99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 25
"இந்த அவசரகாலச் சட்டத்தின் மூலம் நாம் பிரிய வேண்டிய சந்தியை வந்தடைந்திருக்கிறோமோ?"
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு இப்படி முன்னர் சொன்னவர் தாசி வித்தாச்சி. 58’ கலவரத்தைப் பற்றி அவர் எழுதிய “அவசரகாலம் 58” (Emergency 58) என்கிற நூலிலேயே அவர் அப்படி குறிப்பிட்டார். இலங்கையில் இராணுவச் சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அவசர நிலைமைகளின் போது போடப்பட்டிருகிறது. அதுபோல அவ்வப்போது நிகழும் கலவரங்களின் போது ஊரடங்குச் சட்டம் கூட ஓரிரு நாட்கள் பிறப்பிக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது. வடக்கில் பல காலம் தமிழ் மக்கள் ஊரடங்குச் சட்டம் குறிப்பிட்ட நேரத்துக்கு தினசரி நீண்டகாலமாக அனுபவித்து வந்த கொடுமையும் கூட நிகழ்ந்தது.
சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை நசுக்கவும், ஒடுக்குமுறையை பிரயோகிக்கவும் கூட அவசரகால சட்டத்தை ஒரு சம்பிரதாயமாகவே நிறைவேற்றி வந்திருக்கிறார்கள். இந்த அவசரகால சட்டங்கள் அப்பாவி மக்களை பாதுகாப்பதற்குப் பதிலாக பல சந்தர்ப்பங்களில் அந்த அட்டூழியங்களில் ஈடுபட்ட படையினரையும், காடையினரையுமே பாதுகாத்திருக்கிறது என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. அவசரகால சட்டமானது அரச பயங்கரவாதத்துக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கி அவர்களின் மனித உரிமை மீறல்களுக்கு லைசன்சை வழங்கியது.
வரலாற்றில் 77 ஜே.ஆர்.அரசாங்கம் பதவியேற்ற காலத்திலிருந்து தான் 1978இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டமும் (PTA), அவசரகால சட்டமும் (Emergency regulation) மிகக் கொடூரமாக தமிழ் மக்களை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக எதிர்க்கட்சிகளால் “எங்களை ஆட்சியிலேற்றினால் அவசரகால சட்டத்தை நீக்குவோம்” என்கிற வாசகம் ஒரு சடங்காகவே விஞ்ஞாபனங்களில் இடம்பெற்றதையும் நாம் அறிவோம்.
குட்டிமணியின் தீர்க்கதரிசனம்
83இல் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட குட்டிமணியும், தங்கத்துரையும் கைது செய்யப்பட்டிருந்தபோது குட்டிமணி நீதிமன்றத்தில் இந்த சட்டம் பற்றி ஆற்றிய உரை பிரசித்தமானது.
“நாங்கள் இனவாதிகளல்லர். சிங்களவர்களின் உரிமைகளைப் பறிக்க வந்தவர்களும் அல்லர். எங்கள் போராட்டத்திற்கு சிங்கள மக்களின் ஆதரவையும் நாடி நிற்கின்றோம். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள கதி நாளை இலங்கையிலுள்ள ஏனையோருக்கும் ஏற்படக்கூடும். அன்றைய தினம் ஆனையிறவு வதை முகாம் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும். குருநகர் வதைமுகாம் குருநாகலுக்கு மாற்றப்படும். தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக சிங்கள இளைஞர்கள் அதனை அனுபவிப்பார்கள்.”
இந்த அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து நிற்கும் சிங்கள ஜனநாயக சக்திகள் குட்டிமணியின் இந்த வாசகத்தை பல தடவைகள் நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.
வடக்கில் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காகவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பல தடவைகள் கூறப்பட்டபோதும் மாறாக அந்த சட்டம் வடக்குக்கு வெளியில் அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக ரீதியில் நீதி கோரும் சாத்வீக போராட்டங்களைக் கூட அடக்க பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தொழிற்சங்கப் போராட்டங்கள், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போராட்டங்கள், வேறு பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் என்பவற்றையும் கூட இந்த சட்டத்தின் மூலம் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டிருக்கின்றன.
அவசரகால சட்டத்துக்கு வயது 75
இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் வெளியிட்ட முதல் வெளியீடான “அவசரகாலம் 79” (Emergency ‘79) என்கிற நூல் ஜே.ஆர்.அரசாங்கத்தின் இந்த இரு சட்டங்களையும் தோலுரிக்கும் நூல். இந்த சட்டங்களின் பெயரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த மனித உரிமை மீறல் சம்பவங்களை தொகுத்தளித்தது அந்த நூல். அந்த இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பலமாக குரல்கொடுத்து வந்த பிரபல இடதுசாரித் தலைவருமான உப்பாலி குரே நூலின் ஆசிரியர்களின் ஒருவர். அவருடன் பாதர் போல் கெஸ்பஸ் மற்றும் பி.ராஜநாயகம் ஆகியோர் அதனை எழுதி முடித்தனர்.
இலங்கையில் முதற் தடவையாக 1942 மார்ச் மாதம் 19அன்று அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சுதந்திரமடைவதற்கு முன்னமே அன்றைய காலனித்துவ அரசாங்கத்தின் ஆளுனரால் பிறப்பிக்கப்பட்டது இது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான் இலங்கையைச் சுற்றிவளைக்க முயன்று கொண்டிருந்த காரணத்தைக் காட்டி கட்டாய இராணுவச் சேவைக்காகவே இந்த அவசரகால சட்ட நிலை அன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 4ம் திகதி கொழும்பிலும் ஏப்ரல் 9ம் திகதி திருக்கோணமலையிலும் ஜப்பான் குண்டுத் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து இக்கட்டாய இராணுவச் சேவை அதிகம் வலியுறுத்தப்பட்டது.அதன் பின்னர் 1947 யூன் மாதம் நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தமும் அதனை தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவும் அன்றைய சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கபட்டது.
இவ் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டத்தை அரசாங்கம் நசுக்கிய போது கந்தசாமி எனும் தொழிலாளி கொல்லப்பட்டார். இந்த 1947 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 25ம் இலக்க பொது மக்கள் பாதுகாப்புச் சட்டமே பிற்காலத்தில் 1972ம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் அமைப்பிலும். 1978ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசு அமைப்பிலும் சேர்க்கப்பட்டது. இதனை பயன்படுத்தியே 1953ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த ஹர்த்தால் போராட்டமும் அடக்கப்பட்டது. இவ் ஹர்த்தாலின் போது எட்டு நாட்கள் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வைத்திருந்தது. ஹர்த்தாலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் சிறையிடப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர். இத்தனையும் டட்லி அரசாங்கத்தின் போது கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் கீழேயே நடந்தன.
டட்லி சேனநாயக்க ஆட்சி செய்த 1825 நாட்களில் 1086 நாட்கள் அவசரகால சாட்டத்தின் கீழ் தான் ஆட்சி செய்யப்பட்டது.
58 “அவசரகால” படுகொலைகள்
பண்டாரநாயக்காவின் ஆட்சியின் கீழ், 1958ம் ஆண்டு மே மாதம் இனக்கலவரம் நடந்தது. இவ் இனக்கலவரத்தின் போது நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பத்தாயிரத்துக்கும் மேட்பட்ட தமிழர்கள் கொழும்பில் அகதிகளாக்கப்பட்டனர். பல தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவ் இனக் கலவரத்திற்கு அரசாங்கம் தூண்டுகோலாக இருந்தது. ஆனால் இனக் கலவரத்துக்கு காரணமாக கூறி ஜாதிக விமுக்தி பெரமுனவோடு தமிழரசுக் கட்சியையும் தடை செய்தது.
இனக் கலவரம் 27ம் திகதியே தொடங்கி விட்டிருந்த போதும் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகிய மூன்றாவது நாளே அதாவது 29ம் திகதியே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதாவது அவசரகால சட்டம் அவசியமான நேரத்தில் போடப்படவில்லை.
1958 மே 27ம் திகதி போடப்பட்ட அவசரகாலச் சட்டம் 1959 மார்ச் 13வரை அமுலிலிருந்தது. அதன் பின்னர் பண்டாரநாயக்க செப்டெம்பர் 25ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அன்றிலிருந்து டிசெம்பர் 2ம் திகதிவரை அவசரகால நிலை அமுலில் இருந்தது. மீண்டும் 1961 ஏப்ரல் 14ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழரசு தபால் சேவையை நடாத்தியதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ம் திகதி அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழரசுக் கட்சியும் அன்றே தடை செய்யப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். வட-கிழக்குப் பகுதி இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 48 மணி நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. இவ் அவசரகால சட்டம் 1963 மே தினத்தன்று வரை அமுலில் இருந்தது.
டல்லி-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து நாடளாவிய ரிதியில் கொண்டு செல்லப்பட்ட பிரச்சாரங்கள், ஊர்வலங்கள் காரணமாக 1966 ஜனவரி 8ம் திகதி அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் அது டிசம்பர் 17 வரை அமுலில் இருந்தது. அது நீடிக்கப்பட்டு 11 நாட்களுக்குள் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு அது 1969ம் ஆண்டு 17ம் திகதி வரை அமுலில் இருந்தது. இக்கால இடைவெளிக்குள் வடக்கு கிழக்குப் பகுதியிலும் மலையகத்திலும் நடந்த தமிழர்களின் போராட்டங்கள் மோசகரமாக அடக்கப்பட அவசரகாலச் சட்டமே துணை புரிந்தது.
சிறிமா ஆட்சி முழுதும்...
1971ம் ஆண்டு ஜே.வி.பி எழுச்சி அடைந்ததைத் தொடர்ந்து பீதியுற்ற அரசாங்கம், மார்ச் மாதம் 16ம் திகதி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது. இதன் கீழ் அனுமதியின்றி பிணங்களை எரிக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது. ஏப்ரல் மாதம் 5ம் திகதி அடக்கப்பட்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை 20,000க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்து அடக்கியது. அதே அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியே பல ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை முகாம்களுக்கும் சிறைக் கூடங்களுக்கும் அனுப்பியது அன்றைய சிறிமாவோ அரசாங்கம். 72 அரசியலமைப்பு ஆட்சிசெய்த அந்த 5 ஆண்டுகால ஆட்சியும் அவசரகால சட்டத்தின் கீழ் தான் நடந்தது. அந்த யாப்பு சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புக்காக என்று கண்துடைப்புக்கு சேர்த்திருந்த “அடிப்படை உரிமைகள்” பிரிவு அவசரகால சட்டத்தின் மூலம் செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டிருந்ததால் அந்த காலம் முழுவதும் அடக்குமுறைக்குள்ளான தமிழர்கள் நீதி பெற முடியவில்லை. 1976 ட்ரயல் அட் பார் வழக்கின் தீர்ப்பின் இறுதியில் அவசரகாலசட்டமும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களும் செல்லுபடியற்றவை என்று தீர்ப்பு வழங்கியதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும்.
சிறிமா அரசாங்கம் 1974ஆம் ஆண்டு “தவச” நிறுவனத்தின் “சன்”, “தினபதி’, “தவச”, உட்பட பல தினசரி, வார, மாதாந்த நாளிதழ்களை அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்தது.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 72 அரசியலமைப்பை எதிர்த்து காங்கேசன்துறை தொகுதியில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த வேளை உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாமல் 1975ஆம் ஆண்டு வரை இழுத்தடிக்க அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தியது.
1979ம் ஆண்டு பெப்ரவரி 16ம் திகதி வரை இவ் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது. இக் கால இடைவெளிக்குள் வடக்கில் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்குவதற்கும் இச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. 1977ம் ஆண்டு ஜே.ஆர் தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் ஆட்சியமைத்தது. 1994 வரையான 17 ஆண்டு கால ஆட்சிக்குள் 11 வருடங்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழேயே ஆட்சி நடத்தியது. வடக்கில் எழுந்த உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதக் கிளர்ச்சியாகவே பார்த்த ஜே.ஆர் அரசாங்கம் 1979 யூன் 11ம் திகதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியது. இவ் அவசரகாலச் சட்டத்தை அமுலில் வைத்துக் கொண்டே யூலை 12ம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. 1979 டிசம்பர் 27ம் திகதி வரை அவ் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது.
ரயரில் எரியூட்டப்பட்டு சாம்பலாகிப் போனவர்கள் |
தமிழரை ஒடுக்க மட்டுமா?
1980ஆம் ஆண்டு யூலையில் சம்பள உயர்வு கோரி ஈடுபட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை நசுக்குவதற்காக யூலை 16ம் திகதி போடப்பட்ட அவசரகாலநிலை ஓகஸ்ட் 15 வரை நீடித்தது. இதற்கான பிரகடனம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் மூலமே வெளியிடப்பட்டது. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதே அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோரை வேலையிலிருந்து நீக்கியது. இத் தொழிலாளர்களில் சிலர் பிற்காலத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்தனர். (ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் வேலையை இழந்த இத் தொழிலாளர்களுக்கு வேலை பெற்றுத் தருவதாகவும் தேர்தல் காலத்தில் வாக்களித்திருந்த பொ.ஐ.மு ஆட்சிக்கமர்ந்ததன் பின்னர் ஏமாற்றியது.
இதே காலப்பகுதியில் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களை அடக்குவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி இந்த அவசர காலசட்டத்தைப் பயன்படுத்தினார். அதே லலித் அத்துலத் முதலி பிரேமதாச ஆட்சியின் போது கட்சியிலிருந்து விலகி புது கட்சி தொடங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது அதே அவசர காலசட்டத்தின் மூலம் நைய புடைக்கப்பட்டார்.
அடுத்ததாக 1981ம் ஆண்டு யூன் 2ம் திகதி கொண்டு வரப்பட்ட அவசரகால நிலை ஒரு கிழமைக்கு நீடித்தது. 1981 மே 24ம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்துக்கான மாவட்ட சபைத் தேர்தல் வேட்பாளரான ஐ.தே.க.வைச் சேர்ந்த ஏ.தியாகராஜா இனந்தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மீண்டும் அவசரநிலை 1981 ஓகஸ்ட் 17ல் போடப்பட்டு 1982 ஜனவரி 16ம் திகதி வரை அமுலில் இருந்தது. அதேவேளை 1982ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் நிரந்தர சமாக்கப்பட்டது.
83இல் இனப்படுகொலையில்
வரலாற்றில் முக்கியமான அவசரகால நிலையாக 1983 மே 18ம் திகதி போடப்பட்டதையே குறிப்பிட வேண்டும். 83 இனப்படுகொலை கூட இதன் கீழ் தான் நடத்தப்பட்டது. “சாதாரண சட்டத்தின் மூலம் அடக்க முடியாத சட்டத்தை இந்த சட்டத்தின் மூலம் தான் அடக்கமுடியும்” என்று கூறிய சிறில் மெதிவ் “அவர்களை விசர் நாய்களைப் போல கொல்லவேண்டும்” என்கிற தொணியில் கர்ஜித்தார்.
இனக் கலவரத்தை திட்டமிட்டு தாமே முன்னின்று நடாத்திய ஜே.ஆர் அரசாங்கம் கலவரத்திற்கு பொறுப்பாளிகள் என்று கூறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி ஆகியவற்றைத் தடை செய்ததுடன் அவற்றின் பத்திரிகைகளையும் கூடவே தடை செய்தது.
ரயரில் எரியூட்டப்பட்ட இளைஞர்களும், முண்டங்களாக மிதந்த பிரேதங்களும் |
அந்த அநீதியான தடையினால் இளைஞர்கள் பலர் தலைமறைவு அரசியலுக்கும் தீவிர அரசியலுக்கும் விரைவாகவே தள்ளப்பட்டார்கள். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சியிலிருந்த ஐ.தே.கவினரும் படையினரும் சேர்ந்து நடாத்திய இனப்படுகொலைகள் சாதாரணமானவையல்ல. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் எத்தனையோ நடந்தேறின. வெலிக்கடைப் படுகொலைகள் நடைபெற்றது. பலர் அகதிகளாயினர். இச்சம்பவம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பெருமளவு ஊக்குவித்தது. 1983 மே 18ம் திகதி நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு அமைச்சர் தொண்டமானும் ஆதரவாக வாக்களித்திருந்தார். மலையக மக்களை ஒடுக்குவதற்கு அவரது ஆதரவு பயன்பட்டது. 77க்குப் பின் அத்தனை தடவையும் தொண்டமான் அவசரகால சட்டத்தை ஆதரித்தே வந்தார்.
அன்றைய அந்த அவசரகாலச் சட்டம் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 11 வரை அமுலில் இருந்தது. அந்த இடைக் காலத்திற்குள் எவ்வளவோ நடந்து முடிந்திருந்தன. குறிப்பாகத் தென்னிலங்கையில் பல தொழிலாளர்கள் மாணவர்கள் உட்பட பல கிராமிய இளைஞர்களுமாக 60,000க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்கள் அவசர காலச் சட்டத்தின் பேரால் டயர்களுக்கு இரையாக்கப்பட்டனர். புதை குழிகளுக்கு அனுப்பட்டனர். ஆறுகளில் பிணமாக மிதக்க விடப்பட்டனர். வதை முகாம்கள் எத்தனையோ இயங்கின. இதே அவசர காலச் சட்டத்தின் மூலம் ஆளும் கட்சியினர் தமது சொந்தப் பழிகளையும் தீர்த்துக் கொள்ள வழிவகுத்தது.
வடக்கு கிழக்கிலும் பல இளைஞர்கள் அநியாயமாக சந்தேகத்தின் பேரில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். போதாததற்கு இந்திய அமைதிகாக்கும் படையையும் இந்த அநியாயங்களை புரிவதற்கு பங்காளிகளாக்கிக் கொண்டது ஜே.ஆர். அரசாங்கம். இலங்கைப் படையே மேல் எனப் பேசும் அளவிற்கு இந்தியப் படையினரின் அட்டூழியங்கள் நடந்திருந்தது. இதே அவசரகால சட்டம் இந்தியப் படையினருக்கு உச்ச அளவில் பயன்பட்டது.
இந்த அவசரகால நிலையும் 89 ஜனவரி 11ல் நீக்கப்பட்டிருக்கையில் ஒன்பதே நாட்களில் அதாவது ஜனவரி 20ம் திகதி மீண்டும் பிரேமதாசாவால் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. அது 1994 செப்டம்பர் வரை அமுலில் இருந்தது. 94 ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் தோற்ற ஐ.தே.க நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தலிலாவது வெல்வதற்கான வழிகளில் ஒன்றாக ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க செப்டம்பர் மாதம் அவசரகால சட்டத்தை நீக்கினார்.
குறிப்பாக வடக்கில் இந்திய இராணுவம் தனது ”அமைதி காக்கும்” பணியில் பல அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது தென்னிலங்கை இளைஞர்களை நசுக்க இலங்கை இராணுவத்திற்கு வசதியாக வாய்ப்புக் கிடைத்தது. இந்திய இராணுவம் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வேளை தென்னிலங்கையிலும் தமது அழிப்புகளைச் செய்து ஓய்ந்திருந்தது இலங்கை இராணுவம். மீண்டும் அதே இராணுவம் வடக்கில் ஓயாது இன அழிப்பை நடத்துவதற்காக இறக்கிவிடப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான பல இராணுவ நடவடிக்கைகளையும் இனப்படுகொலைகளையும் நடாத்தியிருந்தது. கொக்கட்டிச்சோலை, மயிலந்தனை போன்ற பெரிய இனப் படுகொலைகளைச் செய்ய அவசரகாலச் சட்டமே அங்கீகாரமளித்தது. அக்குற்றங்களை புரிந்த இராணுவத்தினர் மீது இராணுவ விசாரணை எனும் போர்வையில் போலி நாடகமாடியது.
ஆதரித்தோரும் எதிர்த்தோரும்
1994 இல் ஜே.வி.பி பாராளுமன்றத்தில் இடம்பிடித்தபோது தொடர்ச்சியாக அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களித்தது. சந்திரிகா அரசாங்கத்தின் போது அவசரகால சட்டத்தை எதிர்த்து ஒற்றைப் பிரதிநிதியாக (நிஹால் கலப்பத்தி) வாக்களித்த ஒரே கட்சி அது தான். அதே அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி 87-89 காலப்பகுதியில் ஜே.வி.பியை கிட்டத்தட்ட முழுமையாக அழித்திருந்தது அரசாங்கம். ஆகவே அதன் வலி தெரியும். ஆனால் அதன் பின் வந்த அரசாங்கங்களின் போது ஜே.வி.பி இனவாத நிலைப்பாடு எடுத்தவேளை அவசரகால சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததையும் வரலாறு மறக்கவில்லை. அதே காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இ.தொ.கா, ஈ.பி.டி.பி, புளொட், முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கூட வெளியில் அவசரகால சட்டத்துக்கு எதிராக அறிக்கைவிட்டுக்கொண்டு அந்த சட்ட நீடிப்பன்று அரசாங்கத்துக்கு ஆதவளித்து வந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ் மக்களின் தலைவர்களைக் கொண்டே தமிழ் மக்களின் கண்களை பிடுங்கும் வேலை கச்சிதமாக அரசாங்கத்தால் அரங்கேறியது.
ஐ.தே.க இந்த காலத்தில் முதலில் எதிராக வாக்களித்த போதும் பின்னர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நழுவிவிட்டு, சில காலங்களின் பின்னர் ஆதரவளிக்கத் தொடங்கியது. எதிர்த்தால் “பயங்கரவாதத்தை” ஆதரித்ததாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டுவிடும் என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது.
2009 இல் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கி துடைத்தெறிய இந்த சட்டமே இரும்புக் கரமாக சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்தது. ஜெனிவாவில் அரசாங்கம் ஒத்துகொண்டபடி 2011 ஓகஸ்ட் 26 அவசரகால சட்டத்தை நீக்கியது. ஆனால் 06.09.2011 வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் அதன் பல அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. கூடவே பயங்கரவாத தடைச் சட்டம் இன்னமும் பயன்படுத்தப்படுவது பற்றி “மனித உரிமைகள் கண்காணிப்பு” சமீபத்தில் விமர்சித்திருக்கிறது.
1942 இலிருந்து 2011வரையான 69 வருட காலத்தில் அதிகமான காலம் இலங்கை மக்கள் அவசரகால சட்டத்தின் கீழ் தான் ஆட்சிசெய்யப்பட்டிருக்கிறார்கள். இன்றும் தேவையேற்படும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. டெங்கு ஒழிப்புக்காகக் கூட அது பிரகடனப்படுத்தப்படுகிறது. அத்தோடு அது நிற்கட்டும்.
துரோகங்கள் தொடரும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...