Headlines News :
முகப்பு » , » அரசியல்வாதிகளிடம் விலைபோகும் ஊடகங்களும் ஊடகர்களும் - என்.சரவணன்

அரசியல்வாதிகளிடம் விலைபோகும் ஊடகங்களும் ஊடகர்களும் - என்.சரவணன்

மனோ கணேசன்

“நமது மலையகம்” வெளியிட்ட செய்திகள் தொடர்பாக கடுப்பேறி அதனை நடத்துபவர்கள் மீது தனிப்பட்ட அவதூறுகளையும், மிரட்டல்களையும் தொடங்கியிருக்கின்றனர் சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஆதரவாளர்களும், அவரிடம் பணியாற்றுபவர்களும். “நமது மலையகம்” தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் வழக்கம் இதுவரை இருந்ததில்லை. அதற்கான இடத்தை வழங்குவதும் இல்லை. ஆனால் விமர்சனங்களுக்கு கருத்தால் பதிலளிக்க அரசியல் பக்குவம் இல்லாது போகும் போது கடைந்தெடுத்த அவதூறு ஆயுதத்தை கையிலெடுத்து மௌனிக்கச் செய்யலாம் என்பது அவர்களின் கனவு.

“நமது மலையகம்” எவருக்கும் சோரம் போனதில்லை. விலைபோனதுமில்லை. அந்த துணிச்சலுடனும் மிடுக்குடனும் உறுதியாக இவர்களை எங்களால் எதிர்கொள்ள முடியும். “நமது மலையகம்” இணையத்தளம் இதுவரை எந்த வருமானத்துக்காகவும் இயங்கியதுமில்லை. விளம்பரங்கள் கூட இடக்கூடாது என்பது எமது கொள்கை. எமது சொந்தப் பணத்தில் மலையகத்தின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட தோழர்கள் பலர் இணைந்து தொடங்கி நடத்தப்பட்டு வரும் இணையத்தளம் இது.

செய்தியை விட கருத்துருவாக்கத்துக்கு அதிகம் பயன்படுத்தி வருகிறோம். வெளி இடங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புகளையும் கூட அவர்களுக்கு நன்றி கூறி வெளியிடுகிறோம். எமது உறுதியால் தான். “நமது மலையகம்” இணையத் தளத்தை தேடுபொறியில் முதன்மை நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம்.

கடந்த தேர்தலில் மலையகத்தின் அரசியல் மாற்றத்தில் நாங்களும் எமது பங்களிப்பை வழங்கினோம். ஆகவே அந்த மாற்றத்தால் வந்த அரசியல் தலைமை தவறு செய்தால் அதனை தட்டிக்கேட்கும் தார்மீகமும் எமக்கு உண்டு. இவர்களின் அரசியல் நடத்தையும், மக்களைப் பாதிக்கும் தனிப்பட்ட நடத்தையையும் அவதானித்தே வருகிறோம்.

இவர்களை விமர்சித்தும் அம்பலப்படுத்தியும் எமக்கு நாளாந்தம் வரும் மின்னஞ்சல்களையும், கருத்துக்களையும் நாம் வெளியிடாமல் இருப்பதன் காரணம் அவை அதிகம் தனிப்பட்ட ரீதியில் இருப்பதால் தான். நாம் பேணும் ஊடக அறம் அவற்றை வெளியிட அனுமதிப்பதில்லை.

ஆனால் நாம் மேற்கொள்ளும் மக்கள் சார் ஊடக நடவடிக்கைகளை எதிர்கொள்ள திராணியற்றவர்கள் நம்மை தனிப்பட நசுக்கி ஒடுக்கலாம் என்று கனவு காண்கிறார்கள். கனவு காணும் உரிமையை நாங்கள் மறுக்கவில்லை. அந்த கனவுக்கு எங்கள் பாணியில் தான் நாங்கள் பதிலளிப்போம்.

மனோ கணேசன், தமிழ் முற்போக்கு முன்னணி

அவர்கள் பயப்படுவதே மக்கள் அபிப்பிராயத்துக்குத் தான். அவர்களின் மீதான நல்லபிப்பிராயத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும், ஊதிப்பெருப்பித்து நிலைநிறுத்துவது என்பது அடுத்த தேர்தலுக்கான முதலீடு. அதற்கு அவர்கள் நம்பியிருப்பது ஊடகங்களைத் தான். தங்கியிருப்பதும் ஊடகங்களில் தான்.
  • தம்மைப் பற்றி விளம்பரம் செய்துகொண்டேயிருப்பது
  • தமது அரசியல் போட்டியாளர்களையும் எதிரிகளையும் விட அதிகமாக தமது இடத்தை நிலை நிறுத்துவது.
  • தொடர்ச்சியாக தம்மை பேசப்பண்ணிக்கொண்டே இருப்பது.
  • தமது அரசியல் வீரப்பிரதாபங்களாகவும், சாணக்கியங்களாகவும், வெற்றிகளாகவும் உருப்பெருப்பித்துக் காட்டிக்கொண்டிருப்பது
  • அரசியல் எதிரிகளை காயடிப்பது
  • தமக்கெதிரான கருத்துக்களை வரவிடாமல் பார்த்துக் கொள்வது அல்லது அது பற்றிய தகவல்களை உளவு பார்ப்பது.
  • சம்பந்தப்பட்ட ஊடகங்களில் தமக்கு சாதகமில்லாதவர்கள் எவர் எவர் என்கின்ற சக ஊடகவியலாளர்களைப் பற்றிய விபரங்களைப பிடுங்குவது

ஊடகவியலாளர்களுக்கு கையூட்டு
இந்த அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக இவற்றை செய்தாக வேண்டும். ஊடகங்கள் இவர்களுக்கு சொந்தமானவையும் அல்ல. இவர்களுக்கு அடிமையும் அல்ல.

எனவே பிரபல ஊடகங்களை தமக்கு சாதகமாகப பேண வேண்டும். அந்த ஊடகங்களின் பிரதானிகளை கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். விலைபோகக் கூடிய ஊடகவியலாளர்கள் நிறையவே ஊடக சந்தையில் கிடைக்கிறார்கள். தமக்கு சாதகமானவற்றை போடுவதும், தமக்கு சாதகமில்லாதவற்றை போடாமல் விடுவதற்கும் இவர்களுக்கு பணமும், பரிசுகளும் வழங்கபடுகின்றன.
  • தாம் ஆணையிடும் வேலைக்கு கையூட்டு வழங்குவது
  • சலுகைகளை அவர்களுக்கு கிடைக்கச் செய்வது.
  • மாதாந்தம் நிரந்தர கொடுப்பனவுகளை (என்வலோப்புகளை) சேர்ப்பிப்பது.
  • அவர்களின் விருந்துபசாரங்களுக்கு அழைப்பது, அனுப்புவது
  • அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையான உதவிகளை செய்து கொடுப்பது
  • உயர் மட்ட தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது.
போன்ற வழிமுறைகளின் மூலம் ஊடகங்களில் தங்களின் பிடியை வைத்திருப்பார்கள். இந்த வழிமுறை இன்று நேற்றல்ல நீண்ட காலமாக சகல ஊடகங்களிலும் தொடர்ந்து வருகிறது. அந்த ஊடகங்களில் கீழ் மட்டங்களில் இருந்து மேல் மட்டம் வரை அந்தந்த பதவிகளுக்கும், மேற்கொள்ளப்படும் ஏவல்களுக்கும் ஏற்றாற்போல கையூட்டின் அளவு மாறுபடுகிறது.

ஆக ஊடகர்கள் பலர் இத்தகைய அரசியல்வாதிகளின் எடுபிடிகளாகவும், பினாமிகளாகவும், கொத்தடிமைகளாகவும், சொம்பு தூக்கிகளாகவும் ஆகியிருப்பது 100% உண்மை. ஊடகங்களில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். சில ஊடகர்கள் சில அரசியல்வாதிகளுக்கு பினாமியாவதில் சக ஊடகவியலார்களுடன் காழ்ப்பும், போட்டியும் சண்டையும் கூட நடந்திருப்பதை அறிந்திருக்கிறோம்.

இப்படியான ஊடகர்களுக்கு தமது நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளத்தை விட அரசியல் வாதிகளிடம் இருந்து மாதாந்தம் என்வலொப்புகளில்லோ வைத்து கிடைக்கும் கிம்பளம் அதிகம்.

இதில் உள்ள கொடுமை என்னவென்றால் கொடுப்பவரும்/எடுப்பவரும், செய்பவரும்/செவிக்கப்படுபவரும் இவற்றை ஒரு தவறாகக் கொள்வதே இல்லை. இது சாதாரண வாடிக்கையான விடயம் தானே என்பது போல் ஊடகங்களில் இந்த போக்கு நிறுவனமயப்படுள்ளது. இதனை தடுத்து நிறுத்தும் எந்தப் பொறிமுறையும் எந்த ஊடகங்களிலும் இதுவரை கிடையவே கிடையாது. இது ஒரு ஊடக அற மீறல் என்பதை இவர்கள் தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்கள் என்பது தான் வேதனை தரும் விடயம்.

தமக்கெதிரான ஏதாவது செய்தியோ கட்டுரையோ வந்தால் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி தனது பினாமி ஊடகவியலாலரிடம் “அது வரும் வரை நீ என்ன புடுங்கிக் கொண்டிருந்தியா” என்று திட்டும் அளவுக்கு இத்தகைய அரசியல் வாதிகளின் கையோங்கியிருக்கிறது. சக ஊடக ஊழியர் தம்மைப் பற்றி அரசியல்வாதியிடம் போட்டுக் கொடுத்து விடுவார் என்கிற பயத்திலேயே சிலர் அடங்கி நடப்பதையும்  காண முடியும்.

இவை அனைத்துக்கும் பல்வேறு ஆதாரங்களும் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் வரை கொடுக்க முடியும். அது நீண்ட பட்டியல். அதுமட்டுமன்றி இந்த கட்டுரையின் நோக்கம் இந்த போக்கைப் பற்றி விளங்கப்படுத்துவதே. சம்பவங்களை அல்ல.

ஆக இப்போதெல்லாம் மக்களுக்கு கிடைக்கப்பெறும் கருத்துக்கள் பல இப்படி ஊடகவியலாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் உண்மைக்கு புறம்பாக திரிக்கப்பட்ட, புனையப்பட்டவை தான் என்பதை நம் வெகுஜனம் அறியாது. ஊடகங்களினால் புனையப்பட்ட கருத்துருவாக்கத்தின் பின்னணியில் பெரும் அதிகாரபலமும், அரசியல் பலமும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது என்பதை அறியமாட்டார்கள்.

இப்படி தாம் நம்பியிருக்கும் ஊடகங்கள்; சரியாகத்தான் தம்மை வழிநடத்துகின்றன என்று நம்பும் பாமரத்தனம் தான் இவர்களின் அடிப்படை முதலீடு. இந்தக் கூட்டுக் கயமைக்கு ஊடக நிறுவனங்கள் முடிவு கட்ட வேண்டும். ஊடக அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

ஊடக அமைப்புகளின் கடமை ஊடகர்களின் நலன்களில் மாத்திரம் அல்ல. அதற்கப்பால் ஊடகங்கள் வெளிப்படுத்தும் விடயங்களில் அதை நம்பியிருக்கும் பிரஜைகளின் நலன்களும் அதன் கடமை தான். இதற்கான பொறிமுறையை கண்டுபிடிக்க வேண்டிய காலம் இப்போது நெருங்கியிருக்கிறது.


சமூக ஊடகங்களும் ஆயுதங்களாக
இப்போது பிந்திய போக்கு (Latest trend) சமூக வலைத்தளங்கள். மேற்குறிப்பிட்டபடி இந்த அரசியல்வாதிகள் தமது பிரசாரத்துக்கும், தமது வீரப்பிரதாபங்களை விளம்பரப்படுத்துவதற்கும், அரசியல் எதிரிகளை தாக்குவதற்கும், தமக்கெதிரான மக்கள் கருத்துக்களை நசுக்குவதற்கும் கூட இந்த சமூக வலைத்தளங்களை கையாளத் தொடங்கி இருக்கிறார்கள்.

  • தமது எடுபிடிகளைக் கொண்டு தமது தளங்களை / பக்கங்களை நடத்துவது
  •  தம்மை விளம்பரப்படுத்தும் கருத்துகளுக்கு எதிர்வினை புரிவோரை தமது ஆதரவாளர்களைக் கொண்டும், போலி கணக்குகளைப் பிரயோகித்தும் தனிப்பட்ட தாக்குதல்களையும், அவதூறுகளையும், மிரட்டல்களையும் செய்தல்.
  • சில அரசியல் வாதிகள் நேரடியாக அத்தகைய விளம்பரங்களில் ஈடுபடுகிறார்கள்.
  •  தம்மைப் பற்றி ஆஹா, ஓஹோ பேஷ் பேஷ், “தலைவா நீ தான் வீரன்”, பாணியில் வெளியிடப்படும் கருத்துக்களை தாமே சேர்ப்பது. அல்லது சேர்க்கப்பட்டவற்றால் உசுப்பேத்தப்பட்டு, குஷியாகி,  மாற்று கருத்துக்கள் வந்தால் பொறுமையிழந்து அவர்களை துவம்சம் செய்து விரட்டியடிப்பது போன்றவற்றை திட்டமிட்டே செய்கிறார்கள்.
  •  முறைப்பாடுகளையும், விமர்சனங்களையும் வைப்பவர்களின் மீது தமது ஆதரவாளர்களை ஏவிவிட்டு அவதூறுகளாலும், தூசனங்களாலும், தனிப்பட்ட தாக்குதல்களாலும் ஒடுக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை நீக்குவதோ, எச்சரிப்பதோ, மட்டுறுத்துவதோ கூட கிடையாது. மாறாக அவற்றுக்கு தாராளமாக வழிவிட்டுவார்கள். ஆனால் அதுவே தம் மீது  ஏற்பட்டால் அதை நசுக்க அத்தனை வழிகளும் கையாளப்படும்.
  • ஆரோக்கியமான கருத்துக்களை காயடித்துவிட்டு, தங்களைப் போற்றியும், வாழ்த்தியும், வணங்கியும் எழுதப்படும் கருத்துக்களை மாத்திரம் விட்டு வைப்பார்கள்.
  • சில அரசியல் வாதிகள் இதற்காகவே கூலிக்கு ஆளமர்த்தி அலுவலகம் நடத்தவும் செய்கிறார்கள்.
  • அந்தந்த அரசியல் வாதிகளின் அதிகாரத்துக்கும், வசதிக்கும் ஏற்ப இந்த செயலின் அளவும். வடிவமும் வேறுபடுகிறது
இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. கருத்துச் சுதந்திரத்தின் மீதும், மக்கள் அபிப்பிராயம் உருவாக்கத்தின் மீதும் ஏற்பட்டுள்ள சவால். தமது முறைப்பாடுகளையும், தமது பிரச்சினைகளையும், அபிப்பிராயங்களையும் தெரிவிக்க முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது.

இவையெல்லாம் வெறும் அரசியல்வாதிகள் பற்றியது மட்டுமல்ல.  கட்சிகள், வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் அனைத்துக்குமே ஊடகங்களில் ஆட்கள் உள்ளார்கள்.

ஊடகங்கள் தமது தார்மீக கடமைகளை அறத்துடன் நிறைவேற்றினால் மாத்திரம் தான் அதே அறத்தின் துணையுடன் தமது தார்மீக உரிமைக்காகவும் நிற்க முடியும். உரிமையுடன் நிற்கவும் முடியும்.

அல்லது இத்தகைய போக்குக்கு வேறு வடிவத்தில் எதிர்கொள்ளத் தலைப்படுவார்கள். அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக ஊடகர்கள் இருந்துகொண்டு எந்தவித மனசாட்சிக்குட்பட்ட எழுத்தையும், பணியையும் ஆற்ற முடியாது என்பதை நாம் உறுதியாக நம்புவோம். நம்பியிருக்கும் வாசகர்களுக்கும், மக்களுக்கும் பொறுப்புச் சொல்லும் கடமை நமக்குண்டு. அவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக அறத்தை இழந்து விடாதீர்கள்.

சொம்புதூக்கி அடிமைகளா? நேர்மைமிக்க நெஞ்சுநிமிர்ந்த ஊடகவியலாளர்களா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates