Headlines News :
முகப்பு » , » தொழிற்சங்கத் துறவி - வீ.கே. வெள்ளையன் (இன்று அவரது நினைவு தினம்) - செ.கிருஷ்ணா

தொழிற்சங்கத் துறவி - வீ.கே. வெள்ளையன் (இன்று அவரது நினைவு தினம்) - செ.கிருஷ்ணா


பெருந்தோட்டத் துறை நாட்டின் அந்நிய முதலீட்டு வருவாயில் முதன்மைப் பெற்றிருந்த காலத்தில், அவ் வருமானத்தை ஈட்டித்தந்த தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக, நியாயமாகக் கிடைக்க வேண்டிய தொழில் சார் நலவுரிமைகள் எதுவுமற்று வெறும் உழைப்பவர்களாக மட்டுமிருந்த நிலையை மாற்றியமைத்து பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள் என்ற நிலைக்கு தொழிலாளர்கள் வாழ்வை மேம்படுத்தி, தொழிலாளர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகர் வீ.கே. வெள்ளையன்

பொகவந்தலாவை முத்துலெட்சுமி தோட்டக் கங்காணி காளிமுத்து- பேச்சியம்மாள் தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது குழந்தையே வெள்ளையன். பெற்றோர்களால் அவரது தோற்றத்துக்கு பொருத்தமாக வைத்த பெயர் போன்றே வெள்ளையுள்ளமும் கொண்டிருந்தவர்.

தன்னுடைய ஆரம்பக் கல்வியை பொகவந்தலதாவை கெம்பியன் தோட்டப் பாடசாலையிலும், பின்பு பொகவந்தலாவை சென். மேரிஸ் மகா வித்தியாலயத்திலும் பின் தனது உயர் கல்வியை கண்டி திரித்துவக் கல்லூரியிலும் கற்றார். ஆரம்ப வயதுகளில் வெள்ளையன் கட்டுமஸ்தான தேகத்துடன் குறும்புக்கார இளைஞனாக, துடிதுடிப்புள்ள செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார். வெள்ளையனின் இத்தகைய செயற்பாடுகள் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு அவர் பால் ஓர் ஈர்ப்பை உருவாக்கியது. குறிப்பாக அக்காலத்தைய பிரித்தானிய பிரஜைகளின் குழந்தைகளோடு கண்டி திரித்துவக் கல்லூரியில் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 1939ஆம் ஆண்டு கண்டி திரித்துவக் கல்லூரியின் ரக்பி அணியின் தலைவனாக வெள்ளையன் தெரிவு செய்யப்பட்டார்.இன்றும் கூட கண்டி திரித்துவக் கலலூரி பிரதான மண்டபத்தில் வி.கே.வெள்ளையன் அவர்களின் பெயர் குறித்த பெயர்பலகை பெரமையுடன் காட்சி தருகிறது. இணையத்தில் வீ.கே. வெள்ளையன் என தேடற் பொறியில் தேடினால் வெள்ளையன் ஒரு தொழிற்சங்கவாதி என்பதோடு சிறந்த விளையாட்டு வீரன் என்பதனையும் கண்டு கொள்ளலாம்.

கல்லூரியை விட்டு வெளியானதும் அவரது ஆங்கிலப் புலமை மற்றும் அவரது மிடுக்கான தோற்றம் என்பவற்றைக் கண்டு எப்படியாவது தோட்டத் துரையாக ஆக்கிவிடுவது ஆசைபட்டனர் அவரது அவரது குடும்பத்தார். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் அடக்கு முறைக்கெதிராகப் போராட பொலிஸ் உத்தியோகம் சிறந்ததென சிந்தித்த வெள்ளையன் அவர்களோ பொலிஸ் மேலதிகாரி தேர்வில் தோற்றினார். மிகச்சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக்கொண்டார். தனக்கு பொலிஸ் உயரதிகாரிப் பதவி கிட்டும் என்ற நம்பிக்கையில் இருந்த போது பொலிஸ் திணைக்களத்திலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “தங்களுக்கு பொலிஸ் மேலதிகாரியாவதற்கு எல்லாத் தகுதிகளும் உள்ளன. ஆனால், நீங்கள் இலங்கைப் பிரஜையாக இல்லை. ஆதலால் உங்கள் விண்ணப்பத்தை கவலையோடு இரத்துச் செயகிறோம். என இருந்தது. இதுவே அன்றைய மலையகத் தமிழர்கள் அனைவருக்கும் இருந்த அவல நிலை. கடிதத்தைக் கையிலெடுத்தவர் ஆத்திரத்தோடு அதனைக் கிழித்தெறிந்தார். வேறு வழியின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கூடாக சேவை செய்யலாம் என பொகவந்தலாவை கூட்டுறவுச் சங்கக் கடையின் முகாமையாளராக கடமையேற்றார். கடமையேற்ற சிறிது காலத்துக்குள்ளேயே கூட்டுறவுச் சங்கங்கள் என்ற பெயரில் தோட்டத் தொழிலாளர்கள் கொள்ளையடிக்கப்படுவதனை எதிர்த்த அவர், கூட்டுறவுக் கடைகளில் நடக்கும் அநியாயங்களை வெளிப்படுத்தி துண்டுப்பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததோடு அதனை விட்டும் வெளியேறினார்.

1942ஆம் ஆண்டு, இலங்கை-இந்தியன் காங்கிரஸ் தலைவர்களான கே. இராஜலிங்கம், எஸ்.சோமசுந்தரம் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் பொகவந்தலாவை பகுதிகளுக்கு வருகை தரும் போது முத்துலெட்சுமி தோட்டத்தில் அமைந்துள்ள வெள்ளையனின் வீட்டிலேயே தங்கிச் செல்வர். இவர்களது ஆலோசனையின் பேரில் தோட்டத் தொழிலாளர்களின் அடக்கு முறைகளுக்கெதிராக போராடும் களமாக தொழிற்சங்கத்துறையை தெரிவு செய்தார் வெள்ளையன்.

வெள்ளையன் அவர்களுக்கு சமூகத்தின் பால் இருந்த அக்கறை மிகக் குறுகிய காலத்திலேயே தோட்ட மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து செயற்படலானார். தோட்டங்கள் தோறும் சென்று தொழிலாளர்கள் மத்தியில் விடுதலைச் சிந்தனையை விதைத்தார். வெள்ளையனது பேச்சும் செயற்பாடுகளும் தன்னார்வமற்ற தொண்டும் மக்களைக் கவர்ந்தன. இவரது செயலூக்கத்தால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மிகக்குறுகிய காலத்தில் தெரிவு செய்யப்பட்டார். 

தொடர்ந்து வந்த காலங்களில் அவர் சார்ந்திருந்த அமைப்பு முதலாளிகளின் கொட்டகைக் கூடாரமாக மாறி, தொழிலாளர் உணர்வாளர்களை அநாதரவாக விட்டுக்கொண்டிருந்த போது தனக்கென ஒரு தனி வழியில் செயற்படும் நோக்கில் காங்கிரஸிலிருந்து வெளியேறி 1965ஆம் ஆண்டு தொழிலாளர்களின் தினமாகிய மே முதலாம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தினை நிறுவினார். சாதாரண தொழிற் சங்கம் என்ற நிலையிலிருந்து மாறி தோட்டத் தொழிலாளி ஒருவரே தொழிற் சங்கத்திற்கு தலைவனாக வேண்டும் எனும் புதிய மரபினைக் கொண்டுவந்தார்.

இன்று தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல அடிப்படைத் தொழில் உரிமைகள் அனைத்துக்கும் வித்திட்டவர் வி.கே. வெள்ளையன் அவர்களே. தோட்ட துரையின் தூக்கம் கெட்டுவிடும் என தோட்டத் தொழிலாளர்கள் இரவு பத்து மணிக்கு மேல் இசைக்கருவிகளான தப்பு, உடுக்கை, தம்புரா முதலியவற்றை இசைக்க முடியாது என்று தோட்ட நிர்வாகம் விதித்திருந்த தடையை உடைத்தெறிந்தவர். தோட்டத்து திருவிழாக்கள், திருமணம், சடங்கு, காதுகுத்து கல்யாணம், மரணம் போன்ற சந்தர்ப்பங்களில் இசைக்கருவிகளைப் பயன்படுத்தலாம் எனும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் வாகனத்தில் தோட்டத்துக்குள் வர முடியாது என்ற தடையை தகர்த்தெறிந்தார். பெண்கள் ஓய்வு ஒளிச்சலின்றி உழைத்துச் சுரண்டப்பட்ட நிலையை மாற்றியமைக்க ஹட்டனில் பத்தாயிரம் பெண் தொழிலாளர்களோடு பெண் தொழிலாளர்களின் வேலை நிர்ணய போராட்டத்தில் குதித்தார். இதன் போது 23 இறாத்தல் கொழுந்து பறிப்பு பெண் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

வனராஜா தோட்டத் துரையின் அடக்கு முறைக்கெதிராக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, டிக்கோயா-தரவளை கிளப்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது தோட்ட முகாமையாளரான சின் கிளையருக்கும் வெள்ளையனுக்கும் ஏற்பட்ட தகராற்றில் நாற்காலியைத்தூக்கி துரையை அடித்ததால், அதனை ஆட்சேபித்த துரைமார்கள் வி.கே. வெள்ளையன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளக்கூடாது என தடை விதித்தனர். இது “வாய்ப்பு+ட்டுச் சட்டம்” என தொழிலாளர்களால் கூறப்பட்டது. இத் தடையை எதிர்த்து ஹட்டன் மாநிலத்தில் அறுபதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது வெள்ளையன் தரப்பு நியாயங்களை கருத்திற் கொண்டு வாய்ப்பு+ட்டுச் சட்டம் நீக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுரிமை தேவை என ஆரம்பகாலம் தொட்டே குரல் கொடுத்த வெள்ளையன் காணியுரிமை, சுயதொழில் குறித்து பல வழக்குகளில் தொழிலாளர்களுக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தள்ளார். ஹேவாஹெட்ட தாராஓயா தோட்டத்தில் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து, அரை ஏக்கர் தேயிலைக் காணியும் நட்ட ஈடும் பெற்றுக் கொடுத்தமை, கலஹா மாவட்டத்தில் கிரிவான தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் பன்றி வளர்த்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டதை ஆட்சேபித்து வழக்கு தாக்கல் செய்து, இலங்கை சட்டத்தில் பன்றி வளர்க்கக் கூடாதென்றில்லை, என நிரூபித்து ஒரு லட்சம் ரூபா நட்டஈடும் பெற்றுக் கொடுத்தமை என்பன குறிப்பிடத்தக்க வழக்குளாகும்.

1967ஆம் ஆண்டு மஸ்கெலியா ஓயா நீர் மின் அணைக்கட்டு காரணமாக பல தோட்டத் தொழிலாளர்கள் எவ்விதக் கொடுப்பணவுமின்றி, வெளியேற்றப்பட்டதனை ஆட்சேபித்து நானூறுக்கும் அதிகமான தொழிலாளர்கள் சார்பாக ஹட்டன் தொழில் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, நட்ட ஈடும் சேவைக்காலப் பணமும் பெற்றுக்கொடுத்தார். 

1967ஆம் ஆண்டு தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம் மாதப் பென்சன், பென்சன் திட்டம் என்பவற்றை இல்லாது செய்துவிட்டது. இவ் அநீதியை எதிர்த்து இன்வெரி தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்து சேவைக்காலப் பணம் வேறு, ஓய்வூதியம் என்பது வேறு என எடுத்துக்காட்டி, இன்றுதொழிலாளர்களால் ‘பதினாளு நாள்’ காசு என சொல்லப்படும் சேவைகாலப் (புசயவரவைல) பணத்தைப் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்தவர் வெள்ளையன் அவர்களே.

வெள்ளையனின் இத்தகைய செயற்பாடுகளால், உயர் நீதிமன்ற நீதியரசராகவிருந்த டி. டப்ளியு. இராஜரட்ணம், தொழில் திணைக்களத்தின் நீதிபதிகள் ம உத்தியோகத்தர்கள், ஏனைய தொழிற்சங்க தலைவர்கள் இவரை தொழிற் சங்கத்தளபதி, தன்னலம் கருதாத மேதை, துணிச்சல் மிக்க தலைவன் எனப் புகழாரம் சூடினர்.

தேயிலைத் தோட்டத்தில் தமது உடலையும் வாழ்வையும் முடித்துக் கொள்ளும் தொழிலாளர்களுக்கு குடிப்பதற்கு தேயிலைத் தூள் வழங்கப்படுவதில்லை எனும் அக்கிரமத்தை சர்வதேசத்துக்கே எடுத்துக்காட்டி, மாதமொன்றுக்கு அரை றாத்தல் தேயிலைத் தூள் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று போராடி, அதனைப் பெற்றுக்கொடுத்தார் வீ.கே. 

தொழிற்சங்க வாதியாக மட்டுமின்றி, இளைஞர்களதும் தொழிலாளர்களினதும் சிந்தனையைத்தூண்டும் எழுத்தாளராகவும் வெள்ளையன் பரிணமித்தார். சிந்தாமணி பத்திரிகை வெளியீடான ‘தந்தி’ இதழில் மலையகப் பிரச்சினைகள் யாவை? எனும் தொடர் பத்தி ஒன்றினை ஒரு வருடத்தக்கும் மேற்பட்ட காலமாக எழுதி வந்தார். இதன் சில பகுதிகள் “மலையகப் பிரச்சினைகள் யாவை?” எனும் தலைப்பில் நூலுருவாக வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மலையகத்தவர்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்தார். முதன்முதலாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தேவை என்ற கோரிக்கையை முனவைத்தவர் இவரே.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூலிகள் என அழைக்கப்பட்ட இழி நிலையிலிருந்து, தொழிலாளர்கள் என்ற சமூக அடையாளத்துக்காகப் போராடி, தன்னை தன் சமூக விடுதலைக்காக அர்ப்பணித்தக் கொண்ட வெள்ளையன் 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி, தொழிலாளர்களை சோக வெள்ளத்தில் ஆழ்த்தி தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் அன்னாரது நினைவு தினம் மலையகத் தொழிலாளர்களால் டிசம்பர் மாதம் 2ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. அமரர் வி.கே.வெள்ளையன் அடக்கம் செய்யப்பட்ட டிக்கோயா தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தினால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

உலக தொழிற்சங்க அமையத்தின் பிரதான செயற்பாட்டாளராகவும், ஆசியாவின் பெருமை வாய்ந்த தொழிற்சங்கவாதியாகவும் சர்வதேசத்தால் மதிக்கப்பட்டவர் வீ.கே.வெள்ளையன். இத்தகைய பெருமைக்குரிய நபர், பஸ் வண்டிப் பிரயாணம், ரயில் போக்குவருத்து என மக்களோடு மக்களாக வாழ்ந்துப் பழகினார். இவர் தனக்கென குடும்பம், வீடு, மனைவி, மக்கள், வாகனம் என எதனையும் வைத்துக் கொள்ளாது தொழிலாளர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து தொழிற் சங்கத்துக்குள்ளேயே துறவி வாழ்க்கை வாழ்ந்தவர். எனவேதான் மலையக வரலாற்றில் வி.கே. வெள்ளையன் “தொழிற்சங்கத் துறவி” என போற்றப்படுகின்றார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates