உலகில் படைக்கப்பட்ட சகல உயிரினங்களுமே தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒன்று போராடி வெற்றி பெற்று வாழ வேண்டும். அல்லது இசைவாக்கம் அடைந்து கிடைத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நியதியாக உள்ளது.
ஆனால் இலங்கையில் சுமார் 200 வருட வரலாற்றைக் கொண்டுள்ள மலையக சமூகம் இன்றும் கூட தடைகளை தாண்ட முடியாமலும் இசைவாக்கமும் அடைய முடியாமலும் படிப்படியாகத் தனது அடையாளங்களை இழந்துவரும் சமூகமாகவே வாழ்ந்து வருகின்றது.
வெள்ளையர்கள் எமது முன்னோர்களை நாட்கூலிகளாக அழைத்து வந்த காலத்தில் எம்மவர்களை எட்டு அடி அறைகளில் நெருக்கமான லயன்களில் அடைத்து வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டதை நாம் குறையாகக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் எம்மவர்களை இங்கு அழைத்து வந்ததே முற்றும் முழுதாக இலாப நோக்கத்திற்காகவே.
ஆனால் இன்று நிலைமை வேறு. கள்ளத் தோணிகள் என்று கேலி செய்யப்பட்டு நாடற்றவர்களாக சீரழிக்கப்பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உறவுகளையும் நட்புகளையும் பிரிந்து சம்பந்தமில்லாத இனப்பிரச்சினைகளில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து இப்போதுதான் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.
80 களில் அமரர் சந்திரசேகரன் மலையகத்தில் ஏற்படுத்திய அரசியல் விழிப்புணர்ச்சி எமக்கு இலங்கையில் வாழும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இலங்கையை தாயகமாக ஏற்கும் பக்குவத்தினை ஏற்படுத்தியது.
எம் சமூகத்தின் கௌரவமான அடையாளத்தை அடித்தளமாகக் கொண்டு இவர் செயற்பட ஆரம்பித்ததன் முதல் படிதான் தனி வீட்டுத் திட்டம்.
ஒரு மனிதன், அதுவும் லயத்துச் சிறைகளில் வாழும் ஒருவன் தனக்கென அமைந்த ஒரு சொந்த வீட்டில் வாழ ஆரம்பிக்கும் போதுதான் அவனுக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் சுதந்திர எண்ணங்களும் துளிர்விடும் என்பதுவும் அதனோடு ஒட்டித்தான் அவன் தனக்கெதிரான சமூக நெருக்கடிகளைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றான் என்பதும் அவரது சிந்தனையாக இருந்தது.
இதனை அவர் செயற்படுத்தியும் காட்டினார். ஆனால் எம் சமூகத்துக்கே உரிய போட்டி அரசியல் காரணமாக அவரால் இதனை தொடர முடியாமல் போய்விட்டது.
எனினும் மீரியபெத்த மண்சரிவு அவலத்தோடு தனி வீட்டுக்கான அழுத்தம் தொழிற்சங்க பாகுபாடுகளையும் மீறி மக்கள் மத்தியில் வீரியம் பெற்று வெளிவந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர்கள் லயன் வாழ்க்கை முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள்.
சந்திரசேகரன் தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சராக தனி வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியபோது இது சம்பந்தமாக தனது தெளிவான அவதானத்தையும் முன்வைத்தார். அதாவது இந்த வேகத்தில் வீடுகள் கட்டப்பட்டு வந்தால் மலையக வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க 60 ஆண்டுகள் செல்லும் என்று கூறிய அவர், ஆகவே அரசாங்கம் ஒரு பிரகடனத்தின் ஊடாக தோட்டத் துறையில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் எனவும் கூறினார்.
இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், அமைச்சர் திகாம்பரம் ஆகியோர் மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்தினை அமைப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக கிடைக்கவுள்ள 4000 வீடுகள் திட்டம் ஓரளவு ஆறுதலைத் தந்தாலும் கூட இந்த 4000 வீடுகள் எம் சமூகத்தின் வீட்டுத் தேவைக்கு தீர்வாக எவ்வாறு அமையப் போகிறது என்று புரியவில்லை.
ஏனெனில் இந்த 4000 வீடுகள் பற்றிய செய்தி வெளிவந்தவுடனேயே கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.
இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டம் இன்னுமே அரிச்சுவடியிலேயே உள்ளது என்பதற்கு ஆய்வுகளோ அல்லது புள்ளி விபரங்களோ தேவையில்லை எனுமளவிற்கு இம் மக்களின் வாழ்க்கை மட்டம் பின்தங்கியுள்ளது.
கல்வி, சுகாதாரம், குடிநீர், மருத்துவம், தொழில்வாய்ப்பு, அனர்த்த நிவாரணம், பொருளாதாரம் எல்லாமே எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் அவ்வப்போது சமாளிக்கப்படும் விடயங்களாகவே உள்ளன.
இந்நிலையில் இந்திய வம்சாவளி மலையக மக்களாக இந்திய கலை, கலாசார, பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த கலாசாரத்தினைக் கொண்டுள்ள எமது சமூக மேம்பாட்டுக்கு குறிப்பாக எமது சமூக வளர்ச்சிக்கு தடையாக உள்ள லயன் முறையை மாற்றியமைப்பதற்கு இந்தியா எவ்வளவு தூரம் அக்கறை எடுத்து செயற்படுகின்றது என்பது ஆய்வுக்குரியதே.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்கள் தேசிய வீடமைப்புத் திட்ட அதிகார சபை மற்றும் டர்ஸ்ட் நிறுவனங்களின் ஊடாக கடன் அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
குறைந்த வருமானமுடைய தொழிலாளர்கள், ஓய்வடையும் வயதை நெருங்கிய அல்லது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இந்த கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாதாகையால் அவ்வாறானவர்களுக்கு இதில் வீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
இதன் காரணமாகவே அமரர் சந்திரசேகரன் கூறியவாறு ஒரு பிரகடனத்தின் ஊடாக இவ் வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஏனெனில், மேல் கொத்மலை நீர் மின் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பல நீர்த்தேக்கத் திட்டங்களினால் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் அக்காலத்தில் வேறு வேறு தோட்டங்களில்தான் குடியேற்றப்பட்டார்கள்.
ஆனால் இந்த நடைமுறையை அமரர் சந்திரசேகரன் மேல் கொத்மலை அபிவிருத்தி திட்டத்தில் அனுமதிக்கவில்லை. இத் திட்டத்தின் கீழ் இடம்பெயரும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏனையவர்களுக்குப் போலவே வீடுகளும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்துக்கும் மின் திட்ட சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தார்.
இதன் காரணமாகவே இதில் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகளும் ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டன. அல்லது இவர்களும் முன்னையவர்களைப் போலவே வெவ்வேறு தோட்டங்களில் லயன் வாழ்க்கையிலேயே முடக்கப்பட்டிருப்பார்கள்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...