“அறிந்தவர்களும் அறியாதவையும் - 12”
கடைசி ராஜ்ஜியமாக இருந்த கண்டி ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியோடு இலங்கை ஒட்டுமொத்தமாக இலங்கையரிடம் இருந்து பறிபோனது. அப்படி ஆங்கிலேயர்கள் ஒட்டுமொத்தமாக இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பிரதான பாத்திரமாற்றியவர் தான் இந்த ஜோன் டொயிலி.
பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றுவதில் தொடர் தோல்விகளைத் சந்தித்துக்கொண்டிருந்த போது தான் டொயிலி இலங்கை வந்து சேர்ந்தார்.
நெப்போலியன் போனபர்ட்டை இறுதியில் தோற்கடித்த 6வது ரெஜிமென்ட் கண்டி மன்னனுடனான போரில் மண் கவ்வியது. சிலர் மட்டும் தான் உயிர் மீண்டு திரும்பினார்கள். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மட்டுமன்றி ஆங்கிலேயரும் கண்டியை போரின் மூலம் தோற்கடிக்கமுடியாது தவித்தனர். அதன் பின்னர் கண்டியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் பேரழிவின்றி சாணக்கியத்துடன் கைப்பற்றியது டொயிலியின் திட்டத்தால் தான்.
ஜோன் டொயிலி (John D'Oyly) 11.06.1774 இங்கிலாந்தில் பிறந்தவர். பல சிரேஷ்ட கல்விமான்களை உருவாக்கிய வெஸ்ட்மினிஸ்டர் கல்லூரியில் கற்று பின்னர் 1796இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றார்.
இலங்கையின் கரையோரங்களை மட்டும் அப்போது கைப்பற்றியிருந்த ஆகிலேயர்களின் முதலாவது தேசாதிபதியாக இருந்த பிரெடெரிக் நோர்த்தின் (Frederick North) காலத்தில் ஆங்கில அரச அதிகாரியாக கடமையேற்று 1801இல் இலங்கை வந்தார். முதலில் அவர் மாத்தறை பகுதிக்கான வரி அறவிடும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார். அதன் பின்னர் காலியிலும் அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்திருந்தார். இந்த காலப்பகுதியில் அந்தப் பகுதிகளில் நீதித்துறை அதிகாரமும் அவருக்கு இருந்தது.
![]() |
தேசாதிபதிகள் பிரெடெரிக் நோர்த், - தோமஸ் மெயிற்லண்ட், - ரொபர்ட் பிரவுன்றிக் |
டொய்லி அரச சேவையில் சிங்களம் கற்றிருக்கவேண்டியதன் நிபந்தனையை ஏற்று சிங்களம் மட்டுமன்றி பாளி மொழியையும் கற்று பிற்காலத்தில் சிங்களத்தில் கவிதை எழுதுமளவுக்கு தேர்ச்சி பெற்றார். மாத்தறையைச் சேர்ந்த அரசியல் செல்வாக்கு பெற்ற கரதொட்ட தர்மாராம பிக்குவிடம் தான் அவர் சிங்கள கற்றார். 1805 ஆம் ஆண்டு அவர் பிரதான மொழிபெயர்ப்பாளராக பதவி உயர்வு பெற்று கொழும்பு அரசாங்க அதிபராகவும் பணியாற்றி பின்னர் கண்டிக்கு மாற்றலாகும் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் உள்ளூர் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
இலங்கையின் 2வது தேசதிபதியான தோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) தான் முதலில் டொய்லியை ராஜதந்திர பணிகளில் ஈடுபடுத்தத் தொடங்கியவர். பிரித்தானியர் கண்டியிடம் கண்ட தோல்வி காரணமாக இனி கண்டியுடன் யுத்தத்துக்கு போவதை விட ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படி அரசரிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. (ஏற்கெனவே இந்த தொடரில் லொவினா – மெயிற்லண்ட் காதல் கதை பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம்)
பிரித்தானியரின் நடவடிக்கைகள் அதுவரை “முதலி”, “மகாமுதலி” போன்றோரால் தான் சாத்தியப்பட்டன. ஆனால் மெயிட்லன்ட் இவர்களை நம்பவில்லை. தனது நம்பிக்கைக்குரிய சிறந்த ராஜதந்திரியாகவும், அறிவாளியாகவும், உள்ளூர் மொழியையும் இயல்பையும் அறிந்த ஒருவரைக் கண்டு பிடித்தார். அவர் தான் டொயிலி.
கண்டியைக் கைப்பற்ற வியூகம் அமைத்த இரகசிய வியூகம்
1811இல் 3வது தேசாதிபதியாக சேர் ரொபர்ட் பிரவுன்றிக் (Robert Brownrigg) வந்து சேர்ந்தார். பிரவுன்றிக் உளவுச் சேவைக்கு டொய்லியை அமர்த்தினார்.
டொய்லி ஒரு சிறந்த சாணக்கியனும், தேர்ந்த உளவாளியும், ராஜதந்திரியும் என்று கூறலாம். கண்டியரசனின் முடிவுக்கு பின்புலத்தில் இயங்கிய சூத்திரதாரி ஜோன் டொய்லி. டொய்லிக்கு வழங்கப்பட்ட பணிகளின் பட்டியல் நீண்டது. அவை அனைத்துமே கண்டியை சூழ்ச்சியின் மூலம் கைப்பற்றுவதற்கான வழிவகைகளைக் கொண்டவை. இரகசிய உளவுச் சேவையை ஆற்றுவதற்கு டொயிலியின் திட்டப் பட்டியல்.
- அரசருக்கு எதிராக இருக்கும் பிரதானிகளை அடையாளம் கண்டு அவர்களை வழிநடத்துவது
- அரசருக்கு நெருக்கமாக இருக்கும் பிரதானிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குள் அதிகாரப் போட்டிகளை ஏற்படுத்தல்
- அப்போது இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்த பிக்குமார் வலைப்பின்னலின் ஒத்துழைப்பைப் பெறுதல்
- மலைநாட்டுக்கும், கரையோர பிரதேசங்களுக்கும் இடையில் முன்னர் இருந்த பாதைகளை கண்டு பிடித்தல்
- தூரத்திலுள்ள கண்டி ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட சிற்றரசுகளுக்கு எதிரான கிளர்ச்சிகளை உருவாக்குதல்
- கண்டி ராஜ்ஜியத்துடன் தொடர்புள்ள பிரதான குடும்பங்களுக்கிடையிலான சிக்கல்களையும் முரண்பாடுகளையும் கையாள்தல் (இப்போது “தெரண” தொலைக்காட்சியில் “முதுகுட” ('මුතුකුඩ') என்கிற பெயரில் தொடர் நாடகமாக இந்த கதை ஒளிபரப்பப்பட்டு வருகிறது)
- பிரித்தானியாவின் உயர்தர குடிவகைகளை சூட்சுமமாக மன்னருக்கு பழக்குதல்
- கண்டி ராஜ்ஜியத்தில் நெருக்கடி ஏற்படும் காலத்தில் மன்னர் மறைந்திருக்கக் கூடிய பகுதிகளை அறிந்து வைத்திருத்தல்
- அரசரின் போர் பலம் பற்றி விபரமாக அறிந்து வைத்திருத்தல்
- உணவு, நீர், ஆயுத தளபாடங்கள், வெடிமருந்துகள் பற்றிய தகவல்களை தேடித் தெரிந்து வைத்திருத்தல்.
- அவசர காலத்தில் மன்னரின் பொக்கிசங்களை மறைத்து வைத்திருக்கக் கூடிய இடங்களைப் பற்றி தேடி அறிந்து வைத்திருத்தல்
அரசரின் முக்கிய முடிவுகள் பல அவர் எடுக்குமுன்னமே டொய்லிக்கு தெரிந்திருந்தன. அல்லது ஊகிக்க முடிந்தன. அந்தளவுக்கு டொய்லியின் உளவாளிகள் கச்சிதமாக வழிநடத்தப்பட்டார்கள்.அப்பேர்பட்ட உலவாளிகளோடு நிகழ்ந்த உரையாடல்கள் கூட டொய்லியின் நாட் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எஹெலபொல, மொல்லிகொட, உள்ளிட்ட பல முக்கிய கண்டி பிரதானிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு நுணுக்கமாக டொய்லி தனது கடமையில் வெற்றி கண்டிருந்தார். கண்டி அரசவையில் இருந்த பலரதும் நம்பிக்கைக்கு பாத்திரமானார். டொய்லி தனது பணிகளுக்காக முதலில் பயன்படுத்தப்பட்டவர் தம்பி முதலி (ஜே.ஆரின் மூதாதையர்.).
டொய்லியின் நாட்குறிப்பு
டொய்லி தனது அனுபவங்களை பின்னர் எழுதினார். அது டொய்லியின் நாட்குறிப்பு (Diary of Mr. John D'Oyly) என்கிற தலைப்பில் வெளியானது. அதில் விரிவாக கண்டியில் நடந்த கதை அனைத்தும் எழுதப்பட்டிருக்கிறது. டொய்லி எழுதிய “மலைநாட்டு அரசாட்சி பற்றிய குறிப்புகள்” (A Sketch of The Constituton of The Kandyan Kingdom) என்கிற நூலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நூல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மறுபடியும் மறுபடியும் வெளியிடப்பட்டிருக்கிறது. கண்டி ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற கையாண்ட சூட்சுமங்களைப் பற்றி நேரடியாக குறிப்பிடாத போதும் அதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் உருவாக்கிய விதம் குறித்து பல விபரங்கள் உள்ளன.
கண்டி ராஜ்ஜியத்தின் அரசாட்சி, பொருளாதாரம், சுற்றுச் சூழல், மன்னர், நீதி வழங்கல், வாழ்க்கைமுறை, பண்பாடு, சாதியம் போன்ற விபரங்களை மிகத் துல்லியமான பல தகவல்களை அவர் தனது நூல்களில் எழுதியிருக்கிறார். அவை ஒரு மிகப் பெரும் ஆதாரமாக பல எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அது மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நூல்கள் இலங்கையின் வரலாற்றில் முக்கிய நூல்களாக கருதப்படுகின்றன.
பலராலும் பயன்படுத்தப்படும் “சிங்கள சமூக அமைப்புமுறை” (Sinhalese Social Organization: The Kandyan Period. RALPH PIERIS) என்கிற முக்கிய ஆய்வு நூலை எழுதிய ருல்ப் பீரிஸ் அந்த நூலில் கையாண்ட அதிகமான ஆதாரங்கள் டொய்லியின் நூலில் இருந்து தான் பெறப்பட்டுள்ளது.
கண்டியில் புத்த பிக்கு வேடத்திலும், பிச்சைக்காரர் வேடத்திலும் பல ஒற்றர்களை வழிநடத்தியவர். கண்டி பிரதானிகளுடன் சதித் திட்டங்களை தீட்டிக்கொண்டே இருந்ததுடன் எஹெலபொல, பிலிமத்தலாவ போன்றோருடன் தொடர்புகளை பேணிக்கொண்டு இருந்தவர். தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல பரிசுப் பொருட்களை பலருக்கும் வழங்கினார்.
குறிப்பாக கொழும்பிலிருந்து கண்டி பிரதானிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட குடிவகைகளைப் பற்றியும் அவரது நாட்குறிப்பில் தகவல்கள் உள்ளன. தொப்பிகள், உடைகள், புறாக்கள், விசித்திர பொருட்கள் என அனுப்பப்பட்டுள்ளன. தனக்கு ரகசிய தகவல் வழங்கிய பிக்குமார்களும் இப்படியான பரிசுப் பொருட்களை வழங்கியிருக்கிறார். மன்னர் ஸ்ரீ விக்கிரமசிங்கவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி சாணக்கியமற்ற முடிவுகளை எடுக்கப்பன்ணினார். எஹெலபொல, மொல்லிகொட ஆகியோருக்கு இடையில் இருந்த பிணக்கை சாதகமாக ஆக்கிக்கொண்டு அந்த பிணக்கை அரசவைக்குள் பெரும் பிரச்சினைகளின் தோற்றுவாயாக ஆக்கி கண்டியைக் கைப்பற்றி முடிக்கும்வரை கொண்டு சென்றார் டொய்லி. ஒரு கட்டத்தில் டொய்லியின் உளவாளிகள் என்று சதேகிக்கப்பட்டவர்கள் மன்னரால் கடும் தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
சமரின்றி வீழ்ந்தது கண்டி
மன்னர் ஸ்ரீ விக்கிரமசிங்கனின் ஆட்சி நன்றாக பலவீனப்படுத்தியதன் பின்னர் தகுந்த சந்தர்ப்பத்தில் பார்த்து எஹெலபொல வழங்கிய இரகசிய தகவல்களைக் கொண்டு இறுதி ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. கண்டியில் தமது அணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தமக்கான ஆயுதங்களை கிடைக்கச் செய்யும்படியும் டொய்லிக்கு எஹெலபொல அனுப்பியிருக்கிறார்.
கொழும்பு, காலி, திருகோணமலை, கட்டக்களப்பு, நீர்கொழும்பு பகுதிகளிலிருந்து 8 இராணுவப் பிரிவுகள் கண்டியை நெருங்கிக் கொண்டிருந்த வேளை மன்னர் ஸ்ரீ விக்கிரமசிங்கனின் படை பலவீனமடைந்திருந்தது. அவர் கண்டியைக் கைவிட்டு தலைமறைவானார். 1815 பெப்ரவரி மாதம் எந்தவித மோதலுமின்றி கண்டியை கைப்பற்ற ஆங்கிலேயர்களால் முடிந்தது.
தலைமறைவான மன்னரைப் பற்றி கிடைத்த உளவுத் தகவலைக் கொண்டு மன்னரைப் பிடித்ததும் டொய்லி தலைமையிலான படை தான்.
மன்னரின் கைதுக்குப் பின்னர் கண்டி ராஜ்ஜியத்தின் செல்வாக்கு மிக்க குடும்பங்கள் இரண்டு. ஒன்று மொல்லிகொட குடும்பம் மற்றது எஹெலபொல இவர்களையும் இறுதியில் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் இலங்கையை ஒட்டுமொத்தமாக தாரைவார்க்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஒப்பந்தம் 02.03.1815 இல் செய்துகொள்ளப்பட்டது. அவ் ஒப்பந்தத்தின் சிங்களப் பிரதியை தயார் செய்ததும் டொய்லி தான். அந்த ஒப்பந்தத்தில் ஆங்கிலேயர்கள் சார்பில் கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் டொய்லி.
அந்த தருணத்தை 02.03.1815 அன்று தனது நாட்குறிப்பில் இப்படி குறிப்பிடுகிறார்
“கண்டி மண்டபத்தில் பின்னேரம் 4 மணிக்கு கண்டி ராஜ்ஜியம் குறித்து எழுதப்பட்ட பட்டயத்தை தேசாதிபதியாழ் வாசிக்கப்பட்டது. அதனை செவிமடுக்க “அதிகாரம் மார்’, திசாவ மார் உள்ளிட்ட பல கண்டி பிரதானிகளும் வந்திருந்தார்கள். பின்னர் கீழ் மட்ட அதிகாரிகளைத் தவிர்ந்த முக்கிய பிரபுக்களுக்கு வாசித்து காட்டப்பட்டது. பிரித்தானிய ராஜ்ஜியத்தின் கொடி ஏற்றப்பட்டது. அரச வணக்கம் செலுத்தப்பட்டது. சிறந்த மகிழ்சிகரமான நாள். ஆகாயம் தெளிவாக இருக்கிறது.”
மன்னரையும் மன்னர் குடும்பத்தினரையும் கொழும்புக்கு பத்திரமாக அனுப்பிவைத்து வீட்டுக் காவலில் வைத்திருந்தார் டொய்லி. மன்னரின் பொக்கிசங்களைப் பற்றிய தகவல்களை மன்னரிடம் இருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
இங்கிலாந்துக்கு கடத்தப்பட்ட இலங்கை பொக்கிசங்கள்
மன்னர் ஸ்ரீ விக்கிரசிங்கனை அடிக்கடி சந்தித்து அவரின் தேவைகளை நிறைவேற்றுவதிலிருந்து இந்தியாவில் வேலூருக்கு குடும்பத்துடன் நாடு கடத்தும் வரையான அத்தனையையும் மேற்கொண்டதும் டொய்லி தான். மன்னர் பிடிபட்டதன் பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது சொத்துக்களைத் தேடி கையகப்படுத்தும் வேலையும் டொய்லியால் சாத்தியப்பட்டது. வெவ்வேறு சுரங்கங்களில் வைக்கப்பட்டிருந்த அந்த பொக்கிசங்களை “அரச பொக்கிசங்கள்” என்கிற பெயரில் 1820 ஆம் ஆண்டு லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டு ஏராளமான பணத்தை பிரிட்டிஷ் அரசு உழைத்தது. இவை டொய்லியால் சாத்தியமானது.
டொய்லி இலங்கையை விட்டுச் செல்லும் போது பெருமளவு நம் நாட்டு பொக்கிசங்களையும் எடுத்துச் சென்றார். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இராவணனின் சிலை உட்பட பலதும் இன்றும் பிரித்தானிய மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இராவணனின் சிலைகளும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவத்தை மொல்லிகொட நிலமே டொய்லியிடம் கூறியதாகவும் சிங்களப் படைகளின் பலத்துக்கு இராவண பூஜையின் பங்கு முக்கியமானது என்றும் கூறப்பட்டிருப்பதாக சிங்கள ஊடகங்களிலும் நூல்களிலும் காணக் கிடைக்கிறன. அதனைத் தொடர்ந்து “மாறகலகந்த” எனும் இடத்தில நிலத்துக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பண்டைய கோவிலில் இருந்து எடுத்த இராவணனின் சிலையை டொய்லி இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றதாக அந்த கட்டுரைகளில் காண முடிகிறது. இந்த தகவலின் நம்பகத் தன்மை ஆராயப்படவேண்டியவை. இங்கிலாந்து மியூசியத்திலுள்ள அந்த சிலை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறபடுகிறது. ஆனால் அதே சிலைக்கு ஒப்பான சிலைகளை சிங்களவர்கள் வணங்கும் கோவில்களில் இன்றும் காண முடிகிறது.
கண்டி ஆங்கிலேயர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் டொய்லியின் சேவைக்குப் பரிசாக பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அதிகார பூர்வமான பிரதிநிதி (Recident என்று அழைப்பார்கள்) என்கிற பட்டம் வழங்கப்பட்டது. 06.03.1815 டொய்லி ஆளுநர் பிரவுன்றிக்குக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதமும் காணக் கிடைக்கிறது.
அதன் பின்னர் கெப்பட்டிபொல தலைமையிலான ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியை அடக்குவதிலும் அன்றைய தேசாதிபதி டொய்லியின் ஒத்துழைப்பை அதிகம் நம்பியிருந்தார்.
1800களில் நடந்த நிகழ்வுகளை ஆராய்பவர்கள் ஜோன் டொய்லியின் நாட்குறிப்புகளையும் அவரின் நூல்களையும் தவிர்த்துவிட்டு ஆராய்வதில் பயனில்லை.
இலங்கையில் இறந்த டொய்லி

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் 2013 இல் இலங்கை வந்த வேளை இங்கு வந்து மரியாதை செலுத்தி விட்டுச் சென்றார். அந்த மயானத்தை இன்னமும் இங்கிலாந்து அரசாலேயே முகாமை செய்யப்பட்டு வருகிறது. தலதா மாளிகைக்கு உயரமான இடத்தில் இருப்பதால் அந்த மயானம் அகற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை சிங்கள பௌத்த தரப்பினரால் பலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
![]() |
கண்டி தலதா மாளிகைக்கு பின்னால் அமைந்துள்ள நூதனசாலையின் வாயிலில் உள்ள ஜோன் டொய்லியின் சிலை. |
டொய்லியின் மாபெரும் சேவைக்காக பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அரச விருதான “நைட்” பெயரும் அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு நாட்டைக் கைப்பற்றுவதற்கான சிறந்த நடைமுறை தந்திரோபாயங்கள் எவை என்பது பற்றிய வேலைத்திட்டத்தை மேற்குலகுக்கு கற்றுக்கொடுத்தவர் டொய்லி. நவகாலனித்துவத்தின் நவீன தந்திரோபாயத்தை போதித்தவ முக்கியமானவர் டொய்லி என்பார்கள்.
இலங்கையின் வரலாற்றில் டொய்லி ஒரு நயவஞ்சகன். ஆங்கிலேயர்களுக்கோ அதிக இரத்தம் சிந்தாமல் இலங்கையைக் கைப்பற்ற காரணமாக இருந்த சாணக்கியன்.
நன்றி - வீரகேசரி (சங்கமம்)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...