Headlines News :
முகப்பு » » ஹற்றனிலிருந்து இராமானுஜம் - நிர்ஷன்

ஹற்றனிலிருந்து இராமானுஜம் - நிர்ஷன்

வாழ்க்கைச் சுமைக்கு விடைகொடுக்குமா கூட்டு ஒப்பந்தம்?
0
Submitted by ceditor on Sat, 05/16/2015  11:35

மலையிடுக்கெங்கும் பனிபடர்ந்திருக்கும் அதிகாலைப் பொழுதில் துயிழெழுந்து அவசர அவசரமாக அரைக்கிலோ மீற்றர் தூரம் நடந்து தண்ணீர் எடுத்து வந்து சமைக்க ஆரம்பிக்கிறாள் கே.விமலாதேவி.

ஹற்றன் வணராஜா தோட்டத்தை கடுங்குளிர் சூழ்ந்திருக்கும் நேரத்தையும் பொருட்படுத்தாது வீட்டு வேலைகளை முடித்து சமைத்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறாள். கால் வயிற்றை நிரப்பிக்கொண்டு கணவனுக்கும் உணவளிக்கிறாள்.

கடைக்குழந்தையை ஒரு கையிலும் கொழுந்துக் கூடையை மறுகையிலும் சுமந்துகொண்டு பிள்ளை மடுவத்தை நோக்கி நடக்கிறாள்.
முலைப்பால் எடுத்த போத்தலோடு பிள்ளையை மடுவத்தில் சேர்த்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலையை நோக்கிப் பயணிக்கிறாள் விமலாதேவி.
வெயில்,மழைக்கு மத்தியில் அட்டை,பாம்புகளின் அபாயத்தை பொருட்படுத்தாமல் உழைக்கும் விமலாதேவி போன்ற இலட்சக்கணக்கானோர் மலையகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நீண்டு நெடிதாய் வளர்ந்திருந்த காடுகளை அழித்து தேயிலை பயிர் செய்து, வீதிகள், ரயில் பாதைகள் அமைத்து, தமக்கான குடியிருப்புகளை தாமே அமைத்துக்கொண்ட பெரும் உழைப்பாளிகள் அவர்கள்.

எவ்வளவு களைத்தாலும் உழைப்பை மாத்திரம் நம்பி வாழும் இவர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறார்களேயன்றி விதியின் நிர்ணயமோ தெரியவில்லை. சொந்த வாழ்க்கையில் சோகம்தான் தொடர்கிறது.

குறிப்பாக உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில் தொடர்ந்தும் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது. தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தம் என்ற உடன்படிக்கையின் மூலமாக தீர்மானிக்கப்படுகிறது. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்படுகின்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்ற சம்பளத் தொகையானது போதுமானதாக இல்லை என்பதே பொதுவான கருத்தாகும்.

அதிலும் நாட்டிலுள்ள ஏனைய தொழிலாளர்களது சம்பளம் வருடத்துக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படுகின்ற போதிலும் மலையக தொழிலாளர்களது சம்பளம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே தீர்மானிக்கப்படுவது கவலைக்குரியது.

தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாள் சம்பளமாக வெறும் 450 ரூபா மாத்திரமே வழங்கப்படுகிறது.
வழமையாக இரு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்ற போது அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் நியாயமான சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதுண்டு.

எனினும் மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ள கூட்டு ஒப்பந்தம் குறித்து இதுவரை எவ்விதமான அழுத்தங்களும் எத்தரப்பிலிருந்தும் பிரயோகிக்கப்படவில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளது.

எனினும் கடந்த கால வரலாற்றை நோக்குகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளிக்கும் அளவு சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.

எவ்வாறெனினும் தமக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டும் எனக் கோரி எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லாமல் ஹற்றன் ஒஸ்போன் தோட்ட மக்கள் தாமாக முன்வந்து ஆர்ப்பாட்டமொன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தியிருந்தார்கள்.

அந்த மக்களை சந்திப்பதற்காக நாம் அத்தோட்டத்துக்குச் சென்றிருந்தோம்.
ஹற்றனிலிருந்து 13 கிலோமீற்றர் தூரத்திலிருக்கிறது ஒஸ்போன். லயன் குடியிருப்புக் கூரைகள் அனைத்திலும் கற்கள் நிறைந்திருக்கின்றன. இரண்டு அறைகள் மாத்திரம் கொண்ட லயன்குடியிருப்பில் சமையலறை இல்லை. அதனை குடியிருப்புக்கு முன்னால் மண்ணில் குடிசை போன்று கட்டியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் குதிரை வளர்த்த பண்ணைகள்தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாக வாய்வழி வரலாற்றுக் கதைகள் சொல்வதுண்டு. இந்த லயன்குடியிருப்பை பார்க்கையில் அதன் உண்மைத் தன்மை விளங்கியது.
அந்தக் குடியிருப்புப் பகுதியிலிருந்து வானுயர்ந்த மலைகளைப் பார்க்கையில் சிறு பூச்சியினங்கள் அசைவது போல தூரத்தில் மக்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தமது கோரிக்கைகள் குறித்து மனம் திறந்து பேசினார்கள்.

ஆர்.சிவபாக்கியம் (57) குறிப்பிடுகையில்,
ரெண்டு வருஷத்துக்கு முன்னதான் சம்பளம் சின்ன தொகை கூட்டினாங்க. இந்த ரெண்டு வருஷத்துல எத்தனையோ சாமான்கள் விலை கூடியிருக்குது. ஆனா எங்களோட சம்பளம் அப்படியே தான் இருக்குது. இருக்கிற விலைவாசினால குடும்பத்த கொண்டு நடத்துறது ரொம்ப கஷ்டம். எங்க லயத்த நீங்க பார்த்திருப்பீங்க. மழை பெய்தா உள்ளே இருக்கவே முடியாது.
நாங்க படுற கஷ்டம் அந்த கடவுளுக்குத்தான் தெரியும். இந்த முறையாவது 1000 க்கு மேல சம்பளம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்.

பி.முத்துக்குமார் (38)
மார்ச் மாசத்தோட கூட்டு ஒப்பந்தம் முடிஞ்சி போச்சு. ஆனா ரெண்டு மாசமாகியும் இதுக்கு முடிவு கிடைக்கல்ல. இதுவே அரசாங்க இல்லன்னா தனியார் துறையில பார்த்தீங்கனா குறிப்பிட்ட திகதியில சம்பள அதிகரிப்பு கிடைச்சிடும். எல்லா தொழிற்சங்கமும் ஒண்ணா சேர்ந்து எங்களுக்காக குரல் கொடுக்கணும். அரசாங்கம் இந்த விஷயத்துல நேரடியா தலையிட்டு நல்ல முடிவுக்கு வரணும்னு கேட்டுக்கிறோம்.

ஏ.மதிவண்ணன் (42)
எனக்கு கிடைக்கிற சம்பளத்திலதான் 3 பிள்ளைகளையும் படிக்க வைக்கணும். குடும்ப செலவு, கல்யாணம்,சாவு எல்லா செலவுகளையும் கவனிக்கணும். உண்மையச் சொன்னா மூணு நேரமும் நல்லா சாப்பிட்டு வாழுறதுக்கு இந்த சம்பளம் போதாது.
நாங்க ரொம்ப கஷ்டத்தில வாழுறோம். சுட்டெரிக்கும் வெயில் என்றாலும் கொட்டும் மழை என்றாலும் நாங்க வேலை செய்வோம். ஆனா அதுக்கேத்த சம்பளம் இல்லாதபோது ரொம்ப கவலையா இருக்குது.

தோமஸ் சாமிநாதன் (57)
நான் 40 வருஷத்துக்கு மேல மலையிலதான் வேலை செய்யுறேன். எங்களால இந்த நாட்டுக்கு வருமானம் கிடைக்குது. ஆனா எங்களுக்கு மட்டும் ரொம்ப குறைவான சம்பளம்தான் கிடைக்குது.
இந்த தடவ 1000 ரூபா சம்பளமா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அப்படி கிடைச்சா அது பெரிய விஷயம். நாங்களும் மனுசங்க தானே? எங்களுக்கும் நல்லா வாழணும்னு ஆசை இருக்காதா?

எஸ்.ரவிக்குமார் (38)
நாங்க இந்த மலையில ஏறி இறங்கி வேல செய்யுறோம். எங்களால 25 நாள் வேலை செய்யுறது ரொம்ப கஷ்டம். ஆனாலும் 25 நாள் வேலை செய்தாதான் சம்பளம் கிடைக்குது.
இந்த நாட்டில உள்ள மற்ற தொழிலாளர்களைப் போல எங்களையும் நடத்தணும்னு நாங்க நினைக்கிறோம். மலையக தொழிலாளர்களை அடிமட்டத்துல நினைச்சுதான் கூட்டு ஒப்பந்தம் பண்ணுறாங்க. அவங்க எங்களோட, எங்க பிள்ளைகளோட எதிர்காலத்த பத்தியும் சிந்திக்கனும்.

கே.விமலாதேவி (36)  பழையகாடு
நாங்க காலையில இருந்து மெஷின் மாதிரிதான் வேலை செய்யுறோம். பிள்ளைகள ஸ்கூலுக்கு அனுப்பணும், சமைக்கணும், வீட்டு வேலைகளை பார்க்கணும், வேலை செய்யணும்னு மத்த எத பத்தியும் யோசிக்க நேரம் இல்ல.
உண்மையா சொல்லுறதாயிருந்தா அரசியல்வாதிக எங்க தோட்டத்துக்கு நேரடியா வந்து நாங்க படுற கஷ்டங்கள பார்க்கணும். எப்பவாவது ஒருநாளைக்கு வந்திட்டு போவாங்க. சொன்னதையும் செய்ய மாட்டாங்க.
இந்த மலைய பார்த்தா தெரியும். எப்படி காடா கிடக்குது. இதில தான் நாங்க வேலை செய்யுறோம். எங்க ரத்தம் கம்பனிக்காரங்களும் இந்த அட்டைகளுக்கும் போகுது. இந்த தடவ எப்படியாவது 1000 ரூபா சம்பளம் வேணும்.

ஆம்! இந்த வேதனைக் குரல்கள் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கேட்க வேண்டும்.

உண்மையில் அடிமை நிலை போன்றுதான் இவர்களுடைய வாழ்க்கையும் காணப்படுகிறது. வாழ்வாதார பிரச்சினை, அரசியல் ரீதியான அழுத்தங்கள், நிர்வாக கெடுபிடிகளுக்கு மத்தியில் பெரும் மன உளைச்சலுடன் இந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சம்பளத்தை வழங்கும்போது சம்பள சிட்டைக்காக ஒருதொகை பணம் கழிக்கப்படுவதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்(படத்தில் காட்டப்பட்டுள்ளது).

நாம் சந்தித்த தொழிலாளர்கள் பிரதான தொழிற்சங்கங்களுக்கு 150 ரூபா மாதாந்தம் சந்தாவாக செலுத்துகின்றனர். ஒரு குடும்பத்தில் இருவர் தொழில் செய்தால் 300 ரூபா சந்தாவுக்கு ஒதுக்கப்படுகிறது.

கால்வயிறு,அரைவயிறு என வாழ்ந்தும் தவறாமல் சந்தாப்பணம் செலுத்தும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத்தர வேண்டியது அவர்களுடைய பொறுப்பல்லவா?

வெறுமனே பாதை செப்பனிடுவது, கூரைகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது மாத்திரம் மக்களை திருப்தியடையச் செய்துவிடாது.

அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் எதிர்கால சந்ததியினருக்கு வளமான எதிர்காலத்துக்கு அடித்தளம் ஏற்படுத்தக் கூடிய வகையில் உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்போது மலையகத்தில் தீராத பிரச்சினையாகவுள்ள சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை, மந்தபோஷனம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

உலக வளர்ச்சிக்கு நிகரான வளர்ச்சியை நாம் மலையகத்திலும் காண வேண்டும். அதற்காக அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.


"தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்" என நம்பிவந்து ஏமாற்றப்பட்டவர்கள் என வேடிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால்,சிலரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
வறுமை என்னும் தீயின் அனல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல் தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை.

கூட்டு ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் சமுதாயத்தின் மீது தார்மீக பொறுப்புடைய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை பெற்றுத்தர தயங்கக் கூடாது. உழைப்பை மாத்திரம் நம்பி வாழும் அப்பாவி மக்களின் நிலையை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும்.

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் வரலாற்றுக்கு கட்டாயம் பதில்சொல்லியாக வேண்டும். அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் அவமானத்தை குறித்துக்காட்டிக்கொண்டிருக்கும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

+ comments + 1 comments

Enna kodumai sir ithu..
Itharku vidivu kidayatha?

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates