Headlines News :
முகப்பு » » தோட்டத்துரை அனுமதியின்றி தோட்டப் பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாது - பெ. முத்துலிங்கம்

தோட்டத்துரை அனுமதியின்றி தோட்டப் பெண்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாது - பெ. முத்துலிங்கம்


நாட்டின் தொழிலாளர், விவசாய மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தம் குடும்ப வறுமை காரணமாக வீட்டுப் பணியாளர்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு 1978 முதல் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு செல்பவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதுடன், சிலர் உயிரற்ற சடலங்களாக அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு சில சமயங்களில் குழந்தையுடன் வருகின்றனர்.

இக்கொடிய செய்திகளைக் கேட்டபின்னரும் மத்திய கிழக்கிற்கு வேலை தேடிச்செல்லும் பெண்களின் அளவு குறையவில்லை. இது தவிர, வெளிநாடு சென்ற பெண்களது பிள்ளைகள் பெரும் துஷ்பிரயோகங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, பெண் பிள்ளைகள் தமது குடும்ப அங்கத்தினர்களினாலும் வெளியாரினாலும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகின்றனர். அவர்களது கல்வி பாதிப்பிற்குள்ளாகின்றது. சிலரது பிள்ளைகள் பராமரிக்கப்படாது கைவிடப்படுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் பாரிய ரீதியில் அதிகரித்தமையினால் சிறுவர் உரிமைகள் தொடர்பாக செயற்படும் அமைப்புகள் இவ்விடயம் தொடர்பில் பரப்புரைகளையும் ஏற்புைரகளையும் செய்தன. இதன் விளைவாக அரசாங்கம் பல வருடங்களின் பின்னர் வெளிநாடு செல்லும் தாய்மார்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மூலம் சில விதிமுறைகளை இவ்வருடம் அறிமுகப்படுத்தியது. இவ்விதிமுறைகளுக்கு இசைவாக இல்லாத தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடைசெய்துள்ளது இதில் எந்தப் பெண் வெளிநாடு செல்லத் தகுதியானவர் எனும் விதைப்புரைகளைக் கொண்ட சுற்றுநிருபம் ஒன்றினை அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர்களினாலும் சிபாரிசு செய்யப்படுகின்ற மற்றும் சிபாரிசு செய்யப்படாத ஒவ்வொரு குடும்ப பின்னணி பற்றிய அறிக்கைகளையும் உள்ளடக்கி பதிவேடொன்றை பிரதேச செயலகம் பேணிவரப் பணித்தது.

இலக்கம்MFE/ RAD/10/13 என்ற சுற்ற நிருபத்தின் படி வேலைக்காக செல்லும் தாய் ஒருவர் பின்வரும் விதி முறைக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
அவையாவன – ஐந்து வயதிற்கு கீழ் உள்ள பிள்ளைகளை கொண்டுள்ள தாய்மார் வெளிநாடு செல்ல முடியாது. ஐந்து வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளை உடைய தாய்மார், ஏற்றுக் கொள்ளக் கூடிய பராமரிப்பிற்கான பாதுகாவலரை உறுதி செய்வதன் முலம் வெளிநாடு செல்ல முடியும்.

குறிப்பிட்ட பெண் வெளிநாடு சென்று திரும்பி வரும் வரை பிள்ளைகளின் பாதுகாப்பு பொறுப்பினை ஏற்ற ஒருவர் வெளிநாடு செல்ல முடியாது. 21 வயதிற்கும் 55 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லமுடியும். குடும்ப விபரங்களை சமர்ப்பிக்காத ஒருவர் வெளிநாடு செல்ல முடியாது.

குடும்ப விபரம் கிராம உத்தியோகத்தரால் ஊர்ஜிதம் செய்யப்படவேண்டும். குறிப்பிட்ட பெண் திருமணம் முடித்தவரா இல்லையா என்பதை கிராம சேவகர் கடிதம் மூலம் உறுதிசெய்யவேண்டும்.

பெண் ஒருவர் திருமண முடித்தவரா இல்லையா என சந்தேகம் ஏற்படும் இடத்து அது தொடர்பில் சத்தியக் கடதாசி ஒன்றினை குறிப்பிட்ட பெண் சமர்ப்பிக்க வேண்டும் குறிப்பிட்ட பெண் ஒருவரின் பிள்ளைகளது வயது மற்றும் உடல் நலன் தொடர்பில் சந்தேகம் ஏற்படின் பிரதேசத்திற்கு பொறுப்பான குடும்ப சுகாதாரம் தொடர்பான அதிகாரியிடமிருந்து கடிதம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், குறிப்பிட்ட பெண் ஒருவர் வெளிநாடு சென்று குறித்த ஒப்பந்த காலம் முடிய முன்னர் இலங்கைவரின் இலங்கைக்கு வந்த நாள் முதல் ஒருவருடம் காலம் பூர்த்தியடைந்த பின்னரே மீண்டும் வெளிநாடு செல்ல முடியும்.

மேற்கூறப்பட்ட விதிமுறைகள் பிள்ளைகளைப் பாதுகாப்பனவாக அமைகின்றன. ஆனால் தோட்டப் பெண்கள் தொடர்பாக மேலதிக விதிமுறையொன்று இச்சுற்று நிருபத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் உள்ளடக்கிய சுற்று நிருபத்தில் தோட்டப் பெண்கள் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிவில் அந்தஸ்து பற்றி சான்றுப்படுத்தும்போது குறித்த பெண் திருமணமானவரா என்பது உறுதிப்படுத்தப்படாத சந்தர்ப்பங்களில் அரசாங்க நிருவாக அமைச்சின் செயலாளர்களின் HA/DIS/11/01/06 ஆம் இலக்க 2002//06/ 20ஆம் திகதிய கடிதத்திற்கு அமைய (இணைப்பு 3) சத்தியக்கடதாசி ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் செயற்படல் வேண்டும். மேலும் மலையகத் தோட்டங்களில் வாழும் பெண்களின் வசிப்பு மற்றும் சிவில் அந்தஸ்து தொடர்பாக தோட்ட அத்தியட்சகரே சான்றுப்படுத்த வேண்டும். அவ்வாறு சான்றுப் படுத்துவதற்கு தோட்ட அத்தியட்சகர் இணங்காத பட்சத்தில், குறித்த பெண் செல்வதை சிபாரிசு செய்யக் கூடாது இதன்படி தோட்டத்தில் வாழும் பெண் ஒருவரின் திருமணம் பற்றியும் அவரது சிவில் அந்தஸ்து பற்றியும் தோட்டத்துரையே உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் தோட்டப்பெண் ஒருவரின் நடமாடும் சுதந்திரம் தோட்டத்துரையின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்விதப்புரை இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமை உறுப்புரிமைக்கு முரணானது. மேலும் இது மீண்டும் தோட்டத்தில் வாழும் பெண்களின் சிவில் உரிமைகளை தோட்டத்துரையிடம் ஒப்படைப்பதாக அமைகிறது. தோட்டத்தில் பணிபுரியும் மற்றும் பணிபுரியாத பெண் ஒருவரின் திருமணம் தொடர்பாக சந்தேகம் ஏற்படின் தோட்டத்துரையே சான்றிதழ் வழங்கி ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலைமையின்படி பெரும்பாலான திருமணம் முடித்த இளம் பெண்கள் தோட்டத்தில் வேலை செய்வதில்லை, இதன்படி வேலை செய்யாத பெண் ஒருவருக்கும் தோட்டத் துரையிடமே சான்றிதழ் பெறவேண்டும், இதேவேளை, பெரும்பாலும் தோட்டத்தில் பணி புரியாதவர்களுக்கு தோட்டத்துரை சான்றிதழ் வழங்குவதில்லை நாட்டின் பிரஜை ஒருவரின் சிவில் அந்தஸ்து தொடர்பாக சான்றிதழ் வழங்கும் உரிமை கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கே உண்டு. இந்நிலையில் மலையகப் பெண்கள் தொடர்பாக மட்டும் தோட்டத்துரையிடம் சான்றிதழ் கோருவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

மேலும் இவ்விதிப்புரையின் படி சட்டப்படி திருமணச் சான்றிதழ் கொண்டிராத பெண் ஒருவரின் வெளிநாட்டிற்கான பயணத்தை தீர்மானிக்கும் பொறுப்பு தனியார் கம்பனியின் உத்தியோகத்தரான தோட்டத்துரையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது குறிப்பிட்ட பெண் ஒருவரின் அல்லது அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் கட்டுப்படுத்தும் செயலாக அமைகின்றது. மறுபுறம் குறிப்பிட்ட பெண் ஒருவர் தமது வாழ்வாதாரத்திற்கு தோட்ட தொழிலையே தங்கியிருக்கும் நிலையையே ஏற்படுத்தும், இது மீண்டும் தோட்ட மக்களை தோட்டத்துரையின்பால் தங்கியிருக்கும் நிலையை தோற்றுவித்துள்ளதுடன், காலனித்துவகாலம் மீண்டும் தோட்டங்களில் உருவாக்க அதாவது, மீண்டும் மலையகத்தில் கொத்தடிமை முறை உருவாக வாய்ப்பளிக்கின்றது.

எனவே, இவ்வடிப்படை மனித உரிமை மீறலுக்கு எதிராக தோட்ட சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச் சருக்கும் அமைச்சின் செயலாளாருக்கும் கடித முலம் தெரிவிக்க வேண்டும். இவ்விதப்புரையில் குறிப்பிட்டுள்ள தோட்டத்துரை பகுதியை நீக்கிவிடும் படி கோரவேண்டும் மலையக அமைச்சர்கள் இவ்விடயம் தொடர்பாக உரிய அமைச்சரை சந்தித்து இவ்விதிப்புரையில் தோட்டத்து ரையின் பகுதியை நீக்கி நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கியுள்ளவாறு கிராம சேவகரின் சான்றிதழ் மட்டும் பெற ஆவன மேற்கொள்ள வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates