பெருந்தோட்ட சமூகத்தின் பிரச்சினைகளுக்கும்
இந்நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் சமூகங்களின் பிரச்சினைகளுக்கும்
வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெருந்தோட்டச் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முழுமையான
தீர்வு இதுவரை கிடைக்கவில்லை, கல்வித்துறை மூலமாக இதுவரை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. மலையக மக்களும்
இந்நாட்டு பிரஜைகளே என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு தேசிய, அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டுச்
சபையின் தலைவரும், போதை பொருள் மற்றும் புகைத்தல் போன்றவற்றின் பாவனையை தடுப்பதற்காக
குரல் கொடுத்து வருபவருமான டாக்டர் சி. நிலங்க சமரசிங்க தெரிவித்தார்.
அண்மையில் தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டுச்
சபையில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது, மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் மது
பாவனை பற்றி கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏனைய பிரதேச மக்களின் வாழ்க்கையை விட மலையக மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் துன்பம் நிறைந்ததாகும். லயன்
குடியிருப்பு காம்பிறா ஒன்றில் பன்னிரெண்டுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர்.
ஒரு சிறு விறாந்தை, ஒரு அறை, இதற்குள் பாட்டன், பாட்டி, அப்பா, அம்மா, பிள்ளைகள் என அனைவரும் அடைக்கப்பட்டு வாழ்வது பெரும் கவலைக்குரியது
புதுமணத் தம்பதிகள் கூட இவர்களுடன் இணைந்தே வாழ வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
தேயிலைச் செடியுடன் போராட்ட வாழ்க்கையை
மேற்கொண்டுள்ள இந்த அப்பாவி சமூகத்தின் பொருளாதார சிக்கலையும், ஏழ்மையையும் சிலர் பயன் படுத்தி .
பயனைப் பெற்றுக் கொள்கின்றனர். பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காக
கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களிலுள்ள
ஹோட்டல்கள், வர்த்தக
நிலையங்கள் என்பவற்றிலும் வீட்டுப்பணியாளர்களாகவும் பணிபுரியச் செல்கின்றனர்
இவர்கள் தங்களுக்கு வழங்கும் எந்த தொழிலையும் திறமையுடன் செய்யக் கூடியவர்கள்.
பெருந்தோட்டச் சமூகத்தில் நிலவும்
பெரிய குறைப்பாடுகளாக ஏழ்மை, கல்வியறிவு குறைவு சுகாதார குறைபாடுகள் என்பவற்றுடன் மதுபான பாவனையைக்
கூறலாம். மதுபான பாவனை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஒரு புதிய கலாசாரமாகவே இச்சமூகத்தில்
தோற்றம் பெற்றுள்ளது. எனவே, இதனை இச் சமூகத்திலிருந்து துடைத்தெறிய சமூக அபிவிருத்தி செயற்திட்டங்களை
முன்னெடுக்க உள்ளோம் இது எமக்கு பெரிய சவாலாக இருக்கலாம் இவர்களின் வாழ்க்கையை
முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல திட்டங்களை முன்னெடுப்போம். எந்தத் தடைகள் வந்தாலும்
அவற்றை தகர்த்து மலையகத்தில் மது பாவனைக்கு முடிவு கட்டுவோம்.
பெருந்தோட்ட பிரதேசங்களில் மதுபானம், கள்ளு, வடிசாராயம், வெற்றிலை, புகையிலை, சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை தூள் என்பனவற்றின் பாவனை மிகவும் அதிகரித்துள்ளது.
18 வயதிற்குட்பட்ட இளம் சமூகத்தினர்
புகையிலையை பாவிக்கிறார்கள். அவர்கள் புகையிலையை வாய்க்குள் அடக்கி வைத்து சுவைப்பதைக்
காணலாம். வெளியூர்களிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக ஊருக்கு வருகைத் தருவோரே
இந்த வேண்டாத பழக்கத்தை பெருந்தோட்டங்களின் பரப்புகின்றனர்.
ஏழ்மையை மையப்படுத்தி முதலில் ஆண்கள்
குடிக்கு அடிமையாகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்வதில்லை அநேகர் மனைவியின் வருமானத்தில்
வாழ்க்கையை நடத்துகின்றனர். பின்னர் பெண்களையும் மதுவுக்கு அடிமையாக்குகின்றனர்.
40 வயதுக்கு மேற்பட்ட சில பெண்கள் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா , களுத்துறை மாவட்டங்களில் வடிசாராயத்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது
இங்குமிக மிக குறைந்தளவிலான பெண்களே மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். இவர்களுக்கு இப்பழக்கத்தை
வளர்த்து விட்டவர்கள் இவர்களின் கணவர்களேயாவர். இதனால் இருவரும் சமாதானமாக வாழ்வதுடன்
மதுவுக்கு பெண்களே பணமும் கொடுக்கின்றனர்..
இவ்வாறான நிலைமையை இக் சமூகத்திலிருந்து
அகற்றுவதற்காக தோட்ட மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் பரீட்சார்த்தமாக
காலி, நாக்கியா தென்ன
தோட்டத்தில் இத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். பாடசாலை மட்டத்திலிருந்து இத் திட்டத்தை
விரிவுப்படுத்தவுள்ளோம். பெருந்தோட்ட முகாமைத்துவத்துடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பெருந்தோட்டங்களில் மது பாவனை
எதிர்ப்பு சங்கங்களை உருவாக்கி மதுவை தோட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு வருபவர்களை
அடையாளம் கண்டு சட்டரீதியாக தண்டனை பெற்றத்தர நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டங்களில்
மதுவிற்பனை, பாவனையை
எதிர்த்து செயற்பட தோட்ட மக்களே தொண்டர் அமைப்பு அங்கத்தவர்களாக செயற்படுவார்கள்
அது அவர்களின் சமூக கடமையாக்கப்படும் எனவும் டாக்டர். சி. நிலங்க சமரசிங்க
தெரிவித்தார்.
பொறுப்பான ஒரு அரச அதிகாரியான இவர் மலையக
சமூகம் பற்றிய நிறைய தகவல்களை சேகரித்து வைத்துள்ளார் இந்தத் தகவல்களை மலையக சமூக
செயற்பாட்டாளர்களும் அறிந்து கொண்டால் நல்லது. மலையகத்தில் மது பாவனைக்கு எதிராக
அனைவரும் சமூகப்பற்றுடன் இணைந்தால் மது இல்லாத மலையகத்தை உருவாக்கமுடியும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...