Headlines News :
முகப்பு » » மலையகத்தில் மதுபானம்: மக்கள் சீரழிவுக்கு யார் காரணம்?

மலையகத்தில் மதுபானம்: மக்கள் சீரழிவுக்கு யார் காரணம்?


நகரங்களுக்கு அண்மையிலுள்ள, தோட்டங்களுக்கு அருகிலுள்ள மதுபானசாலைகளை ஒழிப்பதற்கு ஜனாதிபதியூடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்க உடனடியாகச் செய்ய வேண்டிய ஒரு நடவடிக்கையாகும்.

மலையகத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் மது ஒழிப்புக்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். மது ஒழிப்பு பற்றி அவர்கள் வாய்திறப்பதில்லை. அதற்கு அவர்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிப்பதுமில்லை. ஏனெனில் அரசியல்வாதிகள் பலர், பல மதுபானசாலைகளின் உரிமையாளர்களாக இருப்பதுதான் காரணம்.

பலர் மதுபானத்தை அடிப்படையாக வைத்துத்தான் தமது அரசியலையே நடத்திக்கொண்டிருக்கின்றனர். மதுபானசாலைகள் மூடப்பட்டால் அல்லது மதுபானம் ஒழிக்கப்பட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. மக்களுக்கு மதுபானத்தைக் கொடுத்து தேர்தல்களில் வெற்றிபெற முடியாத நிலையும் ஏற்படும்.

கிராமங்கள் மற்றும் நகரங்களைவிட மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகளவு மதுபானசாலைகள் காணப்படுகின்றன. பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களை இலக்கு வைத்தே இந்த மதுபானசாலைகள் திறக்கப்பட்டன. பெரும்பான்மை இனத்தவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, அவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான மதுபானசாலைகளைத் திறப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமாக இருந்திருக்கின்றனர்.

கடந்த 2530 வருடகாலப்பகுதியில்தான் மலையகத்தில் மதுபானசாலைகள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டன. நகரங்களில் மட்டும் இயங்கி வந்த மதுபானசாலைகள், தனியாக 95 வீதமான தொழிலாளர்கள் வாழும் தோட்டங்களின் மத்திய பகுதியிலும் இந்தக் காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டன.

அதாவது இந்த அரசியல்வாதிகள் தமக்கு வழங்கப்படும் “மதுபான கோட்டா”க்களைப் பெற்று தாமே மதுபானசாலை திறப்பதிலும், அல்லது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மூலமாக மதுபானசாலைகளைத் திறப்பதிலும் ஈடுபட்டனர். சிலர் நண்பர்களுக்கும் வழங்கினர்.

இந்த அரசியல்வாதிகள் மக்கள் அளித்த வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதென்னவோ மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். ஆனால்,மக்களுக்கு சேவைசெய்வதற்குப் பதிலாக மதுபானசாலைகளுக்கான கோட்டாக்களைப் பெற்று மதுபானசாலைகளை திறப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டினர்.

இதனையே அமைச்சர் பி.திகாம்பரமும் கூட அண்மையில் ஹட்டன் எபோட்ஸ்லி, மார்ல்பரோ டிவிசனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தாம் இதுவரை மதுபானசாலைகளை திறப்பதற்கான எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையெனவும், எதிர்காலத்திலும் அவ்வாறு செய்யப் போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக முன்னோடிகளும், தலைவர்களும் சமூகத்துக்கு முன் மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமே அதனை சமூக மக்களும் பின்பற்றி செயற்படுவார்கள். எனவே, தலைவர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்வது அவசியம்.

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மதுஒழிப்பு பிரசாரத்தில் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தெரிவித்திருந்தார். அதுவும் வருடமொன்றுக்கு 1600 கோடி ரூபாவுக்கான மதுபானம் இம்மாவட்ட மக்களால் அருந்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மதுபானம் மலையக தோட்டப்புற தமிழ் மக்களின் வாழ்க்கைச் சீரழிவுக்கு காரணமாக அமைந்துள்ளதென்பதை அங்கு கவலையுடனும், அக்கறையுடனும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதிக்கு மலையக மக்கள் மீது இருந்த அக்கறை, இந்த சமூகத்திலுள்ள தலைவர்களுக்கு இல்லாமல் போய் விட்டதாக மக்கள் ஆதங்கப்படுவது உண்மை.

கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி மலையக மக்கள் அதிகளவில் மது அருந்துவதற்கு மலையக அரசியல்வாதிகளே காரணமாக இருந்திருக்கின்றனர் எனலாம். மதுபானசாலைகள் திறக்கப்படுவதற்கு (கோட்டா பெற்றுக்கொடுத்ததன் மூலம்) ஒரு காரணமாக இருந்தமை ஒருபுறம் இருக்க, தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மதுபானம் (சாராயம்) வழங்கியுள்ளனர்; வழங்குகின்றனர். கட்சி நடவடிக்கைகள், கூட்டம், மேதினம் என்பவற்றை நடத்துவதற்கு ஆள் சேர்ப்பதற்காக சாராயம் வழங்குகின்றனர். ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்காக அவர்களுக்கு சாராயம் வழங்குகின்றனர்.

இதுபோன்று,தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், சுயநலத்துக்காகவும் மதுபானங்களைக் கொடுத்து அவர்களை மதுவுக்கு அடிமையாக்கிவிட்டனர். இப்போது அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாத நிலைமைக்குத் தோட்டத்தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் உழைக்கும் பணம் முழுவதும் மதுபானத்துக்கே செலவு செய்யப்படுகிறது.

குடும்பத்தைக் கவனிக்க முடியாமலும், பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியாமலும், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்ட வசதிகளைப்பெற்றுக்கொடுக்க முடியாமலும் ஏழ்மையில் சிக்கித்தவிக்கின்றனர். இந்த நவீன காலத்திலும் இதே நிலைமை தொடரவேண்டுமா?

மனசாட்சியுள்ள, மக்கள் மீது அக்கறையுள்ள எந்தவொரு சமூகத்தலைவனும் இதுபோன்ற கொடிய செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அவ்வாறு செய்பவர்கள் சமூகத்துக்கு தலைமை கொடுக்கவும் முடியாது. மக்களும் அவ்வாறானவர்களை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான மதுபானசாலைகள் காணப்படுகின்றன. இந்த நகரங்களை அண்மித்த பகுதிகளில் அநேக தோட்டங்கள் காணப்படுகின்றன. நகரங்களில் மட்டுமன்றி தோட்டங்களுக்கு மத்தியிலும்,தோட்டங்களை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதிகளிலும் அடுத்தடுத்து மதுபானசாலைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் நகரங்களை அண்மித்துள்ள தோட்டங்களுக்கு அருகிலமைந்துள்ள மதுபானசாலைகளை மட்டுமன்றி பொருந்தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates