Headlines News :
முகப்பு » , , , , » கதிர்காமரின் “தமிழ்” அடையாளம்: வென்றவையும், இழந்தவையும் - என்.சரவணன்

கதிர்காமரின் “தமிழ்” அடையாளம்: வென்றவையும், இழந்தவையும் - என்.சரவணன்


யார் விரும்புகிற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டியவர் என்கிற சர்ச்சை இப்போது தலைதூக்கியுள்ளது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றவரா அல்லது ஜனாதிபதியின் விருப்பைப் பெற்றவரா என்பதை சட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்துமளவுக்கு பூதாகரமாகியுள்ளது இந்தப் பிரச்சினை. இந்த சர்ச்சையை உருவாக்கியிருப்பவர் ஜனாதிபதி. தான் விரும்பிய ஒருவரைத் தான் நியமிப்பேன் என்றும் அது அரசிலமைப்பின்படி சரியானதே என்றும் வாதிடுகிறார். இதே மைத்திரிபால 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகாவால் பிரதமராக முன்மொழியப்பட்ட கதிர்காமரை நியமிக்கவிடாமல் மகிந்தவுக்குத்தான் பாராளுமன்றத்தில் ஆதரவு அதிகம் என்று வாதிட்டு மகிந்தவை பிரதமராக்க காரணமாக இருந்தவர். கதிர்காமர் போன்ற “தமிழர்களுக்கு” வரலாற்றில் நேர்ந்த கதியை நாம் சற்று திரும்பி பார்ப்போம்.

கடந்த 03.12-2018 அன்று ரணில் விக்கிரமசிங்க பொதுக்கூட்டத்தில் உரையாடிபோது இந்த கருத்தை உறுதிசெய்யும் வகையில் இப்படிக் கூறினார்.
“மகிந்த அன்று பிரதமராக நியமிக்கப்பட்டு ஒரு மாதத்தில் நான் சந்திரிகாவை சந்தித்தபோது அவரிடம் நேரடியாக கேட்டேன், ஏன் நீங்கள் மகிந்தவை நியமித்தீர்கள் என்று. அதற்கு அவர் பாராளுமன்றத்தில் அதிக ஆதரவை அவர் கொண்டிருக்கிறார் என எனக்கு பதிலளித்தார்.”
ரணில் அந்தப் பேச்சின் போது கூடவே இன்னொரு விடயத்தையும் கூறினார். “ஜாதிக ஹெல உறுமய லக்ஷ்மன் கதிர்காமர் பிரதமராவதை விரும்பவில்லை. அவர்களும் எதிர்த்து வருகிறார்கள்” என சந்திரிகா கூறியதாகக் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமய அன்று மோசமான தமிழர் விரோதப் போக்கை முன்னெடுத்த கட்சியாக வளர்ந்திருந்தது. அந்த 2004இல் தான் சிங்கள வீர விதான ஒரு இயக்கம் என்கிற நிலையில் இருந்து ஒரு கட்சியாக பரிணமித்து சிஹல உறுமய என்று பெயரை வைத்துக் கொண்டதுடன் பின்னர் ஜாதிக ஹெல உறுமய என்று பெயரை மாற்றிக்கொண்டார்கள். அந்தத் தேர்தலில் ஹெல உறுமய கட்சியானது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் தனித்து 5.97% வீத வாக்குகளைப் பெற்று 9 உறுப்பினர்களை வென்றது. அந்தளவுக்கு பேரினவாதம் செல்வாக்குபெற்றிருந்த காலம் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

கதிர்காமரை பிரதமராக்குவதில் அன்றைய ஜே.வி.பியும் ஆதரவு தெரிவித்திருந்தது என்று அன்றைய ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நந்தன குணதிலக்க சமீபத்தில் சமூக வலைத்தளமொன்றில் தகவல் வெளியிட்டிருந்தார். தனக்கு பிரதமர் பதவி தராவிட்டால் அம்பாந்தோட்டையில் இருந்து கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு வந்து அலரி மாளிகையின் கூரையில் ஏறி நின்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மகிந்த ராஜபக்ச ஒரு அவசரத் தகவலை ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அனுப்பி வைத்ததாக அவர் அந்தக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.

மைத்திரிபால சொன்னது
இந்தக் கதையை உறுதிப்படுத்துகின்ற விபரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 16.07.2017அன்று “திவய்ன” சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்.


“மகிந்தவும் நானும் நெருங்கிய நெருங்கிய பழைய நண்பர்கள். 2000ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வின் போது சந்திரிகா அவர்கள் எஸ்.பீ.திசநாயக்கவுக்கு வாக்களித்தபோது என் பக்கம் இருந்த முக்கியமானவர் தான் மகிந்த. 2005 தேர்தலில் நாங்கள் வென்றோம். பிரதமர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நேரத்தில் சந்திரிகா அவர்கள் என்னைத் தொடர்புகொண்டார். “நீங்கள் பொலன்னறுவையில் இருக்காமல் உடனடியாக வாருங்கள்...” என்றார். உடனடியாக எப்படி வருவது ஐந்து மணித்தியாலங்களாவது ஆகுமே என்றேன். “அப்படியென்றால் நான் ஹெலிகொப்டரை அனுப்புகிறேன்” என்று கூறி அவர் ஹெலிகொப்டரை அனுப்பினார். நானும் வந்து சேர்ந்தேன். அங்கே லக்ஷ்மன் கதிர்காமர், எஸ்.பீ.திசாநாயக்க, பாலபட்டபந்தி போன்றோர் ஜனாதிபதியுடன் இருந்தார்கள்.

“இப்போது யார் பிரதமர்” என்று என்னிடம் கேட்டார். “ஏன் கேட்கிறீர்கள்” என்றேன். “இல்லை.. ஜே.வி.பியிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அவர்கள் அதிகாலை அரசியல் குழு கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை தெரிவு செய்யும்படி கேட்டிருக்கிறார்கள். அவரை முடியாது போனால் அனுரா பண்டாரநாயக்கவை அல்லது மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக ஆக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.” என்று கூறி டில்வின் சில்வாவிடம் இருந்து வந்த கடிதத்தை என்னிடம் காட்டினார்.

“ஜே.வி.பிக்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்ளமுடியாது. நாம் சுதந்திரக் கட்சியின் தேவையின்படியே பிரதமரை நியமிப்போம். மகிந்தவை தெரிவு செய்வது தான் பலரின் விருப்பம்” என்று நான் கூறினேன்.

பின்னர் கதிர்காமரை சமாளித்தோம். “இனி என்ன செய்வது” என்று கேட்டார் சந்திரிகா அம்மையார்.

“மகிந்தவை பிரதமராக ஆக்குங்கள்” என்று நான் தான் கூறினேன். 2005இல் மகிந்தவை ஜனாதிபதியாக்குவதற்காக நான் பட்ட கஷ்டத்தை நான் தான் அறிவேன்.” 

ரணில் அரசைக் கவிழ்த்தது
2001 டிசம்பர் 05 நடந்த பொதுத்தேர்தலில் ரணில் தலைமையிலான ஐ.தே.க. வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோதும் விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் காரணமாக தென்னிலங்கையில் ரணில் அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு நாட்டை பிரித்துக்கொடுக்கப் போவதாக பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜாதிக ஹெல உறுமய, இன்னும் பல சிங்கள பேரினவாத இயக்கங்களுடன் சேர்ந்து ஜே.வி.பியும் இனவாத அணியில் இருந்தபடி அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அந்த பிரச்சாரத்தின் விளைவு பேச்சுவார்த்தையை முற்றிலும் தோற்கடிக்கும் வரைக்கும் கொண்டு சென்றது. சந்திரிகா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகள் கூட கடக்காத ரணில் அரசாங்கத்தை 07.02.2014 அன்று  கலைத்தார்.


இந்த இடைக்காலத்தில் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுடன் பலமான கூட்டை சுதந்திரக் கட்சி உருவாக்கியிருந்தது. அந்தக் கூட்டானது அடிப்படையில் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிரான கூட்டாகவே உருவாகியிருந்தது. 2004 ஏப்ரல் 2 அன்று நடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பி சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு ஆளுங்கட்சியில் பங்கெடுத்தது. மொத்தம் 39 உறுப்பினர்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களின் செல்வாக்கு அரசாங்கத்தில் ஓங்கியிருந்தது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் பிரதமரையும் தெரிவு செய்யும் நிர்ப்பந்தத்தை உருவாக்க முயன்றார்கள். 

கதிர்காமர் : சிங்கள விசுவாசி!?
சந்திரிகா அரசாங்கம் பதவியிலமர்ந்ததுமே லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக ஆக்க முயற்சித்தது வெறும் தகுதிக்காக மட்டுமல்ல உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தாம் ஒரு தமிழரை முக்கிய அரசாங்கப் பொறுப்பில் இருத்தியிருக்கிறோம் என்பதை அரசியல் பெருந்தன்மையாகக் காண்பிப்பதற்கும் தான். தேசியப் பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அதன் பின்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக ஆக்கப்பட்டார்.  கதிர்காமரும் தன்னை எவரும் தமிழர் சார்பானவர் என்று சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்கிற அளவில் தனது விசுவாசத்தை அளவுக்கு அதிகமாகவே காண்பித்தார். குறுகிய காலத்திலேயே விடுதலைப் புலிகளை சர்வதேச அளவில் தடை செய்விக்கும் அளவுக்கு அன்றைய சிங்கள அரசின் மீதான அவரின் தீவிர விசுவாசம் வெற்றிகண்டது. ஆட்சியில் வந்து மூன்று வருடத்துக்கு 1997ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடைசெய்ய வைத்த பின்னர் சர்வதேச அளவில் ஏனைய நாடுகளும் அதையே பின்பற்றின.

தான் ஒரு தமிழர் தனக்கு இலங்கையில் எந்தவித பிரச்சினையும் இல்லையே என்கிற தொனியில் அவரது சர்வதேச பேச்சுகள் அமைந்திருந்தன. இத்தனைக்கும் அவர் தமிழர்களோடு தொடர்பில்லாத, தமிழர்களோடு அரசியல் பணிகளில் ஈடுபடாத, தமிழைப் பேச முடியாத, பல தமிழர்களால் தமிழராக அறியப்படாத ஒருவராக இருந்தார் என்பதை வெளிப்படையாக பலர் அறிந்திருந்தார்கள். அவரது “தமிழ் பூர்வீக” அடையாளம் சிங்களத் தரப்புக்கு வெற்றிகளை குவித்தது. அவர் பெளத்தர்களுக்காக களத்தில் இறங்கினார்.

லக்ஷ்மன் கதிர்காமர் 1999 இல் ஐக்கிய நாடுகள் சபையில் வெசாக் பௌர்ணமி தினத்தை சர்வதேச விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தும்படி கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அங்கிருந்த ஏனைய நாட்டு பிரதிகளைச் சந்தித்து அந்தப் பிரேரனைக்கு ஆதரவு திரட்டினார். இறுதியில் கதிர்காமரின் கடும் முயற்சியால் வெசாக் நாளை சர்வதேச விடுதலை நாளாக்கும் பிரேரணை ஐ.நா. வில் நிறைவேறியது. இந்தப் பிரேரணையின் படி விரும்பிய நாடுகள் அந்த விடுமுறையை அமுல்படுத்தலாம். இந்த வெற்றியினால் சிங்கள பௌத்தர்கள் கதிர்காமரை இன்றும் கொண்டாடுகிறார்கள்.


100 வருடங்களுக்கு முன்னர் சேர் பொன் இராமநாதன் பௌத்தர்களின் பௌர்ணமி நாளை விடுமுறை நாளாக்கும்படி இலங்கையின் அரசாங்க சபையில் போராடியதை இன்றும் பல சிங்களத் தலைவர்கள் போற்றி வருவதைக் காண்கிறோம். அன்று சிங்களத் தலைவர்கள் கூட அந்தளவு முனைப்புடன் இருக்காத நிலையில் இராமநாதன் அவர்களின் அபிலாஷைகளுக்காக இருந்தார். இராமநாதன் 1915 கலவரத்தின் போது கைது செய்யப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களை இங்கிலாந்துக்குச் சென்று வாதாடி விடுவித்தார். அவரை பல்லக்கில் தூக்கி வரவேற்றது சிங்களத் தரப்பு. தர்மபால ஒரு முறை தனக்கு பிறகு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்று நினைத்தால் நான் ஹிந்து பக்தரான இராமநாதனையே நியமிப்பேன் என்றார். ஆனால் அந்த இராமநாதனையே கொழும்பை விட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடும் அளவுக்கு இனத்துவ பாரபட்சத்துக்கு உள்ளாக்கிய சம்பவங்களை இலங்கை வரலாறு கடந்து வந்திருக்கிறது.

எந்த தமிழ் அடையாளம் சிங்களத் தரப்பை மீட்க கதிர்காமரிடம் இருந்து தேவைப்பட்டதோ அந்த தமிழ் அடையாளம் அவரை பிரதமராக ஆக்குவதற்கு தடையாக இருந்ததையும் கூறித்தான் ஆக வேண்டும். எந்த சிங்கள பௌத்த தரப்பு கதிர்காமரைக் கொண்டு அரசியல் – ராஜதந்திர லாபமடைந்ததோ அதே சிங்கள பௌத்த தரப்பு கதிர்காமருக்கு நாட்டின் உயரிய பதவி போய்விடக்கூடாது என்பதில் கறாராக இருந்தது.


கதிர்காமர் கொல்லப்பட்டதனால் (12.08.2005), அதுவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதால் தான் அவர் சிங்களவர்கள் மத்தியில் வீரர் ஆனார். தியாகியானார். ஆனை செத்தாலும் ஆயிரம் பொன் என்பது போல அவரது மரணமும் பல மடங்கு சிங்களத் தரப்பின் வெற்றிக்கு உதவியது.

சிங்கள - பௌத்த - கொவிகம தவிர்ந்தவர்களையே அதிகாரத்துக்கு வருவதை சகிக்காத இந்த அமைப்புமுறை தமிழ் – கிறிஸ்தவ பின்னணியுள்ள ஒருவரை மட்டும் அனுமதிக்குமா என்ன.

ஆனால் கதிர்காமர் இறந்ததன் பின் எழுந்த அனுதாப அலை “ச்சே...பிரதமராக ஆக்கப்படவேண்டிய ஒருவர்... அதற்கு தகுதியான ஒருவர்” என்கிற குரல்கள் எங்கெங்கும் கேட்க முடிந்தது. இன்றும் கேட்க முடிகிறது.

கதிர்காமர் கொல்லப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று பிரதமர் பதவியை தட்டிப்பறித்த அதே மகிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு கதிர்காமருக்கு சிலை வைத்தார்.


சந்திரிக்காவுக்கு லக்ஷ்மன் கதிர்காமர் போல கதிர்காமரின் மூத்த சகோதரர் ராஜன் கதிர்காமர் முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவுக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்குரியாவராகவும் இருந்தார். இலங்கையின் கடற்படைத் தளபதியாக இருந்தவர். 1962ஆம் ஆண்டு சிறிமா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடந்த இராணுவச் சதி முயற்சியின் போது சிறிமாவின் அருகிலேயே இருந்து, அவரைப் பாதுகாத்து கட்டளைகளைப் பிறப்பித்து அச் சதியை முறியடிப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தவர்.

"தேசபக்த தேசிய இயக்கம்" என்கிற பிரபல இனவாத அமைப்பு கதிர்காமர் கொல்லப்பட்டபோது அவருக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்டிருந்த பேனர்

தமிழர்களின் எல்லை என்ன!
இலங்கையில் இரண்டு தடவைகள் இப்படி தமிழ் வம்சாவளிப் பின்னணியுள்ளவர்கள் இருவர் பிரதமர்களாக தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கின்றன. அந்த இருவரும் இனத்துவ, சாதிய பாரபட்சங்களால் தான் பிரதமர் பதவி கைநழுவிப் போயிருக்கின்றன. ஒருவர் கதிர்காமர் எனக் கண்டோம். இன்னொருவர் சீ.பீ.டி சில்வா.

அதே வேளை இருவருமே இலங்கைச் சமூகத்தில் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள், அல்லது அறியப்படாதவர்கள். ஆனால் ஆதிக்க இனக்குழுமத்தால் நுணுக்கமாக அவர்களின் இனத்துவ, சாதிய அடையாளங்கள் உரிய நேரத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள்.

வகுப்புவாதம் பார்க்காதவர்கள் என்று அறியப்படுபவர்கள் பலர்; திருமணக் கலப்பின் போது தான் அந்த அடையாளங்களை வெளிப்படுத்தி பாரபட்சம் காட்டுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். அதிகாரத்துக்கு வரும் போது கூட ஒடுக்கப்படும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்த அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டிருப்பதை வரலாறு நெடுகிலும் கவனித்திருக்கிறோம்.

மகாவம்சத்தை சுயாதீனமாகவே 2009 இல் தமிழுக்கு கொண்டுவந்த எஸ்.பொன்னுத்துரை சீ.பீ.டி.சில்வா  பற்றி சில தனது முன்னீட்டில் குறிப்பிடுகிறார்.
“சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சேரர்களே. தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றிய அரசின் பிரதிப் பிரதமராக இருந்தவர் சீ.பி.டீ.சில்வா. அவருக்கு பல தமிழ் நண்பர்கள் உண்டு. ஒரு சமயம் உரையாடியபொழுது. “நான் மலையாளி வம்சம். சிங்களருடன் கரைந்து வாழ்வதினால் நான் எதையும் இழக்கவில்லையே. தமிழை இந்தியாவில் வாழும் ஐந்து கோடித் தமிழர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். இலங்கையில் சிங்களம் வளரட்டுமே. அது தானே நியாயம்.” என்றாராம்.
அடுத்த பிரதமராக வரக்கூடியவர் என்று சுதந்திரக் கட்சிக்குள் பேசப்பட்ட இன்னொரு தமிழர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. கட்சிக்குள் அவர் தனது செல்வாக்கை நிலைநிறுத்த ஒரு சண்டித்தன பின்னணியுடன் தான் அவர் அரசியல் செய்ய நேரிட்டது. அவருக்கு ஆதரவு இருந்த அளவுக்கு அதிருப்தியாளர்களும் நிறையவே இருந்தார்கள். அவரும் தமிழ் கத்தோலிக்க வம்சாவளிப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சிங்களவராகவே அதிகமானோரால் அறியப்பட்டிருந்தார்.

சிங்களத் தரப்பு தமது “இனத்துவ பெருந்தன்மையைக்” காட்டும் சமீபத்தேய உதாரணம் தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழர் இருக்க முடியும் என்று காட்டி களிப்படைகிற போக்கு. வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராக தனது கடமைகளை உரியமுறையில் செய்யாத ஒரு தலைவராக அடையாளம் காணப்பட்டும் அவரை அந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால் அது அவரது இனத்துவ அடையாளத்தின் காரணமாகத் தான். ஆளும் தரப்பில் அதிக ஆதரவைக் கொண்டவர் தான் பிரதமராக ஆக முடியும் என்கிற வாதத்தை முன்வைப்பவர்கள்; எதிர்க்கட்சியில் அதிக ஆதரவுடையவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக ஆக முடியும் என்கிற வாதத்தை வசதியாக மறைத்துவரும் அரசியல் சூட்சுமம் இது தான்.

கதிர்காமர், சம்பந்தர் அனைவருமே இந்த சூத்திரத்துக்குள் இயக்கப்பட்டவர்களே.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates