Headlines News :
முகப்பு » , , » ராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்

ராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்


ராகவன்! இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். "புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இதில் என்ன உண்மை உண்டு நான் சொன்னதாகச் நீங்கள் வெளியிட்டிருக்கிற (மஞ்சள் நிறத்தில் அடையாளமிட்டிருக்கிறேன்.) வசனங்கள் எத்தனை அயோக்கியத்தனம் மிகுந்த அணுகுமுறை. இப்படி நான் எங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

இங்கு பலருக்கு “தலித்தியம்” என்பது புலியெதிர்ப்புக்காக எடுத்துக்கொண்டோடிய ஆயுதம். எங்களுக்கு தலித்தியம் என்பது சாதிய விடுதலையையும் இணைத்த சமூக விடுதலைக்கான சித்தாந்தம். எடுப்பார் கைப்பிள்ளை போல கடந்த இரண்டு தசாப்தங்களாக (குறிப்பாக புலிகள் இருந்த காலத்தில்) புலியெதிர்ப்புக்கு மட்டுமே அதிகம் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது. அப்படியான சக்திகளுடன் தலித்தியம் – ஜனநாயகம் பேச்சுரிமை, ஏனைய சமூக விடுதலை சார் பணிகளில் மாத்திரம் என்னை இணைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் புலியெதிர்ப்புக்கான போடுதடியாக என்னையோ, எனது தலித்தியம் சார் முயற்சிகளையோ பயன்படுத்திக்கொள்ள ஒருபோதும் விட்டதில்லை. செல்லன் கந்தையன் விவகாரத்தில் கூட நான் எச்சரிக்கையாகவே இருந்திருக்கிறேன். இன்று எனது எச்சரிக்கை எந்தளவு சரியானது என்பதை எனக்குள் உறுதி செய்துகொண்டுள்ளேன். 

இவர்களால் புலியெதிர்ப்பு என்கிற பேரில் பாசிச சிங்கள அரசுக்கு ஆதரவாகவும், புலிகளை அழிக்கும் ஆயுதமாகவும் தலித்தியமானது பயன்படுத்தப்பட்டது தான் மிச்சம். சகலவகை பாசிசத்தையும் எதிர்த்து நின்ற என் போன்றோர் கூட தலித்திய சிந்தனையை முன்னெடுப்பதிலும், முன் நகர்த்துவதிலும் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வந்திருக்கிறோம்.

அதிலும் தலித்தியம் பேசிய தோழர்களில் சிலரை பின்னணியில் இருந்து இயக்கிய / இலாபமடைந்த பலரும் கூட தலித் அல்லாதவர்கள் தான். அவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு தலித்திய செயற்பாடுகள் காவு கொடுக்கப்பட்டது.

தலித் ஆதரவாளர்களாக அவர்கள் வேடம் தரித்தபடி விலாசம் காட்டி வந்தார்கள். அவர்களுக்கு இது பெருமிதம் தரும் விலாசம் மட்டுமே. எங்களுக்கு இது வாழ்வு. எங்கள் அடுத்த சந்ததிக்கும் நாங்கள் எதிர்கொண்ட அவமானங்களையும், அநியாயங்களையும், அசமத்துவங்களையும் கடத்தப்பட்டுவிடக்கூடாது என்று எங்கள் அடையாளங்களை பகிரங்கமாக அறிவித்துக்கொண்டு இயங்குவது என்பது; ஆதிக்க சாதியினர் தங்களை அறிவித்துக்கொண்டு “பெருமித விலாசம்” காட்டுவதைப் போல அல்ல. அவர்களுக்கு தலித்தியம் என்பது அரசியல் சந்தர்ப்பவாத கருவி மாத்திரம் தான்.

செல்லன் கந்தையன் விவகாரத்தில் அன்று போல இப்போது நடக்கும் விவாதங்களிலும் பலர் தத்தமது சந்தர்ப்பவாத அரசியலுக்கும், தனிப்பட்ட காயடித்தலுக்கும் எப்படி இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைத் தான் நான் கூறிவருகிறேன்.

இந்த விவாதத்தின் அங்கமாக தலித்தியத்தை மறுதலிக்கின்ற, எதிர்க்கின்ற ஆதிக்க சக்திகளும் புகுந்து விளையாடுவதை கவனிக்கிறோம். இத்தனை வருட காலம் நாம் கேட்டுக் கேட்டு புளித்துப்போன, ஆயிரம் தடவைகளுக்கும் மேல் பதில் கூறிய அதே கேள்விகளை எடுத்துக் கொண்டு வந்து 
  • “தலித்தியம்” தேவையா?
  • அது இந்திய இறக்குமதி?
  • அது ஏகாதிபத்திய சதி,
  • அது தொழிலாள வர்க்கத்தை கூறு போடும் சதி
  • இது தேசியவாதத்தை கூறு போடும் முயற்சி
  • தலித்தியமும், சிவசேனை அரசியலும் ஒன்று
  • இலங்கைக்கு அது ஏன் தேவை?
திடீரென்று ஆகாயத்தில் இருந்து குதித்து இந்த கேள்விகளை கேட்பவர்கள்; இந்த போலி தலித் கோஷ்டிக்கு ஆதரவாக கருத்திடுபவர்களாக இருப்பதால் இவற்றை எதிர்த்து, மறுத்து அல்லது விளக்கமளிக்காமல் நுட்பமாக மறைந்துகொள்கிறார்கள். அவர்களுடனேயே மாறி மாறி முகநூலில் ‘லைக்’கிட்டு கொண்டாடுகிறார்கள். இந்த விடயத்தில் என்னை வழமைபோல தனிமைப்படுத்திவிட்டதாக சுயகளிப்படைந்து விடுகிறார்கள்.

இதுவா உங்கள் தலித்திய செயற்பாட்டு அணுகுமுறை ஆதிக்க சாதி போலி தலித் ஆதரவாளர்கள் தான் இப்படி கள்ள மௌனம் காத்து ஓடி ஒளிந்துகொள்வார்கள் என்றால் இவர்களும் தான் அப்படிச் செய்கிறார்கள். அங்கெல்லாம் இவர்களின் உண்மையான முகம் அம்பலப்பட்டுப் போகின்றன.

மேற்படி திடீர் கேள்வியாளர்கள் பலர் தலித்தியம் பற்றிய எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாதவர்கள். மேலோட்டமான வாசிப்பைக் கொண்டவர்கள். இதுவரை நாம் செய்து வந்த பணிகளையோ, விவாதங்களையோ, விளக்கங்களையோ அறியாதவர்கள். குறைந்தபட்சம் இது பற்றிய எமது கட்டுரைகளையோ கூட வாசிக்காதவர்கள்.  அவர்களின் பாமரத்தனமான ஆரம்பக் கேள்விகளை கைகொட்டி ஆதரவளித்து ஆரவாரிப்போரைக் காண முடிகிறது. அவர்கள் யார் என்பதை எம்மால் அடையாளம் காண முடிகிறது. ஆனால் நம் தோழர்களின் கண்மூடித்தனமான அரசியல் சந்தர்ப்பவாத கண்களுக்கு அவை எட்டுவதில்லை. இப்போதைய முகநூல் வாக்குவேட்டையில் லைக்குகளை எட்டுவதே குறியாக ஆக்கப்பட்டிருக்கிறது.

சந்தர்ப்பவாத அரசியலுடனும், தனிப்பட பகைத்து ஓடியவர்களும், எங்கே காயப்படுத்திவிடலாம், தனிமைப்படுதிவிடலாம் என்று சந்தர்ப்பம் பார்த்து இருந்தவர்களும் இந்த சந்தர்ப்பத்தை வாய்ப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள். அந்த நிலைக்கு இந்த விவாதங்கள் ஆக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தள்ளி நின்று எனது கடமைகளில் எனது கவனத்தைக் குவித்துக்கொண்டேன்.

நான் ஆங்காங்கு தாறுமாறாக சீண்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்தபோது கூட இந்த அசிங்கப் போக்குக்குள் நான் சிக்கிவிடக் கூடாது என்றே இருந்தேன். 

அகர முதல்வன் கட்டுரையை நான் மீள வெளியிட்டதன் காரணம் அது இப்பிரச்சினையை சில குறைபாடுகளோடும் கூட ஓரிடத்தில் தொகுத்திருக்கிறது என்று நான் நம்பினேன். புலிகள் தரப்பில் என்ன நடந்தது என்பதை அறிய இன்று நேரடி சாட்சிகள் இல்லை. ஆனால் நேரடி சாட்சிக்கு நெருங்கிய ஒருவராக இப்போது உயிரோடு இருப்பவர்களில் ஒருவராக குணா கவியழகனைப் பார்க்கிறேன். நான் தான் அவரோடு நேரடியாக தொடர்பு கொண்டு இது குறித்து வெளிப்படையாக நீங்கள் அறிந்த விடயங்களைப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவருக்கும் அப்போது இது குறித்து பேசும் யோசனை இருந்தது. அவர் அதைக் காணொளியாக வெளியிட்டதும் நானும் அதைப் பகிர்ந்தேன். காணொளியில் ஓரிடத்தில் சூரியகந்த விடயம் குறித்து பேசும் இடத்தில் 31 குழிகள் என்று தான் கூறிவிட்டதாகவும் அது 31 மாணவர்கள் என்று வந்திருக்கவேண்டும் என்றும் தனது ஒரு தகவல் பிழையைச் சொன்னார். அக்காணொளி வெளியிடப்பட்டுவிட்டதால் இப்போதைக்கு அப்படியே விடலாம் பின்னர் பதில் அளிக்கலாம் என்றார் அவர்.

அவருக்கு நான் பதில் அளிக்கும் போது “இந்த ஒரு தகவலை வைத்தே” மற்றதெல்லாவற்றையும் மறுக்கக் கூடியவர்களுடன்” நீங்கள் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று பகிடியாகக் கூறினேன்.

ராகவன் குணா கவியழகனின் கருத்துக்கு பதில் அளிப்பதாயின் அவரின் பதிவோடு குணா கவியழகனின் காணொளியையும் அல்லவா இணைத்திருக்கவேண்டும். ஏன் இந்தத் தணிக்கை.

குணா கவியழகன், அகரமுதல்வன் ஆகியோரின் இரு பதிவுகளையும் நான் புகழாராம் சூட வேண்டியதில்லை. ஆனால் அவை இரண்டு தற்போதைய விவாதத்தின் முக்கிய பதிவுகளாக உணர்கிறேன். உண்மைகளை மூடிமறைக்க முயற்சிக்கின்ற திட்டமிட்ட போக்கின் வடிவம் தான் இவர்களின் பதிவுகளை கிடைக்க விடாமல் செய்வதென்பது. ஒரு பதிவு என்கிற அடிப்படையில் அவை முக்கியமானவை.

அகரமுதல்வனின் இந்தப் பதிவை நிராகரிப்பதற்கு மீண்டும் அவரின் “சாகாள்”ளை தூக்கிக்கொண்டுவருவரும் சூட்சுமத்தில் புரிகிறது அதைத் தவிர அவரை நிராகரிப்பதற்கு வேறொன்றுமில்லை என்பது. இந்த ஒற்றைப் பார்வை தான் வேண்டாம் என்று இத்தனை காலம் நாம் ஐரோப்பாவில் இயங்கினோம். ஒருவரை நிராகரிக்க ஒரே ஒரு படைப்பு போதுமென்றால் அவரை ஆதரிக்க பல படைப்புகள் உள்ளனவே. இதே அளவுகோளை கையில் எடுத்தால் உங்களை நாங்கள் பல தடவைகள் நிராகரித்திருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் அல்லது நிர்வாகத்தில் சாதியத்தைக் கையாண்டத்தில் குறைபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் சாதியத்தைக் களைவதற்கு எடுத்த முயற்சிகளை இருட்டடிப்பு செய்வது யோக்கியம் அல்ல. சாதி ஆதிக்கத்தைக் காத்த அமைப்பாகவோ, சாதி ஆதிக்கத்துக்கு தலைமை தாங்கிய அமைப்பாகவோ அவ்வமைப்பை நிறுவ முற்படுவது அபத்தம். சிலவேளைகளில் எங்கேயாவது ஓரிரு உதாரணங்களை தூக்கிக்கொண்டு வந்து அதையே புலிகள் அமைப்பின் போக்கென நிறுவ முற்பட்டால் அது ஒரு முட்டாள்தனமான ஆய்வணுகுமுறையே. புலியெதிர்ப்பை வாழ்நாள் பணியாக செய்துகொண்டிருக்கும் பலர் இந்த முட்டாள்தனத்தைத் தான் செய்கிறார்கள். சாத்தியம் குறித்த அவர்களின் முயற்சிகளையும், பணிகளையும் வஞ்சகமாக இருட்டடிப்பு செய்துவிட்டு கமுக்கமாக ஒளிந்துவிடுவார்கள்.

இந்த விவகாரத்தை முடித்து வைக்க மிகவும் எளிதான வழி தான் உண்டே. மூன்று நிமிடங்களில் சுருக்கியதாகவும், ஏனைய கேள்விகளை ஏன் கேட்கவில்லை என்றும் இந்த சண்டைகளை நீட்டிக் கொண்டிருப்பவர்களால் ஏன் அந்த கேள்வியை அவர்களே செல்லன் கந்தையன் அவர்களிடம் போய் கேட்கக்கூடாது. இந்த விவாதத்தில் கம்புசுத்துபவர்களின் கட்சிக் காரியாலயம் அங்கு இருக்கிறது. அல்லது ஐரோப்பாவின் ஒரு தலித் இயக்க கிளையைக் கூடவா தளத்தில் இன்னமும் ஆரம்பிக்க முடியவில்லை. இந்த விடயத்தை செய்து முடிப்பதற்கான ஒரே ஓரு ஆதரவாளரைக் கூடவா இதுவரை அங்கு தயார் செய்துகொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஏற்ற பதில் இனி கிடைக்கப் போவதில்லை என்கிற ஒரே காரணத்தால் அல்லவா அதை விட்டுவிட்டு இந்த விதண்டாவாதத்தில் வெல்ல முயற்சி செய்கிறீர்கள்.

செல்லன் கந்தையன் அவர்கள் “புலிகள் அப்படி மிரட்டவில்லை” என்று கூறுவது புலிகள் காலத்தில் அல்ல. புலிகளின் உயிர் அச்சுறுத்தல் இல்லாத காலத்தில் கூறியிருக்கிறார். இந்த அறிக்கையை அவர் புலிகள் இருந்த காலத்தில் கூறியிருந்தால் இதே ஞாயன்மார்கள் “புலிகளுக்குப் பயந்து தான் அப்படி கூறுகிறார்” என்று கூறியிருக்கக் கூடும். மேலும் இதுவரை இந்த விடயத்தில் அன்றைய பத்திரிகை, கார்ட்டூன், அதை மட்டுமே ஆதாரமாக வைத்து புனையப்பட்ட தொடர் அறிக்கைகள், நூல்கள், உரைகள் எதிர்ப்புகளைத் தான் கண்டிருக்கிறோம். அதை வைத்துத் தான் இப்போதும் விவாதங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் இப்போது வெளியிடப்பட்டிருப்பது செல்ல கந்தையன் அவர்களின் நேரடி குரல், நேரடி காணொளி.

முதற் தடவையாக அது செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் இன்றைய சமகாலத்தில் செய்யப்பட்டிருக்கிறது. இதை மறுத்து விதண்டாவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால், மோசமான வன்மம் கொண்டதும், காழ்ப்பும், காயப்படுத்தலும் சொற்களால் முறியடிக்க முனைகிறார்கள் என்றால் அதில் இருந்து ஒன்று மட்டும் தான் உறுதியாகத் தெரிகிறது.

முன்னர் செய்த தவறை தவறென்று சுயவிமர்சனம் செய்துகொள்ளத் துணிவின்றி உண்மையான நேரடியான சாட்சியங்களையே மறுதலிக்கும் அபத்தமான/அநாதரவான நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கு மட்டும் தான் எம்மால் வர முடிகிறது.

இந்த விவகாரத்தில் நேரடியாக தலித்தியம் எப்படியெல்லாம் அவரவர் சந்தர்ப்பவாதத்துக்கு பந்தாடப்படுகிறது என்பதைத் தான் நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

மற்றும்படி இதில் தனிப்பட நான் யாரையும் சுட்ட விரும்பவில்லை. ஆனால் இதில் நான் தனிப்பட சொல்லாததையும் சொன்னதாக என்னை கோர்த்துவிடும் போது நேரடியாக இழுக்கப்பட்டு விடுகிறேன். எனது தொடர் அவதானிப்பின்படியும் அனுபவத்தின்படியும் ராகவனின் அணுகுமுறையையும் தனிப்பட்டதாகத் தான் எடுத்துக்கொள்கிறேன். 

நமது மலையகம் இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்ற கட்டுரைகளை தெரிவு செய்வது நானாக இருக்கலாம்.  ஆனால் அதற்காக அதில் உள்ள கருத்துக்களுக்கும், தகவல்களுக்கும் நூறுவிதம் நான் உடன்படவேண்டும் என்பதில்லை. எனக்கு உடன்பாடில்லாத கருத்துக்களையும் கொண்ட ஆயிரக்கணக்கான கட்டுரைகளை நான் வெளியிட்டிருக்கிறேன். ஏனென்றால் ஒரு பதிவு என்கிற அர்த்தத்தில் பல கட்டுரைகள் அதன் பெறுமதி கருதி அவ்வாறு வெளியிடுவது எனது வழமை. சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் எனது கட்டுரையை எனது அனுமதியின்றி தமகேற்றாற் போல தணிக்கை செய்து வெளியிட்டது போல இக்கட்டுரைகளின் உள்ளடக்கத்தில் எனக்கு விருப்பமில்லாத பகுதிகளை தணிக்கை செய்து வெளியிடும் அறமீறலை நான் ஒரு போதும் செய்தது கிடையாது. அதற்கு பதில் அளிக்கக் கூட ஞாயன்மாரும் வரவில்லை.

பொதுவெளியில் என்னை விமர்சிக்கின்ற பின்னூட்டங்களுக்கு நான் அளித்த பதில்களைக் கூட இத்தனை காலம் ஜனநாயகம், பேச்சுரிமை பேசிய வேடதாரிகள் நீக்கி தணிக்கை செய்த போது அவற்றை கண்டும் காணாதது போல இருந்துகொண்டு மோசடிகளுக்கு ‘லைக்’கிட்டு இன்பம் கண்ட ஞாயன்மாரையும் கண்டு கடந்து தான் வந்தேன்.

எனவே மீண்டும் சொல்கிறேன். இங்கு உண்மைக்கு இணங்குவதற்குப் பதிலாக பழைய பிழைகளை நியாயப்படுத்த மெனக்கடுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால் இன்னும் இன்னும் இது தொடர்பான வெளிவரப்போகும் உண்மைகளும், ஆதாரங்களும் தொடர்ந்தும் கசந்து கொண்டு தான் இருக்கும். அப்போதும் உங்களால் இதைத் தொடர முடியாது.
Share this post :

+ comments + 1 comments

குணா ...வின் காணொலி : விரிவு & விளக்கமான ஆவணம்.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates