Headlines News :
முகப்பு » , , , , » நெப்போலியன் இலங்கையை பிரித்தானியாவுக்கு எழுதிக் கொடுத்த கதை - என்.சரவணன்

நெப்போலியன் இலங்கையை பிரித்தானியாவுக்கு எழுதிக் கொடுத்த கதை - என்.சரவணன்

ஒல்லாந்தருடன் போர் புரிந்து இலங்கையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள் என்றுதான் நாம் வாய்ப்பாடமாக கற்றிருக்கிறோம். ஆனால் அதில் சிறிது உண்மை தான் இருக்கிறது. அப்படி என்றால் முழுமையான உண்மை என்ன?

ஐரோப்பாவில் முக்கிய நாடுகளுக்கு இடையில் நிகழ்ந்த போர்களால் தற்காலிகமாக இலங்கையை இங்கிலாந்து கையகப்படுத்துவதாகத் தான் அது நிகழ்ந்தது. அது ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தான் நிகழ்ந்தது. அந்த ஒப்பந்தத்துக்குப் பெயர் ஏமியன் உடன்படிக்கை. இலங்கையின் வரலாற்றைப் பற்றி பேசுபவர்கள் அனைவரும் ஏமியன் ஒப்பந்தத்தின் வகிபாகம் குறித்து மிகச் சுருக்கமாக ஓரிரு வரிகளில் கடந்து போயிருப்பதையே கண்டிருக்கிறோம் இக்கட்டுரை அவ்வொப்பந்தத்தின் மூலம் இலங்கையை ஒல்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் எப்படி தமக்குள் கைமாற்றிக்கொண்டார்கள் என்கிற கதையை விளக்கமாக விபரிக்கிறது.

பிரித்தானியர் 1796 இல் ஒல்லாந்தரிடம் இருந்து இலங்கையைக் கைப்பற்றிவிட்டபோதும் இலங்கையை ஒல்லாந்தரிடம் இருந்து “1801 Treaty of Amiens” (அல்லது Treaty cession) என்கிற விட்டுக்கொடுப்பு ஒப்பந்த மொன்றுக்கு ஊடாக தங்களுக்குள் கைமாற்றிக்கொண்டார்கள். 1815 ஒரு சமரசத்துடன் செய்துகொண்ட கண்டிய ஒப்பந்தத்தின் மூலம் முழு இலங்கையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரித்தானிய கிரீடத்துக்கு உட்படுத்தப்பட்ட (Britain’s first crown colony) முதல் நாடாக இலங்கையை 1801 இல் பிரகடனப்படுத்தினார்கள்.

சூரியன் மறையாத நாடு எனுமளவுக்கு உலகில் பல நாடுகளை பிரித்தானியர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதும் அதன் பேணுகை என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டது. இலங்கையை Crown Colony என்று அழைத்ததைப் போல அவர்கள் மேலும் பல நாடுகளை Annexation, Proclamation, Treaty cession, Conquest, Settlement, Convention with, Lease, Purchase என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

1898 இல் வெளியான “The growth of Greater Britain, a sketch of the history of the British colonies and dependencies” என்கிற நூலில் அப்படி வெளியிட்டிருந்த பட்டியலொன்றை தற்செயலாகக் கண்டதையும் இக்கட்டுரையில் பகிர்ந்துள்ளேன். இந்தப் பட்டியலின் படி சில நாடுகளை குத்தகைக்கும், சில நாடுகளை விலைக்கு வாங்கியதையும், அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேற்றம் செய்யப்பட்டதையும் அந்த காலப்பகுதியையும் காணலாம்.

1795 வரை டச்சுக் கம்பனியின் ஆட்சியின் கீழ் இலங்கை பெருவாரியான கரையோரப் பிரதேசங்கள் இருந்தன. அப்போதைய டச்சுக் கொம்பனியின் கீழ் இருந்த ஆட்சிகளை நிர்வகிக்கும் தலைமை இடமாக Batavia இருந்தது. 12 ஒக்டோபர் 1798 தொடக்கம் 1 ஜனவரி 1802 வரை டச்சுக் கொம்பனி – பிரித்தானியா என இரு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது இலங்கை.

அதுபோல இந்த இடைக்காலத்தில் பிரித்தானியரின் அதிகார செல்வாக்கும் கூட இரண்டு சக்திகளின் கீழ் இருந்தது. இதை ஒரு வகையில் இரட்டை ஆட்சிகாலம் என்றும் அழைப்பார்கள். அதாவது இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் ஆட்சியை மேற்கொண்டார்கள்.

பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கெதிராக 1797ம் ஆண்டு நிகழ்ந்த கலகமே இலங்கையில் இரட்டையாட்சியொன்றை ஏற்படுத்த அடிப்படையான காரணமாகியது. 1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, தேசாதிபதியொருவர் பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். அப்படி இலங்கைக்கு நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி தான் சேர் பிரடரிக் நோர்த்.

அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகத்தையும், இறைவரி நிர்வாகத்தையும் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமே மேற்கொண்டு வந்தது. இதைத் தான் இரட்டை ஆட்சி என்றார்கள். இக்காலப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகளும் எழுந்தன.

ஆக டச்சு கிழக்கிந்திய கம்பனி, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி, பிரித்தானிய அரசு ஆகியவற்றின் கலப்பு ஆட்சி நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது தான் ஏமியன்ஸ் உடன்படிக்கை.

இறுதியாக இருந்த
டச்சு கட்டுப்பாட்டு பிரதேசம்

டச்சுக்காரர்களிடம் இருந்து ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் திருகோணமலைத் துறைமுகத்தையடுத்து 1796 இல் கொழும்பு துறைமுகத்தில் பெரும் சண்டை நிகழ்த்தியிருந்தார்கள். அது தான் அவர்கள் நடத்திய மாபெரும் இறுதிச் சண்டை எனலாம். கொழும்புடனான போர் பற்றிய மூலத் தகவல்களைப் பெறக்கூடிய ஆவணமொன்றைப் பற்றிய விபரங்களை CEYLON -GENERAL DESCRIPTION OF THE ISLAND, HISTORICAL, PHYSICAL, STATISTICAL (1876) என்கிற நூலில் கவனிக்க முடிந்தது. (1)

அதில் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து அதிகாரங்கள் மீளப்பெற்று பிரெடெரிக் நோர்த் ஆளுநராக நியமிக்கபட்டமைக்கான காரணம் குறிப்பிடப்படுகிறது.

அதாவது கிழக்கிந்தியக் கம்பனியினர் அதுவரை வழமையாக வரி வசூலித்து வந்த உள்நாட்டுச் சிங்கள – பௌத்தர்களை நீக்கிவிட்டு முஸ்லிம்களையும், பார்சி இனத்தவர்களையும், இந்திய செட்டிமார்களையும் பயன்படுத்தியதாகவும்; அந்த வரி வசூலிப்பாளர்களின் மூர்க்கத்தனத்தை எதிர்த்து சிங்களவர்கள் கிளர்ச்சி செய்ததாகவும் இந்த நிலைமையை டச்சுக்காரர்கள் ஊக்குவித்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இதை மெட்ராசிலிருந்து ஹோபர்ட் பிரபு கேர்னல் டி மேரோன் என்பவரை அனுப்பி அடக்கிவிட்டு இந்த நிலைமையை விசாரிக்க ஒரு குழுவை அமர்த்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாகத் தான் இலங்கையை மெட்ராஸ் நிர்வாகத்திடமிருந்து தனியாக பிரித்து இலங்கைக்கான முதலாவது கவர்னராக 1798இல் ப்ரெடரிக் நோர்த் நியமிக்கப்பட்டார்.

இனி இங்கே ஏமியன்ஸ் உடன்படிக்கைக்கு தள்ளிய ஐரோப்பிய அரசியல் காரணங்களையும், அதற்கு உந்திய ஐரோப்பாவில் டச்சு நாட்டின் வீழ்ச்சியைப் பற்றியும் விரிவாக அறிதல் முக்கியம்.

டச்சு வீழ்ச்சி – பிரெஞ்சு பின்னடைவு - பிரித்தானிய எழுச்சி

இலங்கையைப் பொறுத்தளவில் போர்த்துக்கேய ஆட்சியை துரத்திவிட்டு பின்னர் இலங்கையின் கரையோரப்பகுதிகளை கைப்பற்றி ஆட்சி புரிந்தவர்களாக ஒல்லாந்தர்களை குறிப்பிடுவோம். ஒல்லாந்தரை டச்சுக்காரர் என்றும் அழைப்போம். நெதர்லாந்து என்றும் அழைப்போம். இலங்கையில் ஒல்லாந்தர் என்றே அதிகம் அழைக்கப்படுகிறது. ஆக “டச்சு”, “ஒல்லாந்து”, “நெதர்லாந்து” என்றெல்லாம் நாம் அழைப்பது ஒன்றைத்தான் என்பதையும் இங்கு கூறிச்செல்வது நல்லது. (2)

இன்று அதன் பெயர் நெதர்லாந்து. கடல் வாணிபத்தில் தலைசிறந்து விளங்கியவர்களே வல்லரசுகளாக திகழ்ந்த காலம் ஒன்று ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி இருந்தது. அப்படி  17ஆம் நூற்றாண்டில் கடல் வல்லரசாகவும், பொருளாதார வல்லரசாகவும் திகழ்ந்தது தான் அன்றைய டச்சுக் குடியரசு.

1650ஆம் ஆண்டளவில் டச்சுக்காரர்களிடம் 16,000 வணிகக் கப்பல்கள் இருந்தன. ஐரோப்பாவில் ஒரு குட்டி நாடு அது.(3) மொத்தம் 41,543 சதுர கிலோமீட்டர்களை மட்டுமே கொண்ட நாடு. இன்னும் சொல்லப்போனால் இலங்கையின் பரப்பளவை விட சிறிய நாடு. ஆனால் வணிகத்தை விரிவுபடுத்த விளைந்த அவர்களின் நாடுகாண் பயணங்கள் இறுதியில் வலிமை குறைந்த நாடுகளைக் கைப்பற்றி அங்கிருந்து வளங்களை சுரண்டி கொழுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தாம் கைப்பற்றிய நாடுகளின் அரசியல் தலையீடுகளை செய்ததுடன், ஆட்சிகளை மாற்றியும், கைப்பற்றியும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டனர். கூடவே தமது சமய பரப்புகளையும் செய்தனர். உலகின் முதலாவது தோன்றிய முதலாளித்துவ அம்சமுடைய நாடாக நெதர்லாந்தைக் கூறும் அறிஞர்களும் இருக்கிறார்கள்.


1581–1795 காலப்பகுதியில் தான் அது டச்சுக் குடியரசாக இருந்தது. 1794இல் சிறிய அயல் நாடான இன்றைய பெல்ஜியத்தைக் பிரான்சிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிப்படை கைப்பற்றியது. 1795 இல் அதற்கடுத்த சிறிய நாடான ஒல்லாந்தையும் கைப்பற்றியது. அவ்வாறு டச்சுக் குடியரசைக் (ஒல்லாந்தைக்) கைப்பற்றி பத்தாவிய குடியரசு (Batavian Republic) என்று பெயரை அறிவித்தது.

1806 வரை பத்தவியா குடியரசு பிரெஞ்சுக் குடியரசின் அமைப்பைத் தழுவியதாகத் தான் இருந்தது. 1806 ஆம் ஆண்டு ஒல்லாந்து இராச்சியம் நெப்போலியன் போனபர்ட்டினால் (Napoleon Bonaparte) உருவாக்கப்பட்டு, ஒரு பொம்மை அரசாக நெப்போலியனின் தம்பியான லூயிசு போனபேர்ட்டினால் 1814 ஆம் ஆண்டுவரை ஆளப்பட்டது. இந்த காலப்பகுதியில் தான் நெதர்லாந்தின் முக்கியமான மாகாணமான ஒல்லாந்தின் பெயரால் முழு நாடும் அழைக்கப்பட்டது.

16ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் போர்த்துகேயரின் செல்வாக்குடன் நுழைந்த ஐரோப்பிய காலனித்துவ ஏகாதிபத்தியம் 17ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரின் நுழைவுடன் மேலும் விரிவுற்றதை நாமறிவோம். அதுவே 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியாவும், பிரான்சும் தம் பங்குக்கு தத்தமது ஆதிக்கத்தை விஸ்தரிக்கத் தொடங்கின. போர்த்துகேயரும், ஒல்லாந்தரும் நாடுபிடி சண்டையில் ஈடுபட்டு பலவீனப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவில் மொகலாயப் பேரரசும் வீழ்ச்சியுறத் தொடங்கியது. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் ஒரு புதிய வல்லரசின் கைகளின் சிக்குவதற்கான வாய்ப்புகள் திறக்கப்பட்டன. அந்த வாய்ப்புக்காக பிரித்தானியாவும் பிரான்சும் போட்டியிட்டன.

ஒல்லாந்தர் தோற்றார்களா? சமரசமாக ஒதுங்கினார்களா?

நெதர்லாந்து பிரான்ஸ் கைவசம் சென்றதால் நெதர்லாந்தின் காலனித்துவ நாடுகளும் பிரான்சிடம் வீழ்ந்துவிடுமோ என்று பிரித்தானியா பயந்தது. ஏற்கெனவே பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் பகைமையும் யுத்தங்களும் நீண்டவண்ணம் இருந்தன. அதுபோல பிரித்தானியாவும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் தமது காலனித்துவத்தை நிறுவ முற்பட்டுகொண்டிருந்த காலம். அதுபோல காலனித்துவ போட்டியில் பிரான்சும் இறங்கியிருந்தது. குறிப்பாக சொல்லப்போனால் இந்தியாவில் ஏக காலத்தில் ஒல்லாந்தும், பிரான்சும், பிரித்தானியாவும் அங்காங்கு கால் பதித்திருந்தன. ஒல்லாந்து பிரான்சிடம் சிக்கிக்கொண்ட நிலையில் ஒல்லாந்தின் கட்டுபாட்டில் உள்ள ஆசிய நாடுகள் பல பிரான்சின் கைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். அது தமது காலனித்துவ முயற்சிகளுக்கு மாத்திரமல்ல, பிரான்ஸ் மேலும் ஐரோப்பாவில் பலமடைந்து பிரித்தானியாவின் எதிர்காலத்தையும் சிக்கலாகிவிடும் என்று பயந்தது பிரித்தானியா.

இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றுவதற்காக ஒல்லாந்தருடன் பிரித்தானியா அடிக்கடி தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருந்த சமயம் அது.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னாசியாவில், அதாவது இந்தியாவையும், இலங்கையையும் உள்ளடக்கிய பிராந்தியத்தில், ஒல்லாந்து, பிரித்தானியா, பிரான்சு ஆகிய மூன்று ஐரோப்பிய வல்லரசுகளும் ஏறக்குறையச் சமமான வலுவுடன் காணப்பட்டன. இலங்கையின் கரையோரப் பிரதேசத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கரையோரத்தில் நாகப்பட்டினம் போன்ற இடங்களிலும் டச்சுக்காரர்கள் பலமாக இருந்தனர். ஆங்கிலேயர் தமிழ்நாட்டின் கரையோரத்திற் சென்னையிலும் (அன்றைய மதராஸ்), மேற்குக் கரையில் பம்பாயிலும் (மும்பாய்), வங்காளக் கரையிற் கல்கத்தாவிலும் (கொல்கத்தா), வேறுசில இடங்களிலும் தங்கள் அதிகார நிலையங்களை அமைத்திருந்தனர். பிரெஞ்சுக்காரர் இந்து சமுத்திரத்தில் மொரிசியஸ் தீவுகளிலும், தமிழ்நாட்டுக் கரையிற் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தனர். இக் காலகட்டத்தில் ஐரோப்பாவில் தோன்றிய அரசியற் பிரச்சினைகளால், ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் ஒருவருக்கொருவர் பகைவராகி விட்டனர். இவர்களுக்கிடையில் சிக்கிய டச்சுக்காரர் பல பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இவற்றின் விளைவுகளை இலங்கையும், இந்தியாவும் எதிர்கொண்டது.

இந்தியாவிலும் பிரெஞ்சுக்காரர் தோல்வியுற்றதன் விளைவாக, பிரித்தானியர் பலமடைந்தார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியர் ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். ஐரோப்பாவில் ஒல்லாந்தர் அதுவரை காலம் தொடர்ந்தும் முதன்மைச் சக்தியாக இருந்த நிலை முடிவுக்கு வந்தது. ஐரோப்பாவிலும், தூர தேசத்து காலனித்துவ நாடுகளிலும் ஏற்பட்ட நிகழ்வுகளினாலும், அதிக செலவு மிகுந்த ஐரோப்பிய கூலிப்படைகளைக் கொண்ட, பெரிய இராணுவ அமைப்பு ஒன்றை வைத்திருக்கவேண்டிய அவசியம் ஒல்லாந்தருக்கு ஏற்பட்டது.

ஆனால் நிதி ஒழுங்குகள் சீர்குலைந்திருந்ததுடன், டச்சு ஊழியர்களின் நடத்தைகூட சீரழிந்ததாகக் காணப்பட்டது. ஆர்வமும், உற்சாகமுமிக்கவர்களாகவும் ஒருகாலத்தில் இருந்த அவர்களின் நிலையம் தலைகீழாக மாறியிருந்தது. எனவே தான் இலங்கையைத் தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு பிரித்தானியருக்கு எதிர்ப்பே இருக்கவில்லை. டச்சுகாரர்களை விட பிரித்தானியர் ஒழுங்கு மிக்கவர்களாக இருந்தார்கள் என்பது உணமையே.

பிரித்தானியரின் தாக்குதல்களுக்கு ஓரளவு எதிர்ப்பை டச்சுக்காரர் காட்டியபோதும், திருகோணமலை 1795 ஆகஸ்ற்றிலும், மட்டக்களப்பு செப்ரெம்பரிலும், யாழ்ப்பாணம் சில நாட்களின் பின்னரும் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தன. பிரித்தானியா 1796ல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றியது. குறுகிய காலத்தினுள் மன்னாரையும் தம்வசமாக்கிய பிரித்தானியர் கரையோரமாக முன்னேறினர். வழியில் நீர்கொழும்பைத் தமதாக்கி, கொழும்புக்கு அண்மையிலுள்ள களனி கங்கையை 1798 பெப்ரவரியில் கடந்தனர். அதே ஆண்டு பெப்ரவரி 15 ம் திகதியன்று கொழும்பு வீழ்ச்சியடைந்ததோடு இலங்கையில் டச்சுக்காரரின் ஆட்சி இராணுவ ரீதியில் முடிவுக்கு வந்தது. 

இந்த ஒல்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய மூன்று  ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் நடந்த போராட்டத்தின் விளைவாகவே இலங்கையும், இந்தியாவும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயராட்சிக்கு உட்பட்டன. இப் போராட்டத்திற் திருகோணமலை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆதிக்கம் பெறவிரும்பிய எந்த வல்லரசுக்கும் திருகோணமலைத் துறைமுகம் மிகவும் அத்தியாவசியமானதாக விளங்கியது. 

இதனால் டச்சுக்காரரும், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் பதினெட்டாம் நூற்றாண்டில் மாறிமாறித் திருகோணமலையைக் கைப்பற்றினர். இதற்காக இலங்கையின் கண்டி மன்னனுடன் நல்லுறவு கொண்டிருப்பதும், இந்த ஐரோப்பிய வல்லரசுகளுக்கு அவசியமானதாக இருந்தது. 

இலங்கையின் கரையோரப் பிரதேசம் டச்சுக் காரருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த போதும் இலங்கையின் மத்திய பகுதியில் கண்டி இராஜ்ஜியம் தமிழ்பேசும் நாயக்க வம்சத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கண்டி மன்னனுடன் நல்லுறவு கொண்டிருப்பதற்காக பிரித்தானியர் பல தடவை மன்னனுக்குத் தூது அனுப்பினர். டச்சுக்காரரும் அவனுடன் உடன்படிக்கை செய்தனர். ஆனால் பின்னர் டச்சுக்காரரை இலங்கையிலிருந்து வெளியேற்ற விரும்பிய கண்டி மன்னன் தன் ஆதரவை பிரித்தானியருக்கு வழங்கினான்.

இந்த நிலையில், ஐரோப்பாவில் பிரான்சுக்கு எதிரான போரில் பிரித்தானியா வெற்றிபெற, இந்தியாவிலும், இலங்கையிலும் பிரித்தானியர் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. பதினெட்டாம் நூற்றாண்டு முடிவடையும் காலகட்டத்தில் ஒல்லாந்தர் இலங்கையில் தாம் ஆண்ட நிலப்பகுதிகளை இழந்தார்கள். அதிலிருந்து பிரித்தானியராட்சி நிலைபெறத் தொடங்கியது. இதன் விளைவாகப் படிப்படியாக இந்திய அரசுகளை வீழ்த்தி பத்தொன்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் தங்கள் பேரரசை பிரித்தானியர் முழுமையாக நிறுவினர். ஏமியன் ஒப்பந்தத்தின் மூலம் தான் பாண்டிச்சேரியை பிரான்ஸ் தம் வசம் தொடர்ந்து பேணும் உரிமையையும் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த ஏமியன் உடன்படிக்கையால் தான் பிரித்தானிய நிரந்தரமாக நிலைபெற்றதும், முழு இலங்கை நாடும் பறிபோவதற்கு வித்திடப்பட்டது.

பிரெஞ்சு புரட்சி

பிரெஞ்சு புரட்சி என்றும் புரட்சிகரப் போர் என்றும் தொடர் கிளர்ச்சிகளின் கதம்பமாக இருப்பது தான் பிரெஞ்சுப் புரட்சி.

 1700 களின் பிற்பகுதியில், பல ஐரோப்பிய நாடுகளில் முடியாட்சிகள் பலமாக நீடித்து வந்த காலம். பிரான்சிலும் அத்தகைய ஒரு அரசர் இருந்தார். அவர் மன்னர் லூயிஸ் XVI. 1789 ஆம் ஆண்டின் பிரெஞ்சு புரட்சி அவரது ஆட்சிக்கெதிரான மக்கள் எழுச்சியாகும்.

பிரெஞ்சு புரட்சியின் விளைவாக அந்த நாடு குடியரசாக மாறியது. ஐரோப்பாவில் முடியாட்சிகள் கலக்கமடைந்தன. ஆகஸ்ட் 1792 இல் தான் லூயிஸ் மன்னர் அதிகாரப்பூர்வமாக அரியணையில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அதன்பின்னர் பல ஐரோப்பிய நாடுகள் பிரெஞ்சு புரட்சிகரப் படைகளுக்கு எதிராக போரைப் பிரகடனம் செய்தன.

பிரான்சுக்கு எதிரான முதல் கூட்டணி 1792 இன் ஆரம்பத்தில் உருவானது. ஏப்ரல் 20, 1792இல், முதல் கூட்டணி (War of the First Coalition) போரைத் தொடங்கியது. ஜனவரி 1793 இல் மன்னர் லூயிஸ் XVI கில்லட் என்கிற இயந்திரத்தால் தலை துண்டிக்கப்பட்ட பின்னர் இந்த கூட்டணி மேலும் விரிவடைந்தது. இதில் ஆஸ்திரியா, பிரஷியா, பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், சார்டினியா, ஒல்லாந்து ஆகிய நாடுகள் அடங்கும்.

ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்த பிரான்ஸ், பின்னர் பல சமர்களை வென்றது. இதற்கிடையில், 1794 இல் இன்றைய பெல்ஜியத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 1795 இல், பிரெஞ்சு புரட்சிகர படைகள் ஒல்லாந்தை ஆக்கிரமித்தது.

ஆரம்பத்தில் ஒரு கலப்பு ஆட்சியாக அக்குடியரசு நிர்வகிக்கப்பட்டது. இளவரசன் ஐந்தாம் வில்லியம் (William V, Prince of Orange) அரச தலைவராக ஆனான். 

பிரெஞ்சு புரட்சிகரப் படைகள் ஒல்லாந்து மீது படையெடுத்தபோது, ஒல்லாந்தைச் சேர்ந்த சில பிரிவினர் அப்புரட்சிக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டனர். நிலைமை மோசமடைந்ததைக் கண்ட ஐந்தாம் வில்லியம் 1795 இல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். டச்சு குடியரசு பத்தாவியன் குடியரசு என்று பிரதியீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு பத்தாவியன் புரட்சி (Batavian Revolution) என்று அழைக்கப்படுகிறது.

William V Prince of_Orange
கியூ கடிதங்கள் (Kew Letters)

இளவரசர் ஐந்தாம் வில்லியம் இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் அரண்மனைக்குச் சென்று அங்குள்ள 'டச்சு மாளிகையில்' தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த கியூ மாளிகையில் இருந்தபடி தமது ஒல்லாந்து காலனி நாடுகளின் ஆளுநர்களுக்கு கடிதங்களை எழுதினார். அந்த கடிதத்தின் பிரகாரம் பாதுகாப்புகாக அக் காலனி நாடுகளை பிரித்தானியரிடம் ஒப்படைக்கும்படி அக்கடிதங்களில் எழுதினார். அந்தக் கடிதங்களைத் தான் “கியூ கடிதங்கள்” என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள் எழுதப்பட்ட அந்த மாளிகை இன்றும் மக்கள் பார்வைக்கு டச்சு மாளிகையாக இங்கிலாந்தில் இருக்கிறது.

இந்தக் கட்டளைகளின் மூலம் பிரெஞ்சு புரட்சிப் படைகள் இக்காலனித்துவ நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் என்று அவர் நம்பினார்.

இந்த கடிதங்கள் டச்சு காலனி நாடுகளை அடைய சிறிது காலதாமதம் ஆனது. இந்த இடைக்காலத்தில் ஆங்கிலேயர்களுக்கும் பத்தாவியா குடியரசிற்கும் இடையில் போர் மூண்டுவிட்டது. (உத்தியோகபூர்வமாக போர் அறிவிப்பு இல்லை என்றாலும்) ஒல்லாந்தர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் வலுவான நட்பும் இருக்கவில்லை. அவர்கள் வரலாற்றில் பல முறை தங்களுகிடையில் போரில் ஈடுபட்டுள்ளனர், இறுதியாக அதற்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதாவது 1783 வரை போர் நடந்திருக்கிறது.

லண்டனில் இன்றும் எவரும் சென்று காணக் கூடிய கியூ மாளிகை (Kew Palace)

இதற்கிடையில் கியூ கடிதங்களில் உள்ள குழப்பம் காரணமாக, டச்சு அதிகாரிகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களின் பிரதேசங்கள் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமா அல்லது அவர்களின் படைகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வைக்கப்பட வேண்டுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இளவரசர் ஐந்தாம் வில்லியம் இன்னும் ஒல்லாந்தின் ஆட்சியாளரா என்கிற கேள்வியும், சந்தேகமும் கூட அவர்களுக்கு எழுந்தது. அங்கிருந்து ஒரு தகவல் கீழைத்தேச நாடுகளுக்கு வந்து சேருவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்கு பல நாட்கள் எடுக்கும். சில அதிகாரிகள் ஒல்லாந்தை இப்போது பத்தவியா கலப்பாட்சியே ஆளுவதால் தாம் அந்த அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்குத் தான் கட்டுப்பட்டவர்கள் என்றார்கள்.

இதன் விளைவாக, சில பிரதேசங்களில் டச்சுக்காரர்கள் தங்கள் பிரதேசத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர், ஆனால் மற்ற இடங்களில் சண்டை வெடித்தது. மலாக்கா, அம்போனியா மற்றும் சுமாத்ரா போன்ற இடங்களில் தங்கள் பிரதேசங்களை சண்டையின்றி பிரிட்டனுக்குக் கொடுத்தன. ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒல்லாந்து  அதிகாரிகள் தமது பகுதிகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.


பல வெற்றிக் களங்களைக் கண்டு பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்ட நெப்போலியனுக்கு பெரும் உறுத்தலாகவும், சினம்கொள்ளச் செய்யும் நாடாகவும் பிரித்தானிரும் அதன் கடற்படையினரும் இருந்தது. அவர்கள் அத்தனை பெரிய பலசாலிகளாக திகழ்ந்தார்கள். தரைப்படை நடத்துவதில் தன்னிகரற்றுத் திகழ்ந்த நெப்போலியனுக்கு, இந்த பிரித்தானிய கடற்படைதான் தண்ணி காட்டியது என்றால் மிகையல்ல. 1801-ம் ஆண்டு பிரிட்டன் மீது படையெடுத்து அந்த நாட்டையே உருத்தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட நெப்போலியன் விரைவிலேயே கள நிலையைப் புரிந்துகொண்ட பின்வாங்கி ஏமியன்ஸ் ஒப்பந்தத்துக்கு உடன்பட்டதை நாம் கண்டோம்.

வெற்றிகளைப் போலவே நெப்போலியன் தனது பேராசையால் பல தோல்விகளையும் கண்ட போது பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி தனது கட்டுபாட்டில் இருந்த அமெரிக்காவின் பெரும்பகுதி நிலங்களை ஏக்கர் ஒன்று 3 செண்டுக்கு விற்றார். பிரித்தானியாவும் இதே காலத்தில் அத்தகைய ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இத்தகைய பின்னணி தான் ஏமியன்ஸ் ஒப்பந்தத்துக்கு அவர்களைத் தள்ளியதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

ஒல்லாந்தைக் கைப்பற்றிய வேளை நெப்போலியன் தன்னைத்தானே ஒல்லாந்தின் “காவலனாக” ஒல்லாந்து மக்களுக்கு அறிவித்துக்கொண்டார். ஆனால் ஒல்லாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையை இலகுவாக இங்கிலாந்துக்கு தாரைவார்த்தார் என்று விமர்சிக்கப்படுவதுண்டு. இரு பெரும் பலமான நாடுகளின் அதிகாரப் பந்தாட்டத்துக்குள் இலங்கை சிக்கித் தவித்தது என்றே கூறவேண்டும். (4)

Map of The Island of Ceylon Drawn by A. Arrowsmith 1805.

இலங்கைக் கரையோரங்களின் மீது பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு


இலங்கையில் உள்ள ஒல்லாந்து கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றுமாறு பிரித்தானியா; மதராஸில் (சென்னைப் பட்டணம்) இருந்த தமது ஆளுநருக்கு அறிவித்தது. அந்த ஆளுநர் சேர் ஹோபார்ட் (Lord Robert Hobart) இந்தப் பணியை கர்னல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்டின் (Colonel  James Stuart) படைப்பிரிவிடமும், ரியர் அட்மிரல் பீட்டர் ரேனியரின் (Admiral Peter Rainier) கடற்படையிடமும் ஒப்படைத்தார்.

Admiral Peter Rainier, Colonel  James Stuart, Lord Robert Hobart

ஆகஸ்ட் 1795 இல், திருகோணமலையைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினர். அவர்கள் திருகோணமலை கோட்டைக்கு வெளியே இராணுவத்தை இறக்கி கோட்டையைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர். சில நாட்களில் டச்சு துருப்புக்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் சரணடைய முடிவு செய்தது. இதே 1795 இல் தான் ஒல்லாந்தை (டச்சு) பிரான்ஸ் கைப்பற்றியது. அந்த ஒல்லாந்து பத்தாவியா குடியரசு என்று பெயர் மாற்றப்பட்டு 1806  வரை அந்த ஆட்சி தொடர்ந்தது என்பதை இங்கு குறிப்பாக மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும். வேறு வழியில் சொல்வதாயின் பிரித்தானியா 1795 இல் டச்சுக்காரர்களோடு (டச்சு கிழக்கிந்திய கம்பனி) சண்டையிட்டார்கள் என்பதைவிட பிரான்சுக்கு உரிய படைகளோடு சண்டையிட்டார்கள் என்று குறிப்பிட முடியும். திருகோணமலை, கொழும்பு துறைமுகங்களை அவர்கள் பிரான்சிடம் இருந்து தான் கைப்பற்றிக்கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது.

சில நாட்களுக்குப் பிறகு, திருகோணமலை ஊஸ்டன்பர்க் கோட்டை (Ostenburg Fort) சரணடைந்தது. அதன்பின்னர் பின்னர் டச்சு கோட்டைகள் ஒவ்வொன்றாக ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தன.


பிப்ரவரி 1796 இல், ஆங்கிலேயர்கள் கொழும்பைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடங்கினர். அவர்கள் தமது கப்பல்களில் வந்து நீர்கொழும்பில் இருந்து இறங்கி கொழும்பை நோக்கி அணிவகுத்தபோது, டச்சுக்காரர்கள் எதிர்க்கவில்லை. இறுதியில், டச்சு ஆளுநர் ஜோஹான் வான் எங்கல்பீக் (Johan van Angelbeek) ஆங்கிலேயர்களுக்கு தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டார். எங்கல்பீக் தான் இலங்கைக்கான இறுதி டச்சு ஆளுநர். 

ஏமியன் ஒப்பந்தம் (Treaty of Amiens)

இலங்கை 1796இலிருந்து மெட்ராஸ் ஆட்சியின் கீழ் சிறிது காலம் ஆளப்பட்டது. 1798 இல் ஆங்கிலேயர் முதற்தடவையாக இலங்கைக்கான ஆளுனரை நியமித்தனர். அவர் ஃபிரடெரிக் நோர்த். இவ்வாறு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டிஷ் முடியும் சேர்ந்து கலப்பாட்சி ஒன்றை இடைக்காலத்தில் ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால் அந்த கூட்டு நீண்ட காலம் நிலைக்கவில்லை. பிரித்தானியாவில் போர்களுக்கான உள்நாட்டுச் செயலாளராக இருந்த ஹென்றி டுண்டா ஸ் (Lord Henry Dundas)  1801இல் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து விடுவித்து நேரடியாக இங்கிலாந்து முடியின் கீழ் ஆட்சியைக் கொண்டுவந்தார். ஆனால் பின்னர் 1802 இல் செய்துகொள்ளப்பட்ட ஏமியன் உடன்படிக்கை இந்த முடிவை மேலும் உறுதிபடுத்தியது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் கிழக்கிந்திய கம்பனியால் நிர்வாகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிவில் உத்தியோகத்தர்கள் அனைவரும் மீண்டும் திருப்பி அனுப்பபட்டார்கள்.(5) 

ஏமியன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதை புகைப்படக் கருவியற்ற அந்தக் காலத்தில் அதை சித்திரித்து வரையப்பட்ட ஓவியம்

இதற்கிடையில், ஐரோப்பாவில் பிரான்ஸ் விடயத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று 1798 ஆம் ஆண்டு நிகழ்ந்த 'இரண்டாவது கூட்டணிப் போர்'. அதாவது பிரான்ஸ் கூட்டாட்சிக்கு எதிரான இரண்டாவது யுத்தம். மற்றொன்று நெப்போலியன் ஆட்சிக்கு வந்தது.

நெப்போலியன் 1799 இல் பிரான்சின் முதல் தலைவராக (கொன்சல்) ஆனார். ஒரு கட்டத்தில் நெப்போலியன் இங்கிலாந்துடன் ஒரு அமைதி பேச்சுவார்த்தைக்கும் முயற்சி செய்த போதும் அன்றைய பிரித்தானிய பிரதமர் வில்லியம் பீட் அதற்கு உடன்படவில்லை. 

இருப்பினும், 1801 இல் வில்லியம் பீட் பதவி விலகிய பின்னர், புதிய பிரதம மந்திரி ஹென்றி எடிங்டன் (Henry Addington) பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். இதற்கிடையில், டச்சு காலனிகளின் மீதான தமது உரிமைகளைக் கைவிடுவதாக ஐந்தாம் வில்லியம் அறிவிக்கிறார். இதனால் பத்தவியா குடியரசு அந்த காலனி நாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சட்டப்பூர்வமான அதிகாரத்தைப் பெற்றது.

இந்தச் சூழல் தான் சம்பந்தப்பட்ட பிரதான நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகளை திறந்தன. 1801 இன் பிற்பகுதியில், இந்தியாவின் முன்னாள் பிரிட்டிஷ் ஆளுநரான ஜெனரல் சார்லஸ் கொன்வொலிஸ் (Charles Cornwallis) இந்த பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்சின் ஏயன்ஸ் நகரை வந்தடைந்தார். அப்போது பிரான்ஸை நெப்போலியன் போனபார்ட்டின் சகோதரர் ஜோசப் போனபார்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி சார்ல்ஸ் டெலிடிரன்ட் (Charles Maurice de Talleyrand) ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இதற்கிடையில், பத்தவியா குடியரசின் பிரெஞ்சுத் தூதர் ரட்ஜர் யான் ஜான் சிம்மெல்பெனிக் (Rutger Jan Schimmelpenninck) என்பாரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இவர் தான் இந்தியாவின் பிரிட்டிஷ் ஆளுநரான ஜெனரல் சார்லஸ் கொன்வொலிஸ் கார்ன்வாலிஸுடன் இலங்கை உள்ளிட்ட முன்னைய  காலனி நாடுகளைப் பற்றிப் பேசுவதற்காக கலந்துகொண்டவர். இவர்களை விட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நான்காமவர் ஜோசே நிக்கலஸ் டி அசாரா (José Nicolás de Azara). இவர் ஸ்பெயின் அரசர் நான்காம் சார்ல்ஸ் அவர்களை பிரதிநிதித்துவபடுத்தியவர்.

பிரான்சிலுள்ள ஏமியன் நகரில் பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், பதாவியா குடியரசு (நெதர்லாந்து / ஒல்லாந்து / டச்சு எப்படியும் புரிந்துகொள்ளலாம்) நாட்டுப் பிரதிநிதிகள் கூடி ஏமியன் நகரில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதால் அந்த நகரின் பெயரிலேயே ஒப்பந்தம் அழைக்கப்பட்டுவருகிறது.


இந்தப் பேச்சுவார்த்தையில் தான் டச்சு காலனி நாடான இலங்கையையும், ஸ்பெயின் கைப்பற்றியிருந்த டிரினாட் (Trinad) என்கிற நாட்டையும் பிரித்தானியாவுக்கு வழங்கும் தீர்மானம் எடுக்கப்படுகிறது. அதுபோல பதிலுக்கு பிரித்தானியா தரப்பில் டச்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளையும், தென்னாப்பிரிக்க கேப் காலனியையும் பத்தாவியா குடியரசிடமே பிரித்தானியா மீளக் கையளிப்பது என்கிற உடன்பாடும் எட்டப்படுகிறது.

இலங்கையை அவ்வாறு வழங்குவதற்கு பத்தவியா குடியரசு ஒப்புக்கொள்வது தொடர்பான உரையாடல்கள் நிறைய இடம்பெற்றுள்ளன. அந்த உரையாடல்களை அன்றைய பல ஆவணங்களில் காணலாம். இவற்றைப் பற்றி The Annual Register or a view of the History, Politics, and Literature, for the year 1803. – London என்கிற நூலில் விபரங்கள் உண்டு. அதைத் தவிர சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான The Amiens Truce என்கிற நூலும் பல விபரங்களை உள்ளடக்கியது. 

இலங்கையைப் பற்றி ஒப்பந்தத்தில்

1802 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி ஏமியன்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரான்ஸ், பிரித்தானியா, பத்தாவிய குடியரசு மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கிடையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதில் பிரான்ஸ் தரப்பில் இருந்து நெப்போலியன் சார்பாக அவரின் சகோதரன் ஜோசப் போனபார்ட் கையெழுத்திட்டார். நெப்போலியன் இந்த உடன்படிக்கையை பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளித்த பின்னர் அவ்வொப்பந்தத்தில் அனைவரும் கைச்சாத்திட்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 12 அம்சங்கள் உள்ளன. அதில் 3வது, 5வது விடயங்கள் இலங்கைப் பற்றிப் பேசுகிறது.  இந்த ஒப்பந்தத்துக்கு முன்னரே இந்த நாடுகளுக்கு இடையில் உடன்பாடுகள் குறித்த கடிதப் பரிமாற்றங்களும், உரையாடல்களும் நிகழ்ந்திருப்பதை அபோது வெளியான பல்வேறு அறிக்கைகளைக் கொண்ட ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது.


இலங்கை தொடர்பாக காணப்படுகிற சரத்துக்கள் இவை தான்

பிரிவு iii

இலங்கையில் இருக்கும் டச்சுக்காரர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ட்ரினிடாட் தீவு தவிர [மற்றவற்றை] முந்திய போரில் பிரிட்டிஷ் படைகளால் கைப்பற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அல்லது அவர்களுக்குச்  சொந்தமாக இருந்த  குடியேற்றப் பகுதிகளையும் மற்ற உடைமைகளையும்  பிரித்தானியத்  தலைமை பிரெஞ்சு மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு அதாவது பத்தாவியா குடியரசுக்கும் கத்தோலிக்க தலைமைக்கும் திருப்பிக் கொடுகிறது.

பிரிவு v

ஆனால் பத்தாவியா குடியரசு டச்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கு சொந்தமான அதாவது  போருக்கு முன்பு அவர்களுக்கு சொந்தமாக இருந்த இலங்கையில் உள்ள சில  நிலப்பகுதிகள் அனைத்தையும் அவற்றின் கட்டிடங்கள் மற்றும் உடைமைகளுடன் பிரித்தானிய முடியிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவாதமளிக்கிறது.

இந்த ஏமியன் உடன்படிக்கைக்குப் பின்னர் தான் இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சி உறுதியாக நிறுவப்பட்டது. பிரித்தானியாவின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு (Crown colony) இலங்கை தான்.

இந்த ஒப்பந்தம் ஆங்கிலத்தில் தான் பல்வேறு நூல்களில் காணக்கிடைத்தன. ஆனால் இக்கட்டுரைக்காக மூல ஒப்பந்தத்தின் வடிவத்தைத் தேடினேன். ஆங்கிலத்தில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. பிரெஞ்சு மொழியில் தேடிய போது அந்த மூலம் பிரதியின் படங்கள் கிடைத்தன. டச்சு, பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிய மொழி நாடுகளுக்கு இடையில் இவை நிகழ்ந்திருந்தாலும் இந்த ஒப்பந்தம் பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் தான் ஆக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதாவது ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு கொலம்களைக் கொண்டதாகவும் இடதுபுறம் பிரெஞ்சு மொழியிலும் அதன் ஆங்கில சரத்துக்களின் வடிவம் அதன் அருகில் வலது புறமாகவும் கையெழுத்தில் எழுதப்பட்டிருப்பதை காண முடிகிறது. இறுதிப் பக்கத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டவர்களின் கையெழுத்துடன் முத்திரை பதிக்கப்பட்டு முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் நிகழ்ந்து 13 ஆண்டுகளின் பின்னர் முழு இலங்கையும் பறிபோவதற்கு காரணமான கண்டி ஒப்பந்தமும் இதே முறையில் தான் கையெழுத்தில் வலதுபுறம் ஆங்கிலத்திலேயும் அதன் சிங்கள மொழிபெயர்ப்பு அருகாமையில் உள்ள கொலத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பத்தையும் காணலாம். ஆனால் கண்டி ஒப்பந்தத்தில் முத்திரைகள் கிடையாது.

கண்டி ஒப்பந்தத்தில் இடது பக்கம் ஆங்கிலத்திலும் வலது பக்கத்தில் அதன் சிங்கள மொழிபெயர்ப்பையும் கொண்டிருப்பதைக் காணலாம்

ஏமியன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 27ஆம் திகதி நான்கு தரப்பினரும் ஒரு துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிட்டது. ஏனென்றால் அவ் ஒப்பந்தம் ஆங்கில - பிரெஞ்சு மொழிகளில் தான் வரையப்பட்டிருந்தது.  இந்த இரண்டு மொழிகளில் மாத்திரம எழுதப்பட்டதானது அங்கே பாரபட்சமாக கருதப்படாவிட்டாலும் கூட அது ஒரு முன்மாதிரி அணுகுமுறையாக இராது என்பதால் டச்சு - பிரெஞ்சு பிரதிநிதிகள் ஒரு தனி ஒப்பந்தப் பிரதியில் கையெழுத்திட்டனர். குறிப்பாக அதில் பத்தாவியா குடியரசு சில இழப்பீடுகளுக்கு நிதி ரீதியாக பொறுப்பேற்காது என்பதை உறுதிசெய்துகொள்வதற்கானதாக இருந்தது. இந்த பிரேத்தியேக ஒப்பந்தப் பிரிவை அவர்கள் Separate article to the definitive treaty, added thereto March 27, 1802 என்று குறித்துக்கொண்டார்கள். 

மகாவம்சத்தில் இலங்கை

இலங்கையின் வரலாற்றை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துவரும் புனித நூலான மகாவம்சத்தில் இந்த முக்கிய நிலைமாறுகால விடயங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மகாவம்சத்தின் மூலத் தொகுதியான முதலாவது தொகுதி கி.மு. 483 லிருந்து கி.பி. 301 ஆம் வரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அதுபோல இரண்டாம் தொகுதி  கி.பி  302 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியை பதிவு செய்திருக்கிறது. அதாவது ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயர்களின் கைகளுக்கு ஆட்சி மாறுகின்ற அந்த நிலைமாறுகாலம் இரண்டாவது தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மகாவம்சத்தில் இந்த நிலைமாறுகாலகட்டத்தில் இலங்கை தொடர்பில் உள்நாட்டில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதேயொழிய சம்பந்தப்பட்ட நாடுகளின் கைகளில் கையில் இலங்கை சிக்கித்தவித்தது எப்படி, இலங்கை மக்களுக்கே தெரியாமல் இலங்கையல்லாதவர்கள், இலங்கைக்கு வெளியில் இலங்கையின் தலைவிதியை எப்படி பேரம்பேசி முடித்துக்கொண்டார்கள் என்பது பற்றிய விபரங்கள் அந்த மகாவம்சத்தில் பேசப்படாதது வியப்பான விடயம்.

இந்தியாவின் மாநிலமாக இலங்கை

இந்த ஒப்பந்தம் நிகழாது இருந்திருந்தால் இலங்கை நெப்போலியனின் காலனி நாடாக ஆகியிருக்கும். பிரெஞ்சுக் காலனியாக தொடர்ந்திருக்கும். சிலவேளைகளில் பிற்காலத்தில் பாண்டிச்சேரி போன்ற ஒன்றாகவும் இருந்திருக்கும்.

இன்னொருபுறம் இந்த ஒப்பந்தம் நிகழாது இருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் இலங்கையை தமது இந்திய காலனியின் ஒரு அங்கமாகக் கூட தொடர்ந்து பேணியிருந்திருக்கக்கூடும். 1796 – 1801 வரையான காலப்பகுதியில் இலங்கையின் மீதான நிர்வாகம் அங்கிருந்து தான் மேற்கொள்ளப்பட்டது.

பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய இரண்டு ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையில் தோன்றிய போட்டியில் பிரித்தானியா வெற்றி பெறாது பிரான்ஸ் வெற்றி பெற்றிருந்தால் இன்று ஆசியாவில் ஆங்கில மொழியும், ஆங்கில மொழி கோலோச்சும் நாடுகளின் பெருக்கமும், ஆங்கிலேய பாராளுமன்ற ஆட்சி முறையும் மேலோங்கியிருக்க வாய்ப்பில்லை. அவ்வாறான நிலைமையுற்றமைக்குக் காரணம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியாவும் பிரான்சும் நாடுபிடி சண்டைகளை நடத்தி, இறுதியில் ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் பிரித்தானியா வெற்றி பெற்றதன் விளைவே என்று கூறலாம்.

இலங்கையை ஐரோப்பியர் கைப்பற்றும்போது “இலங்கை” (Ceylon)என்கிற அடையாளத்தை இலங்கைக்கு வெளியில் இருந்த நாடுகள் தந்தனவே அன்றி இலங்கையர்கள் அப்படி ஒரு அடையாளத்தைக் கொண்டிருக்கவில்லை. இலங்கைத் தீவுக்குள் வெவ்வேறு ராஜ்ஜியங்கள் இருந்தன. அந்த ஆட்சிகள் இன ரீதியில் வேறுபட்டிருந்தன. இலங்கையை கைப்பற்றியவர்கள் தமக்கு சாதகமாக அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செலுத்தினார்கள். இறுதியாக வெளியேறும்போது அதை முன்னர் இருந்தபடி விட்டுச் செல்லவில்லை. பெரும்பான்மை இனத்தின் பிடியில் சிக்கிய இலங்கையாக அதனை விட்டுவிட்டுச் சென்றார்கள்.

அதே உதாரணத்தை இன்னொரு விதமாகப் பாருங்கள். இந்தியா என்கிற நாடும் காலனித்துவத்தால் உருவாக்கப்பட்ட நாடே. மொழிவாரி மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதே இந்தியா என்கிற நாடு. அதே ஆங்கிலேயர்கள் இந்த ஏமியன் உடன்படிக்கை நிகழ்வு சற்று மாறுபட்டிருந்தாலும் இலங்கையையும் அப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஒரு மாநிலமாக அவர்கள் ஆக்கிவிட்டு போகும்போது இலங்கையையும் இந்தியாவாவின் அங்கமாகவே விட்டுவிட்டுச் சென்றிருக்கக் கூடும்.

இந்தியாவை சுற்றி இருந்த அந்தமான், நிகோபார், டியாகோ கார்சியோ, சாகோஸ், மாலைதீவு போன்ற தீவுகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஆண்டார்கள்.  இவற்றில் இந்தியாவுக்கு நெருக்கமான தீவுகளாக இருந்த அந்தமான் நிகோபார் போன்ற தீவுகளை இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் வைத்துக்கொண்டவர்களுக்கு; அதைவிட அருகாமையிலிருந்த நாடான இலங்கையையும் அவர்களால் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக ஆக்குவது ஒன்றும் கடினமான ஒன்றல்ல. அப்படி ஒன்று நிகழாததால் தான் இன்றும் இலங்கை என்கிற நாடு தனி நாடாக எஞ்சியிருக்கிறது என்கிற முடிவுக்கு நாம் வர முடியும். 

சூரியன் அச்திமிக்காத சாம்ராஜ்யம் என்று கூறுமளவுக்கு பரந்து விரிந்திருந்த பிரித்தானிய குடியேற்ற நாடுகள்.

முழு இலங்கையும் பறிபோன கதை

ஏமியன்ஸ் ஒப்பந்தம் பின்னர் அற்ப ஆயுளில் முறிந்தது ஒரு தனிக்கதை. ஒரே ஆண்டில் இரு நாடுகளின் மீதும் மீண்டும் போர்மேகங்கள் கவியத் தொடங்கின. நெப்போலியன் தன்னை பேரரசனாக நிலை நிறுத்துவதற்கான கவனத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் நெப்போலியனுக்கு கூட்டாளி நாடுகளாக இருந்த ரஷ்யா, ஆஸ்திரியா போன்ற நாடுகளை தன் பக்கம் ஈர்த்து தமது நட்பு நாடுகளாக ஆக்கிக் கொண்டது பிரித்தானியா. அந்தத் துணிவுடன் 1803 ஆம் ஆண்டு பிரான்சுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தது இங்கிலாந்து. அடுத்து ஐரோப்பாவில் பத்தாண்டுகாலம் நடந்த பல கட்டப் போரில் வெற்றியும், தொல்வியுமாக இறுதியில் நெப்போலியன் தோல்வியுற்று நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட கதை ஒரு தனி வரலாற்றுக் காவியம் தான்.

இந்த இடைக்காலத்தில் பிரித்தானியா இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் தமது நிலைகளைப் பலப்படுத்தி ஆட்சியை மெதுமெதுவாக நிறுவிக் கொண்டே முழு நாட்டையும் கைப்பற்றும் இலக்குடன் கண்டியுடன் மோதல்களை செய்துகொண்டே இருந்தது.

1803 இல் ஐரோப்பாவில் நெப்போலியனுக்கு எதிராக போர் பிரகடனம் செய்த அதே ஆண்டு பிரித்தானியா இலங்கையில் கண்டியைக் கைப்பற்ற படையெடுத்தது. ஆனால் படுதோல்வியை தழுவிக்கொண்டது பிரித்தானிய படை. ஆனால் அதன் பிறகு தனது உளவுச் சேவையை உச்ச அளவில் பயன்படுத்தி பல விதமான சதிகளைச் செய்து கண்டி அரசுக்குள்ளேயே அரசவைக்குள் திட்டமிட்டு பிளவுகளை ஏற்படுத்தி ஈற்றில் கண்டியைக் கைப்பற்றியது.

1796 இல் பிரித்தானியர் இலங்கை முழுவதையும் கைப்பற்றியதாகவும், 1802 இல் இலங்கை, பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டபோதும் நாட்டின் பெரும்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக வன்னியும், கண்டி இராச்சியமும் சுதந்திரப் பிரதேசங்களாகவே இருந்தன. 1803 இல் பண்டாரவன்னியனுக்கும், பிரித்தானிய தளபதி (F. W. Von Drieberg) வொன் டிறிபேக்குக்கும் இடையில் ஏற்பட்ட நேரடி மோதலில் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டபோதும் கண்டியோடு தொடர் இழுபறியை ஆங்லேயர்கள் சந்தித்துக்கொண்டே இருந்தார்கள். கண்டிச் சமர்களில் பெற்ற தோல்விகளின் காரணமாக இனிமேல் கண்டியோடு யுத்தம் செய்து கைப்பற்றும் எண்ணத்தை அவர்கள் கைவிட நேரிட்டது. அதற்குப் பதிலாக அவர்கள் இராஜதந்திர வழிகளையும், உளவுச் சேவையைப் பலப்படுத்தி குள்ளநரித்தனமான சதிகளையும் பிண்ணித்தான் ஏறத்தாள 20 ஆண்டுகளின் பின்னர் 1815 இல் கண்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் முழு இலங்கையையும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்படுத்தினார்கள்.


1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராஜாதிராஜசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். அந்த இறப்பின் பின் ராஜாதிராஜசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரும் புதிதாக முடிசூட்டப்பட்ட கண்ணுசாமிக்கு சூட்டப்பட்டது. 

ஏமியன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டு அடுத்த ஆண்டே கண்டியை கைப்பற்ற எடுத்த முயற்சியை கண்டி அரசனால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை சூழ்ச்சியாக வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.

1815 இல் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரங்களை பிரித்துக்கொண்டு ஆள உடன்பட்டாலும் தமது அரசியல், இராணுவ நிலைகளை பலப்படுத்திய பின்னர் சுதேசிகளை முழுமையாக அதிகாரத்திலிருந்து துரத்திவிட்டு முழுத் தீவையும் ஆங்கிலேயர்கள் தமது ஆட்சின் கீழ் கொண்டு வந்தார்கள். இதில் கண்டிய அரசியல் உட்குழப்பங்களின் வகிபாகதத்தின் பாத்திரம் எத்தகையது என்பது வேறொரு தனிக்கதை.

ஏமியன் ஒப்பந்தமும் கூட அப்படித்தான். ஆங்கிலேயர்களுக்கு தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொள்ளத் தான் அப்படியொரு ஒப்பந்தம் தேவைப்பட்டது. ஒல்லாந்தரை முழுமையாக கரையோரப் பகுதிகளில் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியும் வரை தான் தேவைப்பட்டது. ஏமியன் ஒப்பந்தம் செய்துகொண்ட அடுத்த ஆண்டே பிரான்சுக்கு எதிரான யுத்த பிரகடனத்தை பிரித்தானியா செய்து கொண்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும். அதன் பின்னர் ஏமியன் ஒப்பந்தம் இயல்பாகவே காலாவதியானதும், அது குப்பைக்கூடைக்குப் போனதும் தான் வரலாறு. கண்டிய ஒப்பந்தமும் இது போலவே இரண்டே ஆண்டுகளில் காலாவதியானது. 1818 இல் ஊவா – வெல்லஸ்ஸ என்கிற மாபெரும் கிளர்ச்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடங்கியதையும் அது மிகவும் குரூரத்தனமாக ஒடுக்கப்பட்டதும் தனிக்கதை.

கண்டி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட அதே 1815 ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டுத் தொடர்களும் (Congress of Vienna), ஒப்பந்தங்களும் நிகழ்ந்தன. அந்த ஒப்பந்தத்தை வியன்னா ஒப்பந்தம் (Treaty of Vienna - 1815) என்று அழைப்பார்கள். நெப்போலியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏனைய நாடுகள் தமக்கிடையில் சமரசமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்னர். எவற்றை தக்கவைத்துக்கொள்வது, எவற்றை விட்டுகொடுப்பது என தமக்கிடையில் உத்தரவாதங்களை உறுதிசெய்துகொள்ள இந்த பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தமும் அவர்களுக்கு அவசியப்பட்டது. அப்படிப்பட்ட உத்தரவாதங்களில் ஒன்று தான். இங்கிலாந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட இலங்கை, மால்டா, மொரிசியஸ் போன்ற நாடுகள் தமக்கானவை என அங்கு உத்தரவாதம் செய்துகொண்டன. இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட வேளை இலங்கையில் கண்டி ஒப்பந்தத்தின் மூலம் முழு நாட்டையும் இங்கிலாந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

உலகத்தின் பார்வையில் இலங்கை என்கிற குட்டித்தீவுக்கு இருக்கின்ற மவுசு சாதாரணமானதல்ல. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் அப்படிப்பட்டது. “உலகின் மிக மதிப்புமிக்க காலனித்துவ உடைமை” என பீட் (Pitt) என்கிற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஏமியன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட 1802இல் பாராளுமன்றத்தில் விபரித்தார்   

அதனால் தான் இலங்கை தனது வரலாற்றில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளைச் சந்தித்துள்ளது. ஆக்கிரமித்தவர்கள் உள்நாட்டவர்களால் போர் புரியப்பட்டு விரட்ப்பட்டுமிருக்கிரார்கள். அதுபோல ஒரு ஆக்கிரமிப்பாளர் மறு ஆக்கிரமிப்பாளரால் துரத்தியடிக்கப்பட்டு மாறி மாறி அவர்களே ஆக்கிரமித்து ஆண்டு போயிருக்கிறார்கள். இறுதியாக ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர்களைத் தவிர ஏனைய அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் ஏதோ ஒரு வகையில் விரட்டபட்டுத் தான் போயிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் அவர்களாக விட்டுவிட்டு போனார்கள். அவர்கள் அவ்வப்போது சுதேசிகளின் சமர்களையும், எதிர்ப்புகளை ஒவ்வொரு காலகட்டத்தில் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் இலங்கையைக் கைவிட அந்த எதிர்ப்புகள் வலுவான காரணியாக இருக்கவில்லை. மாறாக இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஏற்பட்ட காலனித்துவத்துவ ஆக்கிரமிப்பை கைவிடும் கொள்கை உலக அளவில் வலுத்ததும் ஒரு காரணம் தான். இந்தியா போன்ற பலமான பெரிய நாடுகளைக் கைவிடும் போது இலங்கை என்கிற குட்டித்தீவை வைத்திருப்பதில் அரசியல் – பொருளாதார ரீதியில் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தே அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.

ஆனாலும் இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்தியா போன்ற பெரிய நாட்டைக் கைவிட்டு செல்லுகின்ற போதும் கூட இலங்கையை அவர்கள் முழுவதும் கைவிடத் தயாராக இருக்கவில்லை. இலங்கையில் அவர்களின் பிடியை வைத்திருக்கவே செய்தார்கள். எனவே 1972 இல் இலங்கை ஒரு குடியரசாக ஆகும் வரை அந்த பிடி நீடித்தது.

அடிக்குறிப்பு

 1. பிரெஞ்சுப் படையில் கப்டனாக இருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த C.S.Tombe இலங்கை, இந்திய கடற்பயணம் செய்த பின் 1810இல் அதாவது (இலங்கை 1815 இல் ஆங்கிலேயர்கள் முழுமையாக கைப்பற்ற முன்) வெளியிட்ட VOYAGE AUX INDES ORIENTALES என்கிற அந்த நூலில் ஒரு தனிப்பகுதி ATTAQUE ET DEFENSE DE COLOMBO (கொழும்பின் மீதான தற்காப்புத் தாக்குதல்) சுமார் 40 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இது பிரெஞ்சு மொழியில் தான் இந்த நூல் இருக்கிறது. இத்தகைய நூல்களுக்குள் இலங்கையின் காலனித்துவ வரலாற்றை ஆராய்ந்தவர்கள் பலர் நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்றேபடுகிறது. இப்படி இலங்கையின் மீதான காலனித்துவ ஆட்சி காலத்தைப் பற்றி பேசுகிற ஏராளமான மூல ஆவணங்கள் டச்சு, போத்துக்கீச, பிரெஞ்சு போன்ற மொழிகளில் இருகின்றன. அவை எல்லாம் நமது மொழிகளில், அல்லது ஆங்கிலத்திலும் கிடைக்கும் போது தான் விடுபட்டுப்போன பல வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணர முடியும்.
 2. சிங்கள மொழியில் போர்த்துகேயரை “பறங்கி” என்று அழைப்பார்கள். ஒல்லாந்தரை “ஒலந்த” என்றும் “லந்தேசி” என்றும் அழைப்பார்கள்.
 3. Kent, Deborah - In the middle colonies - New York : Benchmark Books, 2000
 4. D.C. Wijewardena - The Revolt in the temple – Sinha Publication – 1953, P.84
 5. S.Peter - A Short Hoistory of modern times Ceylon & World – from 1796 to the present day – S.S.shanmuganathan & sons, Jaffna - 1939
 6. John D.Grainger, The Amiens Truce – The Boydell Press, 2004
 7. இந்தக் கட்டுரைக்காக ஏமியன் உடன்படிக்கை குறித்து தேடிக்கண்டுபிடித்த பல்வேறு ஆவணங்களில் மிகவும் மிகவும் மூல ஆவணமாக அமைந்தது லண்டனில் வெளியிடப்பட்ட Cobbetts - Annual Register – Volulme – I, From January to June, 1902 என்கிற ஆவணம். ஏமியன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு மூன்று மாதங்களில் வெளிவந்த இந்த 220 ஆண்டுகால பழைய ஆவணம் மொத்தம் 768 பக்கங்களைக் கொண்டது. வில்லியம் கொபட்ஸ் (Wiiliam Cobbets) தொகுத்த இந்த அறிக்கையானது ஆண்டு தோறும் பிரித்தானியாவின் அரசியல், நிர்வாகத்துறை குறித்த ஏராளமான துளியமான விபரங்களைக் கொண்ட அறிக்கையாகும். வில்லியம் கொபட்ஸ் பிரித்தானிய அரசியல் விவகாரங்களை வாராந்தம் அறிக்கையாக வர்த்தக ரீதியில் தொகுத்து வெளியிட்டு வந்த ஒருவர். பாராளுமன்ற விவாதங்களை அறிக்கையிடும் கலாசாரத்தின் முன்னோடிகளில் ஒருவராக அவரைக் கொள்ள முடியும். அதற்கு முன்பே பாராளுமன்ற விவாதங்களைத் தொகுத்து வெளியிடும் பணியை மேற்கொண்டிருந்தவர் லூக் ஹன்சார்ட் (Luke Hansard) அந்த ஹன்சார்ட்டின் பெயரில் தான் இன்றும் ஹன்சார்ட்கள் அழைக்கப்படுகின்றன. வில்லியம் கொபட்ஸ் தொகுத்த வாராந்த அரசியல் நிலவர அறிக்கைகள் அந்தக் காலத்திலேயே வாரத்துக்கு 6000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. கொபட்டின் அறிக்கையில் 321 இல் இருந்து இந்த ஒப்பந்தத்தின் விரிவான அம்சங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 8. Burke, Edmund (ed) (1803). Annual Register, Volume 45. London: Longman and Greens. C
 9. The Annual Register, or a view of the Politics, and iterature, for the year 1802, London Printed by R.Wilks, 1803.
 10. தென்னாசியாவில் ஆங்கிலேயர்களிடம் இருந்து இறுதியாக விடுதலை பெற்ற (1965) நாடு மாலைதீவு. டட்சுக்கரர்களை இலங்கையை விட்டு விரட்டிய அதே காலத்தில் தான் மாலைதீவிலிருந்தும் டச்சுக்காரர்களை ஆங்கிலேயர்கள் விரட்டியடித்துவிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். 1887 இல் மாலைதீவு ஆங்கிலேயர்களுக்கு எழுதிகொடுக்கப்பட்டபோது, மாலைதீவு சுல்தானுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநருக்கும் இடையில் தான் அதற்கான  ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
 11. HENRY MARSHAL - CEYLON: A GENERAL DESCRIPTION OF THE ISLAND AND ITS INHABITANTS ; AN HISTORICAL SKETCH CONQUEST OF THE COLONY BY THE ENGLISH - lONDON - 1846
 12. Fr S. G. Perera, ed. The Douglas Papers, Colombo, 1933, p. 32. Sylvester Douglas’s notes of 19 September 1800.

மேலதிகமாக உதவியவை:

 • The gentleman's magazine: and historical chronical for the year MDCCV. Volume *LXXV by Sylvanus urban - 1805
 • Ajay Parasram - Becoming the State: Territorializing Ceylon, 1815 – 1848 - Carleton University, Ottawa, Ontario, 2017
 • ALICIA SCHRIKKER - DUTCH AND BRITISH COLONIAL INTERVENTION IN SRI LANKA - 1780 - 1815, Expansion and Reform - LEIDEN • BOSTON 2007
 • H.A.Colgate - The Royal navy and trincomalee - The history of their conection c 1750-1958 - (The Ceylon Journal of historical and social studies Vo.7 - No 1, 1964)

நன்றி - காக்கைச் சிறகினிலே மார்ச் - 2021

நெப்போலியன் இலங்கையை பிரித்தானியாவுக்கு எழுதிக் கொடுத்த கதை - என்.சரவணன் by SarawananNadarasa 

Share this post :

+ comments + 1 comments

10:21 AM

Wow superb root search with proofed facts

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates