Headlines News :
முகப்பு » , , , , , » "செலினா" : நாம் மறந்துபோன ஒரு பெண் போராளி! - என்.சரவணன்

"செலினா" : நாம் மறந்துபோன ஒரு பெண் போராளி! - என்.சரவணன்

1930 களில் மோசமான மலேரியா தோற்று நோயால் பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் மாண்டார்கள். அந்த நினைவுகளில் ஒன்று தான் செலினா பற்றிய இந்தப் பதிவு. கொரோனா பீடிப்பில் உலகம் சிக்குண்டிருக்கிற இந்த சூழலில் இக்கட்டுரை பல நினைவுகளையும், வரலாற்று அனுபவங்களையும் நமக்குத் தரும்.
1986 மே மாத இறுதியில் கல்கத்தாவில் ஒரு பிரதேசத்தில் தொடர் மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்த பெண்ணை பல நாட்கள் காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் பொலிசாரிடம் தெரிவித்தனர். இத்தகவல்களைத் தொடர்ந்து பொலிசார் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு அப்பெண்ணின் சடலத்தைக் கண்டுபிடித்தனர். அவர் இறந்து சில நாட்கள் ஆகிவிட்டிருந்ததை அந்த சடலத்தைக் கொண்டு அறிந்து கொண்டனர். இறப்புக்கான காரணம் குறித்து விசாரிப்பதற்காக சுமார் ஒரு மாதம் சடலத்தை அவர்கள் வைத்திருந்தனர். இறுதியாக, அவரது நண்பர்களும் அரசியல்  தோழர்களும் சேர்ந்து கண்ணியமான இறுதிச் சடங்கை நடத்தி, தென் கொல்கத்தாவின் சஹானகரில் தகனம் செய்தனர். இது நிகழ்ந்தது ஜூன் 15, 1986 அன்று.

அந்தப் பெண் செலினா மார்கரெட் பீரிஸ், செலினா பெரேரா என்று நன்கு அறியப்பட்டவர். ஆம் அவர் இலங்கையின் இடதுசாரி பிதாமகர்களில் ஒருவரான என்.எம்.பெரேராவின் மனைவி. இறக்கும் போது செலினாவுக்கு 77 வயது. அவர் இலங்கையில் இடதுசாரி இயக்கத்தில் சோசலிச போர்க்குணமிக்க பெண்களின் முன்னோடியான பெண். அவர் இறக்கும் வரை அரசியல் செயற்பாட்டில் இருந்தவர்.

ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை நகரில் நில உரிமையாளர்களின் பெரும் பணக்கார குடும்பத்தில் 1909இல் பிறந்த செலினா, ஆங்கிலக் கல்வியின் மூலம் கத்தோலிக்க கான்வென்ட்டில் கல்வியைத் தொடங்கினார். அங்கு அவர் திறமை மிகுந்த மாணவியாக அறியப்பட்டிருந்தார். பின்னர் அவர் கொழும்பின் மியூசியஸ் கல்லூரியில் நுழைந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, கல்கிஸ்ஸ பௌத்தப் பெண்கள் கல்லூரியின் அதிபராக ஆனார்.

இந்த நேரத்தில் செலினா தென் கொழும்பு இளைஞர் ஒன்றியமொன்றில் சேர்ந்து மாலை வேளைகளில் பள்ளி மைதானத்தில் அரசியல் கூட்டங்களை நடத்த அனுமதித்தார். அக்கூட்டங்களில் அவரும் பங்கேற்கத் தொடங்கினார். 1932 ஆம் ஆண்டில் இருந்தே பிலிப் குணவர்தனவும் இச்சங்கத்தில் இணைந்து நீண்ட காலமாக அதன் வழிகாட்டியாக இருந்து வந்தார். செலினாவும் படிப்படியாக "மார்க்சியத்தின்" மீது ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார். பிலிப் குணவர்தன அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் லண்டனில் சுமார் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பணியாற்றியவர். லியோன் ட்ரொட்ஸ்கியை  ஆதரிதத்தால் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மக்களைக் கவரக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்த பிலிப் இலங்கையின் "மார்க்சியத்தின் தந்தை" என்று அழைத்தனர்.

இந்தக் காலச் சூழலில் தான் இடதுசாரி கருத்துள்ள பலரால் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒரு இயக்கமாக “சூரியமல் இயக்கம்” தொடங்கப்பட்டிருந்தது. இதில் கொழும்பு தெற்கு இளைஞர் சங்கமும் இணைந்து சூரியமல் இயக்கத்துக்கு புது ரத்தம் பாய்ச்சியது. செலினா இந்த இயக்கத்தில் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் வினைத்திறனுடன் பணியாற்றத் தொடங்கினார்.

1933 ஆம் ஆண்டில், மலேரியா தொற்றுநோய் இலங்கைத்தீவைத் தாக்கியது. பிரித்தானியக் காலனித்துவ அரசு மலேரியாவைக் கட்டுப்படுத்தவோ, மக்களுக்கு நிவாரணங்களை அளிக்கவோ அக்கறை செலுத்தவில்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் மிகவும் மெதுவாகவே இருந்தன. இதன் விளைவாக, இரண்டே மாதங்களில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். சூரியமல் இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் தமது இயக்கத்தை ஒரு நிவாரண இயக்கமாக மாற்றிக்கொண்டனர். அதில் இருந்தவர்கள் விரைவாக கிராமங்களில் சுறுசுறுப்பாக மருந்துகள் மற்றும் உணவுகளை விநியோகிக்கத் தொடங்கினர். மந்த போசனத்தால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளுக்கு “ஏழைகளின் ஆட்டிறைச்சி” என்று சொல்லப்பட்ட இந்தியப் பருப்பைப் பகிர்ந்தார்கள். இதனால் என்.எம்.பெரேரா “பருப்பு மாத்தயா” என்று அம்மக்களால் அழைக்கப்பட்டார்.

செலினா இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றும் ஒருவராக ஆகியிருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் அவல நிலையை நேரடியாகக் காணவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை வெறும் மலேரியா தொற்றோடு சம்பந்தப்பட்டதில்லை என்பதையும் அது ஆரோக்கியத்தோடும் அதன் பின்னால் உள்ள வர்க்க அரசியலோடும் தொடர்பு கொண்டது என்பதை அவர் உணர்ந்துகொண்டார். இறந்த தாய்மார்களின் முலைகளை உறிஞ்சியபடி கிடந்த குழந்தைகளையும், அழுகிய பிணங்கள் இருந்த குடிசைகளையும் அவர் கண்டார். சமூக ஏற்றத்தாழ்வு கொண்ட சமூக அமைப்பு முறையை மாற்றுவதில் தன வாழ்நாள் முழுவதும் போராடப்போவதாக அங்கு தான் கங்கணங்கட்டிக்கொண்டார்.

அவர் அரசியல், சமூக விடயங்களில் தீவிரமாக இறங்கிய செலினாவுக்கு என்.எம்.பெரேராவுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பிலிப் குணவர்தனவை பின்பற்றுபவராக இருந்தார். ஆரம்பத்திலிருந்தே, செலினாவும் என்எம்.பெரேராவும் அரசியல் நடவடிக்கைகளில் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினார்கள்.

இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சி என்பது மட்டுமன்றி இலங்கையின் முதலாவது கட்சி என்கிற அந்தஸ்தையும் கொண்ட லங்கா சம சமாஜக் கட்சியின் (எல்.எஸ்.எஸ்.பி) 1935 டிசம்பர் 18ஆம் திகதி உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் முதலாவது அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் செலினாவும் ஒருவர். அதுமட்டுமன்றி அவர் மத்திய குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்டார். கட்சியின் பொருளாளராகவும் பணியாற்றினார். அரசாங்க சபைக்கான தேர்தல் வந்தது. லங்கா சமமாஜக் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் என்.எம்.பெரேராவும் ஒருவர். அவர் போட்டியிட்ட ருவன்வெல்ல தொகுதியில்  செலினாவும் தீவிர பிரச்சாரகராக இறங்கினார். 1936ஆம் ஆண்டு என்.எம்.பெரேராவின் வெற்றியில் செலினாவின் பங்களிப்பு அளப்பரியது. 1977 ஆம் ஆண்டு வரை என்.எம்.பெரேரா ருவன்வெல்ல தொகுதியில் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு உறுப்பினராகத் தொடர்ந்து வந்தார்.

மார்ச் 6, 1936 அன்று, செலினாவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தது. என்.எம்.பெரேராவும் செலினாவும் அன்று தான் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே ஒரே அரசியல் கொள்கைகளைக்கொண்ட, ஒரே இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள். செலினா கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார் கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா எழுதிய “இலங்கையின் சோசலிசப் பெண்கள்” (Socialist Women of Sri Lanka) என்கிற நூலில் செளினாவைப் பற்றி குறிப்பிடும் போது “செலினா போர்க்குணமிக்க தீவிர இடதுசாரிப் பெண்ணாக திகழ்ந்தார்” என்கிறார்.

இந்தக் காலப்பகுதியில் தான் பிரஸ்கேர்டில் நிகழ்வு நடந்தது. மலையக மக்களுக்காகக் குரல் கொடுத்த பிரஸ்கேர்டிலை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த வேளை பொலிஸாரிடமிருந்து தப்பவைத்து அவரை பதுளையில் தங்கவைத்து தலைமறைவாகப் பாதுகாத்தது செலினா தான்.

செலினாவின் போற்குனமிக்க செயற்பாடுகளின் காரணமாக அவரின் பெற்றோர் கவலைகொண்டார்கள். அவரது தந்தை செலினா இங்கிலாந்து சென்று மேலதிக படிப்பைத் தொடர வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கான செலவு முழுவதையும் செய்தார். கட்சித் தலைமை இதை ஒரு வகையில் தமக்கான நல்ல வாய்ப்பாகக் கருதியது. பிரித்தானியா சென்று கற்கைப் பணிகளைச் செய்யும் அதேவேளை அங்குள்ள ட்ரொஸ்கிய அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கிவிட்டு வரும்போது மெக்சிகோவுக்கு சென்று அங்கு நாடுகடத்தப்பட்டுள்ள லியோன்  மெக்சிகோவுக்குத் திரும்பும் வழியில் ட்ரொஸ்கியையும் சந்தித்து வரும்படி பரிந்துரைத்தது. செலினா 1938 ஆம் ஆண்டு தனது கணவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விட்டுவிட்டு தனது படிப்பு என்கிற பேரில் தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இங்கிலாந்து சென்றார். உலகில் மார்க்சிய இயக்கங்களைச் சேர்ந்த எவருமே சர்வதேசியவாதிகளாக எந்த நாட்டிலும் சென்று பணியாற்றத் தயாராக இருப்பவர்களாகவே வழிநடத்தப்படுவர். அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே இலங்கையில் அந்தத் தன்மையை உணர்ந்து இயங்கினர் என்றால் அது மிகையில்லை.

செலினா இங்கிலாந்தில் உள்ள செம்மொழிகள், ஆப்பிரிக்க மொழிகள் பற்றிய கற்கைகளுக்குப் பதிவு செய்துகொண்டார். (அது லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது)அங்கு அவர் சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழியைக் கற்றார். ஜூன் 1939 இல் தனது கல்வியை முடித்து இந்தோ-ஆரிய மொழிகளில் இரண்டாம் வகுப்பு உயர் கௌரவ பட்டம் பெற்றார்.

இந்தக் காலபகுதியில் செலினா இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் ட்ரொட்ஸ்கிஸ்ட் குழுக்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். 2ஆம் உலகப் போரும் ஆரம்பமானது. செப்டம்பர் 1939 இல், பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனிக்கு எதிரான போரில் நுழைந்தன. செலினாவும் தனது பணியை நிறைவேற்றத் தயாரானார். அடுத்த மாதம் அவர் நியூயார்க்கிற்கு வந்து நான்காவது அகிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க கட்சியான சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் தலைவர்களைச் சந்தித்தார். அவர்கள் செலினாவை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். நவம்பர் 2 ம் தேதி நான்காவது சர்வதேச செயற்குழுவில் அவர் உரையாற்றும் வரை, அங்கிருந்த ட்ரொட்ஸ்கியும் பிற சர்வதேச ட்ரொட்ஸ்கிய ஆதரவாளர்களும் இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சி என்கிற பேரில் ட்ரொட்ஸ்கிய ஆதரவு கட்சி இருக்கிறது என்பதை அறிந்திருக்கவில்லை.

பாதுகாப்பு பிரசினைகளின் காரணமாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இரகசிய தலைமறைவு வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வந்தார்கள். ட்ரொட்ஸ்கி மெக்சிகோவில் வசித்துவந்த கோயோகான் நகரத்துக்குச் சென்று ட்ரொட்ஸ்கியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை சோஷலிச தொழிலாளர் கட்சி ஏற்பாடு செய்தது. அந்தத் திட்டத்தின்படி டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சென் அந்தோனியோவுக்குச் சென்று அங்கிருந்து ட்ரொட்ஸ்கிக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார் செலினா. மெக்சிகோவில் ஒரு குறிப்பிட்ட பஸ் நிலையத்தில்  சந்திக்க முடியுமா என்றும் தனது தோற்றத்தைக் குறித்த விபரங்களையும் அவருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் லறேடா நகரத்தில் வைத்து அவருக்கு மெக்சிகோவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. சில தினங்களுக்குப் பின்னர் செலினா ட்ரொட்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில் தனது பயணம் தடைப்பட்டுப் போனதையும், தனது வாழ்க்கையில் ட்ரொட்ஸ்கியை சந்திப்பதற்கு இருந்த அரிய சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது என்றும் எழுதினார். செலினாவின் யூகம் சரியாகத் தான் இருந்தது. அதற்கடுத்த ஆண்டு  அதாவது 1940 ஆம் ஆண்டு ட்ரொட்ஸ்கி கொல்லப்பட்டார்.

1940 களின் முற்பகுதியில் இலங்கைக்குத் திரும்பிய செலினா பெரேரா; கட்சி விவகாரங்களில் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டார். அவர் மீண்டும் கட்சி அரங்கில் ஒரு தலைவராக இருந்தார். ஜூன் 1940 இல், பிலிப், என்.எம்.பெரேரா, கொல்வின், எட்மண்ட் சமரக்கோடி உள்ளிட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் பலர் ஆளுநரின் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். லெஸ்லி குணவர்தன மட்டும் தலைமறைவானார்.

இக்கைதை கைதுகளை எதிர்த்து பாரிய நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் மீது பொலிசார் மோசமாக தாக்கினர். செலினா தாக்கப்பட்டவர்களையும் அழைத்துக்கொண்டு வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி ஊர்வலத்தை நடத்திச் சென்றார். ஊர்வலத்தினர் நோரிஸ் வீதியை அடைந்ததும் போலீசார் ஒரு லாரியில் வந்து வரிசையாக நின்று அவர்களுடன் தடியடி நடத்தினர். பலர் தடியடித் தாக்குதலுக்கு உள்ளானார்கள். மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். செலினாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் செலினா விடுதலையானார்.

இனி பகிரங்கமாகப் போராடிய கட்சித் தொண்டர்களுக்கு தலைமையேற்று நடத்தும் தலைவராக செலினா ஆனார். அவரது செயற்பாடுகளின் காரணமாக  எப்போதுமே கைது அச்சுறுத்தல் இருந்தது. 1941 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து பேசியதற்காகவும், வெகுஜனங்களை கிளர்ச்சியூட்டும் வகையிலும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் செலினாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ரொக்மேன் சிகரெட் நிறுவனத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தபோது ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்ய முயன்றபோது செலினா அப் பொலிசின் முகத்தில் அறைந்து "இனிமேலும் பெண்களைத் தாக்காமலிருக்க இது உனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்றார்.

ஏப்ரல் 5, 1942 அன்று உயிர்த்த ஞாயிறன்று ஜப்பானியர்கள் இலங்கை மீது குண்டு வீசினர். ஏப்ரல் 7 அதிகாலை,லங்கா சமசமாஜக் கட்சியின் நான்கு தலைவர்களும் கண்டி போகம்பர சிறையிலிருந்து தப்பி தலைமறைவானார்கள். அப்போது காந்தி வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைத் தொடங்கியிருந்தார்.  இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ட்ரொட்ஸ்கிச குழுக்கள் அனைத்தும் மே மாதம் பம்பாயில் கூடி இந்திய போல்ஷிவிக் லெனினிச கட்சியில் இணைந்தன. காந்தியின் போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக அறிவித்தது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு மேலும் அச்சுறுத்தலாகக் கருதியது.

கண்டி சிறைச்சாலையிலிருந்து தப்பியவர்கள் ஒரு குழுவாக ஜூலை மாதம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். அவர்களில் பிலிப் மற்றும் என்.எம். கொல்வின் ஆகியோரும் அடங்குவர். சிலர் மதுரைக்குச் சென்றனர். செலினாவும் அங்கு சென்றடைந்தார். செலினா இன்னும் சிலருடன் சேர்ந்து பம்பாய்க்குப் புறப்பட்டனர். இந்திய போல்ஷிவிக் கட்சியைச் சேர்ந்தவர்களைப் போலத் தான் இலங்கையின் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவர்களையும் ஆபத்துமிக்கவர்களாகக் கருதி வந்தது பொலிஸ். இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் பற்றிய இரகசிய விசாரணை அங்கும் நடந்தது. என்.எம்.பெரேராவும் செலினாவும் தமக்குப் புனைபெயர்களைச் சூட்டிக்கொண்டு பம்பாயில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த போது என்.எம்.பெரேரா
செலினாவுக்கு பம்பாயில் ஒரு பாடசாலையில் ஆசிரியராக வேலை கிடைத்தது. என்.எம்.பெரேராவுக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இருவரும் தமது சம்பளத்தை இலங்கையிலுள்ள தமது கட்சியைப் பலப்படுத்த அனுப்பினார்கள். இதைவிட பம்பாயில் இந்திய போல்ஷிவிக் கட்சியின் இளைஞர்களுக்கு செலினா பயிற்சியளிக்கும் பணிகளை மேற்கொண்டார். அந்த வகுப்பில் இருந்தவர்கள் செலினாவை “மார்கி” என்கிற பெயரால் தான் அறிந்து வைத்திருந்தனர்.

இதற்கிடையில் என்.எம்.பெரேராவையும் மேலும் பலரையும் பொலிசார் கைது செய்தனர். செலினா, கொல்வின், லெஸ்லி மற்றும் விவியன் குணவர்தன ஆகியோர் மெட்ராஸுக்கு தப்பிச் சென்றனர். அங்கு இந்திய போல்ஷிவிக் கட்சியின் கிளை பலமாக இருந்தது. அவர்கள் கட்சிக்கு சொந்தமான வீட்டில் தங்கினார். செலினா கட்சி செயற்குழுவிலும் நியமிக்கப்பட்டார். 1943 ஆம் ஆண்டு என்.எம்.பெரேரா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சிறையில் வைக்கப்பட்டார். ஆனால் செலினா இலங்கை வரவில்லை. அவர் அங்கேயே தங்கி காலனித்துவவாத - ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அங்கே இணைந்துகொள்கிறார். அதன் பின்னர் சுதந்திர இந்தியாவில் கல்கத்தாவில் குடியேறி அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார். இடதுசாரி இயக்கங்கள் இந்தியாவில் விஸ்தரிப்பதற்கான கதவு மேற்கு வங்கம் தான் என்று அவர் நம்பினார். ஆகவே கல்கத்தா தான் தனது இயங்கு தளம் என்பதைத் தீர்மானித்தார். 1952 இல் மேற்கு வங்க SP (Loyalists) கட்சியை ஸ்தாபித்து அதன் தலைமைப் பொறுப்பையும் வகித்தார். MKPயின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். புரட்சிகர தொழிலாளர் கட்சியின் (Revolutionary Workers Party) செயலாளராக 1958-1960 காலபகுதியில் இருந்தார். சோஷலிச தொழிற்சங்க சம்மேளனத்தில் (Socialist trade union federation) அதிகமாக ஈடுபாடு காட்டினர். இத்தனையையும் அவர் செய்துகொண்டே ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் இறக்கும் வரையில் புரட்சிகர அரசியல் செயற்பாடுகளில் இணைத்தபடிதான் வாழ்ந்தார்.

அவர் இறப்பதற்குள் ஒரே ஒரு தடவை தான் இலங்கைக்கு வந்துவிட்டு சென்றுவிட்டார். அதுபோல இந்த காதல் சோடி இறுதிவரை மீண்டும் இன்னொரு திருமணத்தைப் புரியவுமில்லை. ஆனால் என்.எம்.பெரேரா தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது இடையில் இந்தியாவுக்குச் சென்று செலினாவை சந்தித்து சுகதுக்கம் பரிமாறிவிட்டுச் செல்லும் பழக்கம் இருந்தது. அது போல சமசமாஜக் கட்சிப் பெண்கள் பலர் செலினாவுடன் தொடர்பில் இருந்தார்கள்.

1979 ஓகஸ்ட் மாதம் 14 அன்று என்.எம்.பெரேரா இறந்துபோனார். அவரது மரணச் சடங்கில் அந்தளவு வேகமாக செலினாவால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் என்.எம்.முக்காக சிகப்பு நிற ரோசாப்பூ கொத்தை அனுப்பி வைத்தார்.

ஒரு கால கட்டத்தில் அவருக்கு இலங்கையின் இடதுசாரி இயக்கங்களின் மீது வெறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. அதற்கு பல அரசியல் காரணங்கள் இருந்தன. ஆனால் செலினா இறந்தபோது அவரின் சொத்துக்களை எல்லாம் லங்கா சமசமாஜக் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டே இறந்தார்.

உபாலி ரூபசிங்க லங்காதீப பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்,

“1991இல் கல்கத்தா ராஜ்பவனில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன். நிகழ்வின் பின்னர் நிகழ்ந்த விருந்தின் போது மேற்குவங்கத்தை ஆட்சி செய்த கொம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் முதலமைச்சர் ஜோதி பசுவைச் சந்தித்தேன். நான் என்னை இலங்கையன் என்று அறிமுகப்படுத்தியதும் அவர் உடனடியாக ஹெக்டர் அபேவர்தன பற்றி கேட்டார். மேலும் அவர் “நாங்கள் ஒன்றாக அரசியல் செய்தவர்கள். மேலும் மேடம் செலினா எங்கள் அரசியல் குரு. அதுமட்டுமன்றி எங்கள் அமைச்சரவையில் உள்ள பலர் அவரின் வகுப்புக்குச் சென்றவர்கள்” என்றார்.

செலினா என்கிற ஒரு போராளியின் பெறுமதியை அங்கு அறிந்திருந்த அளவுக்கு இலங்கையர்கள் அறிந்திருக்கவில்லை. இலங்கையின் வரலாற்றில் "ஆண் மைய" துதிபாடும், வழிபாடும் வெகுஜனமயப்பட்ட அளவில் சிறிது கூட உண்மையான பெண் நாயகிகள் பேசப்பட்டதில்லை. அப்படி மறக்கப்பட்ட ஒரு புரட்சிகரப் பெண் செலினா. 

நன்றி - தினகரன் 19.04.2020


Share this post :

+ comments + 2 comments

நன்று.....

நல்லதொரு பதிவு

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates