Headlines News :
முகப்பு » , , , , , » டொரின் விக்கிரமசிங்க : சோஷலிசப் பெண் போராளி - என்.சரவணன்

டொரின் விக்கிரமசிங்க : சோஷலிசப் பெண் போராளி - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 17

இலங்கையின் இடதுசாரித்துவம், அரசியல், கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள், பெண்கள் போன்ற விடயங்களில் டொரினுக்கு நிகராக ஈடுபட்ட வேறெந்த விதேச பெண்ணும் வரலாற்றில் கிடையாது.

குடும்பப் பின்னணி
1907ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி இங்கிலாந்தில் செஷர் பகுதியில் பிறந்த ‘டொரின் வினிப்ரெட் யங்’ (Doreen Winifred Young) மூன்று தலைமுறையாக இடதுசாரி பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். டொரினின் பாட்டனார் (தாயாரின் தந்தை) ரொபர்ட் வியர் (Robert Weare) லண்டனில் பலராலும் அறியப்பட்ட ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர். அதன்வழியே அவர் மகள் லில்லி வியர் (Lily Weare) ஒரு இடதுசாரி தொழிற்சங்க செயற்ப்பாட்டளராக இருந்தார். அப்பேர்பட்ட சூழலைக் கொண்ட பின்னணியில் டொரின் மட்டும் விதிவிலக்காவாரா என்ன.

டொரீன் கற்ற வித்தியாசமான பாடசாலையாக திகழ்ந்த சென் கிரிஸ்டோபர் கல்லூரி அன்று பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது. அவர்களின் முற்போக்குக் கொள்கையாலும், மதச்சார்பற்ற வழிநடத்தலாலும் வளர்ந்தார் டொரின். அங்கு தான் முதன்முதலில் அவர் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய விபரங்களை அறிந்தார். அந்த பாடசாலையின் “பேச்சு நாளில்” (Speech day) ஒரு முறை; பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர் லண்டன் பொருளாதார கல்லூரியில் (LSE – London School of Economics and Politics) உயர்தரத்தை கற்றார். அப்போது அக்கல்லூரியில் கிருஷ்ணமேனன் (பிற்காலத்தில் இந்தியாவில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர்.) லண்டனில் கல்வி கற்றுக்கொண்டே வரலாறு கற்பிக்கும் விரிவுரையாளராக இருந்தார். அவரது விரிவுரையினூடாக இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் பரவின. இவரிடம் கற்ற டொரின் கிருஸ்ணமேனனின் ஆலோசனையின்படி 1926இல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அரசியல் துறைகளை கற்கத் தொடங்கினார். “இந்தியா லீக்” (India League) எனப்படும் அமைப்பில் கிருஷ்ணமேனனின் செயலாளராகவும் டொரின் பணியாற்றினார். 

சுதந்திரப் போராட்டத்தில் ஈர்ப்பு
அந்த இயக்கத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இயங்கிய இந்தியர்களும், இலங்கையர்களும் அறிமுகமானார்கள். அங்கு தான் பிற்காலத்தில் அவரது கணவராக ஆன எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் அறிமுகமும் கிடைத்தது. எஸ்.ஏ.விக்ரமசிங்க இலங்கையில் பிரம்மஞான சங்கம் உருவாக்கிய மகிந்த கல்லூரியில் கல்வி கற்றவர். ஒரு நிலச்சுவாந்திர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பல்கலைக்கழகத்தில் முக்கியப் பிரமுகராக இருந்தவரும் மார்க்சீய கருத்துக்களைக் கொண்டவருமான ஹெரால்ட் லஸ்கியின் கருத்துக்களால், ஈர்க்கப்பட்டார் டொரீன். கூடவே லண்டனில் பிரம்மஞான சங்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தார். லண்டனில் இருந்த கொம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்களும், பிம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர்களும், ஏகாதிபத்திய விரோத செயற்ப்பாட்டாளர்களுமே அவரின் நட்பு வட்டமானது. அந்தக் கல்லூரியின் மாணவர் இயக்கத்தின் செயலாளராகவும் இயங்கியதில் அவரது தலைமைத்துவ பண்பை உயர்த்த வழிவகுத்தது.

டொரினின் நெருங்கிய பள்ளித் தோழி சார்லி (Charlotte Jonas). சார்லி ஒரு யூதப் பெண். இருவரும் சேர்ந்து ஒரு சமயத்தில் சுவீடனில் கோடைகால கற்கையை முடித்துக் கொண்டு ஜேர்மனிலும் ஒன்றாக கற்றார்கள். இருவரும் சேர்ந்து இந்தியாவுக்குச் சென்று அங்கு ஏதாவது ஒரு தொழிலைச் செய்துகொண்டே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்வதே டொரீனின் இலக்காக இருந்தது. என்ற போதும், அம்முயற்சிகள் தோல்வியடைந்தன. டொரினுக்கு இலங்கையில் வேலையொன்றையும் தேடித்தருவதாக எஸ்.ஏ.விக்கரமசிங்க ஒப்புக்கொண்டதன்பின் டொரின் இலங்கை வரத் தீர்மானித்தார்.

இலங்கை வருகை
1930இல் இங்கிலாந்திலிருந்து கப்பலில் தனது தோழி சார்லியுடன் ஒரே நோக்கத்துக்காக (Charlotte Jonas) புறப்பட்டார். அந்தக் கப்பலில் பயணம் செய்த தோட்ட உரிமையாளர்களை காரசாரமாக கண்டித்து விமர்சித்த டொரினும் சார்லியும் பலரது கவனத்துக்குமுள்ளானார்.

1930 நவம்பர் மாதம் கொழும்பை வந்தடைந்தார். அடுத்த நாள் பத்திரிகையிலேயே அவர் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியும் வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 23. டொரினும் சார்லியும் மாத்தறை சென்றடைந்தபோது அங்கு பலத்த ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாத்தறை சுஜாதா வித்தியாலயம் பிரித்தானிய மாதிரியைக் கொண்டதான, பிரித்தானிய விசுவாசத்தை பிரதிபலிக்கின்ற ஒரு பாடசாலையாக இயங்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர். அந்த பாடசாலையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார்.

சுஜாதா பாடசாலையில் சார்லியும் ஒரு ஆசிரியையாக கடமையாற்றியதோடு அங்கு பணியாற்றிய ஏனைய ஆசிரியைகளும் தீவிர லட்சியவாதிகளானார்கள். அந்தப் பாடசாலையில் பணியாற்றியபடி தனது அரசியல் வேலைகளையும் செய்யத்தொடங்கினார். அப்பாடசாலையில் கடமையாற்றிய ஏனைய ஆசிரியர்களும் தேசிய அரசியல் சுதந்திரப் போராட்டம் என்பனவற்றில் ஈடுபாடுகொள்வதற்கு டொரின் காரணமானார். இந்த ஆசிரியர்கள் பிற்காலங்களில் ”சூரியமல்” இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபாடுகொண்டனர். 

அதிபராக...
அதன் பின்னர் டொரீனை கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையான விசாகா மகளிர் கல்லூரியில் பணிபுரிய அழைப்பு வந்தது. ஆனால் அதற்கிடையில் காலனித்துவ, மற்றும் ஆங்கிலேய எதிர்ப்பாளரான  எஸ்.ஏ.விக்கிரமசிங்கவை (அப்போது அவர் 1931இலிருந்து அரசாங்க சபையில் அங்கத்துவம் வகித்து வந்தார்.) டொரீன் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பதை அறிந்த அவர்கள் அந்த அழைப்பை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

1933 ஏப்ரல் 26ஆம் திகதி டொரின் எஸ்.ஏ.விக்கிரமசிங்காவை மணந்தார். எஸ்.ஏ.விக்கிரமசிங்க இலங்கை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட (1931) முதலாவது இடதுசாரி. லங்கா சம சமாஜக் கட்சியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். பின்னர் அதிலிருந்து  கொம்யூனிஸ்ட் கட்சி பிரிந்ததன் பின் நீண்ட காலம் அதன் தலைவராக இருந்தவர். காந்தி சிறையில் இருந்த போது எஸ்.ஏ.விக்கிரமசிங்காவும் டொரினும் சென்று சந்தித்துவிட்டு வந்தனர். எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உரைகளை டொரீன் சில தடவைகள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார் என்றும் குமாரி ஜெயவர்தன தனது நூலில் விபரிக்கிறார்.

அதன் பின்னர் இலங்கையின் முன்னணி பாடசாலையான ஆனந்த கல்லூரியின் சகோதர பாடசாலையான ஆனந்தா மகளிர் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டார் (1933-1935). அந்தக் கல்லூரியில் பல்வேறு மாற்றங்களை செய்தார். சேலை கட்டிக்கொண்டு இலங்கைப் பெண்ணாகவே அவர் காட்சியளித்தார்.

1934ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ரவீந்திரநாத தாகூர் சாந்தி நிகேதனைச் சேர்ந்த தனது பாடகர்கள், நடனக் கலைஞர்களுடன் வந்திருந்தபோது டொரீன் இந்த பாடசாலையில் தான் தங்கவைத்து உபசரித்தார்.

“சூரியமல்” இயக்கம்
இலங்கையின் முதலாவது அரசியற் கட்சியும் இடது சாரிக் கட்சியுமான லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெறுவதற்கு முன்னோடி இயக்கமாக ”சூரிய மல்” (சூரிய மலர் – பூவரசுப் பூ) இருந்தது. முதலாம் உலக யுத்த காலத்திலிருந்து ஆண்டு தோறும் போர் வீரர்களுக்கு நிதி திரட்டும் முகமாக பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த நாடுகளில் “பொப்பி பூ” விற்கும் நாள் இலங்கையிலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதே யுத்தத்தில் ஈடுபட்ட உள்ளூர் வீரர்களுக்கு அதனால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை என்பதால் இலங்கையர் நலனுக்காக 1931இல் நவம்பர் 11ஆம் திகதியன்று “சூரியமல் தினம்” ஏலியன் பெரேரா என்கிற முன்னாள் வீரரால் உருவாக்கப்பட்ட அந்த இயக்கத்தில் தலைமையேற்றதன பின்னர் டொரின் அதன் தொனிப்பொருளை விரிவான தளத்திற்கு எடுத்துச் சென்றார். அவர். பாசிச எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அமைதி, சமாதானம். போன்ற பிரசாரங்களுக்கு அதனை இட்டுசென்றார்கள். 

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கும் வரை அந்த இயக்கம் இயங்கியது. நிதி திரட்டுவதில் பெரிய வெற்றி ‘சூரியமல்” இயக்கத்திற்கு கிட்டாவிட்டாலும் அவர்களுக்கு சிறந்த பிரச்சார களமாக அமைந்தது அது.  "ஒவ்வொரு சூரிய மலரும் ஏகாதிபத்தியம், பாசிசம், போர் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்" என்பதே பிரதான சுலோகமாக இருந்தது.

ஆனந்தா மகளிர் பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேசிய உணர்வு ஊட்டப்பட்டது. “சூரியமல்” இயக்கத்தின் தலைமையகமாக இருந்தது அந்த பாடசாலை. தனது இரு குழந்தைகளில் மூத்த மகளுக்கும் “சூரிய” என்கிற பெயரைத் தான் சூட்டினார் டொரின்.


மலேரியா எதிர்ப்பியக்கம்
1934-1935 காலப்பகுதியில் இலங்கையில் மலேரியா நோய் கடுமையாகப் பரவி லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட போது டொரின் தலைமையிலான “சூரியமல்” இயக்கம்; ஒரு மலேரியா நிவாரண இயக்கமாக ஆக்கிக்கொண்டு களத்தில் இறங்கியது. குறிப்பாக கேகாலை, குருநாகல், கண்டி போன்ற மாவட்டங்கள் மட்டுமன்றி மலையகத்திலும் பல இந்தியா வம்சாவளி தமிழர்கள் மரணமானார்கள். கொல்வின் ஆர் டீ சில்வா, என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தன போன்ற தலைவர்கள் நிவாரண உதவிகளை திரட்டிக் கிராமம் கிராமமாகச் சென்று பங்களித்தார்கள். டொரினின் கணவர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க தனது மருத்துவ நிபுணத்துவத்தை பயன்படுத்தி சிகிச்சை முகாம்களை நடாத்தினார். மக்கள் அவரை டொக்டர் என்றே அன்பாக அழைத்தார்கள். அரிசி பருப்பு போன்றவற்றைப் பகிர்ந்த என்.எம்.பெரேராவை “பருப்பு மாத்தயா”என்றே அழைத்தார்கள்.  இந்த இயக்கம் தான் இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும், இலங்கையின் முதலாவது தொழிலாளர் வர்க்க இடதுசாரிக் கட்சியுமான லங்கா சமசமாஜக் கட்சியின் தோற்றத்துக்கு வித்திட்டது.

1920களின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. 1933இல் வெள்ளவத்தை ஆலைத் தொழிற்சாலை வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் அன்றைய இடதுசாரி இளைஞர்கள் பலரை ஈடுபடச்செய்தது. தீவிர தொழிலாளர் இயக்கமாக கருதப்பட்ட ஏ.ஈ.குணசிங்காவின் இலங்கை தொழிற் கட்சி சிதறிக்கொண்டிருந்தது. டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் அறிமுகம், இலங்கை தேசிய காங்கிரசின் (CNC-Ceylon National Congress) மிதவாதம் போன்ற சூழல்; ஒரு இடதுசாரிக் கட்சியின் உடனடி அவசியத்தை உந்தியது. 

முதலாவது இடதுசாரிக் கட்சியின் தோற்றம்
எஸ்.ஏ.விக்கிரமசிங்க 1935 டிசம்பர் மாதம் லங்கா சமசமாஜக் கட்சியை ( LSSP - இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி) தனது தோழர்களான கொல்வின் ஆர்.டீ.சில்வா, பிலிப் குணவர்த்தன, என்.எம்.பெரேரா போன்றோருடன் இணைந்து ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் இங்கிலாந்திலிருந்து உயர்கல்வியைக் கற்று திரும்பிய மாக்சிய செயற்பாட்டாளர்களாக இருந்தனர். அக் கட்சியின் முதல் விஞ்ஞாபனத்தில் தொழிலாளர் சீர்திருத்தம், நிவாரணம்,  விவசாயிகள், சிறுவர் நலன், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சிங்கள .தமிழ் மொழிகளின் உபயோகம் என்பன முதன்மை பெற்றது.

கட்சியை உருவாக்குவதன் பின்னணியிலும், அதன் செயற்த்திட்டங்களிலும் தீவிரமாக உழைத்தார் டொரீன். பிற்காலத்தில் விமலா விஜயவர்தன, விவியன் குணவர்த்தன போறோருக்கு வழிகாட்டியாக இருந்ததுடன் இலங்கையின் முதலாவது இடதுசாரி பெண்கள் இயக்கமான “ஐக்கிய பெண்கள் முன்னணி” (எக்சத் காந்தா பெரமுன / United Women's Front) இயக்கத்தை ஆரம்பித்தார்.

சாதியெதிர்ப்பு
டொரீன் மலேரியா எதிர்ப்பியக்கத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தவேளை சாதிமுறையின் கொடூரத்தையும் அவர் உணர்ந்துகொண்டார். பெரும்பாலான இடதுசாரி  செயற்பாட்டாளர்கள் பலர் கலப்பு திருமணத்தையே  செய்து கொண்டார்கள். ஒடுக்கப்படும் சாதியினரின் மீட்சிக்கான பணிகளையும் முன்னெடுத்தார்கள். குறிப்பாக இந்தக் காலப்பகுதியில் சிங்கள சமூகத்தில் அதிகம் ஒடுக்கப்பட்ட  சமூகமாக கணிக்கப்பட்ட “ரொடி” சாதியினருக்கு கல்வி வழங்கி அவர்களை சுயமரியாதையுள்ள சூழலுக்கு கொண்டுவருவதற்கான பணிகளையும் மேற்கொண்டார்கள் என்று குமார் ஜெயவர்தனா தனது நூலில் விபரிக்கிறார்.

1934 இல் எஹெலியகொட எனும் பிரதேசத்திலிருந்த ரொடி சமூகத்தைச் சேர்ந்த கமலா எனும் பெண் குழந்தையை விக்கிரமசிங்க உள்ளிட்ட இடதுசாரி தோழர்கள் தத்தெடுத்து வளர்த்தார்கள். ஆனந்தா மகளிர் பாடசாலையில் கல்வி கற்கவைத்து பின்னர் ஒரு தாதியாக ஆகி பின்னர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கிலாந்தில் திருமணமாகி அங்கேயே நிரந்தரமாக வசித்தார் கமலா.

இங்கிலாந்து பயணம். 
எஸ்.ஏ.விக்கிரமசிங்க 1936 ஆம் ஆண்டு தேர்தலில் மொரவக்க தொகுதியில் தோல்வியடைந்தார். பிரிட்டிஷ் எதிர்ப்பு பணிகளின் காரணமாக ரீனும் ஆனந்தா மகளிர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். வாழ்வாதாரத்துக்கான வருமானமும் குடும்பத்துக்கு நின்று போனது. கணவர் விக்கிரமசிங்கவின் அரசாங்கசபை பணிகளுக்கு ஒத்துழைப்பு, மகளிர் இயக்க பணிகள், சூரிய மல் இயக்க வேலைகள், இரண்டு பாடசாலைகளை தரமுயர்த்துவதில் மேற்கொண்டு வந்தமை போன்ற பல்வேறு பணிகளில் தொடர்ச்சியாக செயற்பட்டுவந்த டொரீன் சோர்வும், களைப்புமுற்று இருந்தார். சிறிது காலம் இங்கிலாந்து சென்று ஓய்வெடுக்கும் படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.


1936 ஓகஸ்டில் அவர் இங்கிலாந்து சென்றார். அங்கு அவர் தனது வருவாய்க்காக லண்டனில் வசித்து வந்த திருமதி ஹீகார் வீட்டில் (Ms.Heaglaar) பகுதி நேரமாக வீட்டுப் பணிப்பெண்ணாக  பணிபுரிந்தார். ஹீகார் பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரம்மஞான சங்கத்தின் செயர்ப்பாட்டாளர். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக பணிபுரிந்தவரும் கூட.  1937 இல் டொக்டர் விக்கிரமசிங்கவும் லண்டன் வந்தடைந்தார். டொரீனின் பெற்றோர் தமது சேமிப்பில் இருந்த பணத்தை தெற்கு லண்டனில் (Camberwell) சிறு வைத்திய நிலையத்தை அமைக்க விக்கிரமசிங்கவுக்கு கொடுத்துதவினர்.  அதேவேளை இருவரும் லண்டனில் தமது இடதுசாரி இயக்கப் பணிகளைத் தொடர்ந்தனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தினர்.

இலங்கை திரும்பலும் கைதும்
டொரீன் இந்த இடைவெளியில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கற்கையை முடித்துக்கொண்டார்.  1939 செப்டம்பரில் டொரீன் இலங்கைக்குத் திரும்பினார். அவருக்கு முன்னரே இலங்கை திரும்பியிருந்த எஸ்.ஏ.விக்கிரமசிங்க பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

விக்கிரமசிங்க இலங்கை வந்திருந்த போது அந்த மூன்று ஆண்டுகால இடைவெளிக்குள் கட்சியிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. “கொழும்பு சோசலிஸ்ட் கிளப்” என்கிற அமைப்பும் ஐக்கிய சோஷலிச கட்சி (USP – United Socialist Party) எனும் இயக்கத்துடனும் சேர்ந்து போரெதிர்ப்பு, காலனித்துவ எதிர்ப்பு பிரசாரங்களை செய்ததால் அவர் கைதுக்குள்ளாகியிருந்தார்.

டொரீன் தனது முன்னைய கல்விப் பணியை திரும்பத் தொடர்ந்தார். கொழும்பில் நவீன கல்வித்திட்டத்தைக் கொண்ட சொந்த பாடசாலையை இளம் மாணவர்களுக்காக ஆரம்பித்தார். ஆங்கிலம் மீதான மோகத்தின் காரணமாக சிங்கள மொழியை கற்பதை கௌரவமாக பார்க்காத நிலை இருந்ததால் அவர்களுக்கு சிங்கள மொழியை நுணுக்கமாக கற்றுக்கொடுக்கும் வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார். புதிய வழியிலான சிறுவர்களுக்கான நூல்களையும் வெளிக்கொணர்ந்தார். 1942 இல் ஜப்பான் கொழும்பில் விமானத் தாக்குதல் நடத்தும் வரை அப்பாடசாலை இயங்கியது. அந்தப் பாடசாலை இடதுசாரி இயக்கத் தோழர்கள் ஒன்று கூடி உரையாடும் இடமாக இருந்தது. “கொம்யூனிஸ்ட் கட்சி”யின் ஆரம்பத்துக்கு தூபமிடப்பட்டதும் அங்கு தான்.

பாடசாலை மூடப்பட்டதுடன் டொரீன் இரு குழந்தைகளுடனும் 1942 கண்டிக்கு இடம்பெயர்ந்து சிறு வீடொன்றில் வாடகைக்கு இருந்தார். 1943 இல் டொக்டர் விக்கிரமசிங்க மாத்தறை வெள்ளமடம என்கிற பகுதியில் கடற்கரையோரமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் குடியேறினார். அந்த வீடு கொம்யூனிஸ்ட் கட்சி முடிவுகளை எடுப்பதற்காகக் கூடும் முக்கிய கேந்திர ஒன்றுகூடல் இடமாக ஆனது. 

இரண்டாம் உலக யுத்தத்தில் சோவியத் யூனியனும் இணைந்துகொண்ட போது பாசிசத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சோவியத் யூனியனுக்கும் அதன் நேச அணிக்கும் ஆதரவளித்தது கொம்யூனிஸ்ட் கட்சி. கொக்கல முகாமில் இருந்த பிரிட்டிஷ் துருப்பினர்கள் பலர் (குறிப்பாக பிரிட்டிஷ் தொழிற்கட்சி ஆதரவாளர்கள்) ஒன்றுகூடி விருந்துவைக்கும் இடமாகவும் டொக்டர் விக்கிரமசிங்கவின் வீடு இருந்தது வேறு கதை.

டொரீன் 1945 இல் மீண்டும் குழந்தைகளுடன் இங்கிலாந்து பிரயாணமானார் அங்கு வெஸ்ட் ஹம்ஸ்டீட் இல் அவர் தங்கியிருந்ததும் யுத்த காலத்தில் இலங்கையில் தொழிற்பட்ட கடற்படை அதிகாரி ஐவனின்  (Ivan) மனைவி ஆண் கிளௌட் (Ann clout) வீட்டில் தான். அவர் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர். அங்கு தங்கியிருந்த போது கொம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றினார். கூடவே தீவிரமாக பெண்ணுரிமைப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். அந்த அனுபவம் தான் அவர் 1946இல் இலங்கை திரும்பியதும் 1947 இல் “ஐக்கிய பெண்கள் முன்னணி” என்கிற இடதுசாரிப் பெண்கள் இயக்கத்தை தோற்றுவிக்க உந்துதலாக இருந்தது. இந்த இயக்கத்தின் சாதனைகளைப் பற்றி தனியாக நிறையவே குமாரி ஜெயவர்த்தனா எழுதியிருக்கிறார்.

பாராளுமன்றத்துக்குத் தெரிவு
கொம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த டொரீன் கடுமையாக உழைத்தார். 1947ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று ஆசனங்களே கிடைத்திருந்தது. அந்தத் தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையே பெற்றிருந்தபோதும் தனி ஒரு கட்சி என்கிற வகையில்  அதிக ஆசனங்களைப் பெற்றிருந்ததால் எதிர்க்கட்சித் தலைமையாக ல.ச.ச.க. ஆனது. அதன் தலைவர் என்.எம்.பெரேரா முதலாவது எதிர்க்கட்சித் தலைவராக ஆனார்.

1952ஆம் ஆண்டு தேர்தலிலும் கொம்யூனிஸ்ட் கட்சி 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இத் தேர்தலில் தான் அக்குரெஸ்ஸ தொகுதியில் டொரின் விக்கிரமசிங்க போட்டியிட்டார். எஸ்.ஏ.விக்கிரமசிங்காவின் சகோதரியின் கணவரான சரத் விஜயசிங்கவும் அதே தொகுதியில் ஐ.தே.க.வை பிரதிநிதித்துவப்படுத்தி டொரினோடு போட்டியிட்டார்.

சரத் விஜேசிங்க : இலங்கையின் பிரபல கெண்டோஸ் சொக்கலட் கம்பனியின் உரிமையாளரான இவரின் மறைவுக்குப் பின்னர் அந்த வர்த்தகத்தை கையேற்றவர் தான் அவரின் மருமகன் உபாலி விஜேவர்தன. இன்று இலங்கையின் பெரிய ஊடக நிறுவனமாகவும் பலதரப்பட்ட வர்த்தகங்களிலும் ஈடுபடும் நிறுவனமாக அந்த உபாலி நிறுவனம் வளர்ந்திருக்கிறது. ஒரு புறம் ஜே.ஆர் குடும்பமும் மறுபுறம் பண்டாரநாயக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது இன்னொரு கிளைக்கதை.

1947 ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவாகி செனட் சபை உறுப்பினராக இருந்த சரத் விஜேசிங்க கடும் கொம்யூனிஸ்ட் விரோதியாகவே இருந்தவர். 1952 தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது வழக்கறிஞர் கூட்டத்துடன் மாத்தறை கச்சேரிக்குச் சென்ற சரத் விஜேசிங்க தன் மைத்துனர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் மனைவியான டொரின் விக்கிரமசிங்கவின் வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு வெளிநாட்டுப் பெண்ணான டொரின்னுக்கு இலங்கையில் ஆசனமொன்றுக்காக போட்டியிட உரிமை இல்லை என்றும் அதனை நிராகரிக்கும்படியும் வாதிட்டார். ஆனால் அந்த மனுவை நிராகரித்த அந்த தேர்தல் அதிகாரி டொரின் ஒரு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் என்றும் அதுவே வேட்பாளருக்கான தகுதியென்றும் கூறினார். அந்த தேர்தலில் டொரின் வெற்றி பெற்றார்.  எஸ்.ஏ.விக்கிரமசிங்க தோல்வியுற்றார்.

பலத்த போட்டியின் மத்தியில் இடம்பெற்ற இத்தேர்தலில் ”வெள்ளைக்காரப் பெண்”, ”அந்நிய நாட்டவள்” போன்ற கோஷங்களை எழுப்பி டொரினுக்கு எதிராக எதிர் வேட்பாளர்கள் செயற்பட்டனர். எவ்வாறாயினும் அவமானங்களையும் எதிர்கொண்டபடி டொரின் அத் தேர்தலில் வெற்றிபெற்றார். டொரினுக்கு 16,626 வாக்குகள் கிடைத்தன. 1001 வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றிருந்தார். முதற்தடைவையாக ஆசிய நாடொன்றில் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட விதேச பெண்ணாக வரலாற்றில் பதியப்பட்டார் டொரின். 

1956 வரையான நான்கு ஆண்டுகளுக்குள் அவர் இலங்கை மக்களுக்காக ஆற்றிய பாத்திரம் அளப் பெரியது. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் விடயத்தில் பல சட்ட திருத்தங்களுக்காக போராடினார். கணிசமான வெற்றியையும் பெற்றார். பெண்களுக்கும் சம ஊதியம் கிடைப்பதற்காகப் போராடிகொண்டே இருந்தார். சர்வதேச தொழிலாளர் சங்கமான ILO வின் விதிமுறைகளை இலங்கை கடைப்பிடிப்பதில்லை என்றும் ஊதியம் வழங்குவதில் காணப்படும் இன, பால், பாரபட்சத்தை நீக்கவேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்தார்.

“ஏன் ராமசாமிக்கும், ஜுவானிஸ்ஸ் அப்புவுக்கும் கிடைக்கும் ஊதியம் லெட்சுமிக்கும், மேரி நோனாவுக்கும் கிடைப்பதில்லை. அவர்கள் பெண்கள் என்பதால் தானே.” என்றார்.

சிறுவர்கள் கற்கும் பல பள்ளிகூடங்களுக்குச் சென்று அந்த மோசமான நிலைமைகளை பாராளுமன்றத்தில் எடுத்துச் சொன்னார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு சாய்ந்து இருப்பதை பாராளுமன்றத்தில் காரசாரமாக வெளியிட்டார்.

1956ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்ற போதும் தனது பிரதேசத்தில் தொடர்ந்தும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஆனால் எஸ்.ஏ.விக்கிரமசிங்க போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார். அவர் 70ஆம் ஆண்டு தேர்தல் வரை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். 70ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 1931 காலப்பகுதியில் அங்கம் வகித்த ஒரேயொரு மூத்த பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.ஏ.விக்கிரமசிங்க மட்டும்தான் இருந்தார். அவர் 1981இல் இறந்ததன் பின்னரும் டொரின் தனது அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.


முன்னுதாரண சர்வதேசியவாதி
இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பங்குகொண்ட பெண்களில் டொரினின் பங்களிப்பு மிகவும் காத்திரமான வரலாற்றுப் பாத்திரம் என்றால் அது மிகையில்லை.  இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவான ஒரே ஒரு பெண்ணும் டொரீன் தான்.

மார்சிஸ்டுகளுக்கு தேசம் இல்லை அவர்கள் சர்வதேசியவாதிகளே என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் டொரீன். நசுக்கப்பட்டு வந்த இன்னொரு நாட்டின் விடிவுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய சர்வதேசியவாதிகள் வரிசையில் ஒரு முக்கிய பாத்திரம் டொரீன்.

தன் தாய்நாடு ஆக்கிரமித்து இருந்த ஒரு நாட்டின் விடுதலைக்காகவும், அந்த மக்களின் விடிவுக்காகவும் தனது சொந்த நாட்டுக்கு எதிராக போராடிய கொள்கைப்பிடிப்பு மிக்க போராளி அவர். ஐக்கிய பெண்கள் முன்னணி என்கிற முதலாவது இடதுசாரிப் பெண்கள் இயக்கத்தையும் தொடக்கியவர் அவர் தான். பல முற்போக்கு விடுதலை அமைப்புகளை உருவாக்கிய முன்னோடி.

இலங்கையின் அரசியலில் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கையரல்லாத இரு பெண்களைக் குறப்பிட முடியும். ஒருவர் ஆயேஷா ரவுப் (முன்னாள் பிரதி மேயர்), அடுத்தவர் டொரீன் விக்கிரமசிங்க.

டொரின் 20.05.2000 அன்று தனது 93 வது வயதில் இறந்தார். அவரது உடல் அவரின் விருப்பப்படி மருத்துவ பீடத்துக்கு தானமாக அளிக்கப்பட்டது. இன்றைய பெண்கள் இயக்கங்களும் பெண்கள் தினத்தின் போது டொரினை மறந்துவிட்டார்கள் என்றால், தொழிலாளர் தினத்தில் கூட இடதுசாரி இயக்கங்கள் பல டொரீனை மறந்துவிட்டன என்பதையே காண முடிகிறது.

டொரின் பற்றி பலரும் ஆய்வுகள் செய்திருக்கிற போதும் விரிவான ஆய்வை நூல் வடிவத்தில் கொடுத்தவர் கலாநிதி குமாரி ஜெயவர்த்தன. டொரின் பற்றி பல தடவைகள் அவர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முக்கிமாக இலங்கையில் சோசலிசப் பெண்கள் (Socialist women of Sri Lanka) என்கிற நூலிலும், “டொரின் விக்கிரமசிங்க: இலங்கையில் மேற்கத்தேய தீவிரவாதி” (Doreen Wickremasinghe. A Western Radical in Sri Lanka.) என்கிற சிறு கைநூலிலும் அவரைப் பற்றி பல மேதிக தகவல்களை அறிந்துகொள்ளலாம். சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அவர் பற்றி வெளிவந்த அளவுக்கு தமிழில் வெளிவந்ததில்லை.


உசாத்துணை:
  • பாராளுமன்ற அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும் – என்.சரவணன்
  • History of the up-country Tamil people in Sri Lanka. by S.Nadesan, Sri Lanka : Nandalala : Ranco Printers and Publishers Ltd., 1993
  • Doreen wickramainghe A Western Radical in SriLanka
  • Women in Politics in Sri Lanka: the Left Movement - Pulsara Liyanage
  • ඇය සූරිය මලකි (ඩොරින් වික්‍රමසිංහගේ කතාව) (அவள் ஒரு “சூரிய மல்” தொடர் கட்டுரை) - සරත් රත්නායක
  • Socialist women of Sri Lanka – by Wesley S. Muthiah, Selvy Thiruchandran, Sydney Wanasinghe – A young socialist publication - 2006
  • A tribute to Doreen Wickramasinghe – by Malathi de Alwis -  Cat’s Eye, A Feminist Gaze on Current Events – 07.06.2000

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates