Headlines News :
முகப்பு » » மலையக மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன!

மலையக மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன!


கி.பி 1820-1840 காலகட்டத்தில் இந்தியாவின் தென் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் காலனியாதிக்க ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்டவர்களே மலையக தமிழ் மக்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியும், ஆளுநரும் சேர்ந்து மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர் செய்கையை மேற்கொள்ள மனித வளம் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில் இலங்கையின் அப்போதைய குடிகள் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவர்கள்.)

ஆங்கிலேயர் அடிப்பணிந்து வேலை செய்ய இணங்காமையினால், வறுமை நிலையை பயன்படுத்தி அழைத்து வரப்பட்ட இனமே மலையக தமிழ் இனம்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மக்கள் இடையில் கப்பல் மூழ்கியும் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டு பலர் மாண்டும் மன்னாரை வந்தடைந்தனர். பின் நடையாக இலங்கையின் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர் தற்காலிக குதிரை லாயங்களில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் இன்று வரை ( அதையொத்த ) அதே வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 1931ம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947, 1948 களில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம், பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமாக பறிக்கப்பட்டு பலர் 2003ம் ஆண்டு வரை நாடற்றவர்களாக வாழந்து வந்துள்ளனர்.

1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்ற போதும் பழைய விதமான கொத்தடிமை வாழ்க்கையும், சுரண்டலும், இன்னல்களும் இந்த மக்களை பொருத்த மட்டில் குறையவே இல்லை, அவர்கள் ஒரு தேசிய இனமாக கருதப்படவும் இல்லை.

உலகின் மிகவும் கொடுரமாக மக்களை நடாத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கி இருக்கக்கூடிய அளவுக்கு மக்கள் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டன. இவ்வாறான கொடுமைகளிலிருந்தே மீண்டு வருவதற்கு முடியாத இனமாக வாழும் மலையக மக்களின் மனித உரிமைகளின் நிலை பற்றி நான் எடுத்தாராய தீர்மானித்தேன்
மனித உரிமை மீறல்கள்

UDHR, ICCPR, ICESCR உட்பட பல்வேறு உடன்படிக்கைகள் உள்ளப்போதும் மனித உரிமைகளை பேணிப்பாதுகாப்பது என்பது கடினமாக உள்ள நிலையில் இலங்கை அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை சர்வதேச பொருந்தனை, உடன் படிக்கைளுடன் சேர்த்து பொருட்கோடல் செய்துள்ளேன்.

Genocide Convention உடன் ICCPR இன் உறுப்புரை 27ஐ சேர்த்து வாசிக்கும் போது வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம் அதே வேளை நேரடியாகவே ICCPR உறுப்புரை 6 ‘ஒவ்வொரு மனிதப்பிறவியும் பிரித்தெடுக்க முடியாத வாழும் உரிமையைக் கொண்டுள்ளனர் அது சட்டத்தின் பாதுகாப்புக்கு உரித்துடையது’ என்பதுடன் ஏதேட்சதிகாரமாக பறிக்கப்பட முடியாது’ என்கின்றது.

வாழும் உரிமை என்பது உடல் ரீதியான பாதுகாப்பு மட்டுமன்றி தனித்துவத்தை பேணுவதற்கு அத்தியாவசியமான மத, கலாசார, மொழி பாரம்பரியங்களின் பாதுகாப்பு கலாசார பொருளாதார வளர்ச்சிக்கு பாரம்பரியங்களின் பாதுகாப்பு கலாசார பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான நிறுவனங்கள் உட்பட எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் கடப்பாட்டை அரசு கொண்டுள்ளது. இதற்காக அரசின் சகல துறைகளிலும் சிறுபான்மையினருக்கு போதுமான பங்களிப்பும், உச்ச வளங்களை பயன்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு அவசியமான சட்டவாக்க, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

சிறுபான்மையினர்
· தனது தனித்துவத்தை பேணுவதற்கும், இன ஒழிப்பிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
·உயிர் வாழ்வதற்கான தேவைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை
·பாரபட்சம் காட்டாமை, ஒதுக்கிவைக்கப்படாமை
·தனது சொந்த மொழியினை பயன்படுத்தும் உரிமை
·தனது பிரதேசம் தொடர்பாக தேசிய, பிராந்திய மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களில், சட்டவாக்கங்களில் பங்கு பற்றும் உரிமை
போன்ற விசேட உரிமைகளுடன் ஏனைய பொதுவான உரிமைகளை அனுபவிக்க உரிமைக் கொண்டள்ளனர்.

அரசின் தேசிய கொள்கை, நிகழ்ச்சித்திட்டங்கள் வகுத்தல் அமுல் படுத்தலின் போது சிறுபான்மையினர் நியாயமான நவன்களை பற்றி கவனம் செலுத்துதல் அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளல் அரசின் கடமையாகும்(Art 5 Minority Declaration 1992) எமது அரசியலமைப்பில் சிந்தனை செய்யும் சுதந்திரம், தனது மனசாட்சி, மதத்தின்படி ஒழுகுவற்கு, பின்பற்ற உள்ள சுதந்திரம் சட்ட முரணாக கைது செய்யப்படாமலிருக்கும் உரிமை, சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பினை பெறவும், இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை பிறப்பு ஏனைய பின்புலத்தின் படி ஓரங்கட்டப்படாமலிருக்கும் உரிமை, எனும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன கருத்து வெளியிடும், தகவல் பெற்றுக் கொள்ளும் உரிமை, அமைதியாக ஒன்று சேர்வதற்கும், ஒருங்கு சேர்வதற்குமான உரிமை, தொழில் செய்யும் உரிமை, நடமாடும் உரிமை போன்றனவும் வழங்கப்பட்டுள்ளன இவை பொருளாதார உரிமைகளோடு தொடர்புடையன.
அரசியல் உரிமைகள் பொருளாதார தேவைகளை அடையக் கூடிய தகவல்களையும் கருத்துக்களினையும் தரக்கூடியன பொருளாதார உரிமைகள் மறுக்கப்படுவதனால் ஏற்படும் தீங்கு பாரதூரமானது. இந்தியாவில் 2/6 பங்கு மக்களின் பொரளாதாரம் மிகவும் மோசமானது அவர்கள் மீது சாதி வேறுபாடுகள், பொலிஸ் அவர்களை மோசமாக நடாத்துதல், வாக்குரிமை பறிக்கப்படல் (தலித்துக்கள்) இழிவான கொடூரமான நடத்துகை, பெண் சிசுக்கொலை, குழந்தைகளை விற்றல் எனும் மிகவும் கொடிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன.

இதே வேளை மத்தியகிழக்கு நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி காணப்பட்டாலும் அரசியல் உரிமைகள், சுதந்திரம் வழங்கப்படாமையானது பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பிராந்தியத்திற்கோ நாட்டிற்கோ பொருந்தக்கூடியதல்ல மாறாக எல்லா நாடுகளுக்கும், சமூக, அமைப்பு, இனத்திற்கும் பொதுவானதே.
இலங்கையில் மலையக மக்களின் உரிமைகள் மீறப்படுவதன் அடிப்படை அரசியல், பொருளாதார உரிமைகள் ஒழுங்காக வழங்கப்படாமையே இவர்களது உரிமை மீறல் பற்றி சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றாலும் அதை மூடி மறைக்கும் திரையாகவும், சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல தடையாகவும் இலங்கையின் இனப்பிரச்சினை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Bagawati C.J ‘உயிர் வாழும் உரிமை தனியானதல்ல பல உரிமைகளுடன் சேர்ந்தே அமைகின்றது’ என்றார் UDHR Article 3 – வாழும் உரிமையும், சுதந்திரம் பாதுகாப்பு பெறுவதற்கான உரிமையும் உண்டு இது பரிக்கபட முடியாது எனவும் ((Article 2) சட்டத்தின் முன் சமனாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் (Article 7)கூறுகின்றன. எனவே வாழ்வதற்கு தேவையான அனைத்து உரிமைகளையும், சுதந்திரத்தையும் கொண்டதே வாழும் உரிமை எனவே இது ஏனைய எல்லா உரிமைகளுடனும் தேவைகளுடனும் தொடர்புபடுகின்றது.

மலையக தமிழ் மக்களுக்கு முழுமையாக பிரஜாவுரிமை வழங்கப்படாமையாலும், பிறப்பு அத்தாட்சி, அடையாள அட்டைகள் இல்லாமையாலும் இவர்கள் அரசியல் உரிமைகள் பொருளாதார உரிமைகள் இழந்தவர்களாக உள்ளனர். குறைந்த நாட்கூலி அதிகரித்த சுரண்டல், போதியளவில் ஓய்வு வசதிகள் இன்மை, வேலை செய்யக்கூடிய சுமுகமான சூழல் இன்மை, தொழில் தளங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்காமை, ஏமாற்றப்படுகின்றமை போன்ற பல தொழில் சார் பிரச்சினைகளை பொருளாதார ரீதியாக எதிர் கொள்கின்றனர்.
தொழில் செய்யும் உரிமை, தொழில் முயற்சியில் ஈடுபடும் உரிமை, என்பன போதியளவிலான உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறும் உரிமையையும் சேர்த்தே கருதும், ஆயின் இதற்காக போதியளவு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்காமல் இருப்பதும், அரசாங்க நிர்வாக சேவைகளை பெருந்தோட்ட தனியார் தோட்ட முகாமைத்துவத்திடம் வழங்குவதும் மலையக தமிழ் மக்களின் உரிமை மீறப்படுவதற்கான படிகள்
வேலை இல்லையேல் பணம் கிடைக்காது, நிரந்தர வேலை இல்லாமலும், தொழில் உத்தரவாதம் இல்லாமலும், குறைந்த சம்பளத்துக்கான சுரண்டல் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதனால் மக்களின் ஆயுள் குறைவடைந்துச் செல்கின்றது.

ஓப்பீட்டளவில் மலையக மக்களின் ஆயுள் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேல் 60 வயதோடு நிற்க்கின்றமையும் ஏனைய இனத்தினருடைய ஆயுள் 70-75 வரை உயந்து காணப்படுகின்றமையும் இதற்கான சான்றாகும். இது அரசு மக்களின் வாழும் உரிமையை பேணுவதற்கு தவறியுள்ளது என்பதை கூறியுள்ளது.

1820 காலப்பகுதியிலிருந்து வாழ்ந்து வரும் ஒரு சிறுபான்மை இன மக்களுக்கு காணி உரிமையோ, சொத்துரிமையோ இல்லை இவர்கள் சுயமாக இயங்க முடியாத Captive Workers ஆக நடாத்தப்படுகின்றனா.; தான் வாழும் வீடுகள் கூட சொந்தமில்லாமல் புதைப்பதற்கான மண் பகுதியையேனும் சொந்தமில்லாத மக்களாக இவர்கள் வாழ்கின்றனர். ஏனைய இன மக்கள் அனுபவிக்கும் இந்த உரிமைகள் மலையக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டமை பாரபட்சமாகும். இதற்கு 99 வருட குத்தகை ரீதியில் பெரும் தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு வழங்கிய போதே மக்களையும் கொத்தடிமைகளாக வழங்கியமையே காரணம் (Under the Concept of Roman law)
தனது வசிப்பிடத்திற்கு முகவரி இல்லை, அங்கு மின்சாரம், நீர், உட்கட்டமைப்பு, வசதிகள் சீராக இல்லை இவற்றை பெற்றுக் கொள்ள தோட்ட முகாமையாளர் கடிதம், அனுமதி பெற வேண்டியுள்ளது.

தோட்ட முகாமையாளர் தனியார் கம்பனியின் ஊழியர் அவர் எவ்வாறு அரசாங்க நிர்வாக கடமைகளை செய்ய முடியும்? தோட்ட முகாமையாளர் வாக்காளர் அட்டை விண்ணப்பம், வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க (வேண்டிய) கூடிய அதிகாரம் கொண்டுள்ளார் இவ்விடத்திலே அவர் அரசாங்க முகவரா? அல்லது மக்கள் அவர்களின் அடிமைகளா? எனும் கேள்விகள் எழும்புகின்றன.
நன்றி -The independent


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates