Headlines News :
முகப்பு » , , » பண்டாரநாயக்கவால் நிறுத்தப்பட்டு பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்ட மரண தண்டனை! - என்.சரவணன்

பண்டாரநாயக்கவால் நிறுத்தப்பட்டு பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்ட மரண தண்டனை! - என்.சரவணன்


மரண தண்டனை விதிப்புக்கு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டதை; நீதிமன்றமே இடைக்காலத் தடையை விதித்திருப்பது ஒரு “மரண” கலாய் தான்.

மரணதண்டையை நீக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அன்றைய நாளை தேசிய சோக தினமாக நான் பிரகடனப்படுத்துவேன் என்று யூலை 14 அன்று எம்பிலிபிட்டியவில் நடந்த கூட்டத்தில் பேசும்போது ஜனாதிபதி தெரிவித்திருந்ததையும் இங்கு கவனிக்க வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் விஜயம் செய்திருந்தார். அங்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கானவர்களை குறுகிய காலத்தில் தேடித்தேடி ஈவிரக்கமின்றி கொலைசெய்த சம்பவத்தால் கவரப்பட்டிருந்தார். இலங்கை வந்ததும் பல மேடைகளில் அந்தக் கொலைகளை நியாயப்படுத்தியும் அத்தகைய வழிமுறையே இலங்கைக்கும் தேவையென்றும் கூறிவந்தார். அதன் தொடர்ச்சி தான் இம்முறை போதை ஜூன் 23 முதல் ஜூலை முதல்தேதி வரை ஒருவார காலத்துக்கு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டபோது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 4 குற்றவாளிகளை தூக்கிட்டுக் கொல்லும் உத்தரவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கடந்த 26-6-2019 அன்று கையொப்பமிட்டார். இந்த செய்தி இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேச அளவில் வியப்பில் ஆழ்த்தியது.

தடாலடியாக தூக்குமேடை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தூக்கிலிடும் பணிக்காக புதிதாக ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவருக்கும் தூக்கிலிடுவது சார்ந்த பணிகளோடு தொடர்புடையவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வுகளைக் கூட சிறைச்சாலைகள் திணைக்களம் ஆரம்பித்தது. ஆக மரண தண்டனையை நிறைவேற்ற நீதிக் கட்டமைப்பு இப்போது தயார் நிலையில் இருக்கிறது.


“நல்லாட்சி” என்கிற பெயருடன் ஆட்சியிலமர்ந்தவுடனேயே புதிய நீதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட விஜயதாச ராஜபக்ச பௌத்த மகாசங்கத்தின் அஸ்கிரிய பீடத் தலைமை பிக்குவை 03.02.2015 அன்று சந்தித்து சந்தித்து “மரண தண்டனையை” அமுல்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார். பௌத்தத் தலைவர்களும் ஆசி வழங்கி வழியனுப்பிவைத்தனர். அந்த நீட்சியின் ஒரு பகுதி தான் ஜனாதிபதியின் முடிவுகள்.

ஒரு பௌத்தனாக ஒரு கொலையையும், பழிக்குப் பழி என்கிற போக்கையும் எப்படி ஆதரிக்க முடியும், போஷிக்க முடியும், நியாயப்படுத்த முடியும். அப்படி செய்துவிட்டு ஒரு பௌத்தனாக அதன் பின்னர் பௌத்த தார்மீகத்துடன் வாழ்ந்துவிடத்தான் முடியுமா?

பலத்த எதிர்ப்பு
மரண தண்டனை குறித்த ஜனாதிபதியின் முடிவுகளை அரசாங்கமும் ஆதரிக்கவில்லை. பிரதான கட்சிகளான ஐ.தே.க, பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி அனைத்தும் எதிர்த்தே வருகின்றன. அதுமட்டுமன்றி ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச மன்னிப்புச் சபை மட்டுமன்றி போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐ.நா காரியாலயமும் கூட தமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டிருக்கிறது. ஜனாதிபதியின் ஏதேச்சதிகார போக்கின் தொடர்ச்சியாகவே இதனை பார்க்க வேண்டியிருக்கிறது. “பெரும்பான்மை” ஜனநாயக கோட்பாட்டை நிராகரித்து தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு அவருக்கு என்ன தேவை வந்தது. எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னர் தன்னை உறுதியான தலைவராகவும், துணிச்சலான தலைவராகவும் ஹீரோயிச பாணியில் தன்னை உருவகப்படுத்த எடுக்கும் முயற்சிகளின் விளைவாகவே அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பார்க்கின்றனர். இது ஜனாதிபதியின் மூடத்தனமான இன்னொரு அரசியல் ஸ்டன்ட் என்றே நாம் புரிந்துகொள்ள முடியும்.
மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் போதைப்பொருள் வியாபாரம், பயங்கரவாதம் என்பவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் இதுவரை வழங்கி வந்த ஆதரவுக்கு இனி தடங்கல் ஏற்படலாம் என்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். வைத்தியர்கள் சங்கமும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு வைத்தியர்கள் சம்பந்தப்படுவதென்பது வைத்திய அறநெறிகளுக்கு இழுக்கானது என்று வைத்தியர் சங்கம் அறிவித்திருக்கிறது.

மரண தண்டனைகளைத் தடுக்கும் யோசனைக்கு ஆதரவாக 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இறுதியாக 2018 வரை தொடர்ச்சியாக ஐ.நா சபையில் இலங்கை வாக்களித்து வந்திருக்கிறது.

நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரரை இரு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தான்தோறித்தனமாக விடுதலை செய்தார். மறுபுறம் அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் மரணதண்டனையை எதிர்த்து நிற்பதையும் பொருட்படுத்தாமல் எதேச்சதிகரமாக தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி நால்வரையும் கொன்றுவிடும்படி ஆணையிடுகிறார். இதே ஜனாதிபதியின் தலைமையில் தான் அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஜனாதிபதிக்கிருந்த பல அதிகாரங்கள் திருத்தப்பட்டன, குறைக்கப்பட்டன. அதன்படி 42(1) விதிகளின் பிரகாரம் குடியரசு அரசாங்கத்தை நடத்தும் ஆட்சியதிகாரம் அமைச்சரைவைக்கு பொறுப்பாக்கப்பட்டது. அந்த அடிப்படைகளை ஜனாதிபதி மீறிக்கொண்டே இருக்கிறார். அரசாங்கமும், பாராளுமன்றத்தின் பிரதான கட்சியும், இன்னும் பல கட்சிகளும் மரணதண்டனையை எதிர்த்து நிற்பதை ஜனாதிபதி கருத்திற்கொண்டிருக்கவேண்டும். அமைச்சரவையின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்.

அரசியலமைப்பை மீறல்
மரண தண்டனையை எதிர்த்து எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட 11 பேர் ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர். (சுமந்திரன் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி அந்தஸ்துடையவர் என்பது இன்னொரு முரண்நகை.) சுமந்திரனின் வாதத்தின்படி 

அரசியலமைப்பின் 11, 12(1) ஆகிய உறுப்புரைகளை ஜனாதிபதி மீறியிருக்கிறார் என்பது முக்கிய தர்க்கங்கள்.
11வது உறுப்புரையின் படி “ஆளெவரும் சித்திரவதைக்கு, அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற  அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.” என்கிறது
12(1) உறுப்புரிமையின்படி “சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள் : அத்துடன் அவர்கள் சட்டத்தின் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள்” என்கிறது.
மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட  1400 பேர் சிறையில் இருக்கும்போது குறிப்பாக அவர்களில் இருந்து நால்வரை மாத்திரம் தெரிவு செய்தது உறுப்புரிமை 12(1)இன் பிரகாரம் தவறானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மரணதண்டனை உச்சபட்ச தீர்ப்பாக சட்டங்களில் இருக்கிற போதும் அது ஒரு கடுதாசி மட்டத்தில் நின்றுவிடுகிறது. தீர்ப்பு வழங்கப்பட்டாலும்  நடைமுறை படுத்துவதில்லை. எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரை மரணதண்டனைக்கு கையெழுத்திட்டதில்லை. 

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன சமீபத்தில் “விகல்ப” இணையத்தளத்திற்கு எழுதிய கட்டுரையொன்றில் ...
“நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்தவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. அப்போது அக்குற்றவாளியை தூக்கிலிட விரைவில் உத்தரவிடவேண்டும் என்று ஜனாதிபதி சந்திராகாவுக்கு அழுத்தம் கொடுத்தனர். அந்த அழுத்தத்துக்கு அவர் அடிபநிந்துவிடுவாரோ என்கிற பயம் எங்களுக்கு இருந்தது. இத்தனைக்கும் அம்பேபிட்டிய எனது சக சட்டக்கல்லூரி மாணவன். மரண தண்டனை அளிப்பதில் உள்ள விபரீதங்களை விளக்குவதற்காக ஜனாதிபதி சந்திரிகாவை சந்திக்கச் சென்றிருந்தேன். நான் விளக்கி முடிப்பதற்குள் “யார் என்ன கூறினாலும், நான் மரண தண்டனையளிக்க கையெழுத்திட மாட்டேன்” என்றார். நான் வியந்தேன். கொலைக்கு ஆளான ஒரு தகப்பனின் பிள்ளை அவர். கொலைக்கு ஒரு ஆளான கணவனின் மனைவி அவர். கொலைமுயற்சிக்கு ஆளாகி ஒரு கண்ணையும் பறிகொடுத்த பெண் அவர். 
போர்த்துக்கேயர் ஆட்சி காலத்தில் இலங்கையில் போர்த்துக்கேயருக்கு எதிராக போராடியவர்களுக்கு அளிக்கப்பட்ட பகிரங்க மரண தண்டனை. இந்தப்படம் 1672 இல் வெளியானபிலிப்பு பால்டேஸ்  (Philippus Baldaeus)இன் Description of East India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon) என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
வரலாறு
இலங்கைப் பொறுத்தளவில் மரணதண்டனை முறை என்பது தூக்கிலிட்டு கொல்வதையே குறிக்கிறது. காலனித்துவ காலத்தில் காலத்தில் மரணதண்டனை முறைகளாக சுட்டுக்கொல்வது, தலையை வெட்டுவது, போன்ற வழிமுறைகளும் வழக்கில் இருந்தன. இலங்கையின் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி பிரெடெரிக் நோர்த் 1802இல் மரண தண்டனைக்காக பயன்படுத்தப்பட்ட பல்வேறு முறைகளை இரத்துசெய்து தூக்கிலிடுவதை சட்டபூர்வமாக ஆக்கினார். ஆனாலும் அதற்குப் பிறகும் ஊவா – வெல்லஸ்ஸ போராட்ட காலங்களில் கைது செய்யப்பட்டவர்களின் தலைகளை துண்டித்தும், பகிரங்கமாக சுட்டும் கொன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1915ஆம் ஆண்டு கண்டி கலவர காலப்பகுதியில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி பலர் அந்தந்த இடங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டு மக்கள் கூடியிருக்கும் இடங்களில் பகிரங்கமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மரண தண்டனையை இரத்து செய்யும் கோரிக்கையை 1936இல் முதற்தடவை அரசாங்க சபையில் பிரேரித்தவர் டீ.எஸ்.சேனாநாயக்க. ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் போது சட்டபூர்வமாக அறிமுகமான மரணதண்டனை முறை 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா ஆட்சியேறியவுடன் அந்த மரண தண்டனையை இரத்து செய்தார். ஆனால் மூன்று ஆண்டுகளில் அவர் சோமராம தேரரால் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்களுக்கு தண்டனையளிப்பதற்காக மீண்டும் 1962இல் மரண தண்டனையை சிறிமா ஆட்சி மீளவும் நடைமுறைக்கு கொண்டுவந்தது. சிறையில் இருக்கும்போதே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சோமராம 06.07.1962 அன்று தூக்கிலிடப்பட்டார். இறுதியாக 27.06.1976 அன்றுக்குப் பின்னர் எவரும் தூக்கிலிடப்படவில்லை. 1977இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சியேறியதன் பின்னர் மீண்டும் மரணதண்டனை இல்லாது செய்யப்பட்டது.

அந்த 20 பேர்
இலங்கையில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கும் நிலையில் தற்போது மரணதண்டனையளிக்கப்பட ஜனாதிபதியால் கட்டளையிடப்பட்டவர்கள் நால்வர். இவர்கள் நால்வரும் போதைபொருள் குற்றவாளிகள். இவர்களை கொன்றுவிட்டால் மாத்திரம் போதைப்பொருள் நின்றுவிடுமா? இன்றும் பல சிறைகளில் சிறைக்குள்ளும் போதைப்பொருள் விற்பனை, பாவனை இருப்பதை பலரும் அறிவார்கள். அப்படி இருக்க இந்த மரண தண்டனையால் மாத்திரம் எதைத் தடுத்துவிட முடியும்.

இலங்கையில் தற்போது சிறைகளில் தண்டனை அனுபவித்துவருபவர்களின் எண்ணிக்கை இருப்பதையாயிரம் பேர். அவர்களில் கிட்டதட்ட 60 சதவீதமானோருக்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் விற்பனை, வினியோகம், பயன்பாடு போன்றவற்றோடு தொடர்புடையவர்கள். அதில் 20 பேர் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் என்று தெரியவருகிறது. மொத்தம் 455 மரண தண்டனைக் கைதிகள் தற்போது சிறைச்சாலையில் உள்ளனர். 

போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 8 முஸ்லிம்கள் 8 தமிழர்கள் நான்கு சிங்களவர்கள் அடங்குகிறார்கள். இவர்களில் ஒருவர் பெண். 
எம்.கே. பியதிலக்க, எம்.தர்மகரன், எம்.எஸ்.எம்.மஸ்தார், ஜே.ஏ. பூட்பி .ஜே .போல்சிம், எஸ்.புண்ணியமூர்த்தி, கே.எம். சமிந்த, எஸ். கணேசன், டபிள்யு . விநாயகமூர்த்தி, எஸ்.ஏ. சுரேஷ்குமார், எம். குமார், எஸ். மசார், டபிள்யு.ரங்க சம்பத் பொன்சேகா, எஸ். முஹம்மது, ஜான், பெருமாள் கணேசன், ஆர்.பி சுனில் கருணாரத்ன, சையித் முகமது உவைஸ், எம்.எஸ்.எம் .மிஸ்வர், பி.கமிலஸ் பிள்ளை, ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல் நிசா ஆகியவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தூக்கிலிட தீர்மாணிக்கப்பட்டிருக்கும் நால்வரில் இருவர் சிங்களவர்கள், அடுத்த இருவரில் ஒருவர் தமிழர், ஒருவர் முஸ்லிம். ஆனால் இந்த நால்வரின் பெயர்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
போதைப்பொருளை தடுக்குமா
மரண தண்டனை இதுவரை அமுலில் இல்லாததால் அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் சிறைகளில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நிலையே கடந்த 43 ஆண்டுகளாக தொடர்ந்துவந்துள்ளது. போதைப்பொருளைக் கட்டுப்படுத்த பற்பல வழிகளில் அரசு திட்டமிட்டாலும் ஊழலும், லஞ்சமும் அதிகாரத் தலையீடுகளும் தலைதூக்கியுள்ள இலங்கையின் கட்டமைப்பானது போதைப்போருளைக் கட்டுப்படுத்த மிகப் பெரும் தடையாக இருக்கிறது. போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்கு மரணதண்டனை அளிப்பதற்குப் பதில் அதனைக் கட்டுப்படுத்துவதில் அரச கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதும், போதைப்பொருளுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளுக்கே அதிகபட்ச தண்டனை அளிக்கும் வழிவகைகளையுமே இன்று செய்யப்படவேண்டியவை.

77ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரக் கொள்கையின் வருகையோடு இலங்கைக்குள் நுழைந்த மிக மோசமாக சமூக அழிப்பு, பண்பாட்டு அழிப்பு ஆயுதங்களில் ஒன்று தான் போதைப்பொருளும். இன்று மோசமான சமூக சீர்கேடுகளையும், குற்றச் செயல்களையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 


கடந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது பிடிக்கப்பட்ட போதைப்பொருள் நிறைந்த கொள்கலன் ஒன்றைப் பற்றிய விசாரணையில் போது  அதற்கு அனுமதிகொடுத்தவரே நாட்டின் பிரதமர் தான் என்பதை நாடு முழுவதும் அறிந்தது. அதுபோல சென்ற அரசாங்கத்தின் போது ஒரு அரசியல்வாதியின் வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து சோதனை செய்தபோது அங்கு ஏராளமான போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட வேளை அந்த இடத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நேரடியாக ஹெலிகொப்டரில் இறங்கி குறிப்பிட்ட அரசியல்வாதியிடம் தனது வருத்தத்தையும் தெரிவித்து அவரை ஆரத்தழுவி விடுவித்த சம்பவத்தையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். போதைப்பொருள் தடுப்பு பற்றி பீற்றிக்கொள்ளும் இதே ஜனாதிபதி அந்த அரசியல்வாதியை சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளராக நியமித்தார். கடந்த மாதம் மகிந்த தரப்பின் முக்கிய அரசியல் பிரமுகருக்கு சொந்தமான ஒரு பாரிய கசிப்பு தயாரிப்பு தொழிற்சாலையொன்று பொலிசாரின் சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் பலர்  போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பது இரகசியமானதல்ல.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் போன்றோருக்கு ஆதரவாக தமிழ் சமூகத்தில் எழுந்த மரண தண்டனைகெதிரான பலத்த கருத்தாடலே பேசுபொருளாகி விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது. சிங்களச் சூழலில் தற்போது தான் மரண தண்டனைக்கெதிரான கருத்துநிலை பேசுபொருளாகியுள்ளது. ஆனால் நாட்டின் பெரும்போக்கு கருத்துநிலை மரணதண்டனைக்கு எதிராகத் தான் இருக்கிறது.

ஜனாதிபதி கையெழுத்திட்டு இரண்டு வாரங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அதற்கிடையில் அதற்கெதிரான வழக்கு ஜனாதிபதியின் கட்டளைக்கு இடைக்கால தடையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கு இனி எத்தகைய தீர்ப்பை வழங்கப் போகிறது என்பதை சகலரும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
“நஹி வேறேன் வேறானி”
(வெறுப்பால் வெறுப்பழியாது) – கௌதம புத்தர்
நன்றி - தமிழர் தளம்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates