Headlines News :
முகப்பு » , , , » 1915 கண்டி கலகம் – 2: முதலாவது உலகப் போரின் வகிபாகம் - என்.சரவணன்

1915 கண்டி கலகம் – 2: முதலாவது உலகப் போரின் வகிபாகம் - என்.சரவணன்


இலங்கைத் தீவின் அரசியல் போக்கை மாற்றியமைத்த 1915 கலகம் தற்செயல் நிகழ்வு போல தோற்றமளித்தாலும் அந்த நிகழ்வுக்கான சூழல் கட்டமைக்கப்பட்டதன் பின்னணியில் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு தொடர்புள்ளன. அந்த நிகழ்வை கவனிக்காமல் இந்த கலகத்தைக் கணிக்க முடியாது.


உலகப் போர்
1915. ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றி சரியாக 100 வருட நிறைவடைந்திருந்தது. கண்டி ராஜதானியின் மந்திரிகளின் மூலம் சூழ்ச்சி செய்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஒப்பந்தத்தை செய்து கண்டி மன்னனையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது 1815ஆம் ஆண்டு ஆகும்.

முதலாம் உலகப்போர்  1914 யூலையில் ஆரம்பமானது. நேச நாடுகளின் அணியில்  பிரித்தானிய பேரரசும், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, ஆகிய நாடுகள் மும்முரமாக போரில் ஈடுபட்டன. எதிர் அணியில் ஜெர்மனியுடன் ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி போன்ற நாடுகள் போரிட்டன.

பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்த பல நாடுகள் வலிந்து யுத்தத்துக்குள் இழுக்கப்பட்டன. அந்த நாட்டு மக்கள் போரில் ஈடுபடுபடுத்தப்பட்டனர். போருக்கான வளங்களையும் தமது காலனித்துவ நாடுகளில் இருந்து பறித்துக்கொண்டது.

“...இந்த நாட்டின் பூர்ஷ்வா வர்க்கமானது விவசாயிகள், தொழிலார்களின் போராட்டத்தின் போது மட்டும் பிரித்தானியாவுக்கு ஆதரவளிக்கவில்லை. போவர் போர் (Boer War), முதலாவது உலகப்போர் போன்றவற்றின் போதும் பிரித்தானியாவை ஆதரித்தே வந்திருக்கிறது. யுத்த நிதிக்காக பெருமளவு நிதியை வழங்கியிருக்கிறார்கள். அந்தப் போர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராக அவர்கள் கருத முடியவில்லை. இந்த சூழலைப் பயன்படுத்தி சுதேச விடுதலைக்கான கோரிக்கைகளை காலனித்துவத்திடம் கோருவதற்கு முனையவுமில்லை. மாறாக ஆண்டானுக்கு சேவை செய்தே வாழ்வது எனும் முடிவில் பிரித்தானிய தரப்புக்காக பகிரங்க நிதி ஆதரவையும், பிரசாரங்களையும் செய்தனர். சுதேச அரச சபை பிரதிநிதிகள் “அரசருக்கும் அரசுக்கும்” (for king and country) என்று யுத்தத்துக்கு ஆதரவளித்து பிரேரணை நிறைவேற்றினார்கள்.

புதிதாகத் தோன்றிய பூர்ஷ்வா வர்க்கம் இப்படியான ஆதரவுகளை பகிரங்கமாக செய்தது. ஈ.எல்.எப்.டீ.சொய்சா என்பவர் பண உதவி மட்டுமன்றி அரசருக்காக போரிடச் செல்லும் இலங்கையர்களுக்கான செலவை பொறுப்பேற்றார்.” (kumari Jayawardena - Nobodies to somebodies)

இவ்வாரெல்லாம் பிரித்தானியாவுக்கு தமது அடிமை விசுவாசத்தை வெளிக்காட்டியிருந்தும் கூட அப்படிப்பட்ட உள்நாட்டு அரசியல்வாதிகள், சமூக சேவையாளர்கள், மதுவொழிப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் எவரையும் 1915 கலகத்தின் போது நம்ப மறுத்தது பிரிட்டிஷ் காலனித்துவம். அரச அதிகாரிகளினதும், போலிஸ் அதிகாரிகளினதும் அறிக்கைகளும் அதற்கு காரணமாக காட்டப்படுகிறது. ஏனைய காரணங்களை பின்னர் ஆராய்வோம்.

இந்த காலப்பகுதியில் பிரித்தானிய காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சுதந்திர போராட்டம் எழுச்சிகொள்ளத் தொடங்கியிருந்தது. அந்த நாடுகளில் அவற்றை நசுக்குவதற்கான அரச இயந்திர பொறிமுறைகள் தயார் நிலையிலேயே இருந்தன. அதற்கான அனுபவமும் காலனித்துவ ஆட்சியதிகாரத்துக்கு இருந்தது. ஆனால் அப்பேர்பட்ட சுதந்திர போராட்டங்களின்றி, அமைதியாக இருந்த இலங்கைத் தீவில் அப்பேர்பட்ட அசம்பாவிதங்களை எதிர்பார்க்கவில்லை. அந்த நிலையில் திடீரென்று தோன்றிய 1915 கலகம் பிரித்தானியாவுக்கு எதிரான கலகமாக அதிகாரிகளால் அர்த்தம் கற்பிக்கப்பட்டது. இந்த திடீர் கலகம் அரச கவிழ்ப்புக்கான ஒரு சதியாக இருக்கக் கூடுமென்று சந்தேகமுற்றது. அதற்கு எதுவாக ஆங்கில அதிகாரிகளின் அறிக்கைகளும் இருந்தன.

ஜெர்மன் உளவாளிகள் பௌத்த பிக்குகள் உடையில் உலாவுவதாகவும் அவர்கள் பிரித்தானிய ஆட்சியை அகற்றுவதற்காக சதிசெய்கிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. இந்த செய்தியை “த கிராபிக்” என்கிற பத்திரிகையே முதலில் வெளியிட்டது. அதனை எழுதியவரும் இலங்கைவாசியான ஒரு ஜெர்மானியர். கைப்பற்றிய பின்னர் இலங்கைக்கான ஜெர்மன் பிரதானி யார் என்பதைக் கூட ஜெர்மன் தீர்மானித்துவிட்டதாக அந்த கட்டுரையில் வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஜே.டீ.ரீஸ் கேள்வி எழுப்பிய போது அதற்கு ஸ்டீல் மேட்லன்ட் அளித்த பதிலில் திருப்தியுறாத அவர்  இலங்கையின் கிளர்ச்சிக்குப் பின்னால் நிச்சயம் ஜேர்மன் இருக்கிறது என்று வாதிட்டார். இந்த தகவல் உண்மையானால் தமது காலனித்துவ இருப்புக்கு இந்த கலகம் பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்று பீதியடைந்தார்கள் ஆங்கிலேயர்கள்.

ஆனாலும் தேசாதிபதி ரொபட் சால்மஸ் (Robert Chalmers) இங்கிலாந்துக்கு
அனுப்பிவைத்த விரைவுச் செய்தியில் பௌத்தர்களுக்கும் முகம்மதியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த கலகம் மோசமான நிலைமையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று அறிவித்தார்.

தமது காலனித்துவ நாடுகளின் இயல்புநிலை சீரற்று போவதனூடாக உலகப் போரில் பிரித்தானியாவின் வகிபாகம் பாதித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது பிரித்தானியா. இறுக்கமாகவும் இருந்தது. எனவே தான் கலகக்காரர்களிடம் துப்பாக்கிகளும், குண்டுகளும் இன்னும் பல ஆயுதங்களும் தயாராக இருந்தன என்று தேசாதிபதிக்கு அறிவிக்கப்படவே மேலதிக எந்த விசாரணையும் இன்றி உடனடியாக இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தினார் தேசாதிபதி சால்மஸ்.

முஸ்லிம் எதிர்ப்புணர்ச்சி
இலங்கையின் வரலாற்றில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலகங்களின் அடிப்படைப் பின்னணியில் பொருளாதார போட்டி முக்கிய பின்புலத்தைக் கொண்டிருந்திருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் மேற்தோற்றத்தில் வெவ்வேறு உடனடிச் சம்பவங்கள் காட்சியளித்தாலும் அதன் பின்னணியில் பொருளாதார சண்டைப்போட்டியின் நீட்சி தொடர்ந்து வந்துள்ளதைக் காணக் கூடியதாக இருக்கும். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி என்பது சிங்கள பௌத்த புனிதத்துவத்தையும், சிங்கள பௌத்த புனருத்தாபனத்தையும் முன்னிறுத்தி வளர்ந்திருக்கிறது. அதுபோல கத்தோலிக்க எதிர்ப்பையும், அதன் பின்னணியிலிருந்த காலனித்துவத்தையும் எதிர்த்து வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அந்நியர்களின் மீதான இந்த வெறுப்புணர்ச்சி ஏனைய சமூகங்களின் மீதும் பாய்ந்தது.

இந்த போக்கில் தான் முஸ்லிம்களின் மீதான பொருளாதார போட்டி ஆரம்பத்தில் காழ்ப்புணர்ச்சியில் தொடங்கி பின்னர் அதுவே வெறுப்புணர்ச்சியாக பரிணாமம் பெற்றது. காலனித்துவத்தால் அரசியல் ரீதியிலும், ஏனைய சமூகங்களால் பொருளாதார ரீதியிலும் பின்தள்ளப்பட்டு வருவதாக சிங்களவர்கள் கருதினார்கள்.

1883 இல் நடந்த கொட்டாஞ்சேனைக் கலவரம் இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக் கொள்ளப்படுகிறது. அது சிங்கள பௌத்தர்களுக்கும், சிங்கள கத்தோலிக்கர்களுக்கும் இடையில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலப்பகுதியில் பௌத்த மறுமலர்ச்சியின் பேரில் சிங்கள பௌத்த தேசிய எழுச்சி தலைதூக்கத் தொடங்கியிருந்ததை கவனிக்க வேண்டும்.

எனவே முஸ்லிம்களுக்கு எதிரான இந்த புனைவுப் பரப்புரைகள் தொடங்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை விளங்கிக் கொள்ள முஸ்லிம் சமூகத்தின் வரவு, வியாபகம், இருப்பு என்பவற்றை சுருக்கமாக அறிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

(தொடரும்...)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates