(இந்த புகைப்படம் 1952 இல் எடுக்கப்பட்டது. கொட்டாஞ்சேனை ஸ்ரீ குனானந்த மாவத்தையிலுள்ள சிமெந்து தோட்டத்தில் எடுக்கப்பட்டது. அப்போது அந்த ஒழுங்கையில் 14 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும் சாதிய தப்பி ஓடலின் காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.)
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்கள், காலங்காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த லயன் வாழ்க்கை முற்றுபெறத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகாலப் போராட்டத்தின் பலன் இது.
“பசுமை பூமித்திட்டம்” நீதியான முறையில் முழுமை பெற அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர் மலையக மக்கள். காம்பரா வாழ்கையிலிருந்து விடுதலை பெற்று தம்மால் செழிப்பாக்கப்பட்ட நிலத்தில் 200 வருடங்களின் பின்னர் சொந்தமாக ஒரு காணித்துண்டை பெற்றுகொள்வதற்கான பயணம் பல முள் நிறைந்த பயணங்களைத் தாண்டி வந்தடைந்துள்ளது.
இந்த பிரச்சினையின் இன்னொரு வடிவத்தை அரசாங்கமும் அரசியல் சக்திகளும் அடையாளம் காண வேண்டியிருக்கிறது. அதை முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
வீடு, காணி பிரச்சினைத் தீர்வில் நகரசுத்தித் தொழிலாளர்களான அருந்ததிய மக்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.
இவர்கள் குறித்து அரசியல் தளத்தில் போதிய அக்கறை நிலவுவதில்லை. இவர்கள் பற்றிய கரிசனை இன்மைக்கான காரணங்கள் மிகவும் சூட்சுமம் மிக்கது.
யார் இவர்கள்
1815இல் கண்டியை கைப்பற்றியதோடு முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்ததன பின்னர் தான், தமது வர்த்தகத்தையும் காலனித்துவத்தையும் உறுதியாக நிலைநிறுத்த தமக்கான ஏற்றுமதி உற்பத்திகளை மேற்கொள்ளத் தொடங்கியதுடன், நிர்வாகப் பிரதேசங்களையும் மீள்வரைவு செய்து அங்காங்கு நகராக்க திட்டங்களையும் மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து இலங்கையில் நகரசபைகள் 1865யில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகரசுத்தித் தொழிலுக்காகவும் தமிழகத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். சுத்திகரிப்பு தொழிலுக்கென்றே விசேடமாக அவர்கள் அருந்ததியர்களைத் தெரிவு செய்தார்கள். காலப்போக்கில் அரச காரியாலயங்களுக்குமாக சுத்திகரிப்பு தொழிலுக்காக அருந்ததியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இலங்கையில் எங்கெல்லாம் நகரசபை, பிரதேச சபைகள் நிறுவப்பட்டனவோ எங்கெல்லாம் அரச கட்டடங்கள் நிறுவப்பட்டனவோ அங்கெல்லாம் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஏனைய நகரங்களிலும், மலையகத்திலும் கூட பரவலாக அவர்கள் குடியிருத்தப்பட்டார்கள்.
நகரத்தின் ஒரு ஓரத்தில் ஏதாவது ஒரு மோசமான சதுப்பு நிலத்தில் அவர்களுக்கு கொட்டில்களை அமைத்து கொடுத்தார்கள். இன்று நாம் மோசம் என்று கூறும் மலையகத்தில் உள்ள லயன் காம்பராக்கள் அளவுக்கு கூட வசதிகள் அற்ற வாழ்க்கை முறைக்குள் அவர்கள் கிடத்தப்பட்டார்கள். கொழும்பாயிருந்தாலும் சரி, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை, காலி, அனுராதபுரம் எந்த இடங்களாக இருந்தாலும் இதே நிலை தான். அவர்கள் நாடளாவிய ரீதியில் சேரியை ஒத்த பல குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். நகராக்கம் விரிவடைய விரிவடைய இவர்களின் குடியிருப்புகளின் பெறுமதியும் அதிகரிக்கப்படுகின்ற போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்திக்கொண்டு அவர்களை மேலும் எடுத்த எல்லைக்கு தள்ளிக்கொண்டு போய் இருத்தியுள்ளனர். சில குடியிருப்புகள் அப்படியே நூறாண்டுகளுக்கு மேல் அதே நிலையில் இருக்கின்றன. அரசாங்கமும் அதனை மேம்படுத்தாது. அதனை மேம்படுத்த இம்மக்களுக்கு வசதியும் கிடையாது, அனுமதியும் கிடையாது. தமது காவல் தெய்வங்களான முனியாண்டி சாமியையும், சுடலைமாடன், மாடசாமி போன்ற சிறு தெய்வ வழிபாடுகளுடன் அந்த குடியிருப்புகளிலேயே அடிப்படை வசதிகள் குறைந்த வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட கடைக்கோடி தலித் சமூகத்தை சேர்த்தவர்கள் என்பதால் அவர்களை சாதிப் பெயர் கொண்டே பலரும் அழைத்தனர். குறைந்தபட்சம் சக இந்திய வம்சாவளி மலையக சமூகத்துடனான திருமண பந்தங்களைக் கூட வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு சாதியம் பிளவு படுத்தியிருந்தது இம்மக்களை. எனவே அகமண முறைக்குள்ளேயே வைக்கப்பட்டார்கள். தமது சமூகத்துக்குள் மாத்திரமே திருமண பந்தத்தை பேணிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நகரசுத்தி குடியிருப்புகள் இலங்கையில் எங்கெங்கே இருக்கிறதோ அந்த குடியிருப்புகளோடு தமது தொடர்பு வலைப்பின்னலை பேணிக்கொண்டார்கள். தொடர்போ உறவு முறையோ இல்லாவிட்டாலும் கூட அந்த வலைப்பின்னலுக்குள் தமது திருமண பரிமாற்றங்களை செய்துகொண்டார்கள். இதையே பல ஆண்டுகளாகப் பேணி வருகிறார்கள். மாத்தளையிலுள்ள மணமகன் களுத்துறையில் முடிப்பார் அல்லது கொழும்பிலுள்ள ஒருவர் பதுளையில் திருமணம் முடிப்பார், அனுராதபுரத்திலுள்ளவர் புத்தளத்திலேயோ காலியிலேயே திருமணம் செய்துகொள்வார்கள். இந்த உறவுமுறை இந்த வலைப்பின்னலுக்குள் தான் அடங்கியது.
சாதியமைப்பு நிர்ப்பந்தித்த இந்த அகமண வாழ்க்கை முறை அவர்களின் குழுவாத வாழ்க்கை முறையை தக்கவைத்து வந்தது. இலங்கையில் அதிகமாக சாதிய வசைபாடலுக்கும், சாதிய அவதூற்றுக்கும் அதிகமாக ஆளாகி வரும் சமூகம் இந்த சமூகமே.
சமூக இயக்கங்கள்
மலையகத்தில் வளர்ந்த தொழிற் சங்கங்களைப் போல இவர்களுக்கான தொழிற்சங்கம் எதுவும் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் தொழிற்பட்ட தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள். மலையகப் பகுதிகளில் இருக்கும் நகர சுத்தித் தொழிலாளர்கள் பெரும்பாலும் இ.தொ.காவில் அங்கத்துவம் வகித்தவர்கள்.
ஆனால் பல சமூக இயக்கங்களை கட்டியெழுப்பினார்கள். அருந்ததியர் மகாஜன சங்கம் எனும் அமைப்பை 1920இலேயே தொடங்கிவிட்டார்கள். அதன் பின்னர் அருந்ததியர் சங்கம், அரிஜன சங்க சம்மேளனம், , அரிஜன யூனியன், தெலுங்கு காங்கிரஸ் போன்ற இன்னும் பல அமைப்புகளை வைத்து இயங்கி வந்திருக்கிறார்கள். இந்த அமைப்புகள் நகர சுத்தி தொழிலாளர்கள் வாழ்ந்த பல குடியிருப்புகளுக்கு சென்று பணியாற்றியிருக்கிறது. ஆனால் சீர்திருத்த வலைகளுக்கப்பால் அது விரிவடையவில்லை.
இவை எதுவும் அரசியல் இயக்கமாக இது வடிவமெடுக்கவில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தெலுங்கு காங்கிரஸ் போன்ற அமைப்புகள் கூட இம்மக்களை விற்றுப்பிழைத்து பின் அழிந்தே போனது.
ஆக பிரதேச கட்சிகளோடு தம்மை இணைத்துக் கொண்டனர் அல்லது தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்போராகவே பெரும்பாலும் இருந்து வந்துள்ளனர். எனவே குடியிருப்பு போன்ற பெரிய பிரச்சினைகளை கோரிக்கையாக வைக்குமளவுக்கு அரசியல் பலம் கொண்டவர்களாக இருக்கவில்லை. மேல்மாகாணத்தைப் பொறுத்தளவில் தற்போது மனோ கணேசனுக்கு இவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு காணப்படுகிறது.
மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவின் பால்ய காலத்து நண்பர்களாக அவரின் பிறப்பிடமான வாழைத்தோட்டப்பகுதியில் சூழ்ந்து வாழ்ந்த அருந்தியர்கள் இருந்தார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரேமதாசவுக்கு ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களை விளங்கிக்கொள்வதில் கடினமாக இருக்கவில்லை. பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்திலும் அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் அனுராதபுரம், மாத்தளை ஆகிய இடங்களில் இருந்த நகர சுத்தித் தொழிலாளர்களின் சேரிகளை வீடமைப்பு திட்டங்களின் மூலம் கல் வீடுகளைக் கட்டிகொடுத்து அவர்களுக்கு சொந்தமாக்கினார்.
ஏனைய இடங்களில் மலையகத்தில் உள்ளது போலவே இவர்களின் குடிசைகள் இவர்களுக்கு சொந்தமில்லை. நகர சுத்தி தொழிலில் இருக்கும்வரை தான் அவர்கள் அந்த குடிசைகளில் இருக்கலாம் என்கிற விதி இருந்தது. ஆனால் அவர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் பலாத்காரமாக குடியேறிய பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தமக்கான குடியிருப்புகளை வளப்படுத்திக்கொண்டும், அவற்றுக்கான வீட்டு உறுதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஆனால் இந்த இவர்கள் வாழ்ந்த குடிசையைப் பேணுவதற்காக தலைமுறை தலைமுறையாக அந்த தொழிலை அடுத்தடுத்த சந்ததிக்கு கைமாற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இந்த தொழிலாளர்கள். அவர்களின் விளிம்புநிலை வாழ்க்கை உரிய கல்வி தரத்தையும் எட்டமுடியாதபடி வரையறுக்கப்பட்டிருந்தது. அப்படியும் தப்பித்தவறி போராடி கற்று தேர்ந்தவர்கள் அந்த குடியிருப்பை விட்டு வெளியேறினார்கள்.
அது அவர்களை சாதிய அடையாளத்திலிருந்து சற்று விடுவித்தது என்றும் கூறலாம். முடிந்தவர்கள் வெளியேற, முடியாதவர்கள் இன்றும் அந்த சேரி வாழ்க்கைக்குள் அகப்பட்டுப் போயிருக்கிறார்கள்.
அவர்களுக்குத் தான் இன்று குடியிருப்புக்கான தீர்வு தேவைப்படுகிறது. சாதிய வசவுகள் காரணமாக தமது அடையாளத்தை முன்னிறுத்தி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்க இயலவில்லை. குறைந்த பட்சம் இருந்த சமூக இயக்கங்களைக் கூட காலப்போக்கில் கைவிட வேண்டியேற்பட்டது. இறுதியில் பொதுவான பெயர்களைக் கொண்ட சங்கங்களை உருவாக்கி வேறு சமூகங்களையும் இணைத்து பணியாற்றியபோது தமக்கான நிகழ்ச்சி நிரலை தனித்து செயல்படுத்த முடியாத நிலைக்கு உள்ளானது தான் மிச்சம்.
நாடளாவி பரந்துபட்டு உதிரிகளாக வாழ்ந்து வருவதால் தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் அரசியல் சக்திகளுக்கும் கூட இவர்கள் ஒரு வாக்கு வங்கி அல்ல. சாதிய காரணங்களால் இவர்களை இணைக்கும் வகையிலான ஒரு அரசியல் இயக்கம் கூட இல்லை. எனவே எவருக்கும் வேண்டப்படாத சமூகமாக நடத்தப்பட்டார்கள்.
மலையக மக்கள் முன்னணி 90களில் மலையகத்துக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் “மலையக மக்கள்” என்கிற அடையாளத்துக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிருந்தபோதும் அக்கட்சி தமது கட்சியின் இருப்பை தக்கவைப்பதற்கான முனைப்பில் இந்த நிலைபாட்டையும் தவற விட்டது.
இந்திய பின்னணியுள்ளவர்களை “இந்திய வம்சாவளியினர்” என்று அழைப்பதா அல்லது “மலையகத்தவர்” என்று அழைப்பதா என்கிற விவாதத்தில் கூட இந்த மக்கள் பற்றி கரிசனை கொள்ளப்படுவதில்லை.
ஆங்கிலேயர்களால் அன்று வஞ்சிக்கப்பட்டவர்கள், பின்னர் இலங்கை அரசியல் அதிகாரத்துவத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு என்று எந்த அரசியல் தலைமையும் கிடையாது. நாளை இந்திய வம்சாவழித் தலைமைகளாலும் வஞ்சிக்கப்பட்டவர்களாக ஆகிவிடக்கூடாது. இலங்கையில் தமிழர்களுக்கு என்று ஒரு தேசிய கட்சி கிடையாது. அனைத்துமே பிரேதச கட்சிகளாகவே குறுகி இருக்கின்றன. தமிழ் அரசியல் சக்திகள் தமது அரசியல் கோரிக்கைகளுக்கான ஆதரவை பரஸ்பரம் குரல் கொடுக்கும் நிலை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் அருந்ததியர்கள் ஒட்டுமொத்த தமிழ் அரசியலிலிருந்தும் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களே.
இன்றைய இலங்கையின் சாதிய கட்டமைப்பில் இன்றிமையாத கவனிப்புகுரிய சமூகமாக அருந்ததியர்கள் காணப்படுகிறார்கள். சமூக மாற்றத்துக்கான செயற்பாட்டாளர்களோ, அரசியல் சக்திகளோ, ஆய்வாளர்களோ ஊடகங்களோ கண்டுகொள்ளாத ஆனால் கண்டுகொள்ளப்படவேண்டிய சமூகமாகவும் அருந்ததியர் சமூகம் ஆளாகியிருக்கிறது. ஒரு வளமற்ற, பலமற்ற, ஆதரவற்ற சமூகம் என்றளவில் தமக்காக தாம் மட்டுமே போராட வேண்டிய துர்ப்பாக்கிய சமூகத்தவர்கள் அவர்கள். அதற்கான திறனற்ற ஒரு சமூகமாகவும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.
இவர்கள் வாழ்ந்த பல பிரதேசங்களில் முன்னர் இருந்த தமிழ் பள்ளிக்கூடங்கள் சிங்கள பள்ளிக்கூடங்களாக ஆக்கப்பட்டதால் சிங்களப் பாடசாலைகளுக்கே போக தள்ளப்பட்டார்கள். இன்றைய புதிய சந்ததி தமிழ் பேசத் தெரியாத, சிங்களம் மட்டுமே பேசத் தெரிந்த சமூகமாக ஆகியிருப்பதை பல குடியிருப்புகளில் நான் நேரடியாகவே கண்டறிந்துகொண்டேன். சென்ற வருடம் களுத்துறையில் நிகழ்ந்த ஒரு பாட்டியின் மரணச் செய்தி விளம்பரம் சிங்களத்தில் மட்டுமே களுத்துறை நகரத்தில் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலைக்கு இந்த சமூகம் தள்ளப்பட்டுள்ளமைக்கு இன்று எந்த தமிழ் அரசியல் சக்தியும் பொறுப்பேற்கப் போவதில்லை. வர்க்க நிலையில் அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்து வரும் இவர்களை கவனிக்க எந்த நாதியும் இப்போது இல்லை என்றே கூறலாம்.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறியவர்கள் போக இன்னும் நகரசுத்தி சேரி குடியிருப்புகளில் சிக்குண்டு இருக்கும் அந்த மக்கள் அரசியல் அனாதைகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அரசியல் தருணம் இது. குறிப்பாக மனோ கணேசன், அமைச்சர்கள் திகாம்பரம், வேலாயுதம், போன்றோர் இதனை அக்கறைக்குரிய விடயமாக கருத்தில் எடுக்க வேண்டும்.
இந்தியா வம்சாவளி மக்களுக்கான காணி, வீடு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் நகர சுத்தித் தொழிலாளர்களான அருந்ததியர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டதன் அரசியல் சூட்சுமத்தை இதன் நுண்ணரசியலிலிருந்தே கவனிக்கப்பட வேண்டும். இதில் வர்க்க அரசியல், பிரதேச அரசியல், இனத்துவ அரசியல் மட்டுமல்ல சாதி அரசியலும் கலந்தே இருக்கிறது...
வீடு காணி உரிமை பெற்றுக்கொண்டுக்கும் தீர்வில் இம்மக்களும் உள்ளடக்கப்பட வேண்டும்.
இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை மலையக எல்லைக்குள் மட்டுப்படுத்தாது இதன் நுண்ணரசியலை சற்று ஆழமாக பார்ப்பது அவசியம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...