Headlines News :
முகப்பு » » கூட்டு ஒப்பந்தம்: மௌனமாய் அரங்கேறிவரும் வெளியாள் உற்பத்தி முறை - சுகுமாரன் விஜயகுமார்

கூட்டு ஒப்பந்தம்: மௌனமாய் அரங்கேறிவரும் வெளியாள் உற்பத்தி முறை - சுகுமாரன் விஜயகுமார்


தமிழர்கள் செய்யும் ஏதாவது தனிமனித வெற்றிகளை, சாதனைகளை கொண்டு நாம் தமிழராக இருப்பதனால் பெருமிதம் கொள்ளும் எவரும் நடிகர் விஜய்க்கு கோவில் அமைத்துள்ளதை (இதற்கு முன்னர் பல நடிகர், நடிகைக்கு அமைத்தாயிற்று) எண்ணி வெட்கி தலைகுணிந்தாக வேண்டும்.
மலையக மக்களை பாராளுமன்ற வாதிகள் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்று எண்ணுபவர்கள் எவராயினும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை வருகைக்கு உரிமைகோரி பாராளுமன்றவாதிகள் நடாத்தும் கூத்துகளும் சண்டைகள் கண்டு வெட்கப்பட்டுதான் ஆக வேண்டும்.

பொதுவாகவே பாராளுமன்ற அரசியல்வாதிகளில் பலருக்கு ஒரு மேனியா உண்டு: 'திருமண வீட்டு என்றால் மாப்பிளை' மரண வீடு என்றால் பிணம்' என்பதுதான் அந்த மேனியா. இந்த மேனியா மலையக தலைவர்களிடத்தில் பொது போக்காக உள்ளமையை சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. உழைக்கும் மக்களின் உரிமைக்கான தினத்தில் மலையக பாராளுமன்ற தலைமைகளின் மோடியின் வருகைக்கு உரிமை கோரும் கூத்துகள் முடிந்த மக்கள் மூச்சு விடுவதற்குள் மோடி வருகையை சொந்தம் கொண்டாடும் காடைத்தனங்கள் தொடங்கிவிட்டன.

இந்த அருவறுக்கத்தக்க சம்பவங்களுக்கிடையில் கடந்த 8ஆம் திகதி 2016ஆம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிராளிகளின் ஆட்சேபனைகளை பதிவு செய்வதற்காக எடுக்கப்பட்டிருந்தது.

குறித்த மனு தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி பிரதிவாதிகள் தமது ஆட்சேபனை வழங்க கால அவகாசம் கோரிய நிலையில் நீதி மன்றம் அதற்கு தனது அனுமதியை வழங்கி இருந்தது. எனினும் இம்மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற அமர்விலும் ஆட்சேபனையை பதிவு செய்ய பிரதிவாதிகள் மீண்டும் கால அவகாசத்தை கோரி இருந்தனர்.

இந்த பின்னணியிலேயே மேன்முறையீட்டு நீதியரசர் சி. துரைராஜா தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றிய கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டு, தாமதிப்பதன் ஊடாக இந்த பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தாது அதனை சமரச, இணக்க அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு குறித்த கால நியமங்களை குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில், 08.05.2017ஆம் திகதியில் இருந்து நான்கு வார காலத்திற்குள் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பில் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளருடன் கலந்துரையாடி மனுதாரரின் மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் 2016 ஒக்டோபர் 16ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டமை சட்டத்திற்கு முரணானதா என்பது பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் இது சட்ட முரணானதெனில் அந்த திகதியிலிருந்து இரண்டு வாரத்திற்குள் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடனும் கம்பனிகளுடனும் கலந்துரையாடி இப்பிரச்சினையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்க்க முன்வர வேண்டும் எனவும், எதிர்வரும் யூலை 4ஆம் திகதி மேற்படி கலந்துரையாடல்கள் பற்றியும், சமரச தீர்வு எட்டப்பட முடியுமாயின் அது பற்றியும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார்.

அத்தோடு, இவ்வழக்கு யூலை 5ஆம் திகதி நீதிமன்றத்தில் அழைக்கப்படுமெனவும். சமரசத் தீர்வு இருப்பின் அன்று அது பற்றி மன்றுக்கு பிரதிவாதிகள் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் இணக்கத் தீர்வு சாத்திமில்லையெனில் பிரதிவாதிகள் அவர்களது ஆட்சேபனையை அன்று பதிவு செய்ய வேண்டுமென்றும் ஆட்சேபனையை பதிவு செய்ய மேலும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் நீதியரசர் குறிப்பிட்டார்.

மக்கள் தொழிலாளர் சங்கம் தொழிலாளர் சார்பு அடிப்படையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அதற்கு எதிராக வழக்கை தொடுத்திருந்தது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி குறித்த கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ரிட் மனுவை மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்திருந்தது. அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா இதனை தாக்கல் செய்து தானே அந்த வழக்கில் வாதிடுவதற்கான அனுமதியையும் கோரியிருந்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி குறித்த மனு விசாரிக்க தகுதியானதா என்பது தொடர்பாக ஆராய்ந்த போது அது விசாரணைக்கு தகுதியானது என்பதை ஏற்றுக் கொண்டு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்ததுடன், வழக்காளியான சட்டத்தரணி இ.தம்பையா தானே வழக்கில் வாதிடுவதற்கு கேட்கப்பட்டிருந்த அனுமதியும் வழங்கப்பட்டது.

மக்கள் தொழிலாளர் சங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில் தனது ரிட் மனுவில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பதமானது பொது மக்கள் அக்கறைக்குரிய விடயம் என்பதை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களில் தொழில் புரிகின்றமை, மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டத் தொழிற்துறை தொடர்ந்தும் முக்கிய இடத்தை பெருகின்றமை என்ற விடயங்கள் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனையும் கருத்திற் கொண்டே மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த ரிட் மனு விசாரணைக்கு தகுதியானது என கருதி பிரதிவாதிகளுக்கு அழைப்பானை விடுத்திருந்தது.

மக்கள் தொழிலாளர் சங்கம் தனது மனுவில் 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக பின்வரும் விடயங்களை எடுத்துக்கூறியிருந்தது.

1. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள கூட்டு ஒப்பந்தம் செய்யும் நடைமுறை இருந்த நிலையில், குறைந்தது இரண்டு வருட காலம் அமுலில் இருக்கும் என்ற ஏற்பாட்டின் ஊடாக இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற உரிமை மறுக்கப்பட்டுள்ளமை.
2. இது வரை காலமும் நிலுவை சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், 18 மாத காலத்திற்கான நிலுவை சம்பளத்தை வழங்க ஏற்பாடு செய்யப்படாமை.
3. மொத்த சம்பளத்தில் இருந்து ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதிக்கான பங்களிப்பினை செய்ய ஏற்பாடுகளை செய்யாமை. மற்றும்
4. 2003ஆம் ஆண்டு செய்யப்பட்டுள்ள அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தில் வருடத்தில் 300 நாட்கள் வே லை உறுதி செய்யப்பபட்டுள்ள நிலையில் அதனை மீறும் வகையில், சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமொன்றில் வெளியாள் உற்பத்தி முறையை அடுத்து வரும் கூட்டு ஒப்பந்தத்தில் சேர்ப்பதற்கு தொழிற்சங்கங்கள் அனுமதி வழங்கியுள்ளதாக ஏற்பாடுகள் செய்துள்ளமை.

அந்த வகையில் இவைகள் தொழிற் சட்ட ஏற்பாடுகளுக்கு விரோதமாயும் இயற்கை நீதிக்கு முரணாயும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை பறிப்பதாகவும் அமைந்துள்ளமையினால் குறித்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்து செய்வதற்கான இரத்து ஆணையையும், புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கான ஆணையையும் கோரி இருந்தது.

இம் மனுவை நீதி மன்றம் ஏற்றுக் கொண்ட பின்னர் இ.தொ.கா. ஊடக சந்திப்பை நடாத்தி கூட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருந்தது. இ.தொ.கா.வின் இந்த அறிவிப்பு இதயசுத்தியுடன் இருப்பது நல்லது; அதனையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என மக்கள் தொழிலாளர் சங்கம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தமை பதிவு செய்யப்பட வேண்டியதாகும்.
ஒரு தொழிற்சங்கம் என்ற வகையில் ஒரு போராட்டமாக மக்கள் தொழிலாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடியுள்ளமை வரவேற்கப்பட வேண்டும். அதேவேளை இந்த வழக்கானது மலையக தொழிற்சங்க அரசியல் சீரழிவுகளுக்கிடையில் குறிப்பான முக்கியத்துத்தையும் கொண்டதாகும்.

மலையக மக்களின் வரலாறு முழுவதும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போரட்டங்கள் ஆளும் வர்க்கம் சார்பான மலையக பிற்போக்கு தொழிற்சங்கங்களினாலும் கட்சிகளினால் தமது இருப்பையும், பாராளுமன்ற அரசியலையும் நோக்கியதாக மாத்திரம் பயன்படுத்தியமை இன்று அதன் உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலவீனப்படுத்தபட்ட நிலையில் இருக்கின்றமையினால் இன்று தொழிலாளர்களின் உரிமைகள் உறுதி செய்ய ஒரு தற்காப்பு அடிப்படையிலான முன்னகர்வு அவசியமாகிறது. அந்த அடிப்படையில் மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள வழக்கும், அது தற்போது எடுத்துள்ள திசையையும் முக்கியத்துவமிக்கதாகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர் இடம்பெற்றுவரும் சம்பள குறைப்பு மற்றும் தொழில் நிபந்தனைகள் தொடர்பாக தமது அதிருப்தியை தெரிவித்து ஒவ்வொரு நாளும் தமது எதிர்ப்பையும் போராட்டங்களையும் தோட்ட மட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற சூழ்நிலைகள் காணப்படுகின்றன. தொழிலாளர்களின் உரிமையில் அக்கறை கொண்டவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இருப்பு, மலையக தேசிய இனத்தின் இருப்பு பற்றிய மக்கள் சார்பான உரையாடலுக்கு தயாராக வேண்டிய அவசியம் உள்ளது.

மக்கள் தொழிலாளர் சங்கம் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டி நிற்கும் அனைவரின் சார்பாகவும் செய்யப்பட்ட நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டி தாம் முன்னெடுத்திருக்கும் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும்படி பகிரங்க அழைப்பை தனிநபர்களுக்கும் சிவில் அமைப்புகளுக்கு விடுத்திருந்தமை மலையக தொழிற்சங்க பாராளுமன்றவாதிகளின் ஏகபோக உரிமை கோரல் அணுகுமுறைக்கும், வரலாற்றுக்கும் மாற்றான மக்கள் சார்பு போராட்ட வழிமுறையாகும். தொழிலாளர்கள் தற்போது ஆக்கப்பட்டிருக்கும் நிலைமையின் பாதக நிலையை கருத்திற் கொண்டு பாராளுமன்ற, தொழிற்சங்க வாதத்திற்கு மாற்றான ஒரு பொது அணி அவசியமாகிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றிய கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என நீதிமன்றம் எதனை குறிப்பிட்டது என சிலர் வியாக்கியானங்களை வழங்க ஆரம்பித்துள்ளார்கள்.

வழக்கு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது நீதிமன்றத்தில் நடந்ததை அப்படியே அறிக்கையிடுவதற்கு அப்பால் சென்று பொருள்கோடல்களை வழங்குவது வழக்கை பாதிக்கும் என்பது சட்டக் கோட்பாடாகும். அது பொதுவாக பின்பற்றப்படும் நடைமுறை. அதனை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு என்பது அறியப்படல் வேண்டும்.

நீதிமன்றத்தின் கட்டளையோடு யூலை 4ஆம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்த விவகாரம் தொடர்பாக சில முன்னெடுப்புகள் இடம்பெறும் என்பது உறுதியாகியுள்ளது. எவ்வாறாயினும் அவை எவ்வகையாக இருக்க போகின்றன என்பது தொடர்பாக உறுதியாக ஆரூடம் கூற முடியாதுள்ளது.

தொழில் அமைச்சரும், தொழில் ஆணையாளரும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்த 2016ஆம் ஆண்டு பெருந்தோட்ட சம்பள கூட்டு ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என அவர்கள் ஏற்பார்களா? அப்படி ஏற்பார்களாயின் அதற்கு கம்பனிகளை பிரதிநித்துவப்படும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் என்ன மறுமொழிகளை வழங்கும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் நிலை என்னவாக இருக்கம் என்ற விடயங்கள் முக்கியமானவைகளாகின்றன. எவ்வாறாயினும், இந்த நடைமுறைகள் தொழிலாளர்களுக்கு எந்தவகையிலும் சார்பாக இருக்கப் போவதில்லை என்று கூறிவிட முடியாது.
இது அவ்வாறு இருக்க, ஒரு பத்தியாளர் கூட்டு ஒப்பந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை தொடர்பாகவும் குறிப்பிட்டு, பிரதிவாதிகளான கம்பனிகள் சமரசம் என்ற அடிப்படையில் தமது மாற்று தீர்வாக வெளியாள் உற்பத்தி முறையை முன்வைப்பதற்கான சாத்தியங்களே அதிகம் என குறிப்பிட்டுள்ளார்;. அத்தோடு இந்த முறைமை தொடர்பாக பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் இப்போதுதான் முன்மொழிவுகளை செய்து வருவதாகவும், எனினும் அரச பெருந்தோட்டங்களில் 2005ஆம் ஆண்டுகளில் இருந்தே செய்யப்படுவதாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்த கூற்றுகள் கம்பனிக்கு எதிராக எந்த நடவடிக்கைகள் எடுத்தாலும் அவை தமது திட்டத்தை கைவிடப் போவதில்லை, அவவைகள் அதன் திட்டத்தை அமுல்படுத்ததான் போகின்றனர். கம்பனிகள் இந்த வெற்றிகரமான திட்டத்தை அமுல்படுத்துவதில் அவசியமற்ற வகையில் பின்வாங்கியுள்ளனர் என்ற கருத்து வெளிப்படுகிறது. இந்த 'பொருள்கோடல்' பிழையானது என நிராகரிக்கப்பட்டாலும், இந்த வெளியாள் முறைமையானது ஏன் இப்போது பேசு பொருளாகியுள்ளது. எந்த நோக்குநிலையில் இருந்து இது மலையக அரசியல்வாதிகளினாலும், புத்திஜீவிகளாலும் பார்க்கப்படுகிறது என்பது அவசியமாகிறது.

இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் (2016ஆம் பெருந்தோட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தில்) அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் வெளியாள் முறையை அறிமுகப்படுத்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளதாக ஏற்பாடுகள் காணப்படுகிறமையும் கவனிக்கத்தக்கது.

வெளியாள் உற்பத்தி முறை என்பது விவசாய மற்றும் பெருந்தோட்ட உற்பத்தி முறைக்கு வருவதற்கு முன்னர் வேறு துறைகளில் பரீட்சிக்கப்பட்டதாகும். பிஸ்னஸ் அவுட் சோர்சிங் என்ற முறையே இதன் ஆரம்ப வடிவம். பிஸ்னஸ் அவுட்சோர்சிங் முறையில் ஒரு வியாபாரத்துறையில் நிரந்தர தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாது வேறு ஒரு முகவரிடம் இருந்து தொழிலாளர்கள் பெறப்படும் முறையாகும். இம்முறை கனிணி மென்பொருள் தயாரிப்பு தொழிற்துறை முதற்கொண்டு நகர சுத்திகரப்பு தொழிலாளர்கள் வரையில் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் மேன்பவர் நிறுவனங்கள் ஊடாக தொழிலாளர்கள் நிறுவனங்களுக்கு அமர்த்தப்படும் முறை இதுவே. இதனூடாக, உழைப்பை பெறுகின்ற தொழில் வழங்கும் நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவு இல்லாமல் ஆக்கப்படுகிறது. முகவர் நிறுவனங்களே தொழிலாளர்களே தொழிலாளர்களின் அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பவர்கள் ஆகின்றனர்.

இது தொழிலாளர் உரிமைகளையும், ஏற்கனவே அனுபவித்து வந்த சட்ட ரீதியான உரிமைகளையும், சமூக பாதுகாப்பு விடயங்களையும் பறித்து தொழிலாளர்களை மிகையாக சுரண்டி இலாபத்தை அதிகரிப்பதனை நோக்காக கொண்டதாகும். அதற்கு முன்னிபந்தனையாக முறைமைப்படுத்தப்பட்ட தொழிற்துறை, பாதுகாப்பான முழுiமான தொழில் (கரடட நஅpடழலஅநவெ) முறைமையை இல்லாமல் செய்வதனையும் அதனூடாக தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியாக பலவீனப்படுத்துவதனையும் இம்முறை ஒருங்கே கொண்டுள்ளது. இது நவ தாராள பொருளாதார கொள்கையின் ஒரு அங்கம்.

பிஸ்னஸ் அவுட் சேர்சிங் முறைக்கும் வெளியாள் முறைக்கும் இடையின் அதன் சாரத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை. தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது, தொழிலாளர்களின் பலத்தை சிதைப்பது, மிகை சுரண்டலை மேற்கொண்டு இலாபத்தை பெருக்குவது என்பவைகள்தான் இரண்டினதும் அடிப்படை. இந்நிலையில் வெளியாள் முறையையின் சாரத்தை விளங்கிய ஒருவர் தொழிலாளர்கள் உரிமை உறுதி செய்யப்படும் என்று கூறுவாராயின் நவதாரளவாத பொருளாதார கொள்கையின் மனிதாபிமானமற்ற சுரண்டல் முறையை அங்கீகரிக்கின்றார் என்பதை தவிர வேறு வியாக்கியனங்கள் இருக்க முடியாது.

வெளியாள் உற்பத்தி முறை ஊடாக நீண்ட காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சிறு தோட்ட உடமையாளர்கள் ஆக்கப்படுவார்கள் என்று கூறுவது தொழிலாளர்கள் மீதான சுரண்டலை மூடி மறைப்பதற்காக சொல்லப்படும் வாதமாகும். தொழிலாளர் குடும்பங்களுக்கு உற்பத்தி செய்வதற்கு சிறு காணி துண்டுகளை (தேயிலை அல்லது இறப்பர்) பகிரந்தளித்து அவர்களின் முழு உழைப்பையும் சுரண்டி மூலப் பொருட்களான தேயிலை கொழுந்து மற்றும் இறப்பர் பாலை பெறுவதே பெருந்தோட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளியாள் முறையின் சாரம். இது அரச தோட்டங்களை போன்றே பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சொந்தமான தோட்டங்களிலும் நீண்டகாலமாக பகுதியளவில் அறிமுகம் செய்யப்பட்டு இடம்பெற்று வருகிறது.

இது பெருந்தோட்ட தொழிற்துறையில் மூலப் பொருட்களை பெறும் செயன்முறையில் சிற்றின பொருளாதர முறைமையும், முடிவு பொருட்களை உடமை கொள்வதில் மற்றும் வினியோகம் செய்வதில் பேரண்ட பொருளாதார முறைமையையும் நிலை நிறுத்துவதனை நோக்காக கொண்டுள்ளது.

இது தோட்டத் தொழிலாளர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்துறைக்கு உட்பட்டிருப்பதை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதனையும், நவீன சுரண்டல்களை மிகவும் தீவிரமாக தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் திணிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நோக்கங்கள் பெருந்தோட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெளியாள் முறையில் இல்லை என ஆதாரங்களுடன் ஒருவர் நிரூபிப்பாராயின் அது வெளியாள் உற்பத்தி முறை அல்ல என நிரூபிக்கின்றார் என்று நாம் உடன்படலாம்.

- தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates