Headlines News :
முகப்பு » » 'பெரட்டுக்களம்' அறிமுக நிகழ்வும் 'மலையக தேசியம்' கலந்துரையாடலும் - ப.விஜயகாந்தன்

'பெரட்டுக்களம்' அறிமுக நிகழ்வும் 'மலையக தேசியம்' கலந்துரையாடலும் - ப.விஜயகாந்தன்

பெரட்டுக்களம் சஞ்சிகையின் ஓராண்டு நிறைவுடன் இணைந்த அறிமுக நிகழ்வும் மலையக தேசியம் பற்றிய கலந்துரையாடலும் கடந்த 12.07.2014 சனிக்கிழமையன்று நுவரெலியா கூட்டுறவு விடுமுறை இல்லத்தில் நடைபெற்றது. மலையக சமூக ஆய்வு ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள்,  ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரபட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வின் புதுமை
வைபவங்களில் நடைபெறும் மரபு ரீதியான தொடக்கத்திற்கு மாற்றாக ஒரு புதுமையினை காண முடிந்தது. நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அவ்விளக்கிற்கு எண்ணை வார்ப்பதே நிகழ்வில் பங்கேற்போரின் கடமை. இதன் தாற்பரியம் என்னவென்றால், ஏற்றப்பட்ட விளக்கின் ஒளி மலையக சமூகத்தின் விடிவுக்கான பயணமாகவும் அவ்விளக்கிற்கு வார்க்கும் எண்ணை அதனை தொடர்ந்து பேணுவதாகவும் எண்ணை வார்ப்பவர்கள் அப்பயணத்தின் பங்காளர்களாகவும் உருவகிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. யாரும், நிகழ்வின் எந்த கட்டத்திலும் விளக்கிற்கு எண்ணை வார்க்கலாம் என்ற சுதந்திரமும் வழங்கப்பட்டது. நுணுக்கமாக அவதானிக்கும் போது ஏற்றப்பட்ட விளக்கு மலையக சமூக ஆய்வு மையத்தின் செயற்பாடுகளாகவும் எண்ணை வார்த்தல் அவ்வமைப்பில் இணைந்து செயற்பட விருப்பத்தை தெரிவிப்பதாகவும் அர்த்தப்படுவதும் மறுப்பதற்கில்லை. எவ்வாறாயினும் புதிய தொடக்கம் வெற்றியாகவும் அமைந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

நிகழ்வின் தலைமையுரையை மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் வழங்கினார்.
இலங்கையின் சுதந்திர ஆண்டில் எமது பிரஜாவுரிமை பரிபோனதால் எமக்கு அது 'கருப்பு சுதந்திரம்', அன்று நாம் குடியுரிமை இல்லாத, வாக்குரிமை இல்;லாத அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டோம். அன்று முதல் இன்றுவரை துயரம் தொடர்கின்றது. ஜுலை மாதத்திற்கும் மலையக தமிழர்களுக்கம் நெருங்கிய உறவு இருக்கின்றது. இப்படி ஒரு ஜுலை (கருப்பு ஜுலை) தான் மலையக தமிழரின் வரலாற்றை மாற்றி எழுதியது. அடக்குமுறை தீ எங்கும் பரவி கிடக்கின்றது. அதனை நீக்கி விடிவென்னும் ஒளியை பாய்ச்ச வேண்டும். மக்கள் அரசியலும் கூட்டு தலைமையும் மலையகத்தில் ஏற்பட வேண்டும். இதனை நோக்கியதே எமது செயற்பாடு. பெரட்டுக்களமும் இதனை எழுத்தாக பதிகிறது. இது புது பெரட்டு.

பெரட்டுக்களம் சஞ்சிகையின் ஆய்வுரையினை அரசியல் ஆய்வாளர் திரு அ.யோதிலிங்கம் வழங்கினார்.
ஒரு தேசிய இனத்தின் தூண்கள் நிலம், பொருளாதாரம், மொழி, கலாசாரம் என்பனவாகும். மலையகம் இன்று இந்த தேசிய பயணத்தினை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றது. இதற்கான புலமைப் பின்புலத்தினை பெரட்டுக்களம் சஞ்சிகை வழங்குகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மலையக சமூகத்ததின் வரலாற்றை ஆய்வுக்கண்ணோட்டத்தில் காலகட்டங்களாக பிரித்து நோக்குவது பொருந்தும். அதன்படி மலையகத்தை 
1. அரசியல் அநாதை காலம் (பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டதிலிருந்து         1920 வரை)
2. தொழிற்சங்க தொடக்க காலம் (1920 – 1940)
3. இடதுசாரிகளின் எழுச்சி காலம் (1940 – 1955)
4. இனரீதியான ஒடுக்குமுறை காலம் (1955 – 1977)
5. பிற்பட்ட காலம் (1977இற்கு பின்)
என்ற அரசியல் வரலாற்று அடிப்படைகளில் பிரித்து ஆய்வு செய்யலாம்.

முதலாவது சஞ்சிகை 
மலையகத்தின் நிலவுரிமைப் பேராளி சிவனுலெட்சுமனின் படத்தை அட்டைப்படமாக் கொண்டுள்ளமை, இனத்துவ அடையாளத்துக்கான அறைகூவல் என்றவாறான சிறப்புக்களை கொண்டிருந்தாலும் மலையகம் சாராத புனைப்பெயர்கள் கொண்டிருத்தல்,  மலையகத்துக்கான தனியான பல்கலைக்கழகத்திற்கான அவசியம் வலியுறுத்தப்படாமை போன்ற குறைபாடுகளை கொண்டுள்ளது.

இரண்டாவது சஞ்சிகை
மலையகத்தின் அரசியல் குழப்பங்களை குறிக்கும் குறியீட்டு சித்திரம், இனவாத அட்டூழிய ஆதாரங்கள் முதலானவற்றை பிரதானப்படுத்தியிருந்தாலும் மலையக சமூகத்தின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்கும் அதனை சர்வதேச மட்டத்தில் விவாதிப்பதற்குமான ஒரு பொறிமுறையை முன்வைத்து கட்டுரைகள் நகர்த்தப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக இலங்கை வந்த நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் குறித்து இரண்டு நிறுவனங்கள் தவிர யாரும் ஒரு ஆவணத்தை கூட கையளிக்க வில்லை. அதற்கு அக்கறை காட்டவும் இல்லை. இச்சஞ்சிகையில் மலையக மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் விளக்கப்பட்டுள்ளது. இவ் ஒடுக்குமுறைகளை உள்ளக முரண்பாடுகள், புறநிலை முரண்பாடுகள் என பகுத்து நோக்குவதும் அவற்றை உள்ளும் புறமும் எதிர்கொள்வதற்கும் ஏற்ற செயற்பாடுகள் அவசியப்படுகின்றன. அதற்காக முன்வைத்துள்ள துனை சக்திகள் பற்றிய விபரமும் சேமிப்பு சக்திகள் பற்றிய விபரமும் முன்னேற்றகரமான நகர்வுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

மூன்றாவது சஞ்சிகை
மலையகத்தில் சுடர்விடும் பிரச்சினைகளை விரகாக கொண்டு பெண்கள் பொங்கள் சமைக்கம் காட்சியை அட்டைப்படமாக கொண்டிருக்கின்றது. மாறாக தேசியத்தின் நான்கு தூண்களை விரகாக கொண்டு பெண்களுடன் ஆண்களம் இணைந்து பொங்கல் பொங்குவதாக சித்திரிக்கப்பட்டிருந்தால் அதன் முழுமை எய்தப்பட்டிருக்கும். இலங்கையின் பழங்குடிகளை தவிர ஏனைய எல்லோரும் வந்தேறு குடிகளே. வந்த காலம் மட்டும் தான் வேறுபடுகின்றது. மலையக தேசியத்தில் பயணிக்க ஒருமித்த ஒரு அரசியல் இயக்கம் அவசியம்.

நான்காம் சஞ்சிகை
தேசியத்தின் கூறுகளுல் ஒன்றான பொருளாதாரத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இலங்கையில் பெருந்தோட்ட பொருளாதார முறைமைக்கு உரித்துடையவர்கள் மலையக மக்களே. பல்வேறு வழிகளில் சிதைக்கப்படும் எமது பொருளாதாரத்தை தடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். எனவே மலையக அரசியலில் பண்பு மாற்றம் ஏற்பட வேண்டும். இன அரசியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். படைப்பிலக்கியங்களும் தேசியம் சார்ந்ததாக அமைய வேண்டும்.

நிகழ்வின் சிறப்புரையை சிவம் பிரபாகரன் வழங்கினார்
மலையக தேசியத்திற்கான இன்றைய சவால்கள்
இலங்கையின் பூர்வீகக் குடிகள் (சுதேசிகள்) தவிர ஏனைய அனைத்து இனங்களுமே இலங்கையின் வந்தேறு குடிகள் தான. எனவே மலையக மக்களும் தேசியத்திற்கான முழு உரித்துடையவர்கள் தான். எமது மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டு நூறு வருடங்களின் பின்னரே அடக்கு முறைக்கு அடிமை தனத்திற்கும் எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் தொடக்க கர்த்தா கோ.நடேசய்யர் அவர்களே. இந்தியாவின் நேருவோ காந்தியோ மலையக மக்களுக்கு தலைமைத்துவம் வகிக்க முடியாது என நடேசய்யர் மறுத்ததன் விளைவே இந்தியா மலையகத்தில் மாற்று தலைமையை ஊக்குவிக்க காரணமாக அமைந்தது. நடேசய்யர் காலத்திலிருந்தே 'மலையகம்' என்ற தேசியம் வலியுறுத்தப்படலாயிற்று.

மலையக மக்களுக்கென்று தனித்துவங்கள் காணப்படுகின்றன. பொது கலாசாரம், பொது மொழி, பொது நிலம், பொது பொருளாதாரம் என அதனை வரையறுக்க முடியும். மலையகத்துக்கு உள்ளும் புறமும் வாழும் மலையக மக்கள் தம்மை 'மலையகத்தவர்' என்பதனை ஏற்று வலியுறுத்துவதன் மூலம் எமது இனத்துவ அடையாளத்தை பேணலாம். 

நாட்டில் 12வீதத்திற்கும் அதிகமானோர் ஒரு மொழி பயன்படுத்துவார்களேயானால் அதனை நிர்வாக மொழியாக் கொள்ளவேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகள் எமது நாட்டில் இருந்தாலும் எமது மொழியினை நிர்வாக அந்தஸ்த்தினுள் கொண்டுவருவதற்கு பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கட்டாய கருத்தடை, திட்டமிட்ட குடியேற்றங்கள், கலாசார சீரழிப்பு, மாற்று வழிபாட்டு முறைகள் போன்ற பல விடயங்கள் எமது இனத்துவ அடையாளத்தை சிதைக்கும் முயற்சிகளாக அமைந்துள்ளன.

இத்தகைய நிலைமைகளிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக அதிகார மையங்களை உருவாக்குதல் போன்ற தற்காலிக ஏற்பாடுகளும் மலையக மக்கள் வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரே அதிகார அலகாக்குதல், நிரந்தர அரசியல் தீர்வு என்றவகையான நிலையான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். மலையக மக்களை அரசியல் மயமான ஒரே அமைப்பிற்குள் இணைக்க வேண்டிய தேவையும் மலையகத்திற்கொன தனியான ஒரு பல்லகலைக்கழகத்தினை உருவாக்கி மேற்குறித்த செயற்பாடுகளுக்கு அதன் புலமைப்பின்புலத்தை பெற்றுக்கொள்வதம் இன்றியமையாததாகும்.

நிகழ்வின் இறுதியில் பங்குபற்றுனர்களின் கருத்துரைகள் இடம்பெற்றன.
ஆசிரியை பொற்செல்வி, மலையக பிரதேசங்களிலிருந்து வெளியில் செல்லும் பணிப்பெண்களின் பிரச்சினைகளுக்கும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார். ஊடகவியலாளர் விஜயகுமார், நாம் வெகுஜன அமைப்புக்களாக ஒன்றிணைய வேண்டும் அரசியல் மாற்றிமின்றி எதனை சாதிக்க முடியாது எனவே எமது அரசியல் பிரதிநிதிகளை கேள்வி கேட்க நாம் துணிவு கொள்ள வேண்டும் ஆசிரியர்கள் இவ்விடயங்களில் அதிக அக்கரை கொள்ள வேண்டும் என்றார். திரு ஜெயகுமார், மலை தேசியத்தை வெல்வதற்காக எமது அரசியல்வாதிகளை வழிநடத்த பலமான சிவல் சமூகம் உருவாக வேண்டும் என்றார். ஜனாதிபதி ஆலோசகர் திரு வி.புத்திரசிகாமணி, இலங்கையின் வரலாற்றி பாரியளவில் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றன. எமது மொழி அரசியல் அந்தஸ்த்து பெறவேண்டும். நாம் பேதங்களை மறந்து இன உணர்வுடன் ஐக்கியப்படவேண்டும். சமூக முன்னேற்றத்திற்காக கொள்கை திட்டங்களை ஏற்படுத்தி இலக்குகளை அடைவதற்காக நாம் பயணிக்க வேண்டும் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஸ்ணன், மலையத்தில் இன்று அரசியலை விட மதுவே ஆட்டிப்படைக்கின்றது. எனவே நாம் மதுவற்ற மலையகத்தை காண செயற்படவேண்டும் என்றார். திரு பன்னீர்செல்வம், எமது கலாசாரங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். மலையகத்தில் இயக்க அரசியல் மலரவேண்டும் என்றார். பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு பாலேந்திரன், பெரட்டுக்களம் ஒன்பது இலட்சம் பிரதிகள் வெளிவர வேண்டும். அவை மலையகத்தின் ஒவ்வொரு தரப்பையும் சென்றடையும் வகையில் பல்வேறு விதங்களில் வெளிவரவேண்டும் என்றார். 

பெரட்டுக்களம் சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டதோடு 'நாமே விடியல் நமதே விடியல்' என்ற மகுட வாசகத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates