Headlines News :
முகப்பு » , , , , » ஒரு மனநோயாளி ஆட்சியாளனானால்...!? (கொழும்பின் கதை - 5) - என்.சரவணன்

ஒரு மனநோயாளி ஆட்சியாளனானால்...!? (கொழும்பின் கதை - 5) - என்.சரவணன்

இலங்கையைப் பற்றி டச்சு மொழியில் பதிவு செய்தவர்கள் சிலர் இலங்கையைப் பற்றி அவ்வளவு இழிவாக பதிவு செய்திருக்கக் கூடும். அல்லது அப்படி இழிவாக பதிவு செய்திருப்பதை மட்டும் வுயிஸ்ட் பார்த்திருக்கக் கூடும். எனவே தான் வுயிஸ்ட் இலங்கையர்கள் பற்றிய மட்டமான எண்ணங்களைக் கொண்டிருந்தார்.

பல நூல்களில் வுயிஸ்ட் ஒரு மனநிலை பிறழ்ந்து இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன என்றே குறிப்பிடுகின்றன. பிரபல டச்சு வரலாற்றாசிரியர் குடீ மொல்ஸ்பெர்கன் (E.C.Godée Molsbergen) எழுதிய “Tijdens de O.-I. Compagnie” என்கிற டச்சு மொழி நூலில் 47 வது அத்தியாயம் வுயிஸ்டின் ஆட்சியைப் பற்றி எழுதியிருக்கிறார். அவ்வத்தியாயத்துக்கு அவர் வைத்திருந்த தலைப்பு “De krankzinnige Gouverneur” (பைத்தியைக்கார கவர்னர்) என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நூலில் வுயிஸ்ட் மேற்கொண்ட அட்டூழியங்கள், சித்திரவதைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக மூன்று அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது .(1)

வுயிஸ்ட் காயங்களினால் வெளியாகும் இரத்தத்தைப் பார்த்து இன்பமடைந்தார். இரவு விருந்துக்காக கொண்டுவரப்படும் விலங்குகளை இறைச்சியாக கொண்டு வராமல் உயிருடன் அவற்றைக் கொண்டு வந்து அவற்றை தீயில் இடும் போது கேட்கும் சத்தத்தில் இன்பமடைந்தார். Sadist என்கிற துன்பூட்டுவேட்கை மிகையாகவே அவரிடம் இருந்தது. அது போல பாலியல் இன்பத்தையும் அப்படித்தான் அவர் அனுபவித்தார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஏனையோரும் வுயிஸ்டின் இயல்பையும், போக்கையும் பற்றி உணர்ந்துகொண்டனர்.

தன்னைப் பற்றிய மிகை மதிப்பு அவரிடம் இருந்தது. அவரின் ஆட்சி காலத்தில் கடும் தண்டனைகளை நிறைவேற்றினார். நீதியற்ற முறையில் விசாரணைகளை நடத்தினார். 

டச்சு காலத்தில் 1658 வரை காலி தான் இலங்கையின் தலைநகராக இயங்கியது. 1658 இலிருந்து தான் கொழும்பு தலைநகராக ஆனது. ஏனென்றால் கொழும்பு 1656 இல் தான் போர்த்துகேயரிடமிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். அப்போது டச்சு காலத்து ஆளுநர் வாசஸ்தலமாக இருந்தது இப்போது கொழும்பு கோட்டை புலனாய்வுப்பிரிவு தலைமையகத்துக்கு பின் புறமுள்ள புனித பீட்டர் தேவாலயம். போர்த்துகேயர் அதுவரை ஒரு தேவாலயமாக பயன்படுத்திவந்த அழகிய கட்டிடத்தைத் தான் தமது வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிற் பகுதிக்கு எதிரில் இருக்கும் Grand Oriental Hotelக்கு வலது புறமாக அந்த தேவாலயம் இன்றும் இருக்கிறது. ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய சில ஆண்டுகளில் 1804 இல் அதனை தமது படையினர் வழிபடுவதற்காக St Peter’s Church ஆக ஆக்கினார்கள்.

ஆளுநர் வுயிஸ்ட்டின் வாசஸ்தலமாகவும் இது தான் இருந்தது. வாசஸ்தலத்திலிருந்து அருகாமையில் தான் காலிமுகத்திடலும் இருக்கிறது. இதுவும் படைமுகாம்கள், நிர்வாக இயந்திரம் அனைத்தும் அன்றைய கொழும்பு கோட்டைக்குள் தான் இருந்தன. தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றும் இடமாக அன்று காலிமுகத்திடலை பயன்படுத்திக்கொண்டார் ஆளுனர்.

அங்கே நிரந்தமாக தூக்குமேடை இருந்தது. தூக்கிடுவதை நிறைவேற்றுகின்ற அலுகோசுமாரும் நிறைந்தமாக அங்கே பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். கசையடி, சுட்டுக் கொல்வது உட்பட பல அங்கே தண்டனைகள் அங்கே நிறைவேற்றப்பட்டன. அதை வேடிக்கை பார்ப்பதற்கு பல மனிதர்கள் காலிமுகத்திடலில் கூடினார்கள். தூக்கிடப்பட்டவர்களின் பிணங்கள் நாய்கள் பிய்த்துத் திண்ணுவதும், அழுகி சிதைந்து சின்னாபின்னமாகி நாற்றமெடுக்கவும் செய்தன. அதுபோல அப்படி கொல்லப்பட்டவர்கள் அதே காலிமுகத் திடலிலேயே அடக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் வுயிஸ்டுக்கு முன்னரே நிகழத் தொடங்கிவிட்டன. (2)

வுயிஸ்ட் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார். அவரின் ஊழலும் துஷ்பிரயோகமும் நீதித்துறையைக் கூட பாதித்தது. ஆளுநரின் பிழையான வழிகாட்டுதலின் மூலம் டச்சு சிவில் அதிகாரிகளும், படையில் அதிகார மட்டத்தில் இருந்தவர்களும் சாதாரணர்களும் கூட மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

டச்சு ஆட்சியில் கொழும்பை மையப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கியபின் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் களமாக காலிமுகத் திடல் இருந்தது.

ஆட்சிக்கவிழ்ப்பு பீதியின் விளைவு

வுயிஸ்ட் தனக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிமுயற்சி பற்றிய ஒரு வதந்தியை நம்பினார். அதைப் பற்றிய அதீத பீதியாலும் கற்பனைகளாலும் அவர் இந்த சதி முயற்சி குறித்து சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கைது செய்து அடைத்தார். 

காலி கோட்டையில் அன்று தளபதியாக இருந்த யொவான் பால் ஷாகென் (Joan paul schaghen) குற்றவியல் விசாரணைக்கு நடத்தப்பட்டு மோசடி குற்றமும் சுமத்தப்பட்டார். அவரை நீக்கி கொழும்பு கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பணியில் இருந்த சில முக்கிய போதகர்களும் இன்னும் சில அதிகாரிகளும் கூட பணிநீக்கம் செய்யப்பட்டு பத்தாவியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

அதேவேளை தனது ஆக்கிரமங்களை அவர் மேலும் அதிகரித்தார். 1729 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காவலர்களை ஓய்வில்லாமல் வேலை வாங்கினார். இரவுக் காவலுக்கு திடீர் என்று எழுப்பப்பட்டு வேலைவாங்குவது வழமைக்கு கொண்டுவரப்பட்டது. அது இரவு நேரக் கொள்ளையைத் தடுப்பதற்காக என்று அவரால் அறிவிக்கப்பட்டது. தூக்கமிழந்த இராணுவத்தினர் தமது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்கள். அப்படி எதிர்த்தவர்கள் அனைவரும் தடியால் தாக்கப்பட்டார்கள் அதன் பின்னர் கொழும்பு கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்களில் சிறைவைக்கப்பட்டார்கள். அவருக்கு எதிராக வளர்ந்து வந்த எதிர்ப்புகளை காலப்போக்கில் அவர் தனக்கு எதிரான அரச கவிழ்ப்பு சதியென நம்பத் தொடங்கினார். தான் நம்பிய புனைவுக்கு உருவகம் கொடுத்து காண்பவரையெல்லாம் சந்தேகம் கொள்ளும் மனநோய்க்கு ஆட்பட்டார்.

அவருக்கும் கிழக்கிந்திய கம்பனிக்கும் எதிராக சதி செய்வதற்காக உளவு பார்க்கும் ஒரு பரந்த வலையமைப்பு இயங்கியதாக அவர் நம்பினார். அப்படிப்பட்ட சந்தேகநபர்களை வரிசையாக தண்டித்தார். அவர்களை விசாரிப்பதற்காக ஒரு இராணுவ நீதிமன்றத்தை கொழும்பில் அமைத்தார். கிழக்கிந்திய கம்பனியின் எந்த அனுமதியுமின்றி விசேட இராணுவ நீதிமன்றத்தை (Blood council) அமைத்து அங்கே விசாரணைகளை நடத்தினார். அவரே அந்த விசேட நீதிமன்றத்தின் தலைவராகவும் தன்னை ஆக்கிக்கொண்டார். இந்த நீதிமன்றத்தின் மூலம் ஏராளமான டச்சு இராணுவத்தினரும், டச்சு பணியாளர்களும் கூட தண்டிக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் அவர் ஒரு மிக மோசமான சித்திரவதைகளை செய்கிற ஒரு சாடிஸ்ட் ஆட்சியாளராக ஆனார். உண்மைகளை வெளிக்கொணர்வது என்கிற பேரில் அவர் மிகவும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை மேற்கொண்டார். நகங்களைப் பிடுங்குதல் மற்றும் சூடான மெழுகை உடலில் ஊற்றுதல், காயச் சிதைவுகளில் அரிப்புகளைப் பயன்படுத்துதல், கால்களின் எலும்புகளையும் உடைத்தல் மட்டுமன்றி சந்தேக நபர்களின் தலைகளைத் துண்டிப்பது வரை அவர் அட்டூழியம் செய்தார். காலிமுகத்திடலை ஒரு கொலைக்களமாகவே ஆக்கினார்.

சில அழகிய யுவதிகள் காணாமல் போனார்கள். குற்றவாளிகள் மர்மமான முறையில் சாவடைந்தார்கள். இதை பற்றிய கதைகள் நாட்டுக்குள்ளும் அரசல்புரசலாக கதைகள் உலவின. கேள்வி கேட்ட அதிகாரிகள் பதவியுயர்களால் சலுகைகளாலும் வாயடைக்கபட்டார்கள். இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் பற்றிய விபரங்களும், அறிக்கைகளும் தொடர்ச்சியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒல்லாந்துக்கு சென்றடைந்தன. 1727 யூன் 7 அன்று இலங்கையில் இருந்த டச்சு அரசியல் சபையால் இரகசிய முறைப்பாடு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாவியா தலைமையகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன் பின் அதே மாதம் 30 ஆம் திகதி இன்னொரு முறைப்பாடும் சென்றது. ஆனால் வுயிஸ்ட் தனது ஆட்சியில் உள்ள வளர்ச்சியை அறிக்கையாக அனுப்பினார். குறிப்பாக அவர் சென்றதன் பின்னர் மிளகு உற்பத்தி எந்தளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது பற்றியெல்லாம் அறிக்கை எழுதினார். அவரின் காலத்தில் மிளகு உற்பத்தி விவசாயிகளின் நிலங்களில் ஒரு பகுதி டச்சுக் கம்பனியிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர் ஓகஸ்ட் மாதமும் விரிவான ஒரு இரகசிய முறைப்பாடு அவருக்கு எதிராக அனுப்பப்பட்டது. அதில் வுயிஸ்ட் நடத்தும் காட்டுத் தர்பார் பற்றிய விபரங்கள் அடங்கியிருந்தன.

தொடரும்

உசாத்துணை
  1. E.C.Godée Molsbergen, Tijdens de O.-I. compagnie, Amsterdam, Swets, 1932.
  2. වජිර ලියනගේ - ඕලන්දයේදී එල්ලා මැරූ ලංකාවේ සිටි ඕලන්ද ආණ්ඩුකාරයා, லங்காதீப – 13.06.2018 (இக்கட்டுரையில் வுயிஸ்ட் ஒல்லாந்தில் மரணதண்டனை அளிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருகிறது. ஆனால் அவர் பத்தாவியாவில் தான் மரண தண்டனை அளிக்கப்பட்டார்) 
நன்றி - தினகரன் 28.11.2021

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates