள் பின்பற்றி வருவதைப் பார்க்க முடிகிறது.

மலையக அரசியல் என்பது, எவர் தலையில் மிளகாய் அரைத்தாவது வாக்குகளை சுருட்டி பதவிகளில் அமர்ந்துவிட்டால் போதும் என்ற அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது என்பதையே இது காட்டுகிறது. இந்த சங்கங்களில் மகளிர் அணி என்பது பெயரளவில் உள்ளது. கொடி பிடிப்பது, டீ போடுவது போன்ற எடுபடி வேலைகளைச் செய்யவே இம்மகளிர் அணி உள்ளது என்பது பகிரங்க ரகசியம். ஆனால் இலக்கிய அணி என்பது பெயரளவிலேனும் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒரு தகவல். தமிழ்நாட்டில் பல அரசியல் இயக்கங்கள் இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்டே வளர்ந்தன.

திராவிடக் கட்சிகளின் பல பண்புகளை அப்படியே பின்பற்றத் தெரிந்திருக்கும் இக்கட்சிகள், இலக்கியத்தையும் கலைகளையும் தமிழகக் கட்சிகள் எவ்வகையில் பயன்படுத்தின என்பதை ஆராய்ந்து பார்க்க முனைவதேயில்லை. உதாரணத்துக்கு செந்தில் தொண்டமானை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளை வேட்டி, வெள்ளை ஷேர்ட், கறுப்புக் கண்ணாடி, அட்டகாசமான சிரிப்பு என்பதாகவே அவர் திராவிடக் கட்சி ஸ்டைலில் படங்களுக்கு போஸ் தருவார். ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அவர் சமீபகாலமாக தமிழ்ப் பத்திரிகைகளில் தரும் விளம்பரங்கள் தமிழக அரசியல் பாணியைப் பின்பற்றியதாகவே இருப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் இவர் கலை, இலக்கியம் சார்ந்த விடயங்களில் எந்த ஆர்வமும் காட்டுவதாகத் தெரியவில்லை. இந்தச் சங்கங்களிலேயே காங்கிரஸ்என்ற பெயரில் இதழ் வெளியிடுவது இ.தொ.கா. மட்டுமே. முன்னர் ஒழுங்காக வந்து கொண்டிருந்த காங்கிரஸ் இதழ், இப்போது வருடத்துக்கு மூன்று நான்கு தடவைகளே வெளிவரும் இதழாக சுருங்கிவிட்டது. இ.தொ.கா. வின் இலக்கிய நாட்டத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

தமிழ்மொழி மீதான பற்றை மக்களிடையே பேணுவதற்கும் தமிழ் மொழி வழியாக அவர்கள் படிப்பதற்கும் இதன் மூலம் தமிழர்களாகவே உயிர்ப்புடன் வாழ்வதற்கும் இலக்கியம் வழி செய்கிறது. வெறுமனே தமிழ் மொழிக் கல்வி மட்டும் தமிழை மக்கள் மத்தியில் இருத்திவிடாது. தமிழ் இளைஞர்கள் பலர் சிங்களவர்களாக மாறிப் போவதற்கும் தமது பிள்ளைகளை சிங்கள மொழிப் பாடசாலைகளில் சேர்க்கவும் அவர்கள் இலக்கிய வாசனை அற்றவர்களாக இருப்பதே காரணம். மொழியை மக்களுடன் இணைக்கும் பாலமே இலக்கியம்.

எனவே, இனிமேலாவது நமது சங்கங்களும் சங்க அரசியல் வாதிகளும் தமிழ் இலக்கிய வாசனை கொண்டவர்களாக, குறைந்தபட்சம் அப்படிக் காட்டிக் கொள்வதற்காவது முயற்சிக்க வேண்டும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates