அறிந்தவர்களும் அறியாதவையும் - 21
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நாம் இலங்கையில் குறிப்பிட முடியும். அதுவேறு யாருமில்லை மீனாட்சி அம்மாள் நடேசய்யர்.
ஒரு ஆணின் வெற்றியின் பின் பெண் இருப்பார் என்று ஒரு பொதுப்புத்தி ஐதீகம் உண்டு. ஒரு பெண்ணின் வெற்றியின் பின்னால் ஆணின் வகிபாகம் உண்டு என்று பொதுவாகக் கூறும் வழக்கமும் இல்லை. ஆனால் நடேசய்யர் – மீனாட்சி அம்மாள் ஆகியோர் விடயத்தில் பரஸ்பர வெற்றிக்கு பரஸ்பர வகிபாகம் பெரிதளவு இருந்திருக்கிறது. நடேசய்யர் பற்றி பேசும் போது மீனாட்சி அம்மாளை தவிர்க்க முடியாது. அதுபோலவே மீனாட்சி அம்மாள் பற்றிய உரையாடல்களில் நடேசய்யரையும் தவிக்க முடியாது.
தனது முதல் மனைவி இறந்ததன் பின்னர் தனிமையில் வாழ்ந்த அய்யர் மீனாட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார். நடேசய்யர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பிராமணர். மீனாட்சி அம்மையார் நடேசய்யருக்கு உறவுக்காரர் என்று அறியப்படுகிறது.
இலங்கை வருகை
தஞ்சாவூரில் அரசாங்க உத்தியோகத்தராக பணியாற்றிய பின்னர் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது தென்னிந்திய வர்த்தகர்களின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள 1919 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தார் நடேசய்யர்.
தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த இந்தியர்களின் நிலையைக் காணச் வந்த அவருக்கு கிடைத்த காட்சிகளால் மிகவும் வருந்தினார். தோட்டங்களுக்குள் வெளியார் யாரும் செல்ல முடியாத சூழ்நிலையில் புடவை வியாபாரிகளுடன் சேர்ந்து தோட்டங்களுக்குச் சென்று நிலைமையை அறிந்தார். இந்தியா திரும்பியதும் இலங்கையில் தோட்டத் தொழிலாளருக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சிறு பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார். தஞ்சாவூர் காங்கிரஸ் கமிட்டியிடம் தனது பிரசுரத்தையும் விளக்கமான அறிக்கையையும் சமர்ப்பித்தார். இந்த பாவப்பட்ட மக்களின் மீட்சிக்காக மீண்டும் 1920ஆம் ஆண்டு இலங்கைக்கு தனது துணைவியாரான மீனாட்சி அம்மையாரும் வந்து நிரந்தரமாக பணியாற்றினார்கள்.
மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை 1931இல் ஆரம்பித்தார் நடேசய்யர். அந்தத் தொழிற்சங்கத்துக்கு தொழிலாளர்களை அணிதிரட்டி, அறிவூட்டி உணர்வுகொடுக்கும் தளபதியாக மீட்சியம்மாள் திகழ்ந்தார். 1940 இல் 37,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது அது.
மீனாட்சி அம்மையாரின் பன்முகம்
மீனாட்சி அம்மையார் ஓர் இலக்கியப் படைப்பாளியாவார். அக்காலத்து பாரதியின் கவிதைகளால் ஆகர்சிக்கப்பட்டிருந்த மீனாட்சி அம்மையார் பாரதியாரின் பாடல்களையும், தானே மலையக தொழிலாளர்களுக்கு ஏற்றார் போல சமூக விடுதலை, தொழிலாளர் விடுதலை சார்ந்து கவிதைகளை எழுதி அவரே தோட்டங்களெங்கும் பாடிப் பரப்பினார். 1931 ஆம் ஆண்டு இவரது படைப்புகள் ‘இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து’ என்ற தலைப்பில் இருபாகங்கள் வெளியிடப்பட்டது. மேலும் 1940 ஆம் ஆண்டு ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற தலைப்பில் அவரது சிறு கவிதை நூல் வெளிவந்தது.
அந்த சிறு நூலின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார்.
இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வரவரமிகவும் மோசமா கிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீவிரமுடன் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்தியத் தோட்டத் தொழிலாளர் களிடையே பிரசாரம் செய்ய வேண்டியது மிசவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுகளின் மூலம் எடுத்துக்கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களை தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தீவிரமாகப் போராடும்படி அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா.
கோ. ந. மீனாட்சியம்மாள்.
மல்லியப்பூ, அட்டன்.
23-5-40.
தேயிலைத் தோட்டங்களில் நடைபெற்ற அடக்கு முறைகள் பற்றி 1937ம் ஆண்டு கொழும்பில் வெளியான 'இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம்'என்ற நாடக நூல் |
மீனாட்சியம்மாள், அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த திரைப்படப் பாடல் மெட்டுகளில் தமிழர்களின்தோட்டத் தொழிலாளர்கலைப் பாடல் எழுதினார். 23-5-1940இல் இவர் படைத்த படைப்புகள் கிளர்ச்சியை மூட்டின. மீனாட்சியம்மாள் எழுதிய பாடல்களுள் ஒன்பது பாடல்கள் கிடைத்திருந்தன. தொடக்கப் பாடல் வெண்பா அமைப்பிலும், நிறைவுப் பகுதி விருத்த அமைப்பிலும் உள்ளன. அவற்றில் பல திரைப்பட மெட்டில் எழுதப் பெற்றுள்ளன. "பாரத நாட்டினிலே தீரத்தைப் படிப்போம்' என எழுதும் இவர் இரண்டாம் பாடலில் மகாத்மா காந்தியை இருமுறை குறிப்பிடுகிறார். ஒரு பாட்டில் முதல் அடி "வங்க மாதா நம்ம தாய் தான்' என்று தொடங்குகிறது. இந்தியாவிலிருந்து ஈழத்திற்குத் தமிழர் கொண்டு வரப்பட்டதை,
"பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் - அந்நாள்
பல பேர்கள் உயிரினை இடை வழி தந்தோம்''
என்று பாடியுள்ளார்.
சிங்கள மந்திரிகள் கூற்று மிக
சீருகெட்டதென்று சாற்று
சங்கடமே நேருமென தோற்று திந்திய
சமூகம் நெருப்பாய் வரும் காற்று
மேலும்
நன்றிகெட்டு பேசும் மந்திரி மாரே உங்கள்
நியாயமென்ன சொல்லு வீரே
இன்றியமையாத வொரு போரே செய்ய
இடமுண் டாக்குகிறீர் நீரே
என்று அவர் பாடிய பாடல் இலங்கை வரலாற்றில் சிங்கள பேரினவாதத்துக்கும் எதிரான கருத்து நிலையை முதன் முதலாக பாடல் மூலம் பதிவாக்கிய பெண்ணாக வரலாற்றில் பதிவாகிறார்.
இதுபோன்ற பாடல்கள் அடங்கிய பிரசுரம் "இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் செய்திடும் சூழ்ச்சி என்றும் குறிப்பிடுகிறார். இலங்கையில் நேர்மையாய் வேலை செய்தோம் என்று பாடுகிறார். கும்மி மெட்டில் பாட்டு அமைத்து அதில் தமிழர் படும் துன்பங்களை அழகாக விவரிக்கிறார்.
நடேசய்யருடன் சேர்ந்து மீனாட்சியம்மை பொது மேடைகளிலும், பஸ்தரிப்பு நிலையங்களிலும், மக்கள் கூடும் பொதுச்சந்தை நிலையங்களிலும் தோன்றி திறந்தகாரை மேடைபோல் பாவித்து பேசும்போது புத்துணர்வு பெற்றார்கள் தொழிலாளர்கள். சந்தாமுறை இல்லாத அந்நாட்களில் தொழிற்சங்கம் நடாத்து மிகவும் சிரமமாக இருந்தபோதும் தொழிலாளர்கள் தரும் உதவியிலேயே சங்கத்தை நடத்த வேண்டிவந்தது.கூட்டம் முடிந்து திரும்புகையில் தொழிலாளர்கள் அன்பளித்த காய்கறிகளால் நிரம்பிவழியுமாம் அவர்களின் வண்டி.
அரசியல் பிரதிநிதித்துவம்
மலையக மக்களின் முதல் சட்ட நிரூபன சபைப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட இருவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. மூன்றாமவர் ஐ.எக்ஸ். பெரைரா. 1920இல் மனிங் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதிநிதியாக முதற்தடவையாக இந்தியப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர் ஈ.ஜி.ஆதமலை. அதன் பின்னர் 1924 ஆம் ஆண்டு சட்ட நிரூபன சபைக்கு இரண்டு இந்தியர்ககளைத் தெரிவு செய்யும் தேர்தலில் போட்டியிட்ட ஆறு பேரில் ஐ.எக்ஸ். பெரைரா (5,141), மொஹமத் சுல்தான் (3511) நடேசய்யர் (2948) வாக்குகளைப் பெற்று நடேசய்யர் மூன்றாவதாக வந்ததால் தெரிவாகவில்லை. ஆனால் இந்தியர் சார்பில் வெற்றி பெற்றிருந்த எஸ்.ஆர்.மொஹமத் சுல்தான் ஆறே மாதங்களில் இறந்துபோனதால் இடைத்தேர்தல் ஏற்பட்டு அதில் வெற்றிபெற்றார். நடேசய்யர் 1931 சட்ட நிர்ரூபன சபை கலைக்கப்படும்வரை நடேசய்யர் தனது பதவியை திறம்பட செய்தார். எஸ்.ஆர்.மொஹமத் சுல்தான் (S. R. Mohamed Sultan). மொஹமத் சுல்தான் இலங்கையில் முகமதியர்கள் என்று முஸ்லிம்களை அழைக்கக்கூடாது இனி “முஸ்லிம்” என்றே பதிவுகளில் இருக்கவேண்டும் என்று சட்ட நிரூபன சபையில் போராடிய ஒருவர். (sessional paper XXXV of 1924)
1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும் பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தொகுதியில் வெற்றிபெற்று 1947-ஆம் ஆண்டு வரை இலங்கை இந்தியக் காங்கிரசின் சார்பில் அங்கம் வகித்தார். 1947 ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதனைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் 07.11.47 அன்று மாரடைப்பினால் காலமானார். எஸ்.ஜே.வி. செல்வநாயகமே அவரின் இறுதி நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதி ஆயுதமாக
நடேசைய்யரை தொழிலாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதற்காக பெரிய கங்காணிமார்-தோட்டத் துரைமார் கூட்டணிக்கும் அவருக்கும் இடையில் விரிசலை வளர்த்து கடும்பகையை வளர்த்தெடுத்தனர் அன்றைய ஆதிக்க சக்தியினர். அவர் ஒரு பிராமண என்றும் தென்னிந்தியாவில் பார்ப்பனியர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் சூழலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையில் தஞ்சம் புகுந்திருக்கும் சுயநலவாதி என்று கூறி சாதியத்தை குறுக்குவழியில் பயன்படுத்த விளைந்தனர்.
“கல்வியறிவில்லாத மக்களுக்கு கடவுளைத் துதித்து மீளும் பாக்கியம்கூட இல்லை என்ற அளவிற்குஉயர்குடி மேட்டிமைத்தனத்தின் பிரதிநிதியான நாவலர் விளங்கியபோது, தஞ்சை அக்கிரஹாரத்து மனிதரான நடேசய்யரோ அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட அடிமைப்பட்ட நிலையில் உழன்ற மக்களின் மத்தியில் நின்று அவர்களின் நலனுக்காக போராடிய ஒரு மகனாக உயர்ந்து நிற்கிறார்.” என்று 91 ஆண்டு பெர்லினில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பின் போது தனது உரையில் தெரிவித்திருந்தார் மு.நித்தியானந்தன்.
இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை ஆரம்பித்த வி.கல்யாணசுந்தரம் ஆசிரியராக இருந்து தமிழகத்தில் நடத்திய தேசபக்தன் என்கிற பெயரிலேயே 1924இல் இலங்கையிலும் நடேசய்யர் ஆரம்பித்தார்.
ஏற்கெனவே திராவிடப் பத்திரிகையில் பணியாற்றிய தனது உறவுக்காரரான சாரநாதனை இலங்கைக்கு வரச்செய்து தேசபக்தனை சாரனாதனின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தபோதும் மதுபழக்கத்தாலும், வெளிச் சதிகளுக்கும் சாரநாதன் பலியானதால் அவர் பிரிந்து போனார். மீனாட்சி அம்மை அந்த இடத்தைப் பூர்த்திச் செய்தார்.
இதைவிட தனது அச்சுக்கூடத்தில் எழுத்துக்கோர்க்கும் பணியில் சில பெண்களைச் சேர்த்துப் பணிபுரியவும் வைத்தார். நடேசய்யர் மற்றும் மீனாட்சியம்மாள் ஆகியோரின் பங்களிப்பில் வெளியான பல வெளியீடுகள் பதிவாகியுள்ளன.
வாக்குரிமைக்காக
1929ம் ஆண்டில் 'தேசபக்தன்' தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. மீனாட்சி அம்மையார் பத்திரிகையைப் பொறுப்பேற்றார். “பிரதம ஆசிரியரும், சொந்தக்காரருமாகிய கெளரவ கோ. நடேசய்யருக்காக அன்னரின் மனைவி ஸ்ரீமதி கோ. ந. மீனாட்சியம்மாளால் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது” என்ற குறிப்புடனேயே பத்திரிகை தினந்தோறும் வெளிவந்திருக்கிறது. மீனாட்சியம்மாள் அதில் நிறைய கட்டுரைகளை எழுதினார். “தேசபக்தன்” அவர்களின் இலட்சிய அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டது. இதே காலத்தில் டொனமூர் ஆணைக்குழு இலங்கை வந்திருந்த போது சர்வஜன வாக்குரிமைக்காக அந்த ஆணைக்குழுவில் நடேசய்யர் சாட்சியமளித்த போது மீனாட்சியம்மாள் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்துடன் சேர்ந்து இயங்கியதுடன் பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தி தேச பக்தனில் எழுதினார்.
ஆங்கிலேய காலனித்துவ நாடுகளிலேயே முதன் முதலாக அனைவருக்கும் ஒரே நேரத்தில் சர்வஜன வாக்குரிமை கிடைத்த முதல் நாடு. சேர்.பொன் இராமநாதன் போன்றவர்கள் கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று டொனமூர் ஆணைக்குழுவின் முன் நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கையில் பெண்களின் வாக்குரிமை சங்கத்தின் விடாப்பிடியான போராட்டமே பெண்களும் சேர்த்து 1931இல் வாக்குரிமை வழங்கப்பட ஏதுவாகியது.
நடேசய்யர் எழுதியுள்ள நூல்கள்
- வெற்றியுனதே,
- நீ மயங்குவதேன்,
- நரேந்திரபதியின் நரக வாழ்க்கை,
- தொழிலாளர் அந்தரப் பிழைப்பு (நாடகம்),
- இந்தியா - இலங்கை ஒப்பந்தம்,
- தொழிலாளர் சட்டப் புத்தகம், கதிர் காமம்,
- அழகிய இலங்கை,
- Planter Raj, The Ceylon- Indian crisis.
- ‘ஒற்றன்’, ‘மூலையில் குந்திய முதியோன்’ அல்லது ‘துப்பறியுந்திறம்’ (நாவல்கள்)
- ‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ எனும் சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார்.
ஏ.ஈ.குணசிங்கவை கேலிசெய்து முதற்பக்கத்தில் வெளியிட்ட கேலிசித்திரம் |
விடுதலைக்கான ஆயுதமாக பத்திரிகை
நடேசய்யர், ‘பத்திரிகைகளை அச்சில் வார்த்த ஆயுதங்கள்’ என்றார். அது முற்றிலும் உண்மை. அவர் எழுத்தை சமூக விடுதலைக்கான ஆயுதமாகத் தான் பிரயோகித்தார்கள். பத்திரிகையின் பலம் எத்தகையது என்பதை நன்கு அறிந்து அதனை இயக்கினார்கள். ஆங்கிலேயர்களுக்கும், தோட்டத் துரைமார்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தமது விழிப்புணர்வை மெய்ப்பிப்பதற்கும், உண்மையை பிரச்சாரம் செய்து தொழிலாளர்களை விழிப்புணர்வூட்டி, வலுவூட்டுவதற்கும் அவர்கள் கைகொண்ட ஆயுதம் ஊடகம் தான்.
1924 செப்டம்பர் 10 அன்று அவர் சட்டசபையில் உரையாற்றும் போது
'எனக்குச் சட்டசபை பெரிதல்ல, பத்திரிகைதான் பெரிது. நான் சட்ட சபைக்குப் போய் செய்யக் கூடிய நன்மையைவிட பன்மடங்கு அதிக நன்மை பத்திரிகையால் ஏற்படுத்தமுடியும்'. என்று அழுத்தமாகக் கூறினார்.
தேசநேசன் (1922 - 1923) தேசபக்தன் (1924 - 1929) தொழிலாளி. (1929) தோட்டத் தொழிலாளி (1947) உரிமைப் போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும் சிட்டிஷன் - (Citizen) (1922) ஃபோர்வர்ட் (Forward), (1926) இந்தியன் ஒப்பீனியன் (1936) இந்தியன் எஸ்டேட் லேபர் (Indian Estate Labour) (1929) என்று ஆங்கிலத்திலும் நடேசய்யர் பத்திரிகைகளை வெளியிட்டிருக்கிருர். லேக்ஹவுஸ்சிலும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார்.
தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் பாரிய பங்களிப்பை ஏற்படுத்திய சுதந்திரன் பத்திரியகையின் ஸ்தாபக ஆசிரியர் கோ.நடேசையர் அவர்கள் தான். இதனை அன்று ஆரம்பிக்கும்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்கு இருந்த நம்பகமான முதற் தெரிவு நடேசய்யர் தான்.
தேசபக்தன் ஆசிரியர் தலையங்க முகப்புச் சின்னம் |
வீரகேசரியின் முதல் ஆசிரியரான எச். நெல்லையா என்பவர் நடேசய்யரின் கீழ் தேசபக்தனில் 1927ல் கடமையாற்றியவர். அதன் பின்னர் வீரகேசரி ஆசிரியராக வந்த நாகலிங்கம் என்பவர் நடேசய்யருக்கு மருமகன் உறவாவார்.
இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமாக கருதப்படும் ஏ.ஈ.குணசிங்காவின் “இலங்கை தொழிற் கட்சியில் (Ceylon Labor Union) நடேசய்யரும் இணைந்து அதன் சார்பாக “ஃபோவர்ட்” (Forward) என்கிற பத்திரிகையையும் நடத்தி வந்தபோதும் பின்னர் ஏ.ஈ.குணசிங்க இந்தியர்களுக்கு எதிரான இனவாத நிலைப்பாடு எடுத்தபோது அவருடன் 1929 இல் விலகினார். அந்தத் தொழிற்கட்சியில் நடேசய்யர் உபதலைவராகவும் செயற்பட்டிருந்தார். ஏ..ஈ.குணசிங்கவின் போக்கை கடுமையாக விமர்சித்து தேசபக்தன் பத்திரிகையின் முதற் பக்க கேலிச்சித்திரங்களையும் பிரசுரித்து வந்தார்.
பிரேஸ்கேர்டில் சம்பவம் நிகழ்ந்தபோது போலிஸ் கெடுபிடிகளையும் மீறி பலகூட்டங்களில் கலந்து கொண்டார்கள் நடேசய்யர் தம்பதியினர். அதுபற்றி காலி முகத்திடலில் நடந்த மாபெரும் கூட்டத்தில் மீனாட்சியம்மாளும் உரையாற்றினார். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களில் ஒன்றாக பயணித்தார்கள்.
விரிவான ஆய்வின் அவசியம்
நடேசையர்-மீனாட்சியம்மாளுக்கும் இரு பிள்ளைகள் பிறந்தனர் மகன் பாப்பையா, மகள் தாயம்மாள்அவர்களின் தலைமுறையினர். மிகுந்த வறுமையில் வாடி மடிந்தனர். எஞ்சியோர் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. பாப்பாவின் மகள் ஜெகதாம்பாளுக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்றாவது மகன் திருகோணமலையில் ஒரு சித்ராவதி எனும் சிங்களப் பெண்ணை மணமுடித்து சிங்களவராகவே மாறிவிட்டதாக அறியக் கிடைக்கிறது.
இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது தமிழ் பெண் குரல் மீனாட்சியம்மாள். அதுபோல ஈழத்தின் முதல் பெண் கவிஞர் என்ற பெருமைக்குரியவரும் அவர் தான்.
இன்றுவரை நடேசய்யர், மீனாட்சியம்மாள் பற்றிய விபரங்களுக்காக மூலாதாரமாக பயன்படுத்தப்படும் பிரதான நூற்களாக மறைந்த எழுத்தாளர் சாரல் நாடன் கண்டுபிடித்து எழுதிய நூல்களையே பலரும் பயன்படுத்தி வருகின்றன. நடேசய்யரை மறுகண்டுபிடிப்பு செய்து அடுத்த கட்ட ஆய்வுக்கு உந்தியவர் கலானித்து குமாரி ஜெயவர்த்தன என்கிறார் சாரல் நாடன். அதைத் தவிர இவர்களைத் தவிர அந்தனி ஜீவா, லெனின் மதிவானம், தம்பையா, ந.இரவீந்திரன் போன்றோரும் பல சிறப்பான திறனாய்வுகளை செய்திருக்கிறார்கள்.
ஒரு முழு நேர தொழிற்சங்கவாதியாகவும், தொழிற்சங்கவாதியாகவும், சமூக அரசியல், பெண்ணிய செயற்ப்பாட்டாளராகவும், முழு நேர பத்திரிகையாளராகவும், பாடலியற்றும் கவிஞையாகவும், அதைப் படிப்பரப்பும் பாடகியாகவும் ஒரே நேரத்தில் செயற்ப்பட்ட ஒரு பெண் ஆளுமையை இலங்கை வரலாற்றில் முதற் பெண்ணாகவும், ஒரே பெண்ணாகவும் மீனாட்சியம்மயாரைத் தான் காண முடியும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடேசய்யர் பற்றி அறியக் கிடைத்த அளவுக்கு மீனாட்சியம்மாள் பற்றிய விபரங்கள் அரிதாகவே உள்ளன. அதற்கான தீவிர முயற்சிகள் செய்ததாகவும் அறியமுடியவில்லை.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...